ஐந்தறிவு
- ஜனநேசன்
கைப்பேசி ஒலித்தது அவன்தான் அழைக்கிறான். “என்னடா
மச்சி! இப்பதான்டா உங்கவீட்டுக்கு வந்துட்டு எங்க வீட்டுக்குள்ளே நுழைகிறேன். என்னடா ஒரே பிசியா
வீட்டில ஆளை பிடிக்க முடியலை! என்ற இவனை இடைமறித்து.
“நேர்ல
சொல்றேன். வீட்டிலயே இரு.
அஞ்சு நிமிசத்தில் வந்திர்றேன். ஒரு திரிலான புரோக்கிராம் இருக்கு” என்றான்
அவன்.
இவன் வீட்டுக்குள் நுழைந்து உடை மாற்றுவதற்குள் கைப்பேசி அழைப்பு வந்துவிட்டது. உடைகளை
மாற்றாமல் சரி செய்து கொண்டு
முகத்தை மட்டும் கழுவிவிட்டு வறாந்தாவில் நின்றான். நான்கு
மணிக்கே வெயிலின் தகிப்பு
அடங்கலை. முன்பெல்லாம் ஒவ்வொரு
வீட்டிற்கு முன்னும் பின்னும் வேம்பு, பலா, முருங்கை, மா, வாழை மரங்களில் ஏதாவது நிற்கும். கண்ணுக்கு இதமாக இருக்கும். குருவி, கிளிகள் கொஞ்சும் மொழிகள்
மனசைக் குளிர்விக்கும் இப்பொழுது ஓரடி இடம்கூட காலியாக
விட்டுவிடாமல் அதை மனைக்குள் அடக்கி
வாடகை பார்க்கும் மனோபாவம் பெருகிவிட்டது. இவன் பள்ளியில் படிக்கும்போது இப்பகுதி ஒரு நடுத்தர
கிராமமாக இருந்தது. இன்று
நகரின் விரிவாக்கத்தில் முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. இவனது
வீட்டின் முன்னால் ஆடு,
மாடு, கோழிகள் மட்டுமல்ல கழுதைகளும் கூட தெருக்களில் திரியும். இப்போது இவற்றை பார்க்கிறதே அரிதாக இருக்கிறது. அவனது
வீடும் கூட மாறி இருக்கிறது. இவன் வருடத்துக்கு ஒருமுறை
தான் வரமுடிகிறது. வரும்போது தெருக்களின் முகம் மாறிக்கொண்டே இருக்கிறது. கால்கள்தாம் அனிச்சையாக வீட்டின் முன் நிற்கின்றன. கண்களுக்கு புது இடங்களாகத் தெரிகின்றன.
என் பீல்டு புல்லட்
பைக் அதிர அவன்
வீட்டின் முன்னால் நிறுத்தினான்.
“டேய் மச்சி, சொல்லாமக் கொள்ளாம ஊருக்கு
வந்திட்டே. என்ன விஷயம்?”
“இல்லடா ரெண்டு
நாள் லீவு கிடைச்சது. அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு போலாம்னு காலையில்தான் வந்தேன். மாலையில் உன்னை பார்க்கலாம்னு கைப்பேசியில் அழைத்தேன். பிசி
பிசின்னு வந்தது. சரி வீட்டுக்குப் போனால் உங்க அம்மாவையும் பார்த்தது போலிருக்கும்னு வந்தேன். நீ மதியம் சாப்பிடக்கூட வரலைன்னு அம்மா சொன்னாங்க. அப்படியே பத்துநிமிஷம் பேசிட்டு காபி
சாப்பிட்டு வந்தேன். உன் அழைப்பு
ஒலித்தது.
“சரிடா, வேறெதுவும் புரோகிராம் இருக்கா!”
“ஆமாம், நம்ம மைக்கேலையும், அஜ்முல்லாகானையும் பார்த்து பேசிட்டு வரணும்”
“அவனுங்களை அப்புறம் பார்க்கலாம். ஒரு திரில்லான ப்ரோக்கிராம் இருக்கு வா போகலாம்
கிளம்பு”
“அப்படி
என்னடா திரில்லான ப்ரோக்ராம்?”
“உனக்கு
சொன்னால் புரியாது. உன் பைக்
வேண்டாம். என் பைக்கிலே ஏறு.
