Thursday, 20 December 2018

தென்னையை பெற்றவள்


தென்னையை  பெற்றவள்
(ஜனநேசன் )     


ஊருக்கு மணக்கும்  சந்தனம்னு ..” உங்க அம்மா உங்களைசொன்னதுதப்பு  ..என்று மனைவி புலம்பினாள்  “.என்ன காலையில் மாமியார்செத்த  பின்னாலே  புகழஞ்சலி  பாடுறே “ என்றுஇவன் கேட்டான். “ஒண்ணுமில்லை ,நான் அதை திருத்தி “ஊருக்கு மணக்குமாம் தாழம்பூ  அதுக்கு கீழே  கிடக்குமாம்  முள்ளும் புதரும்    "ன்னு  மாற்றி சொல்லணும்.!” “சரி, காலையிலே என்ன புதுப் பாராயணம் ?நேரடியா விஷயத்தை சொல்லு.”
“ அப்புறம் என்னங்க,வீட்டுக்கு முன்னால நின்ன  வேப்ப  மரம்  குடை சாய்ந்தது  கணக்கா புயல் காற்றில் விழுந்து ரெண்டு நாளாகரண்டே வராம  குகை  க்குள்ள குடியிருக்கிற் மாதிரி  இருட்டிலே தடுமாறி கிட்டு இருக்கோம். .அதுக்கு  ஒரு ஏற்பாடு பண்ணி சீக்கிரமா கரண்டுவர்ற  வழியைப் பாக்காம  புயல் நிவாரணப்பொருள் திரட்டி லாரியோடப் போய்  கொடுக்கப் போறோமுன்னு  கிளம்பிட்ட மனுசனை வேற  என்ன   சொல்றது ?  “              
 ‘ உனக்கு  இப்போ என்ன ? ஜெனேரட்டர்  வாடகைக்குப்  பிடிச்சி தொட்டி நிறைய தண்ணி  நிரப்பியாச்சு.இன்னும் மூணு நாளைக்கு நமக்கு குடிக்கவும் ,குளிக்கவும் தண்ணிக்குப் பஞ்சமில்லை! .அக்கம்பக்கம் கேட்கிறவங்களுக்கும்  கொடுக்கலாம்.பலசரக்கு இருக்கு. பாலிருக்கு. அப்புறம் ஏன் புலம்பிற  ? குடிக்கத் தண்ணியும்,  உடுத்த துணியும் ,வகுத்துக்கு  சோறும் இல்லாத ஜனங்களுக்கு  நாம் ஏதாவது  செய்யனுமா இல்லையா ? “    ,
“:நீங்க சொல்றது சரிதான். நானொண்ணும்  ஈவு இரக்கமில்லாதவ இல்ல.தீபாவளிக்கு எடுத்ததில்  கூடுதலா எடுத்த இரண்டு நைட்டியையும்,ஒரு சேலையையும் தர்றேன் ,நல்லா எடுத்துட்டுப் போய் குடுங்க.நான் வேண்டாமுன்னு குறுக்கே நிற்கல்லை.ஆனா அக்கம்பக்கம் என்ன நடக்குத்துனு தெரிஞ்சிக் கவாவது  டிவி பார்க்க ஏற்பாடு பண்ணிட்டுப் போங்கன்னுதான் சொல்றேன்”’
  மனைவியின் பேச்சில்  இவனுக்கு மகிழ்ச்சி என்றாலும் காரைக்குடி நகரெங்கும் மின்மாற்றி கள்  வெடித்து,மின்கம்பங்கள் விழுந்து ஊரே அல்லோகலப் பட்டு கிடக்குது.நமக்கும் மட்டும் கரண்டு உடனே வந்துருமா என்று கேள்வி எழுந்த போதே இவனுக்கு ஒரு யோசனை மின்னியது !
  “
 சரி,டிவி நியூஸ் தானே பார்க்கணும்.இந்தா இந்த செல்லிடபேசியில்  இந்த அலைவரிசை செய்தியைப் பார்த்துக்கோ.கரண்டு வர இன்னும் ஒரு நாளாகலாம்.அளவா பயன்படுத்திக்கோ .நீ குடுக்கிற துணிமணிகளை குடு, நாங்க  சேகரிசிருக்கிற துணிகளோட  சேர்த்துக்கிறோம். “  வீட்டிலே பச்சைக்கொடி காட்டியாச்சு இனி எந்தத் தடங்களும் இல்லாமல் செல்லலாம் என்று  வாங்கிகொண்டு  தனது சங்க நண்பர்கள் குழுமும் இடத்திற்கு போனான்..
        நண்பர்கள் நிவாரணப் பொருள்களை ரகம் வாரியாக பிரித்து  மூடைகள் கட்டும் பணியில் இருந்தனர்.இவனது மனைவியின் பங்களி ப்பை  கொடுக்கவும் அவர்கள் பாராட்டியது இவனுக்கு புதுத் தெம்பு பிறந்தது.உற்சாகமாக  கட்டு கட்டும் பணியில் ஈடுபட்டனர். .இவர்கள்  அமர்த்திய சரக்குந்து வந்தது.பொருகள் சேதமுறா வண்ணம்கட்டியதை .  கவனமாக அடுக்கினர். காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியில்  சாலைகள் துண்டிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு  விநியோகிக்க வேண்டும் என்று அங்குள்ள  நண்பர்கள் மூலம் வருவாய்துறை அதிகாரிகளின்  ஒத்துழைப்பில்  குடும்பம் வாரியாக  விநியோகிக்கத்   திட்டம்.

