Monday, 26 November 2018

மானுட சமுத்திரம்


மானுட சமுத்திரம்
-               ஜனநேசன்
அம்மாவுக்கு இந்தப் பெண்ணை பார்க்கப் போகவே இஸ்டமில்லைதான். இதுவரைக்கும் மூனுவருஷமாய் கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமாய் நின்றவன் அந்தப் பெண்ணை பிடிச்சிருக்கு. தனது வங்கியில் தனக்கு கீழே வேலை பார்க்கிற பெண்; நல்ல பெண் என்கிறானே அவனது மனத்திருப்திக்காகப் பார்ப்போம். பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு சொல்லிருவோம் என்றுதான் அம்மா அந்தப் பெண்ணை பார்க்க ஒத்துக்கொண்டாள்.
காரை அவன்தான் ஓட்டினான். இந்தப் பெண் பற்றிய பேச்சைத் தொடங்கியதிலிருந்து அம்மாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதமும் தொடங்கியிருச்சு. போன திங்கள்கிழமை பேங்கிலிருந்து வந்ததும் சொன்னான். “அம்மா, எங்க பேங்கில கேஷியரா வேலை பார்க்கிறாள் அவளைப் பிடிச்சிருக்கும்மா. அவளை ஒருநாள் நீ வந்து பாரு. உனக்கும் பிடிக்கும்.  கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்” என்று குரலைக் குழைவாய் தயங்கித்தயங்கி சொன்னான்.
அம்மாவுக்கு ‘கல்யாணத்துக்கு ஒத்துக்காதவன் பேசுறானேன்னு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேசமயம் எவளையோ ஒருத்தியைக் கல்யாணம் கட்டிவைன்னு வந்து நிற்கிறானேன்னு அதிர்ச்சியாகவும் இருந்தது. அம்மா மனதை பக்குவப்படுத்திக் கொண்டு உணர்வை வெளிக் காட்டாமல், “சந்தோசம்பா. அவள் என்ன ஜாதி, நம்ம ஜாதியா, அப்பா அம்மா என்ன செய்யிறாங்க? எங்கே இருக்காங்க?
“ஜாதி எல்லாம் தெரியாது. எங்க பேங்கில மூனு மாசத்திற்கு முன்னாலதான் புதுசா வேலைக்கு வந்தவ. அழகானவ. ஆடம்பரமில்லாதவ. தன் வேலைன்னு சீட்லையே கிடக்காம வங்கிக் வாடிக்கையாளர்கள் கேட்கிற உதவியை தட்டாமா செய்யிறா. தனது சீட்டை சேர்ந்தது இல்லாட்டியும் அடுத்தவங்களைக் கெஞ்சி உதவச் செய்கிறாள். ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்கமாட்டா…. துறுதுறுன்னு சிரிச்ச முகத்தோடு இருப்பா. யாருகிட்டேயும் வளவளப்பு இல்லை. அளவா பேசுவா. தேவையானதை மட்டும் பேசுவா. வங்கி நேரம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷமே கிளம்பிடுவா. பேங்குள்ள புதுசா ஒரு தென்றல் காற்று நுழைந்து ஊடும்பாடுமா வீசுவது போல் இருப்பா” என்று அவனது மனதை வெளிப்படுத்தினான் அவன்.
“சரிப்பா, என்ன ஜாதி, குடும்பம் எப்படின்னு தெரியாம எப்படி? முதல்ல அவளைப் பற்றித் தெரிஞ்சுக்குவோம். அப்புறம் செய்வோம்” என்ற அம்மா மீது, அவனுக்கு கோபம் பொங்கியது.