என் வேகத்துக்கு உன்னால
ஃபாலோ பண்ண முடியாது! வா, வந்து ஏறு”
இவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனது பைக்பின்னால் அமர்ந்தான்.
பைக் தெரு
அதிர ஒலி எழுப்பிக் கொண்டு
விரைந்தது. அவனது அம்மா
அவனைப் பத்தி அழாதகுறையாக புலம்பியிருந்தாள்.
“ஒருநல்ல
வேலைக்கு போகமாட்டேங்கிறான். வயது
முப்பதஞ்சாச்சு கல்யாணம் பண்ணினாலாவது வசப்படுவான்னு பார்த்தா ஒத்துக்க மாட்டேங்கிறான். கோயில் மாடாத்
திரியறான். வீட்டுக்கு ஒழுங்கா
நேரநேரத்துக்கு சாப்பிட வரமாட்டேங்கிறான். கேட்டா அங்க பஞ்சாயத்து இங்கக்கூட்டமுன்னு சொல்றான். ஒன்றுமே
புரியமாட்டேங்கிது. நீ எதாவது
புத்தி சொல்லிட்டுப் போப்பா!
நீங்க ரெண்டுபேரும் சின்னப்பிள்ளையிலிருந்து ஒன்னா பழகுறீங்க நீ சொன்ன கேட்பான்” என்று
கண்கள் கலங்கச் சொன்னதை
நினைத்தபடி மெல்ல அவனிடம்
பேச்சு கொடுத்தான் இவன்.
“வேகத்தைக்குறை, பேசிக்கிட்டே போவோம்.
“என்ன
ஜாப்புடா பார்க்கிற!”
“ஜாப்பா?” கெக்கலியிட்டு சிரித்தான்;. “என்னால
யாருகிட்டேயும் அடிமையாக வேலை
பார்க்கமுடியாது. சோசியல் வொர்க்
பன்றேன்!”
“சுய உதவிக்குழுவா?”
“அவனுங்க
வெளிநாட்டு நிதி வாங்கிறவங்கல்ல! நாங்க பன்றது ப்யூர்
சோசியல் சர்வீஸ்! நம்ம
நாட்டு பண்பாட்டு கலாச்சாரம் நம்பிக்கைகளை பாதுகாக்கிற அமைப்பு!”
“அப்போ
சாப்பாடு செலவுக்கு?”
“எங்க
அமைப்புக்கு வெல்விஷர்ஸ் நிறைய
பிக் ஸார்ட்ஸ் இருக்காங்க”.
“சரி,
இப்படியான வேலையை இந்த
சமுகம் மதிக்குமாடா?”
“இந்த
மாவட்டத்திலுள்ள பெரிய சாதிகள்
தலைவர்கள் எல்லாம் நம்ம
தோஸ்த்ங்க. அவங்க சாதிபிரச்சினை பஞ்சாயத்துக்கெல்லாம் நம்மலை கூப்பிடுவாங்க. நாங்க இருக்கும் போது
ஒரு பையலும் காதல்
கல்யாணம், கலப்பு கிலப்புன்னு பண்ண முடியாது. இந்தப்
பகுதி கோயில்கள்ள நடக்குற
எல்லா விசேஷங்களுக்கும் நமக்கு
சிறப்பு அழைப்பு வந்திடும்! இதுக்கு மேல என்ன மரியாதை, மதிப்பு வேண்டிகிடக்கு?” என்றபடியே திரும்பி பார்த்து சிரித்தான்.
இவனுக்கு பயம்
“முன்னால பார்த்துப் போப்பா!” என்று முதுகில் தட்டினான். முதுகில் வியர்வை சொதசொதத்தது காற்றை உள்ளே விட பின்
காலரை தூக்கிவிட்டான். சிறிய
வடம்போல ஒரு தங்கச்செயின் மினுமினுத்தது.
அவன் தொடர்ந்தான். “என்னுடைய நண்பர்கள் எல்லாம்
வருவாங்க. என்ன நடக்குதுன்னு பாரு! ரசி! தொணதொணன்னு கேள்வி கேட்காதே! என்றான்.
