Monday, 26 November 2018

காரணம் அறிகிலார்


காரணம் அறிகிலார்
                                                                                                                -               ஜனநேசன்

அவன் குடிசைக்கு வெளியே வந்து பார்த்தான். வானம் சாம்பல் பூத்துக் கிடந்தது. மழை கைவிட்டுப்போன கார்த்திகை மாதம் அதிகாலை வறப்பனி நடுக்கியது. பக்கத்தில் கோழிகள் ஏதுமில்லை கூவல் சத்தம் கேட்க. கிழக்கில் பொழுது தென்படவில்லை தூரத்தில் எங்கோ ‘விநாயகனே வினை தீர்ப்பவனேன்’னு பாட்டுச் சத்தம் கேட்டது. மணி அஞ்சு அஞ்சரை இருக்கலாம். டப்பாவில் இருந்த செங்கல்பொடியை எடுத்து பல்தேய்த்து முகம் கருவினான். பிளாஸ்டிக்குடத்தில் ஒரு செம்பு தண்ணீர் முகந்து மடக்மடக்கென்று குடித்தான் சத்தம் கேட்டு தலைதூக்கிப் பார்த்து, மனைவி மீண்டும் படுத்துக் கொண்டாள். மகள் உடலை சுருக்கி படுத்திருந்தாள். இரண்டு பிளாஸ்டிக் சாக்குகளை மடக்கி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
தெரு நாய்கள் உடலை முடக்கி படுத்துக்கிடந்தன. அவன் கடந்து போகும் போது மூக்கை விடைத்து உர்ரென்று முனங்கி படுத்துக் கொண்டன. துண்டால் காதுகளை இறுக்கிக்கட்டிக் கொண்டான். ஒடிந்த இடுப்பை இன்னும் முன் வளைத்து இருகைளை நெஞ்சில் இறுக்கமாக பொத்திக் கொண்டு மெல்ல மெல்ல தெருவில் நடந்தான்.
‘மனைவியிடம் சொல்லவில்லையே’ என்று கேள்வி எழுந்தது. ‘என்னத்த சொல்ல…. காலையில வேலைக்காப் போறோம்? ஆறடி ஆம்பளை கட்டட சாரத்திலிருந்து விழுந்து இடிப்பு ஒடிந்து அஞ்சடியாய் உள் வளைந்து எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல் நடைபிணமாத் திரியறோம். சோத்துக்காகத் தெருப்பொறுக்கப் போறேன்னா சொல்ல முடியும்?
போன ரெண்டு வாரமா பொண்டாட்டி பிள்ளைக வேலை பார்த்த கூலி வரலை. நடப்பு வாரத்தில் அஞ்சு நாளா வேலையும் இல்லை. காண்ட்ராக்ட்காரருக்கு பணம் வரலையாம். பணமுடக்கம். அவரு பார்க்கிற மூணு கட்டடங்களும் அப்படியப்படியே பாதியிலே நிக்கிதாம். அவரோட கட்டட வேலை நடக்கும் போதுதான் கட்டட சாரத்திலிருந்து கீழ விழுந்து இடுப்பு எலும்பு விலகிப் போச்சு. காண்ட்ராகாரருதான் ஐயாயிரம் ஆறாயிரம் வரை செலவு செஞ்சு நடக்க வச்சாரு. அவர் பாக்கிற கட்டடங்களில் எனக்கு வாட்சுமேன் வேலை போட்டுக் கொடுத்தாரு. மாசம் மூவாயிரம் சம்பளம்! கட்டத்துக்காரங்க பெரிய கோடீஸ்வரனாம். ஒரு நஷ்ட ஈடு, வைத்தியசெலவு அது இதுன்னு எதுவும் கொடுக்கலை. தொழிலாளர் இன்சுரன்ஸ்ன்னு இழப்பீடுன்னு சொல்றாங்க எதுவும் கிடைக்கல. ரேஷன் கார்டு கூட இல்லை. ஆனா வோட்டு போடற அடையாள அட்டை மட்டும் கொடுத்திடறாங்க. அத வச்சுதான் ஓட்டு போடறோம். போன எலக்ஷன்ல தலைக்கு மூன்னூறு ரூவா குடுத்தாங்க. அந்த அட்டையக் கூட காண்ட்ராக்டர்கிட்டதான் பத்திரமா இருக்கு”.