        சாலைகள் காற்றில்  கிழிந்து, வசம்புரண்ட சேலைகள் போல்  நிலைகுலைந்து கிடந்தன. ஒரே நீர்வெளியாக த்  தெரிந்தது. பயிர்பச்சைகள் எல்லாம் நீர்ப்போர்வை போர்த்தப்பட்டுக்   கிடந்தன.                  தென்னை மரங்கள் எல்லாம் பாதி எரிந்த  பத்திக்குசிகள் போல  சாய்ந்து நின்றன.நின்றுநின்று  வலித்து  காலாற படுத்துக் கிடப்பது போல் மின்கம்பங்கள்  மட்டமல்லாக்க கிடந்தன.நிழல்குடைகளாக நின்ற வேப்பமரங்கள் சில கம்பிகள் உடைந்த குடைகள் விரிந்தும் மடங்கியும் சாய்ந்தும்  ,குடை  பற்றிய விரல்கள் போல் வேர்தெரிய கிடந்தன.பார்க்கவே நெஞ்சை அறுத்தது.இதைவிடக் கொடுமை இவர்களின்  வாகனத்தை மறித்து எங்க ஊருக்கு நிவாரணப் பொருள் வரவில்லை.சாப்பிட்டு இரண்டு நாளாச்சு என்று வழி நெடுக கூக்குரல்கள் கேட்டு மனசு பிசைந்தது..அவர்களை சமாதான ப்படுத்தி ஓரடி நகர்வது பெரும்பாடாகி விட்டது.இந்த மக்கள் பாடு தீர உடனடி வழி ?சிந்தித்து    நடவடிக்கை எடுக்கவேண்டியவர் நாமல்லவே என்று புலம்புவதை த்  தவிர வேறு என்ன செய்ய ?                          .கூகுள் வரைபடம் மூலம் ஊர்ந்தர்கள் .அது காட்டும் வழி கிட்ட இருந்தது ஆனால் ஊரோ எட்ட இருந்தது  .           .வருவாய்துறை மூலம்  சங்க நண்பர்கள் வழி சொல்ல ஒரு வகையாக  ஊரை எட்டினோம். .கூடி நின்ற மக்கள் துயரம் வழியும் குரலில் வரவேற்றார்கள் .இவர்களது தாமதம்  காத்திருந்த நண்பர்களிடமும் சோர்வையும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த்து .இது போன்ற நிவாரணப் பொருள்களை ஏற்றிவரும் சரக்குந்துகளை ஆங்காங்கே மக்கள் மறித்து தம்தம் கிராமங்களுக்கு  கடத்துகிறார்கள் என்ற தகவல் நண்பர்களை சோர்வு உண்டாக்கியிருந்தது .இவர்களது வண்டியையையும் பதாகையையும் பார்த்தபின்னர் தான்  உயிர்த்ததுபோல் உணர்ந்தார்கள்.
      சங்க  நண்பர்கள் வருவாய்துறையினர் மூலம் குடும்பவாரியாக வரிசைப்படுத்தி முதலில் நிவாரணப் பொருள்களையும் ,பிறகு ,தலைக்கு ஒன்றாக உணவுப் பொட்டலத்தையும் கொடுத்தார்கள் .பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய  முகத்திலும்   அவர்கள் பொருளை வாங்கும்போது கழிவிரக்கமும் ,நன்றியும் ,இதோடு பிரச்சினை தீர்ந்துவிடாதே என்ற ஏக்கமும் கலந்த கலவையான உணர்வுகள் தென்பட்டது. இதை   இவனால் எதிர்கொள்ள இயலவில்லை. இப்படியான பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க  தான்  அமானுஷ்ய சக்திபடைத்த மீமனித னில்லையே என்ற ஏக்கம் இவனைப்  பிழிந்தது.      
                       மக்கள்  தாம் பெற்ற நிவாரணப் பொருள்களை ஒழுங்கு செய்துவிட்டு பெற்ற உணவை உண்டார்கள்.அவர்கள் சாப்பிடும்போது  அவர்களது முகத்தைப் பார்த்தால் தெய்வீகம் என்று சொல்வார்களே அதை உணர முடிந்தது.பசித்தவன் முன் உணவே தெய்வம் என்று விவேகானந்தர் சொன்னது நினைவில் வந்தது.பின்னர் வருவாய்த்துறை அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட மின்னூடகவியலார்கள்  ஒவ்வொரு குடும்பத்தாரையும் நேர்காணல் செய்து கஜா புயலினால் ஏற்பட்ட இழப்புகள்,அரசிடம் எதிர்பார்க்கும் நிவாரணம்  போன்றவற்றை உருக்கமாக சொல்லி வருவாய்த்துறையினரும்  எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து  வழங்கிய  தற்காலிக நிவாரணத்திற்கு நன்றியை உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.இந்த விளம்பர உத்தி இவனுக்கு பிடிக்கவில்லை.மெல்ல நகர்ந்து வீழ்ந்த தென்னைகள் பக்கமாக நகர்ந்தான்.
  அங்கே அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி பொட்டலத்தை அவிழ்த்து சாபிடா மல் தென்னை மரங்களைப் பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.எல்லாரும் சாப்பிட்டு பசித்தீயை அணைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.இந்தப் பெண்மணி மட்டும்  தனியே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாரே ,இவன் அருகே போனான்.”ஏனம்மா தனியே சாப்பிடாமல் அழுது கொண்டி ருகிறீர்கள் ? உங்கள் வீட்டு பிள்ளைகள் ?”
“இல்லை தம்பி. இப்ப  நான் ஒருத்தி தான். எனக்கு இப்ப பசியில்லை.”