“என்னம்மா ஜாதி ஜாதின்னு. நீங்க உங்க அத்தை மகனைத்தான் கட்டிகிட்டீங்க. அவரு ஆசைக்கொரு பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு உங்க சொந்த சித்தி மகளைக் கட்டிகிட்டு, உங்களையும் என்னையும் நடுத்தெருவில விட்டுவிட்டார். சரி சொந்த ஜாதிக்காரங்க யாராவது  அவரைத்தட்டிக் கேட்டாங்களா, பன்னெண்டு வயது மகனை நிர்க்கதியாய் விட்டுட்டோம்னு அவருக்கும் குற்றவுணர்வாவது. இருந்ததா? உங்க சித்தி மக, உனக்கு தங்கச்சி தானே நம்மால நம்ம அக்கா வாழ்க்கை கெட்டுப் போச்சேன்னு அவங்களுக்கு எதாவது, பாசம், பரிவு, இரக்கம்ன்னு இருந்ததா? சரி பொம்பளைப் பிள்ளை பிறக்கலையேன்னு கட்டின பொண்டாட்டி பிள்ளையை நடுத்தெருவில விடறோமேன்னு மனசு உறுத்தல் அவருக்கு இருந்ததா? பொம்பளை பிள்ளை பாசம், தாய்ப் பொம்பளையை நட்டாற்றில விடுமா? சாதி, பாசம்ன்னு வேசம் போட்டது போதும்மா…” என்று பொங்கினான் அவன்.
அதிர்ந்து பேசாத மகனிடம் இவ்வளவு குமுறல், மனக்கொந்தளிப்பு இருக்கிறதே!. அவன் பேசுவதிலும் நியாயம் இருக்கிறதே! அம்மாவின் வாய் அடைத்துப் போனது. அவன் இன்னும் ஆவேசமாகிவிடக்கூடாது என்பதற்காக மென்மையாக அவனது கைகளைப் பற்றி தோளில் தட்டி ஆசுவாசப்படுத்தினாள்.
“சரி, பார்ப்போம். ஒரு நாளைக்கு முருகன் கோயிலுக்கு வரச்சொல்லு”.
“அம்மா கோயில்லப் பார்க்கிறது, சினிமா கொட்டகையிலப் பார்க்கிறது இதெல்லாம் சரியாக இருக்காது. வாங்க, வீட்லைப் போய் பார்ப்போம்” என்றான் அவன்.
“ஆமாம் அதுவும் நல்ல விஷயம்தான். வீட்ல பார்த்தால் அந்தப் பெண்ணைப் பற்றியும் குடும்பத்தையும் பற்றியும் தெரிஞ்சிக்கலாம்தான். ஆனால் நாம வீடேறிப் போய் பார்த்ததுக்குப் பின்னால பிடிக்கலைன்னா ஒரே இடத்தில வேலை பார்க்கிறவங்களுக்குள்ளே மனக்கசப்பு வந்துறக்கூடாதுல்ல. அதுக்காகத்தான் கோயில்லப் பார்ப்போம்னேன்”.
“அம்மா என்னை உங்களுகு;கு பிடிச்சிருக்குல்ல! எனக்கு பிடிச்சது உங்களுக்கும் பிடிக்கும் தானே” மகன் தன்னை சாமர்த்தியமாகப் பேசி மடக்குவது அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவன் எந்த விஷயத்தையும் அம்மாவிடம் இவ்வளவு நேரம் லாவகமாக பேசினதில்லை. ஆனால் சாதி தெரியாத கூட்டத்துக்குள்ளே மாட்டி மகன் வாழ்க்கையும், காலம்போன காலத்தில தனக்கும் நிம்மதியில்லாமப் போயிறக்கூடாது என்ற எண்ணம் சுட்டது.
“சரி, வீட்லையே பார்க்கலாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தான். எல்லாருக்கும் லீவுநாள். காலையில பதினொரு மணிக்கு அவங்க வீட்டுக்கு வர்றோம்னு அவங்க அப்பாகிட்டே சொல்லியிரு.
ஆமாம் அவங்க அப்பா என்ன வேலை செய்யிறாரு. அவங்க அம்மா என்ன செய்யிறாங்கன்னு சொல்லவே இல்லையே!”.
அம்மா, அந்தப் பெண்ணோட அம்மா, அவ பிளஸ்டு படிக்கும் போதே உடம்புக்கு முடியாம இறந்திருச்சாம். அவங்க அப்பா இங்கதான் ஒரு ஜவுளிக்கடையில அக்கவுண்டண்டா இருக்காரு”
“ஏப்பா இதை முதல்லையே சொல்லலை? “வயசுக்கு வந்த பருவத்தில அம்மா இல்லாம வளர்ந்த பிள்ளை எப்படி வளர்ந்ததோ, குணம் எப்படியோ அப்பா எப்படியோ? கூடப்பிறந்தவங்க யாருமில்லைங்கிற, என்னப்பா நான் பட்டது போதாதா. நீயுமா இப்படி இடியப்ப சிக்கல்ல மாட்டிக்கணும்.”