“என்ன பெரிசு இந்தநேரத்தில் எங்கிட்டு கிளம்பிட்டே…” என்றபடி கொத்தனார் குமார் டீவிஎஸ்பிப்டியில் வேகமாகக் கடந்து போனார். விடியக்காலையில எழுந்திருச்சு குளிச்சிட்டு கோயிலுக்கு போராரு. அவரு ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டாவது வருஷமா மாலை போட்டு போறாராம். அவரும் என்னைப் போலத்தான் கடனும் கப்பியுமா காலம் பூராம் அலையறார். ஆனா சோக்குகாரரு எல்லாப்பழக்கமும் இருக்கு. அதோடதான் கோவிலுக்கு மாலையும் போட்டுகிறாரு. நம்மால அப்படியும் இருக்க முடியலை. இப்படியும் இருக்க முடியலை!.
காலையில வெறும் வயித்தில ஒரு செம்பு தண்ணி குடிச்சது. ஏப்பமா எதுக்கலிக்குது. ரசாயணக் கவிச்சிவீசுது. காறி துப்பவும் முடியலை. குளிருக்கு நாக்கு ஒட்டிகிச்சு. காதெல்லாம் குத்துது, குடையுது, மூக்கு வழியுது. வாய் திறந்தா ஆவி பரியுது. எப்பிடித்தான் காதை இறுக்கிக் கட்டினாலும் இத்துப்போன துண்டு குளிரை தாக்கு பிடிக்க முடியலை. சூடா டீ குடிச்சா நல்லா இருக்கும் பாக்கட்டை தடவி பார்த்தான். மூன்று இரண்டு ரூபாய் காசுகள் இருந்தன. அதை எடுத்துப் பார்த்தான். மூன்று ரெண்டு ரூபாய் காசுகள் தான்! ஒருரூபாய் காசும்  ரெண்டுரூபாய் காசும் ஒரே அளவில் ஒரே கனத்தில் இருக்கு. வித்தியாசம் தெரியலை. நம்ம குடிக்கப் போறது அஞ்சுரூபாய்க்கு கடுங்காப்பிதான். இருத்தாலும் டீக்கடைக்காரன் கிட்ட காலையில வம்புதும்பு வந்திறக் கூடாதில்ல. ஆத்திரம் அவசரத்துக்கு கடன் சொல்லி குடிச்சுக்கலாம்னு அந்த முகனைக் கடைக்குத்தான் வழக்கமா போறது. அங்கு எக்கு தப்பு ஆகி நாணயத்தைக் கெடுத்துறக்கூடாதில்ல!. ஆமாம்! நல்ல வேளை மூணும் ரெண்டுரூபாய் காசுகாதாம்.
காசைத் துளாவியதில் இடுப்பில் செருகியிருந்த சாக்குமடிப்பு கீழே விழுந்தது. ஒரு முனகலோடு குனிந்து எடுத்தான். இதுதான் இன்னிக்கு தொழில்கருவி. இதுவும் இல்லாட்டினா இடுப்பு வேட்டியிலா பொறுக்கிறது?.
‘….ம் ஹ் ஹ்’ சிரிப்பு வந்தது ஆதியிலும் பொறுக்கி இல்லை. மீதியிலும் பொறுக்கி இல்லை. பாதியில பொறுக்கி ஆயிட்டேன்! என்ன…. சின்னபிள்ளையில பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுட்டு, அறுவடை முடிஞ்ச கடலைக்காட்டில் தப்புகடலை தவறின கடலை பொறுக்கி ட்ரவுசர் பாக்கட்டுகளிலும் சட்டை பாக்கட்டிலும் போட்டுகிட்டு ஆசைதீற தின்னதுபோக மீதிக் கடலைகளை கடையில் கொடுத்து அச்சு வெல்லம் பொட்டுக்கடலை வாங்கித் தின்னுருக்கேன். பருத்திகாட்டில தப்பின பருத்தி எடுத்து கடையில கொடுத்து மிட்டாய், ரொட்டிக வாங்கி சாப்பிட்டிருக்கேன். அப்ப விளையாட்டா பொறுக்கினது. இப்ப பொறுக்குகிற வாழ்க்கையா போச்சு. ஊர்ல விவசாயம் அழியாது இருந்திருந்தா இப்படி டவுன் பக்கம் வந்து சீரழிவோமா, செங்கல் சுமந்து, சுண்ணாம்பு சுமந்து கை வெந்து, உடல் நொந்து மண்ணா போயிருப்போமா, இடுப்புதான் ஒடிந்திருக்குமா, இடுப்புதான் ஒடியலைன்னா இப்படி பொண்டாட்டிக்குத் தெரிஞ்சும் தெரியாம தெருத்தெருவா குப்பை பொறுக்கி வீட்டுக்கு காசு கொடுத்து வயித்தை கழுவும் கதியிருக்குமா? ஆறடி உயரத்தில் நிமிர்ந்து விறைப்பா வீராப்பா திரிஞ்சேன். பொடு பொடுன்னு வேலை பார்த்து நல்ல பேரு வாங்கி ஊருகண்ணுல வாயில விழுந்தேனே….