“உங்கள் பிள்ளைகள் எங்கேம்மா ?அவர்களுக்கு ஏதேனும்   …... ? “
“ஆமாப்பா.அதோ சாய்ந்து கிடக்கிற பதினாறு தென்னம்பிள்ளை களும், பத்து மாமரங்களும் தான் என் பிள்ளைகள் !அதுகெல்லாம் போனப்புறம் நான் சாப்பிட்டா என்ன  ?சாப்பிடாட்டா என்ன ? “

“அம்மா உங்க குறைகளை அந்த டிவி காரங்க முன்னால சொன்னா,அதைப் பார்த்து அரசாங்கமோ ,எங்களைமாதிரி தன்னார்வ  சங்கங்களோ வேண்டிய உதவியை செய்யலாம் ,சாப்பிட்டிட்டுப் போய் ,எங்களுக்கு நன்றி சொல்லாமல் உங்கள் குறைகளை மட்டும் சொல்லிட்டு வாங்கம்மா.தயவுசெஞ்சு போங்கம்மா.உங்க குறைகளை வெளியே சொல்லலையின்னா எங்களை மாதிரி சங்கத்துக் காரங்க முயற்சி எடுத்ததுக்கு பலனில்லை !”
“இல்ல தம்பி.நான் டிவியில எதாவது சொல்லி அதை என் மகன் ,மருமகள் கேட்டாங்கன்னா அவங்களுக்கு அவமானம்ன்னு  நினைப்பாங்க. நான் இப்படியே என் தென்னம்பிள்ளைகளோடையே  ஆயுசை முடிச்சுக் கிறேன் .”
“என்னம்மா,உங்களுக்கு மகன்,மருமகள் இருக்காங்களா சொல்லு ங்கம்மா .நாங்க எந்த சிக்கலும் இல்லாம சேர்த்து வைக்கிறோம் !”
“தம்பி ,நான் பெத்தபிள்ளை இல்லை.வளர்த்த பிள்ளை.என் வீட்டுக்காரருக்கும்  என் அக்காவுக்கும் பிறந்த பிள்ளை.பிள்ளை பெறந்த மறுநாளே எங்கக்கா செத்துப்போச்சு.அத்தான்  கைப்பிள்ளையோட கஷ்ட்டப் படராறேன்னு ,அந்த பிள்ளையை வளர்க்க நான் இஷ்ப்பட்டுதான் அவரை ரெண்டாம் தாரமாக  கட்டிகிட்டேன்  .அக்கா பிள்ளையை வளர்க்க நான் பிள்ளையை பெத்துக்கல.அத்தானுக்கும் பிள்ளைக்கும் எந்த குறையையும் இல்லாம குடும்பத்தை காபந்து பண்ணினேன் .பையனும் அவன் கல்யாணம் கட்டிகிறவரைக்கும்  அம்மான்னு அவ்வளவு பாசமும் .பிரியமும் காட்டினான்..ம்ம்ம்,கல்யாணம் முடிச்சதும் பட்டிணத்தில் பொண்டாட்டிகூடவே இருந்திட்டான்.பிறந்த பேரப்பிள்ளைகளைக் கூட கூட்டிட்டு வந்து காட்டலை.அக்கா பெத்த பிள்ளைக்காக   நீ பிள்ளை பெத்துக்காமகுடும்பத்தைக்  காப்பாத்தினே.பிள்ளை நம்மளை அம்போன்னு கைவிட்டுட்டான்.இப்போ நானும் நட்டாத்துல  விட்டுட்டு போகப் போறேனே என்று அழுத என்புருஷன் எனக்கு கடைசிவழி  துணையாய்  பதினாறு தென்னம்பிள்ளைகளை யும் ,பத்து மாமரங்களையும் விட்டுட்டு செத்தாரு.இந்த தென்னம் பிள்ளை களை   வச்சுதான் வயித்துப் பாட்டை ஓட்டினேன். .அதுகளும் என்னை நிர்கதியாய் விட்டுட்டுப் போகவச்சுருச்சே இந்த எமகாதக புயலு.” அந்த அம்மா சொல்ல சொல்ல இவனுக்கும் கண்களில் புயல்நீர் பொங்கியது.
“அம்மா கவலைபடாதீங்க, வேர் சாய்ந்த மரத்தையும்,பாதி முறிஞ்ச மரத்தையும்  உயிர்ப்பிக்கும் விஞ்ஞான நடைமுறைகள் இருக்கும்மா .அந்த வேர்கள் காய்ந்து விடாமல் சாணிபூசி பாதுகாத்து வைங்க.    இன்னும் மூணுநாளில் அதற்கான விவசாய விஞ்ஞானிகளை எங்கள் செலவிலே கூட்டிட்டு வந்து உங்களுக்கு ஆயுள்பரியந்தம் துணை நிற்கவும் ,உதவவும்  நாங்க இருக்கோம்மா.!தயவுசெஞ்சு  சாப்பிடுங்கம்மா !”என்று கண்ணீர் பொங்க  குரல்  தழுதழு க்கசொன்னான்.                                                                                                              ,அந்த அம்மா இவனது தோளை தட்டி, உணவு பொட்டலத்தைப் பிரித்தாள் .     

குண்டக்க மண்டக்க


மதுரை (தேனி ,திண்டுக்கல் உள்ளிட்ட ) மாவட்ட மக்களுக்கு ஒருசிறப்பு குணம் உண்டு. மக்கள் .பேசும்போது எதுகை மோனையாய் இரட்டைக்கிளவி ,அடுக்குத் தொடராய் ,நேரும் முரணுமாய்  வெளிப்பட இன்றும் கேட்கலாம் !இது அந்த மண்ணோடு கலந்த குணம்! 