பைக் ஒரு டீக்கடை
முன் வேகம் குறைந்து நின்றது. ஏற்கனவே நாலு
பைக்குகளுடன் நின்றிருந்தவர்கள். வாங்க
ஜீ! வணக்கம் ஜீ!
டீ சாப்பிட்டு போலாமா ஜீ!
என்றார்கள். அவர்களும் அவனைப்
போலவே ஜீன்ஸ் பேண்ட்
சந்தனக்கலர் முழுக்கை சட்டை
அணிந்து, முழங்கைக்கு மேல்
சுருட்டி விட்டிருந்தனர். கழுத்து
நீண்டு இரட்டைவடமாய் தொங்கிய
மெல்லிய துண்டின் இருமுனைகள் முடிச்சிடப்பட்டிருந்தது. இடது கைகளில்
வெள்ளிக்காப்பும், வலதுகைகளில் சிகப்பு
கயறும் கட்டியிருந்தனர். நெஞ்சுக்கு மேல் இரண்டு பித்தான்கள் போடாமல் திறந்திருந்தன. கனத்த
தங்கச் சங்கிலியும் அதில்
ஒற்றை உத்திராட்சை கொட்டையும் கோர்த்து ஒளிர்ந்தது. அவர்களைப் பார்த்தபின்னரே இவன் அவனது
கழுத்தை கவனித்தான். கனத்த
சங்கிலியில் ஒற்றை உத்திராட்சை ஒளிர்ந்திருந்தது. அவர்கள் நெற்றியில் செந்தூரப்பொட்டு வேர்வையொடு கசிந்தபடி ரத்தமாய் மினுங்கியது.
“இந்த
வெயிலில் டீ எதற்கு? எல்லோருக்கும் மினி கோக் சொல்வோம்” என்று சொன்னவன் இவனைப் பார்த்தான். இவன்
“எனக்கு கோக் வேண்டாம். ஆரஞ்சு ஜுஸாவது, லெமன்
ஜுஸாவது சொல்லு” என்றான். இவன் பார்வையில் அவர்களது பேச்சு உடை, செயல்பாடுகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுத் தெரிந்தன. உருத்திராட்சை மனதில்
பதற்றம் குறையவும் அமைதியையும் ஏற்படுத்தவும் அணிவது வழக்கம். ஆனால் அவர்களைப் பார்த்தால் நெருப்பின் மீது ஓடிக்கொண்டிருப்பவர்கள் போல்த் தோன்றினார்கள். பானங்களைக்குடித்ததும் வண்டிகளைக் கிளப்பினார்கள். பைக்குகளின் உறுமல் எதோ போர்
முழக்கம் போல் தொனித்தது. ஒவ்வொரு பைக்கின் பின்னும் ஒருவர் தொற்றி இருந்தார்.
இவன் கேட்டான் “நாம இப்போ எங்கே
போறோம்?” என்ன செய்யப்போறோம்” என்று. அது இவனுக்குள் ஒரு பதற்றமும் பயமும்
இருந்ததை உணர்த்தியதை அவன்
உணர்ந்து கொண்டான். “ ஹேய்,
பயப்படாதேடா, இன்னிக்கு சனிக்கிழமை. அந்த காலேஜ்க்கு பக்கத்தில இருக்கிற பூங்காவுக்குப் போறோம். காதல்னு சொல்லிகிட்டு கடலை
போடற விடலைகளைப் பூராம்
விரட்டப்போறோம். நீ ஒன்னும் செய்ய
வேண்டாம். சும்மா வேடிக்கை மட்டும் பாரு! ரொம்பத்
திரில்லிங்கா இருக்கும்!”
“ஏன்டா
ஏதோ சோஸியல் வொர்க்ன்னு சொன்னே?...”
“சாதி
மாறி, மதம் மாறி
காதல்னு இவங்க அடிக்கிற கூத்துகளை எல்லாம் தடுக்கிறது சோஸியல் வொர்க் இல்லையா? சரி தொணதொணன்னு கம்யூனிஸ்ட்காரன் மாதிரி கேள்வி கேட்காம
வேடிக்கை பார்த்துகிட்டே வா” என்று அவன்
கடுப்படித்தான்.