கசமுசன்னு பேச்சு சத்தம் கேட்டது. நின்று நிமிர்ந்தான். பேங்கு பணமெடுக்கிறரூம் முன்னால மொது மொதுன்னு ஆளுக நின்னு பேசிக்கிட்ருந்தாங்க. அங்கே பார்த்தால் பேங் ரூம் முன்னால பேப்பர்சுருட்டல் மீது கல் வைத்தும் செருப்பும், கண்ணாடிக் கூடும் டீக்கப்புன்னும் வரிசையா வச்சிருந்தாங்க. வாச்சுமேனை சுத்தி கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாங்க. “பணம் எப்ப வைப்பாங்க, நேற்று ராத்திரி வைக்கவேண்டியது வைக்கலையா? அடுத்த தெருவில பணவண்டி வச்சிட்டு போனதாக சொல்றாங்க….” இப்படி நிறைய கேள்விகள்! வாட்சுமேன் திணறி திண்டாடி நிக்கிறார். இந்த காலை குளிர்ல இம்புட்டு கூட்டமா? பூராம் பொத்திகிட்டும், நடுங்கிட்டும், போன்ல பேசிகிட்டும்… நியுஸ் கேட்டுகிட்டும் ஆணும் பொண்ணும் நிம்மதியில்லாம நின்னு கிட்டிருந்தாங்க.
அவனுக்கு ஒன்று புரியவில்லை. புதிராக புதிதாக இருந்தது. ரேஷன் கடையில தானே வரிசை நிற்கும் . அடையாள சாமான்போட்டு கடை திறக்கும் முன்னே வரிசையில் காத்திருப்பாங்க. வெயில் காலத்தில குழாயடியில் தண்ணி வண்டிக்காக குடங்களை வரிசையாகவைத்து காத்திருப்பார்கள்? இப்ப என்னடான்னா பேங்க் பணமெடுக்கிற ரூம் முன்னால பளபளப்பா, படிச்ச முகங்களாக, ஆணும் பொண்ணுமா வயசானவங்களுமா காத்துகிட்டு இருக்காங்க. இது அரிசி பஞ்சகாலமும் இல்ல. தண்ணிப் பஞ்சகாலமும் இல்ல. பணம் பஞ்சமா இது? பேங் கணக்கில பணம் இருப்பு வச்சவர் கையிலும் பணம் இல்லை! வேலை செஞ்சவனுக்கும் கைக்கு பணம் வரலை! இது என்ன கஷ்ட காலம்? உலகம் எங்கிட்டு போகுது? நாமதான் இப்படி தெருவுல நின்னு நாறுரோம்னா, சமூகத்தில் பளபளப்பும் பகட்டுமுள்ள ஆளுகளும், அரசாங்க வேலைக்காரருகளும் இல்ல இப்படி நடுத்தெருவுல நின்னு புலம்புறாங்க.
எங்களையும் பேங்கணக்கு ஆரம்பிங்கன்னு தொழிலாளிகள் நல வாரியத்திலிருந்து சொன்னாங்க. நிறைய சலுகை எல்லாம் கிடைக்குன்னாங்க. தேர்தல் நேரத்தில ஒவ்வொருத்தர் கணக்கிலும் இலட்சக்கணக்கில பணம் போடுறதாகச் சொன்னாங்க இரண்டு நாள் வேலையை கெடுத்துகிட்டு பேங்கிலயே காத்துக்கிடந்து கணக்கு ஆரம்பிச்சோம். பாஸ்புத்தகமெல்லாம் குடுத்தாங்க அதுவும் காண்ட்ராக்ட் காரர் கிட்டத்தான் இருக்கு. இரண்டு வருஷமாச்சு. கிணத்தில போட்டக் கல்லாட்டம் கிடக்கு. இந்த சமயத்தில்தான் கீழ விழுந்து இடுப்பு ஒடிச்சுகிட்டேன். அந்த பேங் கணக்கு விவரம் எல்லாம் இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் ஞாபகத்க்கு வருது. அன்றாடம் பேங் வரவு செலவு செய்றவங்களுக்கே இந்தப்பாடுன்னா நமக்கு எம்புட்டுப் பாடோ? ஆனா நமக்குத்தான் கணக்கில பணமும் இல்ல, பணமெடுக்கிற கார்டும் இல்லையே! பாஸ்புக்கும் கையில இல்லையே…!.