         எளிதில் உணர்ச்சி வசப்படும் வெள்ளந்தி மக்கள் பிறந்த இம்மதுரை மண்ணில்  பிறந்த வடிவேலு ,சேரன் போன்றோர்இம்மண்ணின் மொழியை  பயன்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை .இம்மண்ணில் பிறந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துப்பாருங்கள்.அடுக்குஅடுக்காய் சொற்களை அள்ளி வரலாம்.
"இந்தா எனக்கு வெளம் வந்துச்சுன்னா எகனைமொகனையா (எதுகை மோனையாய்) கேட்டுப் போடுவேன் ,அப்புறம் அறம் புறமாய் (அறத்திற்கு எதிராக) ஆயிரும் பாத்துக்க " என்று  அறச் சீற்றத்தை கேட்கலாம்.
   இப்படியானவற்றுள் ஒன்று தான் "குண்டக்க  மண்டக்க ". இதன் நேர்பொருள் குண்டிக்கு கீழ் மண்டை.மறைபொருள் -எதிர் மறையான ,  ,தலைகீழாக ,என்று அர்த்தம் கொள்ளலாம்.
 எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பர்.தலை கீழாக குண்டி மேலாக ஒருவன் வந்தால் எப்படியோ அவன் பேச்சும் செயலும் வெறுக்கத் தக்கதே .
தலைகனத்தவன்,மண்டைவீங்கியவன்(மிகுந்த அறிவாளியாக கருதிக் கொள்பவன் ) ,குண்டிபெருத்தவன் (நிற்காமல் உட்கார்ந்தே பழகியவன் )குனிந்து ,நிமிர்ந்து ,சமயங்களில் உட்கார்ந்தும் ,நின்றும்  பார்க்கும் விவசாய வேலைக்கு சரிப்பட்டுவருவானா?அந்த மாவட்டத்தின் முதன்மையான தொழிலே விவசாயத்துக்கு இப்படியான ஆள்கள் ஒத்துவருவார்களா?சிந்திக்ககூடிய மண்டை இருக்கும் இடத்தில் உட்காருவதர்கான குண்டி இருந்தால் செயலூக்கம் இருக்குமா?இந்த இடத்தில் குண்டி என்பது நாறும் தன்மை உள்ள ,கொச்சையான சிந்தனையையும் குறிக்கும்.! வறட்டுத்தனமாநேருக்கு மாறாகொச்சையாய்    சவடால்பேசுவதை குறிப்பதே இந்த குண்டக்க மண்டக்க ! எதோ போறபோக்கில் சொன்ன சொல்லுக்கு இத்தனை அர்த்தமா,விளக்கமா என்று கேட்கலாம்.இதுதான் பாமரமக்கள் மொழியின் தன்மை!மொழியை வாழவைக்கும் தன்மை.!இப்படி நிறைய வார்த்தைகள் உண்டு.
இசகுபிசகு-இதுவும் நேர் முரண் வார்த்தை தான். .இதன் பொருள்  இசைக்கு பிசகாக -சுபசுரத்திற்கு  அபசுரமாக என்று மணிப்பிரவாளத்தில் சொன்னால் எளிதில் விளங்கும்!இப்படியான பாமரத்தமிழ் தான் படைப்பை மேம்படுத்தும் .மொழியை காத்து நிற்கிறது.

Monday, 26 November 2018

மானுட சமுத்திரம்


மானுட சமுத்திரம்
-               ஜனநேசன்
அம்மாவுக்கு இந்தப் பெண்ணை பார்க்கப் போகவே இஸ்டமில்லைதான். இதுவரைக்கும் மூனுவருஷமாய் கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமாய் நின்றவன் அந்தப் பெண்ணை பிடிச்சிருக்கு. தனது வங்கியில் தனக்கு கீழே வேலை பார்க்கிற பெண்; நல்ல பெண் என்கிறானே அவனது மனத்திருப்திக்காகப் பார்ப்போம். பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு சொல்லிருவோம் என்றுதான் அம்மா அந்தப் பெண்ணை பார்க்க ஒத்துக்கொண்டாள்.
காரை அவன்தான் ஓட்டினான். இந்தப் பெண் பற்றிய பேச்சைத் தொடங்கியதிலிருந்து அம்மாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதமும் தொடங்கியிருச்சு. போன திங்கள்கிழமை பேங்கிலிருந்து வந்ததும் சொன்னான். “அம்மா, எங்க பேங்கில கேஷியரா வேலை பார்க்கிறாள் அவளைப் பிடிச்சிருக்கும்மா. அவளை ஒருநாள் நீ வந்து பாரு. உனக்கும் பிடிக்கும்.  கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்” என்று குரலைக் குழைவாய் தயங்கித்தயங்கி சொன்னான்.
அம்மாவுக்கு ‘கல்யாணத்துக்கு ஒத்துக்காதவன் பேசுறானேன்னு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேசமயம் எவளையோ ஒருத்தியைக் கல்யாணம் கட்டிவைன்னு வந்து நிற்கிறானேன்னு அதிர்ச்சியாகவும் இருந்தது. அம்மா மனதை பக்குவப்படுத்திக் கொண்டு உணர்வை வெளிக் காட்டாமல், “சந்தோசம்பா. அவள் என்ன ஜாதி, நம்ம ஜாதியா, அப்பா அம்மா என்ன செய்யிறாங்க? எங்கே இருக்காங்க?