அவனது பள்ளிப்பருவக் குறும்புகள் நினைவுக்கு வந்தன. பள்ளிக்கூடத்திற்குப் போகும் போதோ,
வீட்டிற்கு திரும்ப வரும்போதோ நாய்கள் ஒன்றோடு ஒன்று
இணைவதைப்பார்த்தால் கல் எடுத்து எறிந்து
ஓட ஓட விரட்டுவான். அவை கூடுகையிருந்து உடனே
பிரியமுடியாமல் அந்தத் திசைக்கும் இந்தத் திசைக்கும் இழுபட்டு கதறுவதைப் பார்த்து சிரிப்பான். இந்நிகழ்ச்சி சிரிப்பை ஏற்படுத்துவது போல் இருந்தாலும் அவற்றின் கதறல் அனுதாபத்தைத் தருவிக்கும். இப்படியே மாடுகள் ஒன்றோடு
ஒன்று கூடுவதைக் கண்டாலும் கல்லெறிவான். அவை பிரிய முடியாமல் தடுமாறி விழுந்து எழுவதைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பான்;. இதற்கும் கூட்டாக இரண்டு
சேக்காளிகள் அவனுக்கு உண்டு. தெருநாய்கள் அவனைப் பார்த்தாலே உர்ரென்று முனங்கியபடி ஒதுங்கிச் செல்லும்.அவன் மகிழ்ச்சியில் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வான்
கல்லடி தாங்காமல் இணைபிரிந்து அங்கிட்டு இங்கிட்டுமாக அலறி ஓடும் நாய்களாலும், மாடுகளாலும் தெருவில் போகும்
சைக்கிள் காரங்களும் நடைவாசிகளும் விபத்தில் சிக்குவதும் உண்டு. அவனைப்பற்றி தலைமை ஆசிரியருக்கும், அவனது அப்பாவுக்கும் புகார்
போய்க் கொண்டே இருக்கும். அவனது அப்பா அடித்து
துவைத்து விடுவார். தலைமை
ஆசிரியர் விதவிதமான தண்டனை
கொடுத்துப் பார்த்தார். பயனில்லை. பள்ளியிலிருந்து நீக்க, மாற்றுச்சான்று வந்து வாங்கிப் போகுமாறு அவனது அப்பாவுக்குத் தகவல்
போனது. அவனது அப்பாவும், அம்மாவும் தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று காலில்
விழாதகுறையாகக் கெஞ்சி எப்படியாவது பன்னிரண்டாம்வகுப்பு வரை இழுத்து தேற்றிவிடுங்க. கண்ணையும், காதையும் விட்டுட்டு அடிச்சுத் தோலை உறிங்க
சார். நாங்க ஒன்னும்
சொல்ல மாட்டோம். விவசாயம் இல்லாம கூலிவேலை செய்யுற
குடும்பம். படிப்பு இல்லைன்னா கரையேற வழியில்லை. உங்களுக்குத் தெரியாததில்லை. விடலைக்குறும்பு ஒரு கட்டத்தில மாறிடும் என்று செஞ்சி
கண்ணீர் வடித்தார்கள். படிப்பில் அவன் மோசமில்லை. தட்டுதடுமாறி பாஸ் பண்ணிவிடுவான். வீட்டுப்பாடங்களை ஒன்னுக்குப் பாதியா அரைகுரையா செஞ்சிடுவான். தலைமைஆசிரியர் வகுப்பாசிரியர்களிடம் கலந்து கொஞ்சம்
கருணை காட்டினார்.
பத்தாம் வகுப்பு
படிக்கும் போது தீபாவளி
சமயம்; வெள்ளாவி பொதி
சுமந்து வந்து கொண்டிருந்த கழுதைகள் வாலில் பட்டாசு
சரத்தைக் கட்டிவிட்டு தீயைப்
பற்றவைத்து விட்டான். பட்டாசு
வெடிச்சு கழுதைகள் இரண்டும் பயந்து தடுமாறி சாக்கடைப் பள்ளத்துக்குள் விழுந்தன. வெள்ளாவியில் சூடேறிய துணி மூடைகளில் தீக்கங்குகள் விழுந்து துணிகள்
பொசுங்கி கருகின. துணிக்காரர்கள் சலவைத் தொழிலாளியை நெருக்கினர். அவர் அவர்களை அழைத்து
சென்று அருகிலிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார் அவனையும், பெற்றொரையும் அழைத்து விசாரித்தனர். பதினைந்து வயசுபையன் விபரமறியாத விளையாட்டுப் போக்கில் செய்துவிட்டான் என்று கடுமையாக எச்சரித்து ஆயிரம்ரூபாய் அபராதம் கட்டச்செய்தனர். தலைமையாசிரியரும், அவனுடன் பெற்றோர் தினமும் வந்து பள்ளியில் விட்டும் போகும் போது
அழைத்தும் செல்வதாக இருந்தால் அவன் படிக்கட்டும். இல்லாவிடில் விலகிக் கொள்ளட்டும் என்றார்.