“அம்மா, அப்படி எல்லாம் இல்லம்மா. அந்தப் பெண்ணோட குணம், நடத்தை, வேலை பார்க்கிற அக்கறை, அடுத்தவங்களோட பேசும் நாசூக்கு எல்லாம் வந்து பாரு. பார்த்துட்டுப் பேசு” என்று குரல் உயர்த்தினான்.
‘ச்சே இவனைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். இவன் போக்கில போய்தான் திருப்பனும்னு’. மனசுக்குள் நினைத்துக் கொண்ட அம்மா “சரிப்பா, ஏன் ஆவேசப் படறே. நாம நாளைக்கு காலையில பதினோரு மணிக்குப் போகிறோம். தகவல் சொல்லிரு”.
இப்போது பெண்பார்க்க போய் கொண்டிருக்கிறார்கள். கார் கடந்து போகும் ஒவ்வொரு முக்கிய சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தத்திலும் அம்மா யாரையோ இடது ஜன்னல் வழியே தேடினாள். பார்வை உற்று ஊடுருவி வெளியெ செல்லும், தேடிய நபர் இல்லாதது கண்டு சோர்வாக, பெருமூச்சோடு உள்ளே திரும்புவது, கடல் அலை கரையோரம் மகிழ்ச்சி பொங்கித் தேடிவந்துவிட்டு உற்சாகமின்றி கடலுக்குத் திரும்புவது போலிருந்தது. அவன் உள் கண்ணாடி மூலம் கவனித்தான். “என்னம்மா யாரைத் தேடுறீங்க. யாரையும் வரச் சொல்லிருக்கிங்களா?”
“உங்கப்பா வர்றேன்னாரு! அவன் அதிர்ச்சியை வெளியே காட்டாமல் காரை ஓரமாக நிறுத்தினாள். “என்னம்மா, ஏன் அவரை கூப்பிட்டீங்க. நம்மலை அனாதையாக்கிட்டு போனவர்கிட்ட ஏன் பேசுறீங்க”.
“இல்லப்பா அவராத்தான் இன்னிக்கு காலையில போன்ல பேசி அழுதாரு. பரிதாபமா இருந்தது. நான் தான் நாம போற இடத்து விலாசம் சொல்லி வரச் சொன்னேன்.”
“அம்மா அங்கே வந்து அவரு எதாவது பேசி கலாட்டா பண்ணினா உங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு நான் கிளம்பிடுவேன். அப்புறம் வருத்தப்படக்கூடாது!” என்று வண்டியைக்கிளப்பினான். வண்டி அதிர்ந்தது.
“அவரு ஒன்னும் பேசமாட்டாரு. உன் கல்யாண நேரத்தில அப்பா ஸ்தானத்தில நிற்பாரு. உன் விஷயத்தில தலையிடமாட்டாரு. அப்பா உள்ளுரில் இருந்தும் அவர் வரலைன்னா, என்னைப் பத்திதான் இந்த உலகம் தப்பாப்பேசும்! அவரு ஆளோட ஆளா இருப்பாரு. அவரு ஒன்னும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டேன்”.
“அம்மா, இந்த நாடகம்லாம் வேணாம். அங்கே வந்தா அவரும் எதுவும் பேசக்கூடாது. நானும் அவருகிட்ட எதுவும் பேசமாட்டேன்”
கார் ஊரின் தெற்குப் பகுதியில் உள்ள கண்ணகி நகருக்குப் போனது. கீழ்நடுத்தரப்பகுதிமக்கள் வாழும் பகுதி. ஜனநெருக்கம் அதிகம் இருந்தது. தெருவின் இருபுறமும் பலசரக்குக் கடைகள், கறிக்கடை, மீன்கடை, பால்கடை, காய்கனிக்கடை இப்படி எல்லாக் கடைகளிலும்  ஆள்கள் நின்றிருந்தனர். முக்கிய சாலையிலுருந்து இடதுபுறம் திரும்பி இருபதடி சாலையில் வண்டி மெல்ல ஊர்ந்தது.