“ஜாதி எல்லாம் தெரியாது. எங்க பேங்கில மூனு மாசத்திற்கு முன்னாலதான் புதுசா வேலைக்கு வந்தவ. அழகானவ. ஆடம்பரமில்லாதவ. தன் வேலைன்னு சீட்லையே கிடக்காம வங்கிக் வாடிக்கையாளர்கள் கேட்கிற உதவியை தட்டாமா செய்யிறா. தனது சீட்டை சேர்ந்தது இல்லாட்டியும் அடுத்தவங்களைக் கெஞ்சி உதவச் செய்கிறாள். ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்கமாட்டா…. துறுதுறுன்னு சிரிச்ச முகத்தோடு இருப்பா. யாருகிட்டேயும் வளவளப்பு இல்லை. அளவா பேசுவா. தேவையானதை மட்டும் பேசுவா. வங்கி நேரம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷமே கிளம்பிடுவா. பேங்குள்ள புதுசா ஒரு தென்றல் காற்று நுழைந்து ஊடும்பாடுமா வீசுவது போல் இருப்பா” என்று அவனது மனதை வெளிப்படுத்தினான் அவன்.
“சரிப்பா, என்ன ஜாதி, குடும்பம் எப்படின்னு தெரியாம எப்படி? முதல்ல அவளைப் பற்றித் தெரிஞ்சுக்குவோம். அப்புறம் செய்வோம்” என்ற அம்மா மீது, அவனுக்கு கோபம் பொங்கியது.
“என்னம்மா ஜாதி ஜாதின்னு. நீங்க உங்க அத்தை மகனைத்தான் கட்டிகிட்டீங்க. அவரு ஆசைக்கொரு பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு உங்க சொந்த சித்தி மகளைக் கட்டிகிட்டு, உங்களையும் என்னையும் நடுத்தெருவில விட்டுவிட்டார். சரி சொந்த ஜாதிக்காரங்க யாராவது  அவரைத்தட்டிக் கேட்டாங்களா, பன்னெண்டு வயது மகனை நிர்க்கதியாய் விட்டுட்டோம்னு அவருக்கும் குற்றவுணர்வாவது. இருந்ததா? உங்க சித்தி மக, உனக்கு தங்கச்சி தானே நம்மால நம்ம அக்கா வாழ்க்கை கெட்டுப் போச்சேன்னு அவங்களுக்கு எதாவது, பாசம், பரிவு, இரக்கம்ன்னு இருந்ததா? சரி பொம்பளைப் பிள்ளை பிறக்கலையேன்னு கட்டின பொண்டாட்டி பிள்ளையை நடுத்தெருவில விடறோமேன்னு மனசு உறுத்தல் அவருக்கு இருந்ததா? பொம்பளை பிள்ளை பாசம், தாய்ப் பொம்பளையை நட்டாற்றில விடுமா? சாதி, பாசம்ன்னு வேசம் போட்டது போதும்மா…” என்று பொங்கினான் அவன்.
அதிர்ந்து பேசாத மகனிடம் இவ்வளவு குமுறல், மனக்கொந்தளிப்பு இருக்கிறதே!. அவன் பேசுவதிலும் நியாயம் இருக்கிறதே! அம்மாவின் வாய் அடைத்துப் போனது. அவன் இன்னும் ஆவேசமாகிவிடக்கூடாது என்பதற்காக மென்மையாக அவனது கைகளைப் பற்றி தோளில் தட்டி ஆசுவாசப்படுத்தினாள்.
“சரி, பார்ப்போம். ஒரு நாளைக்கு முருகன் கோயிலுக்கு வரச்சொல்லு”.
“அம்மா கோயில்லப் பார்க்கிறது, சினிமா கொட்டகையிலப் பார்க்கிறது இதெல்லாம் சரியாக இருக்காது. வாங்க, வீட்லைப் போய் பார்ப்போம்” என்றான் அவன்.
“ஆமாம் அதுவும் நல்ல விஷயம்தான். வீட்ல பார்த்தால் அந்தப் பெண்ணைப் பற்றியும் குடும்பத்தையும் பற்றியும் தெரிஞ்சிக்கலாம்தான். ஆனால் நாம வீடேறிப் போய் பார்த்ததுக்குப் பின்னால பிடிக்கலைன்னா ஒரே இடத்தில வேலை பார்க்கிறவங்களுக்குள்ளே மனக்கசப்பு வந்துறக்கூடாதுல்ல. அதுக்காகத்தான் கோயில்லப் பார்ப்போம்னேன்”.
“அம்மா என்னை உங்களுகு;கு பிடிச்சிருக்குல்ல! எனக்கு பிடிச்சது உங்களுக்கும் பிடிக்கும் தானே” மகன் தன்னை சாமர்த்தியமாகப் பேசி மடக்குவது அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவன் எந்த விஷயத்தையும் அம்மாவிடம் இவ்வளவு நேரம் லாவகமாக பேசினதில்லை. ஆனால் சாதி தெரியாத கூட்டத்துக்குள்ளே மாட்டி மகன் வாழ்க்கையும், காலம்போன காலத்தில தனக்கும் நிம்மதியில்லாமப் போயிறக்கூடாது என்ற எண்ணம் சுட்டது.
“சரி, வீட்லையே பார்க்கலாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தான். எல்லாருக்கும் லீவுநாள். காலையில பதினொரு மணிக்கு அவங்க வீட்டுக்கு வர்றோம்னு அவங்க அப்பாகிட்டே சொல்லியிரு.
ஆமாம் அவங்க அப்பா என்ன வேலை செய்யிறாரு. அவங்க அம்மா என்ன செய்யிறாங்கன்னு சொல்லவே இல்லையே!”.
