Thursday, 28 March 2024

பயணம்==குறுநாவல்

 

பயணம்==குறுநாவல்

- ஜனநேசன்

 

            “சீனாக்காரப் பாட்டி உங்களுக்கு ஒரு தபால்!” என்று தபால்காரப் பெண் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போனாள்.  அன்று சனிக்கிழமை மகன் ஜெயக்கொடி வீட்டில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவன், அம்மா ஓடிப்போய் தபால் வாங்கி ஆர்வமாய் பிரித்து வாசிப்பதைக் கவனித்தான்.  கண்ணீல் நீர்வழிய அம்மா வாசித்தாள்.  விரைந்து எழுந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தான்.  எழுத்துக்கள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களாக இருந்தன. வார்த்தைகள் புரியவில்லை.  அம்மாவின் பெயர் மட்டும் புரிந்தது.  அனுப்பியவர் ‘லிங்டாங், ஷில்லாங் மேகாலயா’ என்றிருந்தது. அம்மாவின் பூர்வீக ஊரிலிருந்து வந்தது மட்டும் புரிந்தது.  அம்மாவைப் பார்த்தான்.  வைரஸ் காய்ச்சலில் உடல் தளர்ந்திருந்து நடுங்கிய அம்மாவை உட்காரச் செய்தான்.

            “என்ன அம்மா தபால் விவரம். ஏன் அழுகிறாய்”.                         “எங்க அம்மா மரிச்சுப் போச்சு, 10 நாள் ஆச்சாம்.  எண்பது வயதில நோயில செத்தது.உடனே அன்றைக்கே அடக்கம் பண்ணிட்டாங்க ளாம்.  அம்மா கொடுக்க விரும்பிய சீரை வந்து வாங்கிட்டு போ.  நாங்களும் உன்னைப் பார்த்து 35 வருஷம் ஆச்சு என்று எங்க தம்பி, உங்க மாமன் கடிதம் எழுதியிருக்கு” என்று அம்மா திக்கி தடுமாறி சொன்னது.

            ஜெயக்கொடி மனதில் குதூகலக் கொடி பறந்தது.  ‘அம்மா மூலம் சொத்து வருகிறது.  தங்கச்சிக்கு கிடைக்காம நாம சுருட்டியிற வேண்டியது தான்’ என்று திட்டம் மின்னல் வெட்டியது.

            அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு விம்மினான்.  இமைகளை மூடித்திறந்து உதறினான் கண்ணீர் ஒரு சொட்டு கூட உதிரவில்லை.  முகத்தை அஷ்ட கோணலாக பாவித்து சோகத்தை வெளிப்படுத்த முயன்றான்.  மனைவி மல்லிகாவுக்கு கண்ணீர் பொங்கியது.  மாமியாரைக் கட்டிப் பிடித்து அழுதாள்.  மாமியார் ஏதோ புரியாத மொழியில் புலம்பினாள்.  தகவல் தெரிந்து தங்கை ரோஜாவும் வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

            அடுத்தது என்ன என்று மகனின் மனசு சொடுக்கியது.  “அம்மா காய்ச்சல் வந்த உடம்பு, அழுது உடம்பைக் கெடுத்து எங்களையும் அனாதையா விட்டுடாதே அம்மா” என்று பாசத்தை பிரயோகித்தான் மகன்.  தங்கையையும், மனைவியையும் பிரித்து அழுகையை அடக்கினான்.  பெண்கள் விம்மி விசும்பிக் கொண்டிருந்தனர்.

            “என்னம்மா யோசனை. உன் உடம்பிருக்கிற நிலையில  நீ

ஷில்லாங் போனா நீ திரும்ப மாட்டே. உங்க சொந்தக்காரங்க வரவிட மாட்டாங்க. நாங்கெல்லாம் அனாதையாயிருவோம்” என்று குரலை நெகிழ்த்தி புலம்பினான்.  தங்கையும், மனைவியும் அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.  அம்மா நெகிழ்ந்து அழுதாள்.

            “அம்மா ரெண்டு யோசனை.  ஒன்னு, உனக்கு உடம்பு சரியானதும் ரெண்டு மூணு மாசத்தில் ஷில்லாங் போய் மாமா மற்றும் சொந்த பந்தங்களைப் பார்த்து துக்கம் விசாரிச்சுட்டு ஒரு ஒரு வாரம் இருந்துட்டு வர்றது.  அல்லது நம்ம குடும்ப சார்பா நான் மட்டும் உடனே கிளம்பி ஷில்லாங் போய் துக்கம் விசாரிச்சிட்டு செய்முறை இருந்தா செஞ்சுட்டு வர்றது”

            எவருக்கும் கட்டுப்படாமல் முரட்டுத்தனமாய் பேசி ஊதாரித் தனமாய் திரிந்த மகன் இப்படித் தெளிவாய் பவ்வியமாய்ப் பேசியது அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தது.

            “எனக்கு ஷில்லாங் போய் வர ஆசை.  பிறந்த தேசம், சொந்த பந்தம் எல்லாம் பார்த்து வரணும்.  என் உடல்நிலை இரண்டாயிரம் மைல் போய் வர ஒத்துழைக்குமா. அவர்கள் தான் என்னை திரும்பி வர அனுமதிப்பாங்களா தெரியலை.  ஆசைபட்டு கட்டி வந்து புருஷன் மரிச்ச மண்ணில உயிரை விடறதுதான் அவருக்கு நான் செய்யிற மரியாதை.  நான் பிறந்த மண்ணுக்கு கொடுக்கிற மதிப்பு” என்று சொல்லி விம்மினாள்.

     “அம்மா செத்ததுக்கு பெண் பிள்ளைகளுக்குத்தான் முறை செய்யனும்.  என் தங்கையிடம் ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்திரு.  அவ வேணும்கிறதை செஞ்சுக்கட்டும். நீ மட்டும் போயிட்டு வா.  இந்தா ரெண்டாயிரம் ரூபாய் முதலில் மெட்ராஸிலிருந்து கவ்ஹாத்தீ போற ரயிலுக்கு டிக்கட் பதிவு பண்ணிட்டு வா” என்று அம்மா தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.

 

**************

********2*******

            கவுஹாத்தி செல்லும் திப்ருகார் விரைவு ரயிலில் தனக்கான இடத்தில் அமர்ந்தான்.  தமிழ்நாட்டுக்கு வடக்கே முதல் முதலாக பயணம் மேற்கொள்கிறான்.  அவனைச் சுற்றிலும் வெவ்வேறான முகங்கள் வேறு வேறு மொழிகள் பேசினார்கள்.  இரவு ஒன்பது முப்பத்தைந்துக்கு வண்டி புறப்பட்டது.  அம்மா சொன்னது போல் அவன் 3 அடுக்கு ஏசி பெட்டியில் பதிவு செய்திருந்தான்.  இவனுக்கு கீழடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.  அவரவர் படுக்கைக்கான தலையணை விரிப்பு, கம்பளி முதலியவை கொடுக்கப் பட்டிருந்தது.                                                               மேலடுக்கில் இடம் கிடைத்த ஒரு வயசாளி இவனிடம் தனக்கு கீழடுக்கு கொடுக்குமாறும் அவனை தனது மூன்றாம் அடுக்கில் படுக்குமாறும் இந்தியில் கெஞ்சினார்.  இவனுக்கு இந்தி புரியவில்லை.  அவரது சைகைகள் புரிந்தும் இவன் மறுத்து விட்டான்.  தனக்கான இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்றளவில் இறுகிப் போய் இருந்தான்.  முதலில் கெஞ்சலாகப் பார்த்த பெரியவர் ‘நீயும் ஒரு மனுஷனா’ என்ற ரீதியில் பார்த்தபடி புலம்பியபடி தட்டுத் தடுமாறி மேலே ஏறிப் படுத்தார்.  பெரியவரின் பார்வை அவனுக்குள் உறுத்தியது.

    ‘அவரவருக்கு வாய்த்த வாய்ப்பை யாரோ ஒருவருக்கு எப்படி விட்டுக் கொடுக்க முடியும்..?’ என்று நினைத்துக் கொண்டான்.

            அவனுக்கு எதிரில் கீழடுக்கில் அவனது அம்மாவைப் போல சிவந்த தட்டையான நெற்றியும் இலேசான வளைந்த புருவமும் இடுங்கிய, ஒளிமிகுந்த சிறிய கண்களும், குட்டையான 40 வயது மதிக்கத்தக்க  ஒரு பெண்மணி படுக்கையை விரித்துப் படுத்தாள்.  அவனுக்கு அவனது அம்மாவின் நினைவு வந்தது.  அம்மாவும் இந்த வயதில் இப்படித்தானே இருந்திருப்பாள் என்று நினைத்தப்படியே படுக்கையை விரித்தான்.  படுத்தான்.  ரயிலின் வேகம் கூடியது.  விளக்கு அணைத்து எல்லோரும் உறங்கத் தொடங்கினார்.  மெதுவாகத் தாலாட்டியது போல் வண்டியில் அசைவு.  தூக்கம் வரவில்லை.  அம்மாவைப் பற்றி அவன் கேள்விப்பட்டவை அலை அலையாக நினைவில் ஆடின.

 

 

 

********- 3- *********

            பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது.  ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம்.  களையான முகம்.  ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் நான்கு மணி நேரம் முகாமிலிருந்து வெளியே சென்று வர அனுமதி உண்டு.  அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை முகாமுக்கு வெளியே சகவீரர்களுடன் நகரின் நடுவில் அமைந்திருந்த பூங்காவிற்கு வந்தனர்.

            கனத்து வளர்ந்து விரிந்து நிழல்பரப்பிய மரங்களின் கீழ் குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தனர்.  வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுப் பண்டங்களைத் தின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.  தாயும், தந்தையும், பெண்குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தளர்ந்த பெண்கள், குதூகலித்த குமரிப்பெண்கள் என்று பெண்கள்தாம் அதிகம் தென்பட்டனர்.  ஆண்கள் ஒருவர் இருவர் மட்டுமே, தந்தையாகவோ, துணைவனாகவோ, மகனாகவோ, அந்த குழுவின் வட்டத்தை ஒட்டி தாமரை இலைத்தண்ணீர் போல் தனித்து தெரிந்தனர்.  தாம் சார்ந்த குடும்பப் பெண்களின் உணர்வுகளைச் சார்ந்து எதிரொளிப்பதாகவே இருந்தனர்.  அவர்கள் முகத்தில் தனித்த, மாறுபட்ட உணர்வுகளைக் காண இயலவில்லை.  இந்தச் சூழல் பாண்டியனுக்கு மாறுபட்டதாக தெரிந்தது.  சக வீரர்களிடம் கேட்டார். 