“நான்
வயிற்றுபாட்டை பார்க்கட்டுமா அவனுக்கு காவலுக்குப் போகட்டுமா! வீட்டுக்கு அடங்காதபிள்ளை ஊரில் மிதிபட்டு, அடிபட்டு, திருந்தி வந்தால்
வரட்டும், இல்லைன்னா எப்படியோ போகட்டும்” என்று
அவனது அப்பா சொல்லி
விட்டார். அவனது அம்மா
தான் அனுதினமும் அவனை
பள்ளிக்கு அழைத்து வந்துவிடும். திரும்ப அழைத்துச் செல்லும். இச்சம்பவத்திலிருந்து அவனேடு சேர்ந்து சேட்டைசெய்யும் சேக்காளிகள் இருவரும் அவனிடம் சேருவதில்லை. இவன்
வீட்டிற்கு மூணாவது வீட்டில்தான் அவர்கள் அப்போது குடியிருந்தார்கள். இவனது பெற்றொர் கண்டிப்பால் இவனும் அவனோடு வெளியே
பேசுவதில்லை. வகுப்பறைக்குள் மட்டுமே
பேசிக்கொள்வார்கள். பனிரெண்டாம் வகுப்பு
முடித்து இவனும் நண்பர்களும் கல்லூரிக்குப் போனர்கள். அவன்
ஆங்கிலத்தில் பெயிலாகிவிட்டான். அப்புறம் இவர்களது வாழ்க்கை சூழல்
மாறிப் போனது. படிப்பு
வேலை கல்யாணம் என்று
இவன் ஊர் பெயர்ந்தான். வருஷத்துக்கொருமுறை வருவான். அவனை பார்த்து பேசுவான். அவனது அப்பா
இறந்து விட்டார். அவர்கள்
வீட்டை விற்றுவிட்டு மூன்றாவது தெருவிலுள்ள ஒரு சிறிய வீட்டிற்கு குடிபோனார்கள். அவனது பழைய
சேக்காளிகள் பல ஊர்களில் அரசு
வேலையில் அமர்ந்துவிட்டார்கள்.
அரசு வள்ளுவர் பூங்கா முன் நிறுத்தினார்கள். இவனும் நிகழ்காலத்தில் இறங்கினான். இந்த பூங்காவுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் வந்தது. இப்போ
பார்க்கும் போது ஏதோ பசுமை
சூழ்ந்த புதுவுலகத்துள் நுழைவது
போலிருந்தது. நுழைவுக்கட்டணம் செலுத்தாமல் அவர்கள் திபுதிபுவென்று நுழைந்தார்கள். இவனுக்கு உறுத்தலாக இருந்தது. நுழைவு சீட்டு விற்பவர் அவர்களைப் பார்த்து முனங்கினார். இவன் அவர்களுக்கும் சேர்த்து பத்து டிக்கட்கள் வாங்கினான. நுழைவு சீட்டு விற்பவர் சொன்னார். “ சார் இவங்களை
கொஞ்சம் சொல்லி வைங்கள்
வாராவாரம் பூங்கவுக்கு வந்து
அலைப்பறை பண்றாங்க. போலீசு
கேசுன்னு போனா சங்கடம்னு பார்க்கிறோம். “இவன் மௌனமாக
தலையசைத்து சென்றான். அந்த
நகர்ப்புற விரிவாக்கத்தைச் சுற்றி
மூன்று பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலைக்கல்லூரிகள், ஐந்தாறு
மேநிலைப் பள்ளிகள் இருந்தன. பகல்பொழுது இறுக்கத்தை விடுவிக்க குழந்தைகள், இளையவர்கள், முதிர்ந்தவர் என பல தரப்பட்டவர்கள் வருவர். விளையாட, நடைபயிற்சி செய்ய பறவைகளைப் பார்க்க என பல வெளிப்பாடுகள் இருந்தன. அவன் இவனை
சைகை செய்து பின்
தொடர்ந்து வரச் சொன்னான். இவன் “முன்னே போங்க
வருகிறேன்” என்று
சைகையில் சொன்னான்.