இடப்புறம் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி அலைப்பேசியில் தெரு வரைப்படம், அவளது இருப்பிடம் தேடி, தான் நுழைந்த தெருவை உறுதிபடுத்திக் கொண்டான். மெல்ல நகர்ந்தான். “ஈயாட்டம் ஜனங்க மொய்ச்சுக்கிடக்குது. சேறும் சகதியுமாய் இருக்கு” என்று அம்மா முனங்கினாள். அவனது கூர் செவியில் பட்டுவிட்டது. “சேத்திலதானம்மா நெல்லு விளையுது!”.
“ஆமாம், நான் தெருவைத்தான் சொன்னேன்” என்றாள். வண்டியை ஒரு ஓரமாய் நிற்கும் இடம் தேடி நிறுத்தினான். அவர்கள் வலதுபுறம் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு பத்தடிகுறுக்குத் தெருவுக்குள் போக வேண்டும். முதல் நாள் பெய்த மழையின் நசநசப்பு தெருவெங்கும் தென்பட்டது. வேட்டிகட்டி பழக்கமில்லாதவன் வேட்டியை சரி செய்து கொண்டு மெல்ல இறங்கினான். அம்மாவும் கொண்டு வந்திருந்த பூ, பழம், இனிப்பு பைகளோடு மனதிலுள்ள சிந்தனையை மறைத்து முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு இறங்கி அவனருகில் நின்றாள். இருவரும் சாலையைக் கடந்து காந்தி தெருவுக்குள் நுழைய இருந்த தருணம். பதினைந்துவயது மதிக்கத்தக்க இரு மாணவர்களும், மாணவிகளும் “சார் செல்வியக்கா வீட்டுக்கா….” என்று புன்னகை பூக்க கேட்டனர். அவன் தலையசைத்தான். “வாங்க, நாங்க கூட்டிட்டுப் போறோம்” என்றனர். அவர்களுள் இருபெண்கள் அம்மாவிடம் “ஆன்ட்டி அந்த பைகளைக் கொடுங்க நாங்க கொண்டு வர்றோம்” என்று இரு பைகளை வாங்கி கொண்டனர். அம்மா பூ பையோடு நடந்தாள். இன்னும் நாலு பேர் எதிர்சேவை செய்வது போல் எதிர்கொண்டு வணங்கி அழைத்துச் சென்றனர். தெருவின் இருபுறமும் இடைவெளி விடாது அடுக்கிய தீப்பெட்டிகள் பொல நெருக்கமாய் வீடுகள் இருந்தன. வீடுகள் முன்பாக இரு சக்கர வாகனங்கள் நின்றிருந்தன. சிறுபிள்ளைகள் அங்குமிங்குமாக பட்டுப்பூச்சி போல் விளையாடித்திரிந்தன. இருபக்கமும் வீட்டுப்பெண்கள் இவர்கள் நடந்து போவதைப் பார்த்து மெல்ல முறுவல் பூத்தனர். அவனுக்கு கூச்சமாக இருந்தது. புது அனுபவம் வேட்டி தரையில் இழுபடாமல் மெல்ல நடந்தான். இருபுறமும் பார்த்துக் கொண்டே அடிக்கடி பின்னால திரும்பிப் பார்த்தபடியும் அம்மா பின் தொடர்ந்தாள். அவள் இருபது வருடமாய் விலகிய ஜனங்களின் நேசப் பார்வை.