            “இந்த மாநிலத்தில் பெண்கள் தாம் அதிகம்.  இங்கு தாய்வழிச் சமூக வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன.  ஒரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளை குடும்பத்தலைவியான தாயோ, மனைவியோதான் முடிவெடுப்பார்கள்.  கணவனோ, மகனோ குடும்பத்தலைவி சொல்வதற்கேற்பவே நடந்து கொள்வர்.  சொத்துரிமையும் பெண்களுக்கு மட்டும் தான்.  பெண் மீதான சொத்தின் பலன்களை அனுபவித்துக் கொள்ள முடியும்.  ஒரு ஆண் அச்சொத்தை தனது பெயரில் வாங்கவோ, விற்கவோ முடியாது”.                                                    “எங்கள் தென் இந்தியாவில் குமரி மாவட்டத்திலிருக்கும் கேரள மாநிலத்தில் சில பகுதிகளிலும் தாய்வழிச்சமுகம் நடைமுறை யில் இருந்ததாக வாசித்துள்ளேன்”.

            நண்பர்கள் பேசிக்கொண்டே பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு மரத்திலிருந்து ஒரு குரங்கு விறுவிறுவென்று இறங்கியது.  கண் இமைக்கும் நேரத்தில் ஒரு குடும்ப குழுவின் மத்தியில் வைத்திருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வேகுவேகுவென்று மரத்தில் ஏறியது.  அந்தக் குடும்பத்திலிருந்த பெண்கள் அலறினர்.  ஒரு பெண், குரங்கின் பின்னாலே ஓடினாள்.  இதைப் பார்த்த பாண்டியன் ஒடிந்த ஒரு மரக்கம்பை எடுத்து அந்தக் குரங்கின் மீது எறிந்தார்.  கம்பு குரங்கின் முதுகுமீதுபட அதிர்ச்சியில் கிறீச்சிட்ட குரங்கு பையை கீழே போட்டு விட்டு, அதுவும் மரத்திலிருந்து குட்டியும் விழுந்து விடாமல் கிளையினைக் கெட்டியாக பிடித்துத் தொங்கியது!

     குரங்கின் முன் வயிற்றில் தொற்றியிருந்த குட்டியும் தாயோடு தொங்கியபடி அலறியது.  இதைப் பார்த்த பெண் வாயினை பொத்தி தன் வருத்தத்தினை வெளிப்படுத்துவது போல் மேலே பார்த்தபடி நின்றாள்.  குரங்கு போட்ட உணவுப்பண்டங்கள் இருந்த பை பூங்காவின் மத்தியிலிருந்த குளத்தில் விழுந்தது.  பாண்டியன் சற்றும் தயங்காமல் மின்னல் வேகத்தில் குளத்தில் குதித்து அந்தப் பையை எடுத்து நீர் சொட்டச் சொட்ட அந்தப்பையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

            “குட்டியுடன் இருந்த தாய்குரங்கை இப்படி அடித்து விட்டீர்களே, பாவம்”! என்பது போல் ஏதோ சொன்னாள்.  மொழி புரியவில்லை.  தொனியும் முகபாவமும் புரிந்தது.  ஏதோ வீரதீரச் செயலைச் செய்து விட்ட பரவசத்தில் அந்த பெண் முகத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்த்த பாண்டியனுக்கு ஏமாற்றமும், வெட்கமும் வந்தது.  குளத்தில் குதித்து சில்லிட்ட நீர்த்துளிகளையும் விட அவரிடம் பொங்கிய வியர்வைத் துளிகளே அதிகம்.  பேசாமல் நண்பர்களை நோக்கி நடந்தார் பாண்டியன்.  யாரோ கைதட்டி கூப்பிடுவதை உணர்ந்து திரும்பினார்.

     அந்தக் கூட்டத்திலிருந்த இன்னொரு இளம்வயது பெண் அவரருகே வந்து “நன்றி மேஜர்சார் எங்களது உணவை திரும்பக் கிடைக்கச் செய்து விட்டீர்கள்.  வாருங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று சொன்னாள். ஒரு சிறுவன் அவரது கையை பற்றி குலுக்கி தனது பாராட்டைத் தெரிவித்தான்.  அந்த மென்மையான தொடுவுணர்வு இதயத்தை வருடுவது போல் இருந்தது.  முந்தைய ஏமாற்றத்திலிருந்து மீளாத பாண்டியன் “பரவாயில்லை, எங்களுக்கு நேரம் ஆச்சு வர்றோம்” என்று ராணுவ மிடுக்கு காட்டி நடந்தார்.

           

 

     இந்த நிகழ்வு அவர் தனியாக இருக்கும் பொழுதெல்லாம் நினைவிலாடிக்கொண்டே இருந்தது.  அடுத்த ஞாயிற்றுக்கிழமை உடனே வராதா? ஏக்கம் வந்தது.  நண்பர்கள் அறையில் இருக்கும் போதெல்லாம் சொல்லி கேலி செய்தார்கள்.  அவர்கள் கேலி செய்ய, செய்ய இறுகிய இதயம் நெகிழ்ந்து உருகத் தொடங்கியது.  மொழி, இனம் தெரியாத தேசம்.  இன்னதென்று உணரவியலாத உணர்வுகள்.  பகலெல்லாம் பணியாற்றிய உடற்களைப்பும் உறக்கமும் படுக்கையில் கிடத்தினாலும் குரங்கையும் குட்டியையும் பரிதாப்பட்ட அந்த பெண்ணின் உருவம் இமைத்திரைகளை வியாபித்தது.  கண்களை இறுக்கி மூடினால் நினைவுத்திரையில் விஸ்வரூபமெடுத்து நின்றது.  கருத்த இலைகளுக்கு இடையே மலர்ந்த ரோஜா போல அவள் முகம் நினைவில் ஆடியது.

      இந்த அவஸ்தைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும்.  வாய் தவறி சொல்லிவிட்டால் கேலித் தோட்டக்களால் அவரை துளைத்து விடுவார்களே என்ற அச்சம்.  ஆசையும் அச்சமுமாய் அவரை லெப்ட் ரைட் போட வைத்தது.  ஆனாலும் அவரது முகத்தில் திடீர் ஜொலிப்பும், திடீரென்று கவியும் சோகமும் நண்பர்களிடம் தனிமைப்படுத்தியதும் கண்டு அவர்கள் அவரை கேள்விகளால் துளைத்தார்கள்.  ‘சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது’ என்ற எல்லைக் கோட்டைக் கடக்காமல் மரமாய் நின்றார்.  நினைவில் தென்றல்தான் விடுவதாயில்லை.

            ஞாயிறு வந்தது.  உணவு உண்டவுடன் முகாமை விட்டு தனியே மெல்ல நழுவினார் பாண்டியன்.  அதே பூங்கா.  அதே மரத்தை நோக்கிச் சென்றார்.  அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  காற்று ஒரே திசையில் வீசுவதில்லை.  அந்தப் பூங்காவின் வாசல் புறமும், உட்புறங்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் விழிச்சிறகுகள் பறப்பதும் தன் குடும்பத்தாரை கவனித்துக் கொள்வதுமாய் பட படத்தன.  பாண்டியன் வருவதைப் பார்த்து விட்டாள்.  பதற்றம் காட்டாமல் மெல்ல எழுந்து ஒரு பூச்செடி அருகே சென்றாள்.  அது குடும்பத்தின் பார்வையில் படாத இடமாக இருந்தது. பாண்டியன் அப்பூச்செடியருகே சென்றார்.

            அந்தப் பெண் அவரைப் பார்த்து வணக்கம் சென்னாள்.  இரண்டாகப் பிளந்த இருந்த தங்கத் தாமரை மொட்டு மீண்டும் ஒன்றாக இணைந்தது போலிருந்தது.  பின் நாணி தலைகுனிந்து கொண்டாள்.  ரோஜாப்பூ மேலும் சிவந்தது.  அவர் மெல்லிய குரலெழுப்பி வணக்கம் சொன்னார்.

     “மன்னிக்கவும், அன்று குரங்கிடமிருந்து எங்களது உணவை காப்பாத்தியதற்கு நன்றி சொல்லாமல், கோபித்துக் கொண்டேன்” “இல்லை, நான் தான் மன்னிப்பு கோர வேண்டும்.  உங்கள் குடும்ப உணவு பறிபோனது பற்றி கவலைப்படாமல், அந்த தாய் குரங்கு அடிபட்டுப் போனதே.  குரங்கும் குட்டியும் கீழே விழ இருந்ததே என்று குரங்கின் மீது நீங்கள் காட்டிய இரக்க உணர்வு இராணுவ வீரனான என்னை உருக்கிவிட்டது.  உங்கள் கருணை உணர்வுக்கு தலை வணங்குகிறேன்”

     அருகே இருந்தும் அவரவர் எல்லையில் நின்று கொண்டிருந்தனர்.  அவள் தலை நிமிர்ந்து ஏறிட்டாள்.  இவர் குனிய இருவரும் ஒரு சேர பார்த்துக் கொண்டனர்.  பாண்டியன் மவுனத்தை உடைத்தார்.

            “அன்று ஒரு சிறுவனுடன் வந்தாரே.  அவர் யார்.  அவர் நன்றாகப் பேசினாரே”.

            “அவள் எனது தங்கை, அவன் எனது தம்பி” என்று ஏறிட்டுப் பார்த்து பதில் சொன்னது.  குளத்தின் மேற்பரப்பில் சுவாசிக்கும் மீனின் சுவாசக்காற்றாக நீர்க்குமிழியிட்டு காற்று வழியே கரை ஏறுவது போலிருந்தது.  அவள் நான்கரை அடி உயரம்.  இவர் ஆறடி உயரம். அவள் ஏறிட்டுப் பார்த்தும் இவர் தாழ்ந்து நோக்கியும் பேசுவது வேடிக்கையாகவும், சிரமமாகவும் இருந்தது.  உடனே இவர் பக்கத்தில் இருந்த கல் பலகை இருக்கையில் உட்கார்ந்தார்.  நின்றிருந்த அவள் செவ்விதழ் விரித்து சிரித்தார்.  வெள்ளை மாதுளை முத்துக்கள் ஒளிர்ந்தன.  வெட்க மூட்டம் களையத் தொடங்கியது.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.  பாண்டியன் என்ற இவரது பெயரை  அவள் ‘பாண்டுங்’ என்றாள்.  ‘ஹாஷிமா’ என்ற அவளது பெயரை ஷீமா என்றழைத்து சிரித்துக்கொண்டனர்.  இந்நேரத்தில் தம்பி தேடி வந்து விட்டான்.  இருவரும் பிரிந்தனர்.  இப்படி அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்புகள் தொடர்ந்தன.

            ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிக்கும் போது ‘ஹாஷிமா’ வின் அம்மாவும் அப்பாவும் வந்து விட்டனர்.  அவாகளைப் பார்த்ததும் பயமும் கூச்சமும் தாக்க அனிச்சையாக ராணுவபாணியில் சல்யூட் அடித்து நின்றார்.  அவர்கள் மூவரும் சிரித்து விட்டனர்.  அம்மா அவரைப் பற்றி விசாரித்தார்.  தந்தை இவருடைய முகபாவத்தையும், உடல்மொழியையும் கவனித்தபடி இருந்தார்.  அவர்களும் ஐந்தடிக்குள்ளே இருந்தனர்.  இவரை ஏறிட்டுப் பார்த்துதான் பேச முடிந்தது.