பூங்கா சுற்றுச்சுவரை ஒட்டி வேம்பு, பூங்கொன்றை, பன்னீர்ப்பூ, வாகை மரங்கள்
நின்றன. பூங்கொன்றை மஞ்சள்
பூக்களை பொன் மலர்களை
பச்சைப் புல் கம்பளத்தில் பரப்பி நின்றன. பன்னீர்
பூக்களின் காம்புகளை எடுத்து
சிறுமிகள் குழல் ஊதினர். செம்மஞ்சள் நிறத்தில் பூத்த
வாகை மரங்கள் பெரும்பூங்கொத்துகளாக நின்றன. தங்கஅரளியும், செவ்வரளியும் செம்பருத்தியும் பசுமை பின்னணியில் வர்ணஜாலம் செய்தன. சவுக்கு
செடிகளில் யானை, மயில், ஒட்டகச்சிவிங்கி காளை போன்ற
உருவங்களை வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன. குரோட்டன்ஸ் செடிகள்
பல வண்ணங்களில் வட்டம், சதுரம், முக்கோணம், இந்திய வரைபடம்
என வடிவமைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் வேற்றுலகில் நுழைந்தது போலிருந்தது. பல வடிவ வண்ண விளக்கு
அலங்காரங்கள் இரவில் எரியும்
போது பார்த்தால் மெய்சிலிர்க்கச் செய்யும். நீரூற்று நுரை
பொங்கி பொங்கி காற்றையும் பார்ப்பவரையும் குளுமைப்படுத்திடும்.
அவனும் சேக்காளிகளும் சவுக்கு அலங்கார புதர்கள் பக்கம் யாரையோ தேடினர். யானைப் புதரின் பின்புறம் இரு இளம்ஜோடிகள் மெய்
மறந்திருந்தனர். அவர்களிள் ஆணைப்
பிடித்து எதோ அவன் சொன்னான். அந்தப் பெண் கழுத்திலுள்ள தாலியைக்காட்டினாள். ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். இளம்ஜோடிகள் அதிர்ச்சியுற்று அந்த இடத்தைவிட்டு அகன்றது. இன்னோர் புதரருகே இருவரை
பிடித்து உலுக்கினர். யார்,
என்ன சாதி எந்த
ஊர், என்ன உறவு
என்ன படிக்கிறீங்க என்ற
கேள்விகளில் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்கள். அவர்களிகுவரை பூங்காவுக்குள் இனி வரக் கூடாது. இருவரையும் ஒருசேரப் பார்த்தால் அவ்வளவுதான் என்று மிரட்டினார்கள். இந்த களேபரம் பூங்காவிற்குள் தீப்பற்றியதுபோல படர்ந்தது. பல இணைகள்
பதைபதைத்து தனித்தனியே வெளியேறினர். அஞ்சி ஓடும் இருவர்
வேற்று மதம் சார்த்தவர் போல் தோன்ற அவர்களை
மடக்கி பிடித்து மிரட்டினர். குருவிகளைப்போல, அணில்களைப் போல குதூகலித்து ஓடிவிளையாடிய குழந்தைகள் சிறுவர்கள் அதிர்ந்துபோய் நின்றனர். நடைபயிற்சியில் இருந்த முதியவர்கள் ஸ்தம்பித்து உறைந்தனர். இவனுக்கு மனசு
வலித்தது. அவனிடம் சொல்லாமல் கிளம்பிவிடலாமா என்று நினைவு
ஓடியது. அவனது வண்டிச்சாவி இவனிடம் இருந்தது. கொடுக்காமல் போகமுடியாது என்று அவர்களைத் தேடிப்போனான்.