அம்மா, அந்தப் பெண்ணோட அம்மா, அவ பிளஸ்டு படிக்கும் போதே உடம்புக்கு முடியாம இறந்திருச்சாம். அவங்க அப்பா இங்கதான் ஒரு ஜவுளிக்கடையில அக்கவுண்டண்டா இருக்காரு”
“ஏப்பா இதை முதல்லையே சொல்லலை? “வயசுக்கு வந்த பருவத்தில அம்மா இல்லாம வளர்ந்த பிள்ளை எப்படி வளர்ந்ததோ, குணம் எப்படியோ அப்பா எப்படியோ? கூடப்பிறந்தவங்க யாருமில்லைங்கிற, என்னப்பா நான் பட்டது போதாதா. நீயுமா இப்படி இடியப்ப சிக்கல்ல மாட்டிக்கணும்.”
“அம்மா, அப்படி எல்லாம் இல்லம்மா. அந்தப் பெண்ணோட குணம், நடத்தை, வேலை பார்க்கிற அக்கறை, அடுத்தவங்களோட பேசும் நாசூக்கு எல்லாம் வந்து பாரு. பார்த்துட்டுப் பேசு” என்று குரல் உயர்த்தினான்.
‘ச்சே இவனைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். இவன் போக்கில போய்தான் திருப்பனும்னு’. மனசுக்குள் நினைத்துக் கொண்ட அம்மா “சரிப்பா, ஏன் ஆவேசப் படறே. நாம நாளைக்கு காலையில பதினோரு மணிக்குப் போகிறோம். தகவல் சொல்லிரு”.
இப்போது பெண்பார்க்க போய் கொண்டிருக்கிறார்கள். கார் கடந்து போகும் ஒவ்வொரு முக்கிய சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தத்திலும் அம்மா யாரையோ இடது ஜன்னல் வழியே தேடினாள். பார்வை உற்று ஊடுருவி வெளியெ செல்லும், தேடிய நபர் இல்லாதது கண்டு சோர்வாக, பெருமூச்சோடு உள்ளே திரும்புவது, கடல் அலை கரையோரம் மகிழ்ச்சி பொங்கித் தேடிவந்துவிட்டு உற்சாகமின்றி கடலுக்குத் திரும்புவது போலிருந்தது. அவன் உள் கண்ணாடி மூலம் கவனித்தான். “என்னம்மா யாரைத் தேடுறீங்க. யாரையும் வரச் சொல்லிருக்கிங்களா?”
“உங்கப்பா வர்றேன்னாரு! அவன் அதிர்ச்சியை வெளியே காட்டாமல் காரை ஓரமாக நிறுத்தினாள். “என்னம்மா, ஏன் அவரை கூப்பிட்டீங்க. நம்மலை அனாதையாக்கிட்டு போனவர்கிட்ட ஏன் பேசுறீங்க”.
“இல்லப்பா அவராத்தான் இன்னிக்கு காலையில போன்ல பேசி அழுதாரு. பரிதாபமா இருந்தது. நான் தான் நாம போற இடத்து விலாசம் சொல்லி வரச் சொன்னேன்.”
“அம்மா அங்கே வந்து அவரு எதாவது பேசி கலாட்டா பண்ணினா உங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு நான் கிளம்பிடுவேன். அப்புறம் வருத்தப்படக்கூடாது!” என்று வண்டியைக்கிளப்பினான். வண்டி அதிர்ந்தது.
“அவரு ஒன்னும் பேசமாட்டாரு. உன் கல்யாண நேரத்தில அப்பா ஸ்தானத்தில நிற்பாரு. உன் விஷயத்தில தலையிடமாட்டாரு. அப்பா உள்ளுரில் இருந்தும் அவர் வரலைன்னா, என்னைப் பத்திதான் இந்த உலகம் தப்பாப்பேசும்! அவரு ஆளோட ஆளா இருப்பாரு. அவரு ஒன்னும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டேன்”.
“அம்மா, இந்த நாடகம்லாம் வேணாம். அங்கே வந்தா அவரும் எதுவும் பேசக்கூடாது. நானும் அவருகிட்ட எதுவும் பேசமாட்டேன்”
கார் ஊரின் தெற்குப் பகுதியில் உள்ள கண்ணகி நகருக்குப் போனது. கீழ்நடுத்தரப்பகுதிமக்கள் வாழும் பகுதி. ஜனநெருக்கம் அதிகம் இருந்தது. தெருவின் இருபுறமும் பலசரக்குக் கடைகள், கறிக்கடை, மீன்கடை, பால்கடை, காய்கனிக்கடை இப்படி எல்லாக் கடைகளிலும்  ஆள்கள் நின்றிருந்தனர். முக்கிய சாலையிலுருந்து இடதுபுறம் திரும்பி இருபதடி சாலையில் வண்டி மெல்ல ஊர்ந்தது.
இடப்புறம் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி அலைப்பேசியில் தெரு வரைப்படம், அவளது இருப்பிடம் தேடி, தான் நுழைந்த தெருவை உறுதிபடுத்திக் கொண்டான். மெல்ல நகர்ந்தான். “ஈயாட்டம் ஜனங்க மொய்ச்சுக்கிடக்குது. சேறும் சகதியுமாய் இருக்கு” என்று அம்மா முனங்கினாள். அவனது கூர் செவியில் பட்டுவிட்டது. “சேத்திலதானம்மா நெல்லு விளையுது!”.