            “…நீங்க மதராஸிக்காரர்.  நாங்கள் மேகாலய ஹாஸி மதத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள்.  நாங்கள் அந்நிய மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ள மாட்டோம்.  அதனால் இவளை நீங்கள் மணக்க முடியாது. அப்படி எண்ணம் இருந்தால் மறந்து விடுங்கள்!” என்று சொல்லி ஏறெடுத்துப் பார்த்தே பேசியதால் வலித்த பிடறியைத் தடவி விட்டபடி நடந்தார்.  இவர் ஓடிப்போய் வழிமறித்து குனிந்த படி பேசினார்.

     “உங்கள் கருத்தும் பழக்கமும் உங்களைப் பொறுத்தவரை சரிதான்.  நான் உங்கள் மகளை விரும்புகிறேன்.  நீங்கள் அனுமதித்தால் மணந்து கொள்வேன்.  இல்லாவிட்டால் பிரம்மச்சாரியாகவே உங்கள் மகளின் நினைவோடு வாழ்ந்து சாவேன்.  எங்கள் வீட்டைப் பொருத்த அளவில் எனது தாயும் தந்தையும் எனது விருப்பத்தினை ஏற்றுக் கொள்வார்கள்.  அவர்களைச் சமாதானப் படுத்தி விட முடியும்.  நீங்கள் தான் மனது வைக்க வேண்டும்” என்று இவர் சொல்லும் போது கண்ணீர்த் துளிகள் அவர்கள் மீது தெறித்தது.  அம்மாவும் அப்பாவும் நிமிர்ந்து பார்த்தனர்.  வானத்திலோ, மரத்திலோ இருந்து நீர்த்துளிகள் விழவில்லை.  இவரது கண்களிலிருந்து தான் நீர் பொங்கி இருப்பதைக் கண்டனர்.

            “நாங்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் பேசிப் பார்க்கிறோம்.  உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு தாளில் எழுதிக் கொடுங்கள்” என்றார் அம்மா.  உடனே இவர் எந்திரம் போல் தனது பாக்கெட்டிலிருந்து டைரியின் ஒரு தாளைக் கிழித்து தனது பெயர், பதவி, ஊர் முதலான விவரங்களை எழுதிக் கொடுத்தார்.

            அந்த வாரம் முழுவதும் திரிசங்கு சொர்க்கமாக நகர்ந்தது ஹாஸியின் அம்மாவின் வெளிப்படையான பேச்சும் ஒரு பக்கம் மகிழ்ச்சி.  மறுபக்கம் அவர்கள் இனப்பெரியவர்கள் பழங்குடி            இனத்தவர்கள் அவர்களிடமிருந்து சாதகமாக பதில் வருவது சாத்தியமில்லை. முகாமில் ராணுவக் கட்டுப்பாட்டின் படி இரவில் படுக்காமலிருக்க முடியவுமில்லை, படுத்தால் தூக்கமும் வருவதில்லை. நாள்கள் நத்தையாக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை வந்தது.  அஸ்ஸாமிய வீரர் தருண் உடன் ஹாஸி வீட்டைத் தேடிப் போனார்கள்.  வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் உலாவி, உரையாடி உண்டு மகிழ்ந்து வீடு திரும்புபவர்கள் அன்று வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள்.  முகங்களில் குழப்ப மேகங்கள், வெயிலும் தெரியாமல் மழையும் பெய்யாமல் மப்பு மந்தார புழுக்கமாய் இருக்குமே அந்த அவஸ்தை அவர்களது மனதுகளில்.

            இவர்களிருவரையும் பார்த்ததில் மெல்ல தலையசைத்து வரவேற்றாலும் அவர்கள் முகங்களில் ஒரு மின்னல் பளிச்சிட்டு மறைந்தது போல தெரிந்தது.  இவர்களை அமரச் சொன்னார்கள்.

  ‘டீகொடுக்கலாமா, கூடாதா, டீ கொடுப்பதும், கொடுக்கமல்                  இருப்பதும் சூட்ச்சுமமாய் வீட்டார் எண்ணத்தை வெளிப்படுத்துவது ஆகாதா….’ அப்பாவுடன் உள்ளறைக்குள் போய் வந்த அம்மா முகத்தை சலனமில்லாமல் வைத்துக் கொண்டு இருவருக்கும் தண்ணீர் கொடுத்தார்.  ஹாஸி வீட்டிற்குள் இருந்தபடி முன்னறையில் அமர்ந்திருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தாள்.

   பாண்டியனின் கண்களும் வீட்டுக்குள் ஊடுருவிப் பார்த்தன.  பனிமூட்டத்தை ஊடுருவிப் பார்க்கிற கண்கள் சோகமூட்டத் திலிருந்து கசியும் ஹாஸியின் கண்களைக் கண்டு கொண்டது.  நிலைமையை உணர்ந்து கொண்;டது.  மெல்ல நிதானமாய் மனப்புழுக்கத்தை பெருமூச்சாய் விட்டார்.

            இவர்கள் தண்ணீரை குடித்தவுடன், “எங்க பெரியவங்க ஒத்துக்கலை!” என்று சொன்னபடி அம்மா உள்வீட்டிற்குள் நுழைந்தாள்.  தருணும், பாண்டியனும் வருகிறோம்’ என்று சொல்லி தயங்கித் தயங்கி வெளியேறினர்.

            அடுத்த மூன்று நாள்கள் ஹாஸி கடுமையான காய்ச்சலில் நினைவிழந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.  அவளை ஷில்லாங் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள்.  பாண்டியனுக்கும் கடுமையான காய்ச்சல் என்று ராணுவ மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்திருந்தார்கள்.  புறநோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸி சேர்க்கப்பட்டாள்.  பாண்டியனுக்கு துணையாக நிறுத்தப்பட்டிருந்த தருண் ஹாஸியின் அம்மா மருத்துவமனை முற்றத்தில் போவதும் வருவதுமாய் இருப்பதைப் பார்த்து விட்டார். உடனே அம்மாவிடம் சென்று விசாரித்ததில் பாண்டியன், ஹாஸி இருவருக்கும் காய்ச்சல் வந்த காரணம் புரிந்து விட்டது.

   ராணுவத்தினர் அனுமதியோடு ஹாஸியின் அம்மா பாண்டியனைப் பார்த்து நலம் விசாரித்தார்.  துவண்டு கீரைத் தண்டுப்போல் முனங்கிக் கொண்டு படுத்திருந்த பாண்டியன் ஹாஸியின் அம்மாவைப் பார்த்ததும் துள்ளி மூங்கில் கம்பு போல் எழுந்து நின்றவர் தள்ளாடி விழப்போனார். தருண் அவரை அமர்த்தி படுக்க வைத்தார்.  பாண்டியன் சொன்னபடி, தருண் ஹாஸியின் அம்மாவுடன் சென்று ஹாஸியை பார்த்து நலம் விசாரித்து வந்தார்.  இந்த நல விசாரிப்புகள் காய்ச்சலை விரட்டி விட்டது.  இரண்டு நாளில் அவரவர் இருப்பிடம் சென்றனர்.

            ஞாயிறன்று பாண்டியனும், தருணும் ஹாஸி வீட்டிற்குச் சென்றனர்.  அடுத்த வாரத்தில் ராணுவத்தினரின் அனுமதியுடன் பாண்டியன் ஹாஸி திருமணம் நடந்தது.  புதுத் தம்பதியினர் ராணுவமுகாமில் உள்ள குடியிருப்பில் தங்க  வைக்கப்பட்டனர்.  ஹாஸியின் அம்மா அழுதார்.

    “என் மகள் ஒரு ராணுவ வீரரை கல்யாணம் பண்ணிக் கொண்டதில் மகிழ்ச்சி.  நாட்டுக்காக உழைக்கும் ஒருவருக்கு வாழ்க்கைப் படுவது எங்களது ஆசாரப்படி முக்கியமான கடமை தான்.  ஆனாலும் பாண்டியன் அந்நியர், மதராஸி எங்கள் பெண்ணுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்” என்று புலம்பினார்.  அந்நியரை மணந்து கொண்டதால் ஹாஸியும் அந்நியப்படுத்தப்பட்டார்.  ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காவில், சோலைவனத்தில் குடும்பத்தாரை கணவன் மனைவியராய்ச் சென்று பேசி வந்தனர்.

            ஹாஸியைக் கல்யாணம் பண்ணியதிலிருந்து இரண்டு வருடங்களாக ஆண்டு விடுப்பில் கூட அவர் மதுரைக்குப் போகவில்லை.  மணியார்டர், கடிதம் போக்குவரத்தோடு தொப்புள்கொடி உறவு தொடர்ந்தது.  இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தை அப்பாவைப் போல் கறுப்பு நிறம், அம்மாவைப் போல முகமுமாய் இருந்தான்.  அம்மாவின் குலதெய்வமான சேவலின் பெயரில் சேவல்கொடி என்றும் அப்பாவில் தேசப்பற்று தொட்டு ஜெயக்கொடி என்றும் அழைக்கப்பட்டான். ராணுவத்தில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஓய்வு பெறலாமா பணி நீட்டிப்பு பெற்று இங்கேயே தொடரலாமா என்று யோசனை எழுந்த நேரம் மதுரையில் அப்பாவுக்கு உடல்நிலை மோசம் என்று தந்தி வந்தது.  விடுப்பு பெற்றுக் கொண்டு அப்பாவை பார்க்க குடும்பத்தோடு சென்றார்.

  “சீனாக்காரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டான்” என்ற செய்தி மதுரை மந்தை எல்லாம் பரவியது.  மகனையும், பேரனையும் பார்த்த மகிழ்ச்சியில் அப்பா உயிரை விட்டார்.  “கருவாயன் தங்கச்சிலை மாதிரி ஒரு பெண்ணைக் கட்டி வந்திருக்கான்” என்று ஹாஸியின் கையை, முகத்தைத் தொட்டு முத்தம் கொடுக்காத பெண்களே அந்த தெருவில் இல்லை.

            “ஏலேய், சீனாக்காரியைக் கட்டிகிட்டு வந்துட்டேன்னு உங்க நல்லப்பன் பெரியப்பன்மாருக, எங்க அண்ணன், தம்பிகளோடு சேர்ந்து உன்னை பத்திவி;ட்டுட்டு இருக்கிற வீடு நிலத்தை பிடுங்க பார்க்கறாங்க.  நீ அவளை வச்சுக்குவியோ, விரட்டி விடுவியோ தெரியாது.  நீ மிலிடரியில் எழுதிக் குடுத்திட்டு  வந்து ,நீ அம்மா ஊர்லதான் இருந்து பிழைக்கணும். என் மனங்குளிர இந்த மண்ணுல என்னைத் தூக்கிப் போடனும்.  நாம் பெத்த ராஜா அங்கிட்டு இங்கிட்டு போயிறாதே. எனக்கு நல்ல கெதி கிடைக்காம எங்கட்டை வேகாது” என்று அம்மா காலைக்கட்டிக் கொண்டு அழுதாள்.