ஒருத்தர் சைக்கிளில் டீக்கேணை வைத்துக் கொண்டு “டீ …டீ” என்று  விற்றுக்கொண்டிருந்தார். பொழுது முகம் காட்டத் தொடங்கியிருந்தது. விலகி ஓடும்பனி உடம்பை உரசிக் கொண்டு போனது. உடல் நடுங்கியது. அவனுக்கும் டீ குடிக்கணும்னு ஆசை. ‘டீ குடிக்கலாம்னா ஆறு ரூபாய் தானே இருக்கு. அவரு பத்துரூபா இல்ல சொல்றாரு’ என்று நினைத்தபடி அருகில் போனான்.
“டீ வேணுமா” என்றார் அவர். “இல்லை என்னிடம் சில்லரை இல்லை. ஆமாம் இத்தனை பேரு இருக்கிறாங்கல்ல. அவங்க டீ சாப்பிட்டிருப்பாங்கல்ல!.
“அட, நீ ஒன்னு. அவங்க ஒவ்வொருத்தரும் நூறு ரூபாய் நோட்டை நீட்டி டீ கேட்கிறாங்க. என்கிட்ட இருக்கிறது. நாலு பத்துரூபாய் நோட்டுகள் தாம். பத்து பேர் சேர்ந்து வாங்கி குடிங்கன்னா மொகத்தை திருப்பிக்கிறாங்க!”
அவன் சிரித்துக் கொண்டே கூட்டத்தை கடந்து போனான். அடுத்த தெரு முக்கத்தில் உள்ள டீ கடைக்குப் போனான். சீஸனுக்குகேற்றபடி ஐயப்பன் பத்தி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. “என்ன மாஸ்ட்டர் டீ பட்டறையில் நிற்காமல் வெளியே பார்த்துகிட்டு நிற்கிறீங்க!”
“பால்க்காரம்மா பால் கொண்டு வர்றேனுட்டு போச்சு, இன்னும் ஆளைக் காணோம்!”
“பாவம், அந்தம்மாவுக்கு என்ன பிரச்சினையோ…” என்றான் அவன்.
“அந்தம்மா நாலுமணிக்கு எந்திரிச்சு வந்து பேங் வாசல்ல இடம் போட்டுட்டு இப்பத்தான் அரை மணிக்கு முன்னால சொல்லிட்டுப் போச்சு! எல்லாப்பிரச்சினையும் வெள்ளையப்பன்ல தான் இருக்கு”
“ஆமாம் மாஸ்டர் பேங்பணம் எடுக்கிற ரூம் முன்னால இமைக்க முடியாத கூட்டம். அங்க கூட ஒருத்தர் டீ கேண் வச்சு டீ வித்துகிட்டுருந்தார். நான் நம்ம பழக்கத்தை விட்றக்கூடாதுன்னு நேரா இங்க வந்துட்டேன்”.
“அப்படியா, அவன் பழைய பாக்கட் பால்ல போட்டு வச்சிருப்பான். வெறும் சக்கரைத்தண்ணியா குடுப்பான். அவன்கிட்டதான் மூச்சுவிடாம குடிப்பானுங்க. நம்மகிட்ட பால் காயலம்பான். திக்கா இருக்கணும்பான். ஸ்ட்ராங்க இருக்கணும்பான். ஆடை போடனும்பான். அரை சக்கரை போடும்பான். ருசிருசியா கேட்பானுக. பத்துரூவா குடுக்க அழுவானுக” என்று டீ கடைக்காரர் பிலாக்கணம் பாடினார்.
“உங்களுக்கு என்ன மாஸ்டர், இங்கேயும், மேலயும் பதவியில இருக்கிறவங்க டீக்கடை வச்சிருதவங்கன்னு சொல்றாங்க!”
“அட வேற பேச்சு பேசு. இல்லாட்டி கம்முன்னு பேப்பர்பாரு! பால் வந்ததும் டீ போட்டுதர்றேன்.” என்று பாய்லர் அடுப்பின் வெடிகரியாக வெடித்து கங்கால் சுட்டார்.
“கோவிச்சுக்காதீங்க மாஸ்டர். அந்த கேண் டீக்காரரும் கடுப்பாத்தான் இருக்கார். டீ கேட்கிறவங்க எல்லாம் நூறு ரூவாய் நீட்றாங்க. சில்லரை குடுக்கிறவங்களுக்குத்தான் டீன்னுட்டார். அவரும் வித்தபாடில்லை. யாரும் குடிச்ச பாடில்ல! கேண் டீ போனியாகலைன்னு புலம்பிகிட்டிருந்தார்.