இன்னொரு புறத்தில் மயில்கள், வான்கோழிகள்,கினிக்கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதல்பறவைகள், புறாக்கள், பல இனக் குருவிகள், குரங்குகள், கரடிகள், மான்கள்
என கூண்டுகளில் இருந்தன. அவற்றை
குழந்தைகள் சிறுவர்கள் உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்தனர். குழந்தைகளின் குதூகலத்தில் பெற்றோர்கள் தம்மைக்கரைத்து இலகுவாகி நின்றார்கள்.
இவன் அங்கிருந்த காவலாளியிடம் கேட்டான். “மயில்களை, வான்கோழிகளை, கினிக்கோழிகளை ஏன் கூண்டுகளில் அடைக்காமல் வெளியே மேய விட்டுவிட்டார்கள்”
“இங்கே
புல், புதர், மரம்
செடி கொடிகள் அடர்ந்து இருக்கின்றன. பக்கத்தில் காடு
இருக்கிறது. அதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம். இக்கோழி
வகைகள் பாம்பைக் கண்டால்
கொத்திக் கொன்றுவிடும். இக்கோழிகளின் வாசம் உணர்ந்து பாம்புகள் வருவதில்லை. பாம்புகள் வாசம்
உணர்ந்தால் இக்கோழிகளும் விடுவதிலலை. அன்று அவைகளுக்கு நல்ல
வேட்டைதான். இந்த சண்டையை
பார்ப்பதே ஒரு சாகசமாக இருக்கும்”.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மயில்களும், வான்
கோழிகளும் அவற்றின் பின்னால் கினிக்கோழிகளும் வினோதமாய் ஒலி எழுப்பியபடி விரைந்தன. காவலாளி சொன்னார். “பாம்பு வாசம் மோப்பம்
புடிச்சிருச்சுப்போல என்ன வேகமாகப் போகுது பாருங்க! நீங்க
மெல்ல அதுக பின்னால
போங்க, நானும் வர்றேன். அதுக சண்டையை இன்னிக்குப் பார்ப்போம்!”
இவனுக்கு ஆர்வம்
கூடியது. தலையை விடைத்து விடைத்து அங்கிட்டும் இங்கிட்டும் கழுத்தை திருப்பி ப்யாங்..ப்யாங்…என்று
அகவி மயில்கள் வேகமாய்
நடப்பதும், தலையை ஆட்டி
ஆட்டி க்கொஞ்…க்கொஞ்ச்.என்று குரலெழுப்பி வான்கோழி பகட்டாய் நகர்வதும் மூக்கை
நிலம் நோக்கி நுகர்ந்தபடி கினிக்கோழிகள் நகர்வதும் பார்க்க
விந்தையாக இருந்தன. இவன்
அவர்களைப் பார்வையால் தேடியபடி பின் தொடர்ந்தான். அந்திவானம் செம்மஞ்சளாய் ஒளிர்ந்து அந்த
பச்சை வெளிக்கு அழகூட்டிக் கொண்டிருந்தது. துப்பட்டாவால் முகத்தை
மூடியிருந்த இரு இளம்பெண்கள் பதறி
வெளியேறினர். அவர்கள் சுற்றுச்சுவரை ஒட்டிய சவுக்குப் புதர்ச்
செடிகளுக்குப் பின்னால் தேடி
அலைந்தனர். இவன் இப்பறைவைகளின் பின்னால் மெல்ல பம்மி
பம்மித் தொடர்ந்தான். மயில்கள் சர்சர்ரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அம்புபோல பறந்து சுற்றுச்சுவரில் தொற்றி நின்றன. பூங்காவின் வடகிழக்கு மூலையில் புல்
அடர்ந்த பகுதியை நோக்கின. வான்கோழிகளும் ஒரே உந்துதலில் பறக்க
இயலவில்லை. அவை கிழக்கு நோக்கி
சிறுசிறு தாவலில் ஓடின.
இவன் எப்படி
போவது என்று விழித்தபடி சுற்றி பார்வையை சுழலவிட்டான். ஜனங்கள் பரபரப்பாக வடகிழக்கு பக்கமாக விரைந்தனர். எதோ விபரீதம் நடந்திருக்கும் போலிருக்கிறது. பூங்காவில் பரபரப்பு தொற்றிப் படர்ந்தது. அவர்களோடு வந்த இவனும்
பிரச்சினையில் சிக்கிக் கொள்வானோ என்ற அச்சம் மனதில்
தோன்றியது. இவன் எந்த
உணர்வையும் வெளிப்படுத்தாமல் சாதாரண
பார்வையாளரைப் போலக் கூட்டத்தை நோக்கி விரைந்தான். கூட்டத்தை ஊடுறுவி உள்ளே நுழைந்தான். கூட்டத்தினர் அச்சமும், ஆச்சரியமும் முகத்தில் வெளிப்பட பார்த்துக்கொண்டிருந்தனர். இவனும் பார்வையை கூர்மைப் படுத்தி புல்வெளியைப் பார்த்தான்.