            மகனை வடநாட்டுக்கு அழைத்துச் சென்று விடக்கூடாதென்று ;ஹாஸியின் கைகளை பிடித்து அழுது கெஞ்சினாள்.  தாயின் புலம்பலைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹாஸியும் மதுரையில் இருக்க சம்மதித்தாள்.  பாண்டியனும் ஓய்வு பெற்று குடும்பத்தோடு மதுரையில் தங்கினார்.  பொதுப்பணித்துறையில் இளநிலைஅலுவலர் வேலை கிடைத்தது.  ஒரு மகள் பிறந்தாள்.  பெண் அப்பாவின் வளர்த்தியும் அம்மாவின் நிறமுமாய் அந்த தெருவுக்கே செல்லப்பிள்ளை ஆனாள்.

            அதற்குப்பின் அம்மாவுக்கு தமிழ்நாடே நிலையானது.  ஷில்லாங் போகவில்லை.  அப்பா இறந்த போது கூட அவர்களுக்கு தகவல் சொல்லப்படவில்லை.  தாமதமாக கடிதம் எழுதப்பட்டது.  அவர்களும் தமது வருத்தத்தையும் உடனே வர இயலா சூழலையும் தெரிவித்துக் கொண்டனர்.  அதற்குப் பின் ஐந்து வருஷம் கழித்து இப்போது தான் ஷில்லாங்கிலிருந்து மாமா கடிதம் எழுதி பாட்டி இறந்த விவரத்தை சொல்கிறார்.

 

 

*****4****

            காலை 6 மணி ஆயிற்று.  ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது.  அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள்.  ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான்.  சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது.  பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான்.  இது எந்த “மாநிலம், எந்த ஊர்”, “ஊர் தெரியவில்லை.  ஆனால் ஓரிசாவைக் கடந்து பீகார் மாநிலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.  இவனும் பல்துலக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு காலைக் கடமைகளை முடித்து வந்தான். ரயிலில் குளிக்கமுடியாமல் ஒரு கால் பங்கு குளியல் போட்டது போல் முகம், பிடறி, கை, கால் கழுவி வரும் சகப்பயணிகளைப் பார்த்தான். வியப்பாக இருந்தது.

            ரயில் ஒவ்வொரு பெரிய நிலையத்தைக் கடக்கும் போதெல்லாம் சிறுவியாபாரிகள் ஏறினார்கள்.  புடவை, ஜமுக்காளம், கையுறை, காலுறை முதற்கொண்டு பிஸ்கட், சாக்லெட், உருளைக்கிழங்குசிப்ஸ், சிறுபிள்ளைகளுக்கான பொம்மைகள் என்று பல விதமான வியாபாரம் நடந்தது.  நடைபாதை வியாபாரத்தை விட இந்த நடைவியாபாரம் களை கட்டியது.  இவர்கள் போக வர சத்தம் எழுப்புவதையோ, டிக்கட் பரிசோதனைக்கு இடையூறாகக் குறுக்கே மறுக்கே வருவதையோ டிக்கட் பரிசோதகர் கண்டு கொள்ளவில்லை.

            ‘என்ன சார் ஏசி பெட்டியில் இப்படி வந்து தொல்லை கொடுக்கிறார்கள்” ஆங்கிலத்தில் தட்டு தடுமாறிக் கேட்டான்.

            முதலில் முறைத்தவர், பின் பரிகாசமாகப் பார்த்து பதில் சொல்லாமல் டிக்கட் பரிசோதகர் நகர்ந்தார்.  இவனுக்குள் கோபம் எழுந்தது.  “வியாபாரிகளிடம் புரிந்துணர்வா, பகிர்ந்துணர்வா? எல்லாம் பணம் தான்! நம்மைப் போலவோ…?” என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்

            வண்டி இப்போது மேற்குவங்கத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.  ஒரு வயதான பெண் மஞ்சள் புடவை அணிந்து நெற்றியில் குங்குமப் பொட்டுமாய் பஜனைப் பாடல் பாடி ஒவ்வொரு இருக்கை நோக்கி நகர்ந்தார்.  பலர் பயபக்தியொடு காசு கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.  திருநங்கையர் சிலர் மிகை அலங்காரம் காட்டி கைதட்டி நடுத்தர மக்கள், சிறுவர்கள் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் பண்ணியும், இளைஞர்கள் கன்னத்தை தடவியும் கொஞ்சியும் பணம் கேட்டு கெஞ்சினர்.  சிலர் கொடுத்தனர்.  சிலர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

            வண்டி இப்போது பீகார் வழியே கடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.  ஒரு பத்து வயது சிறுவன் மேல்சட்டை இல்லாமல் கையேந்தி வந்தான்.  அவனை எல்லாரும் முறைத்து அடிக்காத குறையாக விரட்டினார்கள்.  உடலெல்லாம் காவித்துணியும் நரைத்த முடியும் நெற்றியில் நீண்ட குங்குமக்கோடும் சிவந்த கண்களுமாய் இடக்கையில் கமண்டலமுமாய் வலக்கையை ஆசிர்வதிப்பது போல் காட்டி மௌனமாய் ஒவ்வொரு இருக்கை நோக்கி நகர்ந்தார்.  அக்கம் பக்கத்தார் அவரை வணங்கி பத்தும் இருபதுமாய் பணத்தைக் கொடுத்தனர்.  சாமியார் எந்தவித உணர்வையும் காட்டாதவாறு நகர்ந்தார்.

            ஒரு பத்து நிமிடம் கழித்து முன்னர் வந்த அதே சிறுவன் ஒரு பாம்பை தோளில் போட்டபடி தலை அருகே பிடித்தபடி வந்தான்.  பாம்பு நீலக்கண்கள் மின்ன, நாக்கை நீட்டி நீட்டி வெளிக்காட்டியபடி இருந்தது.  அந்தப் பாம்புப்பையனைப் பார்த்து “கிட்டே வராதே இந்தா பணம்” என்றபடி கையில் கிடைத்த பணத்தை தந்து விரட்டினர்.

            விதவிதமான உணவுப் பொட்டலங்கள் வந்தன.  அவரவர் தேவைக்கு வாங்கிக் கொண்டு சாப்பிட்டனர்.  இவனும் பூரி பொட்டலம் வாங்கிக் கொண்டான்.  அடுத்து டீ காபிக்காரர்கள் வந்தார்கள்.  அவரவர் தேவைக்கு வாங்கிக் குடித்தனர்.  இன்னொரு பெரிய நிலையத்தில் ஐந்து நிமிடம் வண்டி நின்றது  ஒரு ஊனமுள்ள வாலிபன் ஒவ்வொரு சீட்டருகே உட்கார்ந்து நகர்ந்தபடியே கையிலுள்ள புருஸ் கொண்டு உணவு துணுக்குகள், சிந்தல் சிதறல்களைக் கூட்டி சுத்தம் செய்து கொண்டே ஒவ்வொரு இருக்கை முன் கையேந்தினான்.  சிலர் காசு கொடுத்தனர்.  பலர் கண்டு கொள்ளாமல் வேறெங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டனர்.

            இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ரயிலுக்குள் தனிஉலகம் இயங்கிக் கொண்டடே இருக்கிறது.  வாழ்க்கையின் சகலதரப்பு மனிதர்களும் உலாவிக் கொண்டு தமது பிழைப்பை உறுதி செய்து கொள்கின்றனர்.  ரயில் வெறும் ரயிலல்ல.  நகரும் வாழ்க்கைப்பாடுகள் கொண்ட சிற்றுலகம் என்று நினைத்துக் கொண்டான்.

            நடப்புகளைக் கருதாமல் சிலர் மடிக்கணினி கொண்டு வணிக விவரங்கள் அலசுகின்றனர்.  சிலர் படம் பார்த்தக் கொண்டும், சிலர் சிறுவர் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டும் இருந்தனர்.

            ‘பொது வெளியிலும் அவரவர் சுயநலத்துடன் இயங்குகிறார்கள்.  நான் மட்டும் அம்மாவுக்கு கிடைக்க இருக்கும் சொத்தில் முழு உரிமை கொண்டாட நினைப்பது தவறாகுமா, என்ற எண்ணமும் அவ்வவ்போது எட்டிப் பார்த்தது.

            ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான்.  வெயில் காய்ந்து கொண்டிருந்தது.  ஒரு புறம் நெல், மக்காச்சோளம், வாழை, உருளைக்கிழங்கு சாகுபடி என மக்கள் வெயிலில் உழன்று கொண்டிருந்தனர்.  குளிர்விப்பினை மீறி வண்டிக்குள் புழுக்கம் உணர முடிந்தது.  ஏ.சியைக் கூட்டி வைக்கச் சொல்லி கத்திக் கொண்டே ஒரு வாலிபன், கணினியில் படம் பார்த்துக் கொண்டிருந்த சத்தம் மெலிதாகக் கேட்டது.

            மதிய உணவுக்கான குரல்கள். ‘என்ன உணவு, எவ்வளவு’ என்ற வார்த்தை பரிமாறல்கள். வண்டி தற்போது மீண்டும் மேற்குவங்கத்தைக் கடந்து கொண்டிருந்தது.  கங்கை பாசனம் தான்.  எங்கும் நீர் மிகுந்து தேங்கிக் கிடக்கவில்லை.  ஆனால் அங்கங்கே வயல்களுக்கு மத்தியில் சிறு சிறு குளங்களாக நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.  விவசாயம் செய்பவர்களில் நாற்பது வயதுக்கு குறைந்தவர்களைக் காணமுடியவில்லை.

            நாடகக் காட்சிகள் போல் பொழுதுகள் மாறிக் கொண்டிருந்தன.  மூன்று இரவு இரண்டு பகல் பயணத்தில் தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தான்.  தாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்னரே ஆயத்தமாகி பயணிகள் இறங்குவதும், புதியவர்கள் ஏறி புது ஜமுக்காளம், கம்பளிகளைக் கேட்பதும், சிலர் பக்கத்தில் இருப்பவர்களோடு உரையாடுவதும், சிலர் மௌனப் பயணிகளாய் இறங்கி விரைவதுமாக அவரவர் பயணம் முடிகிறது, தொடங்குகிறது.  ஆனால் அந்த ரயில் நெடிய வாழ்க்கையின் கடைசி எல்லையைத் தொடர ஓடிக்கொண்டே இருக்கிறது.  அங்கிருந்து இன்னொரு வண்டி புதிய பயணத்தைத் தொடங்கி ஓடுகிறது.  இவனுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது.  பட்டும் படாமல் இருந்தவன் சகபயணிகளோடு நெருங்கி  உட்காருகின்றான்.  அவர்களது மொழி புரியாவிட்டாலும் அவர்களது உடல்மொழி முகபாவங்கள் அவனுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித் தருவதாக இருந்தது.  அம்மா தன்னை அனுப்பாவிட்டால் இத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்காதே.  மூன்றாம் நாள் அதிகாலை 5 மணிக்கு வண்டி அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நின்றது. அதிகாலைப் பறவை போல் பரபரத்து தனது சகபயணிகளுக்கு மவுனப் புன்னகையை பரிமாறி இறங்கினான்.