அவனிடம் எதாவது பேச வேண்டுமே என்றுணர்ந்த பையன்கள். ‘அக்காவிடம்தான் டியூஷன் படிக்கிறோம். நீங்க அக்கா பேங்கிலதான் ஆபிஸரா? அக்கா கணக்கு சைன்ஸ் எல்லாம் நல்லா சொல்லித் தருவாங்க. டென்த்தில சென்டம் வாங்க வச்சிட்டாங்க. அக்கா சிரிச்சுகிட்டே சொல்லித் தருவாங்க. திட்டவே மாட்டாங்க. ஆனா, எங்களை நல்ல மார்க் வாங்க வச்சிருவாங்க” என்று பெண் பிள்ளைகள் சொன்னார்கள.; தெருவின் இருபுறத்து வீட்டார்களின் வாஞசையான பார்வைகளின் குளிர்ச்சியில் பிள்ளைகளின் பேச்சுகள் நெகிழ்வூட்டின. அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை இந்தத் தெரு பிள்ளைகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கணும். அவளது அப்பாவை தங்களுடனே தங்க ஒத்துக்கணும். அவருக்கு எந்த வகையிலும் மரியாதைக்குறைவு ஏற்படக்கூடாதுன்னு அவள் சொன்ன நிபந்தனைகள் நினைவுக்கு வந்தன. அவளது உயரம் கூடிக்கொண்டே போனது. அம்மா மௌனமாக முகத்தில் சிரிப்பை படரவிட்டபடி நடந்தாள.
அந்த வீட்டின்முன் இளம்பெண்கள் குழுமியிருந்தனர். அந்த வீடுதான் என்றுணர்ந்த அவன் நடையை இன்னும் மெதுவாகக்கினான. வேட்டி இடுப்பில் சரியாக இருக்கிறதா என்று அனிச்சையாக அவனது கைகள் சரிபார்த்தன. முகமெல்லாம் கூச்சம். கண்களைச் சுருக்கியது. கூடவந்த பிள்ளைகள் “இந்த வீடுதான் சார், அங்க நிற்கிற அக்காக்கள் அந்த தாத்தாவின் ஜவுளிக்கடையில வேலை பார்க்கிறவங்க” என்று ஒரு பெண் சொன்னாள். அவர்கள் ‘வெல்கம் சார்’ என்று மெல்லிய கோரஸாக இசைத்தனர். அந்தப்பெண்கள் இளம்பச்சைநிறத்தில் சேலை அணிந்திருந்தனர். கண்ணுக்கு குளுமையை ஊட்டியது. வாசல்படியில் ஒல்லியாக ஒரு பெரியவர் இரு கைகளையும் கூப்பி, “வாங்க, வாங்கத் தம்பி, வாங்க அம்மா” என்றார். அவர்தான் அவளின் அப்பாவாக இருக்கக்கூடும் என்று யூகித்தான். மெல்லிய தேகம், உறுத்தாத வெள்ளை ஆடை, கவலை தோய்ந்த முகத்தில் அங்கங்கே மகிழ்ச்சியின் குமிழ்கள் பளிச்சிட்டன. அவளுக்குப் பின் கைகூப்பியபடி நான்கைந்து ஆண்களும், பெண்களும் ஒளிர்ந்த முகத்தோடு நின்றனர்.அவர்களுள் ஒருவயதானப் பெண் முன்வந்து அவனது அம்மாவை வணங்கி உள்ளே அழைத்து வந்தாள்.இளம் பெண்கள் பன்னீரைத் தெளித்தனர். அவன் நெளிந்தபடி உள்ளே நுழைந்தான்.
அந்த வீடு ஒரு சின்ன காம்பவுண்ட்டில் இருந்தது. கிழக்குப் பார்த்த காம்பவுண்டில தென்புறமும் வடபுறமும் ஐந்தைந்து வீடுகள். வீடு என்றால் பத்துக்கு பதினைந்தில் ஒரு அறைதான். முன்னால் மூன்றடியில் ஒரு சின்ன வராந்தா. இரு வரிசைவீடுகளுக்கு நடுவே ஆறடி அகலத்தில் ஒரு நடைபாதை. இளம்பெண்கள் வரிசையாக நின்றார்கள். வீட்டுத்தோட்டத்தில் நட்ட செவ்வந்திப் பூச்செடிகள் மலர்ந்து நிற்பது போல இருந்தது. சிறு வரண்டாவில் யானைத் தந்த நிறத்தில் சேர்கள் போடப்பட்டிருந்தன. அவளின் அப்பா அவனை உட்காரச் சொன்னார். கூடவே அக்காம்பவுண்ட் ஆண்களும் அவனுக்குத் துணையாக உட்கார்ந்தார்கள். அம்மாவுக்கு பேச்சுத்துணையாக அந்தப்பெண் வந்து ஒட்டிக் கொண்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அம்மா அந்தப்பெண்ணிடம் கிசுகிசுத்தாள். அந்தப்பெண் அம்மாவை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றாள். ஒரு வரிசைக்கு இரு பொதுக்கழிப்பறை, குளியலறைகள் இருந்தன. ஓரளவு சுத்தமாகவே இருந்தன. அம்மா அந்தப்பெண்ணிடம் வாயைக் கிளறினாள். “ஏம்மா, இவுங்க என்ன ஜாதி?  இந்தப் பொண்ணோட அம்மா, அப்பா குணமெல்லாம் எப்படி?”