இரு பாம்புகள் ஒன்றின் உடலோடு ஒன்று
பின்னிப் புணர்ந்து ஆடிக்கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று தழுவுவதும், விலகுவதும், சீறி சீறி
கொஞ்சுவதும் கீழே விழுவதும், எழுவதும், மீண்டும் பின்னிப் புணர்ந்து விழுவதுமாக சளைக்காத சல்லாப விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. இவன் கேட்டான் “அதுக என்ன பாம்புக?” ஒருவர் சொன்னார் “ சாரைப்பாம்புகள்”. ஒரு வயதானவர் சொன்னார் அதோ பச்சையும் மஞ்சளுமாய் ஒல்லியான தலையுடன் உள்ளது
சாரைப்பாம்பு. வெள்ளையும் கோதுமைநிறமும் படத்துடன் பெரிய தலையுள்ளது நாகப் பாம்பு” இவன்
கேட்டான்” பாம்புக
இனம் விட்டு இனம்
கூடுமா?” “அது என்ன மனுஷனா
சாதியைக் கட்டி அழுக!”
என்றார் காவலாளி.
காவலாளியைப் பார்த்ததும் இவனுக்கு அறிந்த முகம்
என்பதால் உற்சாகம் எழுந்தது. “எங்கே மயில்களைக் காணோம். இப்போ பாம்பை விரட்டாதா? என்றான்.
மயில்களும், வான்கோழிகளும் சுற்றுச்சுவரில் நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றன. கினிக்கோழிகள் சத்தம் கேட்டன. கண்ணில்
படவில்லை.
காவலர் சொன்னார். “பாம்புகள் எதிரிகளாக இருந்தாலும் புணையலில் இருக்கும் போது
அவற்றை தொல்லை கொடுக்காது. பாம்புகள் புணையலில் இருக்கும்போது மயில்கள் வாசனையை அவையும்
பொருட்படுத்தாது. பாம்புகளின் புணையல்
வாசனையில் மயில்களும் சொக்கி
நிற்குமே தவிர அவற்றை
தாக்கவோ, சண்டையிடவோ செய்யாது. வான்கோழிகளும் அப்படித்தான்!”
“மனிதன்தான் தட்டுகெட்டுத் திரிகிறான். அடுத்தவர் இன்பத்தை கெடுப்பதில் இன்பம்
காண்கிறான்” என்ற
எண்ணம் இவனுக்குள் தோன்றிய
கணம், அவர்களைத் தேடினான்.
அவர்கள் பாம்பின் புணையலைப் பார்த்து பூரித்து நின்றனர். இவன் அவனருகில் போனான். அவன் அவனது
தலையில் வெயிலுக்காகவும், புழுதிக்காகவும் மூக்கை மூடி சுற்றிய
வெள்ளைத் துண்டை அவிழ்த்து விரித்து உதறினான். இவன்
என்னவென்று பார்வையால் கேட்டான்;.
“நல்லபாம்பும் சாரைப்பாம்பும் புணையலில் இருக்கும் போது வெளிவரும் திரவம்
பட்டதுணி வீட்டில் இருந்தால் விஷஜந்துக்கள் அண்டாது. ராஜயோகம் கூடிவரும்” என்றபடி
பாம்புகளை நோக்கிப் போனான்.
மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்த பாம்புகள் மீது துண்டை
வீசினான். சுற்றி நின்றவர்கள் எல்லாம் பயத்தில் அவனைத்
திட்டிக்கொண்டே பின் நகர்ந்தனர். துண்டு மேலே பட்டதும் பாம்புகள் சீறிக் குதித்தன. கூட்டம் மிரண்டு ஓடத்
தொடங்கியது.
No comments:
Post a Comment