            மாமா லிங்டாங் அனுப்பியிருந்த தொலைபேசிக்கு பேசினான். “கவுஹாத்தி ரயில் நிலைய உள்நுழைவாயிலின் இடப்புறம் பச்சைநிற சட்டை அணிந்து நின்று”ள்ளதாக ஜெயக்கொடி சொன்னான். சொன்ன வாய் மூடுவதற்குள் லிங்டாங் இவனது கையைப் பிடித்துக் கொண்டார். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று ஆச்சரியத்தை கேட்பதற்குள் “தமிழ் முகம் தனியா தெரியுது. எங்க அக்கா ஜாடையும் எங்க மச்சான் ஜாடையும் கலந்த முகம்!” என்று மாமா சொல்லி இவனைக் கட்டிஅணைத்தார். அவரது கண்களில் தனது அக்காவை பார்த்துவிட்ட ஆனந்தபிரவாகம், காலை 5 மணிக்கே எட்டுமணியைப் போல சூரிய வெளிச்சம் பரவி இருந்தது.

            இவனிடமிருந்து பைகளைப் பிடுங்கிக் கொண்டு தான் வந்திருந்த காரைநோக்கிச் சென்றார். அவன் பின் தொடர்ந்தான். கார் விருட்டென்று வேகமெடுத்து விடாமல் பாதையில் சதுரசதுரமாய்த் தடைகள். அதனைச் சுற்றிச் சுற்றி வளைந்து வளைந்து தான் போகமுடியும். ‘இது ஒரு வகையான தீவிரவாதத் தடுப்பு முயற்சியோ’… என்று எண்ணிக் கொண்டான்.

கார் ஒரு ஹோட்டலின் முன் நின்றது. “வாங்க! காலை உணவு சாப்பிட்டிடுவோம், நாம் வீடு போய்ச்சேர எப்படியும் இரண்டு மணி நேரமாகலாம்” இந்நேரம் எப்படி சாப்பிடுவது என்று கேட்பதற்குள் மாமா பதிலையும் சொல்லிவிட்டாரே. மாமாவைப் பார்த்தான் அவர் இவனின் தோள்பட்டை உயரம் தான் இருந்தார். அம்மா நாலரை அடி உயரம் என்றால் மாமா ஐந்தடி தான்! டிரைவரும், உணவகப் பணியாளர்களும் கல்லாப் பெட்டியில் இருப்பவர் வரை குள்ளமாகத் தான் இருந்தனர்.

       ரஸகுல்லாவும், போகா என்று அவல் உப்புமாவும் வைத்தனர். அதுவும் தனிருசியாகத்தான் இருந்தது. மலையை வெட்டி சாலை அமைத்திருந்தனர். இன்னும் மலையைச் சுரண்டி சாலையை அகலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். மலைப்பாதையாக இருந்தாலும் இருவழிச்சாலையாக விசாலமாக இருந்தது. இவன் சாலையின் இருபக்கமும் கண்களை விரித்து பார்த்தபடி இருந்தான். மாமா லிங்டாங் பழைய நினைவுகள் நிழலாட இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். சிவந்த முகத்தில் நினைவு மேகங்கள் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருந்தன.

“முப்பது வருடத்திற்கு முன்னால் அக்காவும் அத்தானும் கைக்குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு மெட்ராஸ்க்கு கிளம்பினார்கள் அவர்களை வழி அனுப்ப கவுஹாட்டிக்கு வந்தேன். இப்போது உன்னை கவுஹாட்டியிலிருந்து ஷில்லாங்க்கு அழைத்துப்போகிறேன். முப்பது வருடத்தில் என்னவெல்லாம் மாறி இருக்கிறது. நீ முப்பது வயதிலும் நான் நாற்பத்து ஐந்திலும் இருக்கிறோம். அம்மா இல்லை, அப்பா இல்லை. அத்தானும் இல்லை. எங்கள் வீட்டுக்கு நான் உங்கள் வீட்டுக்கு நீ. வாழ்க்கை ஓடுகிறது இந்த மேகம் மாதிரி. ஆனால் நிகழ்வுகளின் நினைவுகள் தான் சந்திர, சூரிய நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. மறைகின்றன, மீண்டும் எழுகின்றன. மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன நினைவுகள் இல்லாட்டி மனிதனும் மிருகம் தானே”.

ஜெயக்கொடிக்கு ஆச்சர்யம் தூக்கி வாரிப்போட்டது. “மாமா நீங்கள் கவிதைகள் எழுதுவீர்களா,”

“இல்லை அந்த மாதிரி உணர்வுண்டு, எழுதுவதில்லை”

கார் உயரம் செல்ல மேகங்களுக்கு இடையில் ஊர்ந்து போவது போல உணர்வு. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி மேகத்தை தொட்டுவிடலாமா, கை நீட்டினான்.   ஈரத்தை பதித்து விட்டு மிதந்து போனது மேகம்.  ‘மேகம் சூழ்ந்த பகுதி என்பதால் தானே மேகாலாயா என்று சொல்லிக் கொண்டான்.  மலைகளை உடைத்து இருபுறமும் கட்டடங்கள் எழும்பி இருந்தன.  ராணுவ பயிற்சி முகாம்களும் மத்திய அரசு நிறுவனங்களும் பளிச்சென்று நிமிர்ந்து நின்றன.

“என்ன ஜெய்க்கோ, இந்த சின்ன மாநிலத்தில் இவ்வளவு மத்திய நிறுவனங்களான்று யோசிக்கிறீங்களா.  ஒரு காலத்தில் ஷில்லாங் அஸ்ஸாமின் முக்கிய நகரமாயிருந்தது.  அதனால் தான் இவ்வளவு வசதி.  ஆனால் இந்தியாவில் அதுதான் மெயின்லாண்டில் உங்களுக்கு இன்னும் கூடுதலா வசதி இருக்குமே”

“மெயின்லாண்டா, மேகாலாயாவும் இந்தியாவில் தானே இருக்கிறது”

“ஆமாம், அப்படித்தான் சொல்கிறார்கள்.  ஆனால் உயர்கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்கு எல்லாம் நாங்கள் உங்களைத் தேடித்தானே வரவேண்டி இருக்கு!”

“மாமா, எங்களுக்கும் இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு!”

மாமா இவனைப் பார்த்து கேலியாக சிரித்தார்.

“இன்றைக்கு ஒருநாள் ஓய்வெடுங்கள்.  நாளை நாம் மேகாலாயவைச் சுற்றி பார்ப்போம்.

கார் நகருக்குள் வளைந்து சென்றது.  அங்கங்கே கொத்து கொத்தாய் வீடுகள் கண்ணாடி கதவுகள் பளிச்சிட்டன.  பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சிவப்பாய் குட்டையாக இருந்தார்கள்.  அவர்கள் சீனர்கள் மாதிரியும், மங்கோலியர்கள் மாதிரியும், நேபாளிகள் மாதிரியும் இல்லை.  இவற்றின் கலவையாய் இருந்தார்கள்.  ஆடு, மாடு, நாய் முதலான விலங்குகளும் கூட குட்டையாக இருந்தன.  உயரமான மலைப்பகுதியில் ஏற இறங்கத் தோதான உடல்வாகை இயற்கை வடிவமைத்திருக்கிறது.  சமவெளி மனிதர்கள் ஐந்தடிக்கு மேல் உயரமாக இருக்கிறார்கள்.  மலை வாழ்மனிதர்கள் ஐந்தடிக்கு கீழே இருக்கிறார்கள்.

மாமாவிடம் கேட்டான்.  தகவல் பலகையில் சுவரொட்டிகளில் ஆங்கில எழுத்துக்களும் இந்தியுமே தெரிகின்றன.  உங்களுக்கு மேகாலாயா மொழி இல்லையா!

“ஜெய்க்கோஜி, எங்களுக்கு ‘ஹாஸி’ என்னும் மொழி உண்டு.  நாங்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.  நாங்கள் எங்களுக்கான எழுத்தை உருவாக்க முயல்வதை தடுத்து வெள்ளைக்காரர்கள் எங்கள் மொழியை அவர்களது லிபி எழுத்தில் எழுத பழக்கி விட்டார்கள்.  அதனால் எங்களுக்கான லிபி உருவாகாமல் போய்விட்டது.  எங்களில் மொழி ஆளுமை மிக்க அறிவாளிகளும் உருவாகாமல் கூலிகளாகவே ஆக்கப்பட்டோம்.  எங்கள் ஆதிவாசி உடைகளைத் துறந்து வெள்ளைக்காரர்களைப் போலவே  உடுத்துகிறோம்.  உண்கிறோம்.  ஆனால் எங்களில் பலர் வெள்ளைக்காரார் மதத்தை தழுவி விட்டாலும் பெரும்பாலும் எங்கள் ஆதிவாசி மத சடங்குகளையே செய்கிறோம்.  ஆதி நடுகல்தெய்வங்களை வணங்குகிறோம்.  சேவலை வணங்குகிறோம்.  உனக்கு கூட சேவலின் பெயர் முதலில் வைக்கப்பட்டதாக அக்கா கடிதம் எழுதி இருந்ததே!”

சேவல்கொடி என்ற ஜெயக்கொடிக்கு மனது பிசைந்தது.  ஏதோ சொல்லமுடியாத இழப்பை உணர்ந்தது போல் மாமாவின் கைகளைப் பற்றினான்.

தெருமுன் கார் நின்றது.  வண்டியில் இறங்கி மாமா முன் நடந்தார்.  ஜெயக்கொடி நிழலாகத் தொடர்ந்தார்.  டிரைவர் பைகளைக் கொண்டு வந்தார்.  சிறிய வீடு. குளிந்துதான் போகமுடியும் இவர்கள் நுழைவதற்கு முன் குட்டை குட்டையாக பெண்கள் வந்து மகிழ்ச்சி பொங்க கூவி வரவேற்றார்கள்.  ஒரு வயதான பெண்மணி இவனைக் கட்டி அணைத்து முகத்தை தடவினார்.  இவனது சித்தி என்றாள்.  எல்லோரும் கம்பளி விரிப்பில் அமர்ந்தார்கள்;.  டீ கொண்டு வந்து தந்தார்கள்.  மாமா டிரைவரை அனுப்பி விட்டு வந்தார்.

            மாமாவுக்கு 18, 16 வயதுகளில் இரு மகள்கள் 14 வயதில் ஒரு மகன், சித்தி அறிமுகம்; செய்து வைத்து அவர்களது பெயர்களைச் சொன்னாள். பெயர்கள் மனதில் பதியவில்லை.  அவர்களது வாஞ்சையும் புன்னகையும் பூத்த முகங்கள் மனதில் ஒட்டிக்கொண்டன.  மாமாவின் மனைவி அத்தை இனிப்பு வழங்கி உபசரித்தார்.

            அவன் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மாமன் மகள்கள் இருவரும் வேலைக்கு கிளம்பினர். இருவரும் ஒரு மெகாமார்ட் விற்பனையகத்தில் பணியாற்றுகிறார்களாம்.  மாதம் ஐந்தாயிரம் சம்பளமாம். ஹாஸி திருவிழாவின் போது ஒரு மாத போனஸ{ம் ஒரு செட் துணிமணிகளும் கொடுப்பார்களாம். மகன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனாம்.  பெண்கள் பிள்ளைகள் பளிச்சென்று விகாரமில்லாமல் பனியன் ஷர்டும், ஜீன்ஸ்ம் அணிந்து வேலைக்கு போகிறார்கள்.  வயதான பெண்கள் வெளிரிய நிறங்களில் சேலைகட்டியிருந்தனர்.  நமது மலையாளப் பெண்கள் சேலை கட்டியது போல் இருந்தது.