“ஆமாம், நான் தெருவைத்தான் சொன்னேன்” என்றாள். வண்டியை ஒரு ஓரமாய் நிற்கும் இடம் தேடி நிறுத்தினான். அவர்கள் வலதுபுறம் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு பத்தடிகுறுக்குத் தெருவுக்குள் போக வேண்டும். முதல் நாள் பெய்த மழையின் நசநசப்பு தெருவெங்கும் தென்பட்டது. வேட்டிகட்டி பழக்கமில்லாதவன் வேட்டியை சரி செய்து கொண்டு மெல்ல இறங்கினான். அம்மாவும் கொண்டு வந்திருந்த பூ, பழம், இனிப்பு பைகளோடு மனதிலுள்ள சிந்தனையை மறைத்து முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு இறங்கி அவனருகில் நின்றாள். இருவரும் சாலையைக் கடந்து காந்தி தெருவுக்குள் நுழைய இருந்த தருணம். பதினைந்துவயது மதிக்கத்தக்க இரு மாணவர்களும், மாணவிகளும் “சார் செல்வியக்கா வீட்டுக்கா….” என்று புன்னகை பூக்க கேட்டனர். அவன் தலையசைத்தான். “வாங்க, நாங்க கூட்டிட்டுப் போறோம்” என்றனர். அவர்களுள் இருபெண்கள் அம்மாவிடம் “ஆன்ட்டி அந்த பைகளைக் கொடுங்க நாங்க கொண்டு வர்றோம்” என்று இரு பைகளை வாங்கி கொண்டனர். அம்மா பூ பையோடு நடந்தாள். இன்னும் நாலு பேர் எதிர்சேவை செய்வது போல் எதிர்கொண்டு வணங்கி அழைத்துச் சென்றனர். தெருவின் இருபுறமும் இடைவெளி விடாது அடுக்கிய தீப்பெட்டிகள் பொல நெருக்கமாய் வீடுகள் இருந்தன. வீடுகள் முன்பாக இரு சக்கர வாகனங்கள் நின்றிருந்தன. சிறுபிள்ளைகள் அங்குமிங்குமாக பட்டுப்பூச்சி போல் விளையாடித்திரிந்தன. இருபக்கமும் வீட்டுப்பெண்கள் இவர்கள் நடந்து போவதைப் பார்த்து மெல்ல முறுவல் பூத்தனர். அவனுக்கு கூச்சமாக இருந்தது. புது அனுபவம் வேட்டி தரையில் இழுபடாமல் மெல்ல நடந்தான். இருபுறமும் பார்த்துக் கொண்டே அடிக்கடி பின்னால திரும்பிப் பார்த்தபடியும் அம்மா பின் தொடர்ந்தாள். அவள் இருபது வருடமாய் விலகிய ஜனங்களின் நேசப் பார்வை.
அவனிடம் எதாவது பேச வேண்டுமே என்றுணர்ந்த பையன்கள். ‘அக்காவிடம்தான் டியூஷன் படிக்கிறோம். நீங்க அக்கா பேங்கிலதான் ஆபிஸரா? அக்கா கணக்கு சைன்ஸ் எல்லாம் நல்லா சொல்லித் தருவாங்க. டென்த்தில சென்டம் வாங்க வச்சிட்டாங்க. அக்கா சிரிச்சுகிட்டே சொல்லித் தருவாங்க. திட்டவே மாட்டாங்க. ஆனா, எங்களை நல்ல மார்க் வாங்க வச்சிருவாங்க” என்று பெண் பிள்ளைகள் சொன்னார்கள.; தெருவின் இருபுறத்து வீட்டார்களின் வாஞசையான பார்வைகளின் குளிர்ச்சியில் பிள்ளைகளின் பேச்சுகள் நெகிழ்வூட்டின. அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை இந்தத் தெரு பிள்ளைகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கணும். அவளது அப்பாவை தங்களுடனே தங்க ஒத்துக்கணும். அவருக்கு எந்த வகையிலும் மரியாதைக்குறைவு ஏற்படக்கூடாதுன்னு அவள் சொன்ன நிபந்தனைகள் நினைவுக்கு வந்தன. அவளது உயரம் கூடிக்கொண்டே போனது. அம்மா மௌனமாக முகத்தில் சிரிப்பை படரவிட்டபடி நடந்தாள.
அந்த வீட்டின்முன் இளம்பெண்கள் குழுமியிருந்தனர். அந்த வீடுதான் என்றுணர்ந்த அவன் நடையை இன்னும் மெதுவாகக்கினான. வேட்டி இடுப்பில் சரியாக இருக்கிறதா என்று அனிச்சையாக அவனது கைகள் சரிபார்த்தன. முகமெல்லாம் கூச்சம். கண்களைச் சுருக்கியது. கூடவந்த பிள்ளைகள் “இந்த வீடுதான் சார், அங்க நிற்கிற அக்காக்கள் அந்த தாத்தாவின் ஜவுளிக்கடையில வேலை பார்க்கிறவங்க” என்று ஒரு பெண் சொன்னாள். அவர்கள் ‘வெல்கம் சார்’ என்று மெல்லிய கோரஸாக இசைத்தனர். அந்தப்பெண்கள் இளம்பச்சைநிறத்தில் சேலை அணிந்திருந்தனர். கண்ணுக்கு குளுமையை ஊட்டியது. வாசல்படியில் ஒல்லியாக ஒரு பெரியவர் இரு கைகளையும் கூப்பி, “வாங்க, வாங்கத் தம்பி, வாங்க அம்மா” என்றார். அவர்தான் அவளின் அப்பாவாக இருக்கக்கூடும் என்று யூகித்தான். மெல்லிய தேகம், உறுத்தாத வெள்ளை ஆடை, கவலை தோய்ந்த முகத்தில் அங்கங்கே மகிழ்ச்சியின் குமிழ்கள் பளிச்சிட்டன. அவளுக்குப் பின் கைகூப்பியபடி நான்கைந்து ஆண்களும், பெண்களும் ஒளிர்ந்த முகத்தோடு நின்றனர்.அவர்களுள் ஒருவயதானப் பெண் முன்வந்து அவனது அம்மாவை வணங்கி உள்ளே அழைத்து வந்தாள்.இளம் பெண்கள் பன்னீரைத் தெளித்தனர். அவன் நெளிந்தபடி உள்ளே நுழைந்தான்.