 “அம்மா, நாங்க பத்துவருஷமா இந்த காம்பவுண்டலதான் இருக்கோம். இந்தக் காம்பவுண்டில் பல தரத்தவங்க இருக்காங்க. நாங்க எல்லாரும் தாய் பிள்ளையாகத்தான் பழகுறோம். ஜாதி பார்க்கிறதில்லை. அவங்க அம்மா இருந்த போதும் சரி, இப்பவும் சரி அந்தப் பொண்ணு தங்கம்தான். எந்தக் குறையும் சொல்ல முடியாது. இங்க உள்ள பத்து வீட்டுக்கும் செல்விதான் மூத்த பொண்ணு மாதிரி! எங்க பிள்ளைகளை படிக்க வைக்கிறது, வேலைக்கு மனுப்போட்டு, வேலையில சேர்த்துவிடறது, எல்லாம் அந்தப் பொண்ணுதான். நல்லா படிச்சிருக்கிறோம். பேங்கில வேலை பார்க்கிறோம் என்ற கௌரதையோ, பந்தாவோ இல்ல. எல்லார்கிட்டேயும் சிரிச்ச முகத்தோடு பேசும். முகம் சுண்டியோ ஒரு கடுகடுத்த வார்த்தையோ அந்தப் பொண்ணுகிட்ட பார்த்ததில்லை. இந்த பத்துவீட்டையும் புத்திமதியால பராமரிக்கிறது அந்தப் பெண்தான். அதனால இந்த பத்துவீட்டுக்காரங்க மட்டுமல்ல இந்த தெருவே இந்த பொண்ணுக்கு சொந்த பந்தங்கள்தான். எல்லாரும் வந்தா நிற்க இடமில்லைன்னுதான் அவங்க யாரும் உள்ளே வரலை…” என்று அந்தப்பெண் சொல்லிக் கொண்டே போனாள்.
அந்தப்பெண்மணியிடம் எதுவும் கறக்க முடியலை என்ற ஏமாற்றத்தை மறைத்து குளியலறைக்குப் போய் வந்தாள் அம்மா. இந்த மனுஷன் வந்தா எதாவது பேசுவார்னு பார்த்தா வரலையே என்று மனதுக்குள் நினைத்தபடி வந்தாள். அம்மா வீட்டுக்குள் நுழையும் பொது அவரும் வந்துவிட்டார். அவளது அப்பா எழுந்து வரவேற்றார். அவர் தான்தான் “மாப்பிள்ளையின் அப்பா” என்று அவராகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். அவனும் எழுந்து வரவேற்பது போல் தலையசைத்து ஒரு சேரைக் காட்டினான். அவனது அம்மா அவரைப் பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனாலும் அம்மா மனசுக்குள் முனங்கினாள் ‘நம்மலே இவன் மாப்பிள்ளை இவன் பொண்ணுன்னு முடிவு செய்யலை. இவரு திடீர்னு வந்து சொல்லி ஒட்றாரே’
செல்வியின் அப்பா, அவனது அப்பாவையும், அம்மாவையும் செல்வியிடம் அறிமுகப்படுத்தினார். அவள் அவர்கள் முன் குனிந்து வணங்கினாள். அவள் குனிந்து நிமிரும் போது அவளது முகத்தில் தென்பட்ட களையும், கனிவும் அம்மாவை நெகிழ்வித்தது. இறுக்கம் கரைந்தது. எல்லாரும் ஒரே மனித ஜாதியாயத் தெரிந்தார்கள்.