            “வெந்நீர் தயாராக இருக்கிறது.  குளித்து சற்று ஓய்வெடு” என்று சித்தி சொன்னார்.  வீட்டில் முதல் அறை வரவேற்பறை அதன் பின் இடப்புறம் இரு சிறு அறைகள் பெண்கள் தங்க.  வலப்புறம் அறையில் ஆண்கள் தங்க.  அதனருகே சிறிய சமையல் கட்டு.  அறைகளுக்கு நடுவே உணவு மேஜை ஆறுபேர் அமர்ந்து சாப்பிடலாம்.  பின்னால் கழிவறை, குளியலறை. ஒரு சிறு தோட்டம்.  சுரை, பூசணி, அவரை காய்த்திருந்தன.  மாதுளை மரமொன்றிருந்தது.  அணில்கள் இரண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.  ரோஜாச் செடிகளில் பூக்கள் மகிழ்ச்சியில் தலையசைத்துக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் ரோஜாப்பூக்களை மையமாகக் கொண்டு ஓடிப்பிடித்து  விளையாடுவது போல் பறந்தன.

      நகராட்சி குடிநீர் குழாய் இணைப்ப இருந்தது.  மின்சாரம் பகலில் நான்கு மணிநேரம் தவிர மற்ற நேரங்களில் தடை இருக்காது.  பரவாயில்லை நல்ல நிர்வாகம்.  நல்ல மக்கள், குளித்து விட்டு வந்து படுத்தவன் தான் நான்கும

ணி வரை எழுந்திருக்க முடியவில்லை.  மதிய உணவுக்கு சித்தி எழுப்பி இருக்கிறாள். அவன் எழுந்திருக்கவில்லை.  ஐந்து மணிக்கு மாமா அலுவலகத்திலிருந்து வந்ததும் எழுப்பினார்.  அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

            முகம் கழுவி தேநீர் சாப்பிட்டு விட்டு மாமாவுடன் வெளியே கிளம்பினான். வீட்டு முன் உள்ள நிறுத்தத்தில் ஒரு டாக்ஸியை வழிமறித்தார்கள்.  நகரின் மையப்பகுதிக்கு போய் இறங்கினார்கள்.  ஒரு நபருக்கு 10 ரூபாய்தான் கட்டணம். ஆச்சரியமாக இருந்தது.  போலீஸ் பஜார் என்ற அவ்விடத்தில் வங்கிகள்; பெரிய பெரிய வணிக மால்கள், உணவகங்கள்.  சிறுசிறு துணியகங்கள், மருந்து, மளிகைக் கடைகள் என அனைத்தும் இருந்தன.  சாலையிலேயே சிறு சிறு வியாபாரிகள் உணவுப்பொருள்கள் விற்றனர். வெண்பனி மேகங்கள் தழுவிச் சென்றன.  மக்கள் திரள் திரளாக வந்து வாங்குவதும் செல்வதுமாக இருந்தனர்.  பெரும்பாலும் பெண்கள் தாம்! ஆண்களை கைவிரல்விட்டு எண்ணி விடலாம்.  பெண்களும் ஆண்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருந்தனர்.  பெண்கள் உழைக்க ஆண்கள் வம்பு பேசித் திரிவதை பார்க்க முடியவில்லை.

            ஆண்கள் டாக்ஸி டிரைவர்களாகவோ,மெக்கானிக்காகவோ நிர்வாகிகளாகவோ இருந்தனர்.  குளிர்ந்த தேசம் தான்.  யாரும் குடித்துவிட்டு திரியவில்லை.  ஆனால் பான்பராக் மென்று மென்று துப்பிக் கொண்டிருந்தனர்.

            ‘என்ன மாமா ஒரு பஸ்கூட காணவில்லை.  இங்கு அரசாங்க பஸ் இல்லையா?”

            “எங்கள் மாநில நிதி வசதியில் அரசாங்கம் பஸ் இயக்கக் கூடியதாக இல்லை.  தனியாரும் அப்படித்தான்.  கல்வி நிறுவனங்கள் அரசு ஆலைகள் தமது ஊழியர்களுக்காக பஸ்களை இயக்குகின்றன.  அஸ்ஸாமிலிருந்து மாநில அரசு பஸ்கள் சிலவும், தனியார் ஆம்னி பஸ்கள் சிலவும் இயங்குகின்றன. ஆனால் மக்கள் போக்குவரத்துக்கு கார்கள், டாக்ஸிகள் தாம்.  எங்களது ஆண்களில் அறுபது சதவீத்திற்கு மேல் டிரைவர்களாக இருக்கிறார்கள்.  பருவ காலத்தில் சுற்றுலா வேலைவாய்ப்பும் கார் ஓட்டுதலால் கிடைக்கிறது.  எங்கள் மாநிலத்தில் உங்கள் மெயின்லாந்து போல வேலைவாய்ப்போ கல்வியோ இல்லை” மாமாவும் பான்பராக் எச்சிலைத் துப்பினார்.

            “ஜெய்கோஜி, உங்களுக்கு மதரஸ் டிபன் வேணுமா, எங்க உணவு வேணுமா?” என்றார்.  இவன் பதில் செல்வதற்குள் ‘வாங்க எங்க மொமொ’ சாப்பிடுங்க. நல்லா இருக்கும்” என்று உணவகத்திற்கு அழைத்து

            “நீங்க அசைவம் சாப்பிடுவிங்கல்ல”

            அவன் தலை அசைத்தான்.

            “இரண்டு பிளேட் சிக்கன் மொமொ” என்றார்

            வெள்ளையா இரண்டு போண்டா உருண்டைகள், கொஞ்சம் மசாலாகிரேவியும் கொண்டு வந்தார் பரிமாறுநர்.  உங்கஊரு சிய்யம் உருண்டை மாதிரிதான்.  சியத்தில் இனிப்பு வைப்பிங்க.  இதில் கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ, பன்றி, மாட்டுக்கறியோ கூட வைப்பதுண்டு.  அவரவர் ருசிக்கு விருப்பத்திற்கு செய்யப்படும் என்றார்;.  ஏதோ வித்தியாசமான ருசி தான்.  பசி ருசி அறியாது என்பது அனுபவம்.

            அப்புறம் மேடும் பள்ளமுமாய் அமைந்த காங்கிரீட் சாலையில் நடந்து வீட்டுக்குப் போனார்கள்.  சாலையின் இருபுறம் உள்ள நிறுவனங்களை பற்றி சொல்லிக் கொண்டே மாமா நடந்தார்.

            இவனுக்கு ஒரு சந்தேகம்.  “ஆமாம், மாமா கவுகத்தியிலிருந்து வரும் வழியில் எத்தனை நாய்களைப் பார்த்தோம்.  இங்க ஊருக்குள்ளே ஒரு நாயைக் கூடக் காணோமே.  திருடர்கள் பயமில்லையா” மாமா வாயில் பான்பராக்கை ஒதுக்கியபடி வாயைத்திறக்காமல் சிரித்தார். அர்த்தம் புரியவில்லை.

            அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது மணி ஒன்பதாயிற்று.  வேலைக்குப் போன பெண்கள் வந்து விட்டார்கள்.  இவர்கள் வருகைக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்.  அத்தை சாப்பிட அழைத்தார்.  சாப்பிட்டு விட்டோம் என்று சொல்லியும் அவர்கள் “எங்களுடன் சாப்பிடுங்கள்” என்று கட்டாயப் படுத்தினார்கள.  அவர்கள் அன்பை மீற முடியவில்லை.

 

   இவனும் மாமாவும் பையனும் ஒரு வரிசையில். எதிர்வரிசையில் மாமாவின் இரு பிள்ளைகளும் சித்தியும் அமர்ந்தார்கள்.  தட்டில் கோதுமை ரொட்டியும், அரிசிச்சோறும், பூசணி, உருளைக்கிழங்கு பருப்பு போட்ட குழம்பும்   வைத்தார்கள். இவன் கொஞ்சமாக வாங்கி அதிலும் கொஞ்சம் மட்டும் எடுத்து ருசித்தான்.  எதிரில் மாமாவின் மகள்களும், சித்தியும் இவனையே கவனித்தபடி சாப்பிட்டார்கள்.  மாமன் மகள்கள் இவனைவிட இருபது வயது இளையவர்கள்தாம் என்றாலும் இவனுக்கு கூச்சமாக இருந்தது.  அவர்கள் ஒவ்வொருவரும் இவனது அம்மாவின் ஒரு சாயலாக இருந்தார்கள்.

            சாப்பிட்டவுடன் அவர்கள் அம்மாவைப் பற்றி விசாரித்தார்கள்.  இவன் ஆங்கிலத்தில் சொன்னதை மாமா அவர்களது மொழியில் சொன்னார்.  அவர்கள் உணர்ச்சிப் பிரவாகமாக இருந்தார்கள். முப்பது வருஷத்திற்கு முன் பிரிந்த அம்மாவின் நினைவுகள் காலம், தூர வர்த்தமானங்களைக் கடந்து அவர்கள் உணர்வில் மிக அருகே சஞ்சாரித்தார்கள்.  இவன் வாழ்நாளில் இத்தகைய உருகும் தருணத்தை எதிர்கொண்டதே இல்லை.  இத்தனை உணர்வையும் அம்மாவும் தனக்குள் புதைந்து வைத்துதான் இருப்பாள்.  அவளையும் அழைத்து வந்திருந்தால், இந்த மகிழ்வில் அவள் உடல்நிலை தேறியிருக்கும். இவன்தான் சுயநலத்தில் தாயின் சொத்தை அபகரிக்க அவளை வராது செய்துவிட்டான். எண்ணி வருந்தினான்.

            இவன் மனதை வாசித்தவர் போல் மாமா கேட்டார்.  “என்ன வருத்தமாக இருக்கிங்களே!” இவன் தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஒன்னுமில்லைங்க மாமா, அம்மா உங்களுக்காக கொடுத்துவிட்ட எங்கள் ஊர் பலகாரத்தை கொடுக்க மறந்துட்டேனே என்று தான் நினைத்தேன்” என்றவாறு தனது பையை எடுத்து வந்து அதிலிருந்த பலகார பொட்டலங்களை எடுத்துத் தந்தான்.  ஒன்றில் அரிசிமுறுக்கு.  இன்னொன்றில் அதிரசம்.  இன்னொன்றில் கடலை தொக்குருண்டை.  கடலை தொக்குருண்டையை இவன் எடுத்துக் கொடுக்கும் போதே வாயில் உமிழ்நீர் ஊற்றெடுத்தது. இவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

  ‘ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்த ஆறுமணிநேரத்த்தில் எப்போது நிலக்கடலை யாரிடம் சொல்லி வாங்கினாள்.  எப்போது எப்படி வறுத்து இடித்து பக்குவமாக வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்தாள்? உடல் நோவையும் மீறி உறவு நோய் அவளை இயக்கி இருக்கிறது.  இத்தகைய அன்பான உறவுகளைப் பாராமல் மனதில் நினைக்க நினைக்க நோவுதானே?  இந்த இடர்ப்பாடிலும் யார் மனமும் நோகாமல் எப்படி நடந்து கொண்டாள்.?  அம்மா, அம்மாதான்!’ பெருமூச்சு விட்டான்.