அந்த வீடு ஒரு சின்ன காம்பவுண்ட்டில் இருந்தது. கிழக்குப் பார்த்த காம்பவுண்டில தென்புறமும் வடபுறமும் ஐந்தைந்து வீடுகள். வீடு என்றால் பத்துக்கு பதினைந்தில் ஒரு அறைதான். முன்னால் மூன்றடியில் ஒரு சின்ன வராந்தா. இரு வரிசைவீடுகளுக்கு நடுவே ஆறடி அகலத்தில் ஒரு நடைபாதை. இளம்பெண்கள் வரிசையாக நின்றார்கள். வீட்டுத்தோட்டத்தில் நட்ட செவ்வந்திப் பூச்செடிகள் மலர்ந்து நிற்பது போல இருந்தது. சிறு வரண்டாவில் யானைத் தந்த நிறத்தில் சேர்கள் போடப்பட்டிருந்தன. அவளின் அப்பா அவனை உட்காரச் சொன்னார். கூடவே அக்காம்பவுண்ட் ஆண்களும் அவனுக்குத் துணையாக உட்கார்ந்தார்கள். அம்மாவுக்கு பேச்சுத்துணையாக அந்தப்பெண் வந்து ஒட்டிக் கொண்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அம்மா அந்தப்பெண்ணிடம் கிசுகிசுத்தாள். அந்தப்பெண் அம்மாவை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றாள். ஒரு வரிசைக்கு இரு பொதுக்கழிப்பறை, குளியலறைகள் இருந்தன. ஓரளவு சுத்தமாகவே இருந்தன. அம்மா அந்தப்பெண்ணிடம் வாயைக் கிளறினாள். “ஏம்மா, இவுங்க என்ன ஜாதி?  இந்தப் பொண்ணோட அம்மா, அப்பா குணமெல்லாம் எப்படி?”
 “அம்மா, நாங்க பத்துவருஷமா இந்த காம்பவுண்டலதான் இருக்கோம். இந்தக் காம்பவுண்டில் பல தரத்தவங்க இருக்காங்க. நாங்க எல்லாரும் தாய் பிள்ளையாகத்தான் பழகுறோம். ஜாதி பார்க்கிறதில்லை. அவங்க அம்மா இருந்த போதும் சரி, இப்பவும் சரி அந்தப் பொண்ணு தங்கம்தான். எந்தக் குறையும் சொல்ல முடியாது. இங்க உள்ள பத்து வீட்டுக்கும் செல்விதான் மூத்த பொண்ணு மாதிரி! எங்க பிள்ளைகளை படிக்க வைக்கிறது, வேலைக்கு மனுப்போட்டு, வேலையில சேர்த்துவிடறது, எல்லாம் அந்தப் பொண்ணுதான். நல்லா படிச்சிருக்கிறோம். பேங்கில வேலை பார்க்கிறோம் என்ற கௌரதையோ, பந்தாவோ இல்ல. எல்லார்கிட்டேயும் சிரிச்ச முகத்தோடு பேசும். முகம் சுண்டியோ ஒரு கடுகடுத்த வார்த்தையோ அந்தப் பொண்ணுகிட்ட பார்த்ததில்லை. இந்த பத்துவீட்டையும் புத்திமதியால பராமரிக்கிறது அந்தப் பெண்தான். அதனால இந்த பத்துவீட்டுக்காரங்க மட்டுமல்ல இந்த தெருவே இந்த பொண்ணுக்கு சொந்த பந்தங்கள்தான். எல்லாரும் வந்தா நிற்க இடமில்லைன்னுதான் அவங்க யாரும் உள்ளே வரலை…” என்று அந்தப்பெண் சொல்லிக் கொண்டே போனாள்.
அந்தப்பெண்மணியிடம் எதுவும் கறக்க முடியலை என்ற ஏமாற்றத்தை மறைத்து குளியலறைக்குப் போய் வந்தாள் அம்மா. இந்த மனுஷன் வந்தா எதாவது பேசுவார்னு பார்த்தா வரலையே என்று மனதுக்குள் நினைத்தபடி வந்தாள். அம்மா வீட்டுக்குள் நுழையும் பொது அவரும் வந்துவிட்டார். அவளது அப்பா எழுந்து வரவேற்றார். அவர் தான்தான் “மாப்பிள்ளையின் அப்பா” என்று அவராகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். அவனும் எழுந்து வரவேற்பது போல் தலையசைத்து ஒரு சேரைக் காட்டினான். அவனது அம்மா அவரைப் பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனாலும் அம்மா மனசுக்குள் முனங்கினாள் ‘நம்மலே இவன் மாப்பிள்ளை இவன் பொண்ணுன்னு முடிவு செய்யலை. இவரு திடீர்னு வந்து சொல்லி ஒட்றாரே’
செல்வியின் அப்பா, அவனது அப்பாவையும், அம்மாவையும் செல்வியிடம் அறிமுகப்படுத்தினார். அவள் அவர்கள் முன் குனிந்து வணங்கினாள். அவள் குனிந்து நிமிரும் போது அவளது முகத்தில் தென்பட்ட களையும், கனிவும் அம்மாவை நெகிழ்வித்தது. இறுக்கம் கரைந்தது. எல்லாரும் ஒரே மனித ஜாதியாயத் தெரிந்தார்கள்.