            அவர்கள் அந்த பலகாரங்களை ஒன்றொன்றாக எடுத்து ருசித்து குதூகலித்தனர்.

            இந்த தருணத்தில் இன்னொன்றும் செய்தான்.  “அம்மா இந்த ஊர் வழக்கப்படி பாட்டி  இறந்தபின் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய முறைக்காக ரூ.2000ஃ- கொடுத்து சித்திக்கு வேண்டிய துணி எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.  நான் எங்க ஊரு முறைப்படி தாய்மாமனுக்கு செய்ய வேண்டிய சம்பந்தகாரர் முறைக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன். பாட்டி இறந்த உடன் வர இயலாததுக்கு இரண்டு பக்கமும் காரணங்கள் இருந்தாலும், இந்த முறையை தயவு செய்து எங்களது குடும்பத்தின் சார்பாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றவாறு தனது பாக்கட்டில் தனியாக வைத்திருந்த பணத்திலிருந்து கொடுத்துவிட்டு விருட்டென்று எழுந்து மாமாவின் காலில் விழுந்தான்.

            அந்தக் குடும்பமே உணர்ச்சியால் ததும்பி தவித்தது.  இரண்டு நிமிடம் மவுனமும் விசும்பலும் தான்.  மாமா மின்னலாகக் குனிந்து அவனை எழப்பினார்.  சித்தியும் அத்தையும் ஏதோ மாமாவிடம் சொன்னார்கள்.  “ஜெய்கோஜீ நீங்கள் உங்கள் கடமையைச் செய்து விட்டீர்கள்.  எங்களது தயாhர் கட்டளையை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிமை செய்வோம்” என்றார் மாமா.

            மாமாவின் மகன் கேப்டன் பாண்டுங் என்று சொல்லி அப்பாவின் வீரதீரங்களை அவரது ஆளுமைகளை தான் கேள்விபட்டதையும், அவர் அம்மா ‘ஹஸிமா’ கல்யாணம் பண்ணிய சாகசங்களையும் சொல்லி சிரிப்புகளை எழுப்பினான்.  “மணி பனிரெண்டாயிற்று போய் படுங்கள்” என்று சித்தி சொன்னது.  இவனுக்கு ஒரு கம்பளியைக் கொண்டு வந்து கொடுத்து பகலில் படுத்திருந்த கட்டிலில் படுக்கச் சொன்னது.  அவனது மனசு கழுவியது போல் சுத்தமாக இருந்தது.  படுத்ததும் உறக்கம் தழுவிக் கொண்டது.

 

***********

5

மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை.  மாமாவுக்கு விடுமுறை.  ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார்.  மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் நடுவே உயரமான அடர்ந்த பசுமையான மலைகள் சூழ்ந்த சிரபுஞ்சிக்குப் போனோம்.  மார்ச் மாதம் வெயில் ஆரம்பித்திருந்தது.  நீரின் சாரமில்லை.  உயர்ந்த மலைகளும் சரிந்து தாழ்ந்த பள்ளத்தாக்குகளையுமே பார்க்க முடிந்தது.  அவற்றில் நீர்த்தாரைகளால் பச்சைபாசக்கோடுகள் தெரிந்தன.  அவற்றில் எல்லாம் மழைக்காலத்தில் அருவிகள் வழியுமாம்.  சுற்றிலும் அருவிகள் சூழ்ந்த திட்டில் நிற்பதுபோல் இருக்குமாம்.  மாமா சொல்லச் சொல்ல கற்பனையில் மனச்சித்திரம் தீட்ட முடிந்ததே தவிர நிஜத்தில் ஒரு சொட்டு நீர்த் தடத்தைக் காணோம்.  சிரபுஞ்சி ஜுரபுஞ்சியாக வறண்டு அனல் கக்கிக் கிடந்தது. 

வெயில்காலமாக இருந்தாலும் அந்த பள்ளத்தாக்கு களிலிருந்து மேகக்குஞ்சுகள் எழுவதும் ஒன்றை ஒன்று விரட்டி தழுவி மறைவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன.  அந்தப் பள்ளத்தாக்கில் அரசு பராமரித்து வரும் இரு குகைளுக்கு கூட்டிச் சென்றார்.  அந்த மலைக்குகைக்குள் இருட்டில்  நிதானமாய் காலை வைத்து நடப்பது ஒரு திகிலான அனுபவம். !

 அதுவும் அந்த சுண்ணாம்பு குகைகளுக்குள் கடுமையான வெயில் காலத்திலும் சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரில் கால் வைத்து வழுக்குப்பாறைகள் வழுக்கி விடாமல் நடக்கும் சாகசம் அவனை பாலபருவத்திற்கு அழைத்தச் சென்றது.  இங்கெல்லாம் அப்பாவும் அம்மாவும் ஆசை பொங்க வந்திருப்பார்கள்.  இனம், மதம், மொழி கடந்த தம் காதலை வளர்த்திருப்பார்கள்; என்ற எண்ணம் இவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.  மாமா இவனை கவனித்துக் கொண்டே வந்தார்.  இவன் நடை, உடை, பாவனையில் இவனது அப்பாவைப் போல் இருக்கிறான் என்று மாமாசொன்னது அவனை உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு சென்றது.  அப்பாவின் சேவைமனப்பான்மையும் சுயநலமில்லாத வாஞ்சைமிக்க மனிதனாக தான் இல்லாமல் போனது குறித்து வருந்தினான்.

பின்னர் மலைப்பகுதியில் எழுந்து நிற்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு அழைத்துச் சென்றார்.  அப்பகுதியில் கல்விக்கும், ஞானத்திற்கும் திறப்பாக இருந்தது. சிரபுஞ்சி மலையில் இருந்து பார்த்ததில் வங்கதேசத்து நகரம் மங்கலாகத் தெரிந்தது.  அப்புறம் ஹாஸி இன மக்களின் பூர்வீக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.  சூரியக்கதிர்களும் உள்ளே நுழைய இயலாத கருஞ்சோலைவனமாக இருந்தது.  அங்கு வனவிலங்குகள் இருக்கின்றவாஎன்று கேட்டான்.

 

   “வனவிலங்குகள் புலியிலிருந்து யானைகள் வரை    இருகின்றன.  அவை வனத்தை விட்டு வெளியே வந்தால் அவற்றை கொன்று தின்றுவிடுவார்கள்  இப்பகுதி மக்கள்.  ஆகவே அவை அருகி வருகின்றன. ஆனால் வனத்தின் உள்பகுதிகளுக்குள் இருக்கும்.  இவ்வனப் பகுதிக்குள் சாதாரண மனிதன் போனால் திரும்பி வர வழி தெரியாது.  வனப்பகுதியினர் மட்டும் அலுவல் கருதி இடம்காட்டிக்கருவி கொண்டு உள்ளே போய் வருவார்கள்.”

    அந்த கருகும்மென்றிருந்த காட்டின் அருகிலிருந்து பார்க்கவே அச்சமாக இருந்தது.  சில் வண்டுகள் இரைச்சல், இருட்டு புதர்மரங்கள் என உள்ளே நுழைய முடியவில்லை.  அந்தப் பகுதியில் உள்ள வெட்ட வெளியில் நடுகல் தூண்கள் கற்காலத்தை நினைவூட்டின.  அதனருகே சேவல் சிலை ஒன்று இருந்தது.  அது அவர்களின் குலதெய்வம் என்று சொன்னார். பயபக்தியோடு கும்பிட்டார்.  அம்மா வீட்டு தெய்வத்தை இவனும் கும்பிட்டான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.  வீடு சுறுசுறுப்பானது. பெரியவர்கள் பலகாரம், உணவு வகைகளைச் செய்வதும், இருபெண்களும் அவற்றை சூடுகாக்கும் பாத்திரங்களில் வைப்பதும், நல்ல உடைகளை அணிந்து வெளியே செல்ல தயாராவதுமாக இருந்தார்கள்.  காலைஉணவு முடிந்தது.  எல்லோரும் நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்காவுக்குச் சென்றார்கள்.  பூங்காவின் ஒவ்வொரு மரத்தின் கீழும், பூஞ்செடிப் புதர்களின் நிழலிலும் குடும்பங்கள் அமர்ந்திருந்தனர்.  மாமாவின் மகன் முன்னதாகவே வந்து ஒரு மரத்தின் கீழ் ஜமுக்காளம் விரித்து இவர்களுக்காகக் காத்திருந்தான்.

            இவன் கேட்டான் “மாமாஜி இன்றைக்கு ஊர் திருவிழாவா? குடும்பம் குடும்பமாய் குழுமி குதூகலத்துடன் இருக்கிறார்களே!”

            “ஜெய்கோஜி திருவிழா இல்லை.  வாரத்தில் ஆறு நாள் கடுமையாக உழைப்பார்கள்.  ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமை இப்படி பூங்காக்களில், சோலைவனங்களில் கூடி பேசி, உண்டு மகிழ்வார்கள்.  ஆண்களும் ஓய்வாய் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.  டிரைவர்கள் ஓய்விருக்கும் போது கலந்து கொள்வார்கள்”

            ஆச்சரியமாக இருக்கிறது.  இப்படி வாரம் ஒரு நாளாவது கலந்து பேசி கூடி உண்டால் குடும்பத்தில் எப்படி பிரச்சனை வரும்.

            சித்தி குரல் தழுதழுக்கச் சொன்னாள் “இந்த மரம் எங்கள் குடும்ப மரம்.  இந்த மரத்தின் அடியில் நாங்கள் இருக்கும் போது தான் குரங்கின் குறும்பால் எங்கள் அக்காவின் வாழ்வில் உங்கள் அப்பா நுழைந்தார்.  இந்த மரத்தினடியில் இருக்கும் போதெல்லாம் எங்கள் அக்கா ஹாஸிமா எங்களுடன் இருப்பது போல் உணர்கிறோம்”

            இவனுக்கு மெய்சிலிர்த்தது.  உடலெங்கும் ரோமாஞ்சனம்.  கண்ணீர் ததும்பியது.  ‘….இப்படியும் ஒரு குடும்பப் பிணைப்பா.  அம்மா ஊரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிமையும் மௌன விரதம் இருப்பது - இவர்களொடு மானசீகமாக பேசுவதற்காகவா…’ நெகிழ்ந்து நெக்குருகிப் போயிருந்தான்.

            பெண்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் நடந்த சம்பவங்கள், வந்த மனிதர்களின் சுபாவங்கள், முதலாளிகளின் இயல்புகள் இவற்றை எல்லாம் சொல்லி கேலியும், கிண்டலும் தொனிக்க பரிமாறிக் கொண்டனர்.  மாமாவும், அவரது மகனும் அவரவர் பங்கிற்கான விஷயங்களைப் பரிமாறிக் கொண்டனர்.  மரத்தின் மீது வெயில் படர படர நிழல் பார்த்து மாறி மாறி உட்கார்ந்தார்கள்.  ஒரு மணிக்கு உணவு பரிமாறப்பட்டது.  அந்த உணவுகளின் ருசி இவனது நாவுக்கு பிடிபடவில்லை.  எனினும் வழக்கத்தைவிட கூடுதலாக உண்டதாக உணர்வு.  உணவு சிந்தல் சிதறல் குப்பைகளை ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டக் குப்பைத் தொட்டியில் கொட்டினார்கள்.  எங்கும் குப்பை சிதறல் இல்லை.  பான்பராக் எச்சிலை உமிழும் ஆண்கள் கூட எழுந்துபோய் குப்பைத் தொட்டியில் உமிழ்ந்து வந்தார்கள்.  இவனுக்கு ஒவ்வொன்றும் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.  மாலை மூன்று மணிக்கு மேகத்திரை விரியத் தொடங்கியது.  எழ மனமில்லாமல் எல்லோரும் எழுந்தார்கள்.  வீடு நோக்கி நடந்தார்கள்.

            இரவு ஏழு மணி இருக்கும்.  வீட்டில் பாட்டியின் போட்டோவுக்கு மாலை சார்த்தி பத்தி கொளுத்தி வணங்கினார்கள்.  இவனும் உணர்ச்சி பிரவாகத்தில் நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்து வணங்கினான்.  சித்தி விம்மியது.  மற்றவர்கள் கண்ணீர் பொங்க நின்றனர்.  சித்தி, பாட்டி போட்டோவின் கீழ் இருந்த ஒரு கவரை எடுத்து மாமாவிடம் கொடுத்து கண்ணால் ஜாடை காட்டினாள்.

            மாமா அந்தக் கவரை இவனிடம் கொடுத்தார்.  “ஜெய்கோஜி, இந்தக் கவரில் ஐந்து லட்ச ரூபாய்க்கான பணவரைவு உங்கள் அம்மா பெயருக்கு இருக்கிறது.  இந்த வீட்டில் பெண் பிள்ளையாகப் பிறந்த அவருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை.  அவர் அந்நியரை மணந்து எங்கள் சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டாள்.  அன்று எங்கள் இனக் கட்டுப்பாட்டையும் மீறி நாங்கள் கொடுத்த சொத்தை அவர் வாங்கிக் கொள்ளவில்லை.  உங்கள் அப்பாவும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.  எங்கள் அக்காவை மணந்ததற்காக மாதா மாதம் பணம் தருவதாகச் சொன்னார்.  எங்கள் அம்மா மறுத்துவிட்டார்.  நீங்களும் உங்கள் அப்பா மாதிரி மறுக்காமல் இதனை வாங்கி எங்கள் அக்காவிடம் கொடுங்கள்.  அப்போதுதான் எங்களது அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும்”.

            இவனிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.  நா எழவில்லை.  கண்ணீர் பொலபொலவென உருண்டது.  இவன் என்ன சொல்லப் போகிறான் என்று கூப்பிய கைகளும் கெஞ்சும் பார்வையுமாய் நின்றனர்.  மீண்டும் இவன் பாட்டியின் படத்தின் முன் விழுந்து வணங்கினான்.  சித்தியும், மாமாவும் இவனைக் கட்டிக் கொண்டனர்.  கண்களைத் துடைத்து விட்டனர்.  எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது.  அத்தை உணவு பரிமாறினாள்.

            மறுநாள் காலை 7 மணிக்கு கார் வந்தது.  இவனுக்கும் மாமாவுக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது.  கண்ணீர் மல்க விடை கொடுத்தவர்கள் ‘ஒருமுறை நீங்கள் எல்லாரும் இங்கு வந்து போங்கள்” “நிச்சயமாக, இப்படி ஒரு பாசக்குடும்பத்தை மறக்க முடியுமா.  பிரிந்து தான் இருக்க முடியுமா?” என்றான்.  எல்லோரும் நெகிழ்ந்து போனார்கள்.  மாமாவின் மகன் இவனது கைகளைப் பற்றி முத்தம் கொடுத்தான்.  “குட்டையான மனிதர்கள் தாம், அவர்கள் வாழும் மலையைப் போலவே அவர்களது மனசும் உயர்வாய்த்தான் இருக்கு” என்று எண்ணிக் கொண்டான்.  பிரியாவிடை கொடுத்து காரில் ஏறினான்.

            இரயில் கிளம்பியது.  மாமாவின் இடுங்கிய கண்ணீரில் ஊற்றெடுக்க கையசைத்தார்.  ‘அக்காவும், நீங்கள் எல்லோரும் வாங்க” என்றார்.  வண்டி நகரநகர ஷில்லாங் நினைவுகள் காட்சிகளான நகர்ந்தன.  அந்த பெட்டியில் பலர் இருந்தாலும் இவன் மட்டும் தனித்திருப்பதாக வெறுமையை உணர்ந்தான்.  மனதுக்குள் இருந்து ஒரு குரல் “ஐந்து லட்சம், ஐந்து லட்சம்” முழங்கியது.  கண்களையும், காதுகளையும் கைக்குட்டையால் இறுக்கிக் கட்டினான்.  ஐந்து லட்ச ரூபாய் பணவரைவு அகலத்திரையாக விரிந்தது.  ஆடியது, குதூகலித்தது.  இவன் விரும்பிய மதுவகைகளாய், ஐம்பத்திரண்டு சீட்டுகளாய் உருமாறி, உருமாறி கூத்தாடியது.  “அம்மா, அம்மா” என்று மெல்ல உச்சரித்தான்.  அம்மாவின் இடுங்கிய கண்களிருந்து ஒளிப்பிரவாகம் கூசிய கண்கள் முடின.  காதுமடல்கள் விரிந்தன.  அலையடித்த மனது அமைதியானது.  அப்படியே உறங்கி விட்டான்.

            ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்ற ரயில் ஒரு குலுங்கலோடு கிளம்பியது.  ஒரு பெரியவரும், ஒரு அம்மாவும் தட்டுத் தடுமாறி இவனருகே வந்தனர்.  அவர்கள் இருவருக்கும் நடு அடுக்கும் மேலடுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  பெரியவர் அலுப்போடு மேலடுக்கையும், மனைவியையும் பார்த்தார்.

            “எங்கே போகிறீர்கள்” என்று கேட்டான்.

            “சென்னைக்கு வைத்தியம் பார்க்க போகிறோம்” என்றார் ஆயாசத்தோடு பெரியவர்.

            “நானும் சென்னை தான் போகிறேன்.  நீங்கள் கீழடுக்கில் படுத்துக் கொள்ளுங்கள்.  நான் மேலடுக்கில் படுத்துக் கொள்கிறேன் என்றான்.

            அவர் முகத்தில் முதுமையும், நோய்மையும் கனிய கையெடுத்துக் கும்பிட்டார்.  இவன் தனது கம்பளி விரிப்பான்களோடு மேலடுக்கில் ஏறினான்.  அப்பெரியவர் தனது மனைவியைக் கீழடுக்கில் படுக்கச் சொல்லிவிட்டு அவர் நடுவடுக்கில் படுக்க முயற்சித்தார்.  விட்டுக் கொடுத்தலின் உவகை உடலெல்லாம் பரவியது.  இவனுக்கு உறக்கம் வந்தது.

 

***********

 

6

            மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான்.  என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான்.  மனம் உருகி கண்ணீர் கசிந்தது.  அம்மா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளது இடுங்கிய கண்கள் இவனது முகத்தை ஊடுருவியது.  இவனது முகத்தில் அவளது சொந்தம் சுருத்துக்கள் நிழலாடுவதைப் பார்த்தாளோ…

            மனைவி மல்லிகா வந்து, “என்னங்க, அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா, என்ன சொன்னாங்க” என்றபடியே கொண்டு வந்த பைகளை நோட்டமிட்டாள்.  அம்மா இயல்பு நிலைக்கு வந்தவளாக “சரி எல்லோரும் நல்லா இருக்காங்களா சித்தி, மாமா, பிள்ளைகள் என்ன சொன்னார்கள்” என்றவள் அவனது பயணக்களைப்பை உணர்ந்தவளாக “சரி அப்புறம் பேசிக்கலாம்.  நீ போய் குளிச்சிட்டு வா.  சாப்பிட்டு சாவகாசமாய் பேசுவோம்”.

            இவன் குளித்து சாப்பிட்டான்.  அம்மாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.  பணவரைவைக் கொடுத்தான்.  அம்மா அதை வாங்கி பார்த்தபடி கேவி கேவி அழுதாள்.  இவன் அமைதியாக இருந்தான்.  கருக்கொண்ட உச்சி மேகம் ஊற்றி வடியட்டும்.  மனம் தெளியட்டும் என்பது போல மௌனசாட்சியாக இருந்தான்.  இவனது கண்முன்னும் ஷில்லாங் நிகழ்வுகள் நிழலாடியது.  எவ்வளவு நேரமோ தெரியவில்லை.  அம்மா பேசினாள். ‘அம்மா மல்லிகா’ என்று மனைவியை அழைத்தாள்.  “மகள் ரோஜாவை வரச் சொல்லுமா”.

            மகளும் மருமகளும் வந்துவிட்டார்கள்.  மகனை அழைத்தாள் ஜெயக்கொடியிடம் அந்த பணவரைவை மருமகள் மல்லிகாவிடம் கொடுக்கச் சொன்னாள்.  மருமகள் வாங்கி பார்த்தாள்.  ஐந்து லட்சம்.  முகமெல்லாம் பவுர்ணமி ஒளி.!

    “ஏம்மா மல்லிகா, இன்னிக்கு புதன்கிழமை.  சீக்கிரம் மதியம் சமையலை முடி.  நாமெல்லாம் பேங்குக்குப் போவோம்.  இந்த ஐந்து லட்சத்தில் உன் மகள்க பேருக்கு ஆளுக்கொரு லட்சம்  ரோஜா பெயருக்கு ரெண்டு லட்சம்.  உன் பெயருக்கு ஒரு லட்சம் போட்டுருவோம்.  சம்மதம்தானா.  மல்லிகா அரைமனதோடு தலையசைத்து கணவனைப் பார்த்தாள்.

   “அம்மா இது உன் பணம்.  உன் பெயரிலேயே இருக்கட்டும்.  பின்னால நீ எப்படி சொல்றியோ அப்படி செய்வோம்.  அடுத்த மாசம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் லீவுதான். நாமெல்லாம் அங்கே போய் வருவோம்”.

            “ எனக்கும் அங்கே போய் என் உடன்பிறப்புகளை, பிறந்து வளர்ந்த மண்ணை மனுஷங்களை பார்க்கத்தான் ஆசை.  ஆனால் நா அங்கே போனேன்னா அந்த சந்தோஷத்திலேயே செத்துருவேன் என்ற பயம்.  என்னை கட்டிகிட்டு என்னை பாதுகாத்த புருஷன் மண்ணிலேயே நான் உயிரை விடனும்”

     என்று அம்மா தெளிந்த குரலில் சொன்னாள்.  கண்களில் நீர் இல்லை. ஒளி இருந்தது.