“அதானே, ஆளுக்காளு நூறு ரூபாயை நீட்டினா அவனும் என்ன செய்வான். ஒரு மாசத்துக்கு முந்தி எதுக்கெடுத்தாலும் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டுவாங்க. கேட்டா ஏட்டிஎம்மில் ஐநூறு ரூவாதான் வருதும்பாங்க. இப்ப அந்த தொல்லை போச்சு. ஆனா இப்ப ஏடிஎம்ல இரண்டாயிரம் ரூபா நோட்டு மட்டுமே வருதுன்னு சொல்றாங்க. இது எத்தனை நாளைக்கோ. ஜனங்க புழங்குகிற நூறு ரூபா நோட்டையும் செல்லாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க போலிருக்கு!” என்று சிரித்தார்.
அவன் கேட்டான் “மாஸ்டர் கோவிச்சுக்காதீங்க. தெரியாமத்தான் கேட்கிறேன். கருப்பு பணம்னு எப்படி கண்டு பிடிக்கிறது. எல்லாப் பணமும் ஒரே மாதிரிதானே இருக்கு?”
“அட போய்யா. எனக்கே இம்புட்டு நாளாத் தெரியாது. தடீர்னு எனக்கு சந்தேகம் வந்துருச்சு. நாம புழங்குகிறது நல்ல பணமா, கருப்பு பணமான்னு? அப்புறம், டீவியில பேசிக்கிறதை வச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன். அரசாங்கத்துகிட்ட கணக்கில காட்டாத பணம் கருப்பு பணமாம்!”
“மாஸ்டர், அன்னாடம் காய்ச்சிக எப்படி கணக்கில் காட்டறது?”
“கணக்கு வழக்கெல்லாம் நமக்கு எங்கே தெரியும். பேசிக்கிறதை வச்சு சொல்றேன். நீ இதான் சாக்குன்னு உங்கிட்ட இருக்கிறது கருப்பு பணமா நல்ல பணமான்னு கேட்டுறாதே! எனக்கு ஒரு இழவும் புரியலை!”
பால்க்காரம்மா அரக்க பரக்க ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் கொண்டு வந்தது. டீக்கடைக்காரர் ஏற்கனவே ஒரு பெரிய பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரில் பாலை ஊற்றி ஒரு குவளையில் முகந்து முகந்து ஊற்றி ஆற்றினார். பால் காய்ந்த பதத்தை பார்வையால் மதிப்பிட்டவாறே தலையாட்டினார். ஒரு கப் பாலை எடுத்து சாமி படத்தின் முன் வைத்துக் கும்பிட்டார். ஒரு கிளாஸ் டீ போட்டு கடைக்கு முன்னால் நிலத்தில் பயபக்தியோடு குனிந்து ஊற்றி “ஆத்தா பூமாதேவி உனக்கு முதல் படையல்” என்று சொல்லி பின் நிமிர்ந்து கடை டீ பட்டறை நோக்கி கும்பிட்டார். கிளாஸில் எஞ்சியிருந்த ஒரு மிடறு டீயை ரசனையோடு குடித்தார். தலையை ஆட்டியபடி உள்ளே போய் ஒரு கிளாஸ் டீ போட்டு பால்க்காரம்மாவிடம் நீட்டி “அக்கா இந்தாக்கா” என்றார். பால்க்காரம்மா பவ்வியமாக வாங்கிக் குடித்தார்.
அவன் முந்திக் கொண்டு சொன்னான். “மாஸ்டர், எனக்கு வரக்காப்பிதான்! முதல் போனியானதும் குடுங்க, அவசரமில்லை”
“….க்கும்” என்றார் மாஸ்டர்
“என்னக்கா ஆச்சு! என்ன பிரச்சினை?”
“என் துயரத்தை ஏன் கேட்கிறப்பா… நாலு மாட்டு பாலை வித்து அன்னாட பால்காசு வசூலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட கொடுத்த வச்சிருந்தேன். மகள் கல்யாணத்துக்கு உதவும்னு. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி எறும்பு கணக்கா சேர்த்து வச்சேன். அவரு திடீர்னு போன ஞாயிற்றுக்கிழமை ராத்திரி வீட்டுக்கு வந்து ‘இந்தாம்மா நீ குடுத்து வச்சதுக்கு வட்டியும் முதலுமான்னு மூனு லட்சம்னு’ ஐநூறு, ஆயிரம் ரூவா நோட்டுக்களா குடுத்திட்டுப் போனார். ‘இந்தப் பணத்தை உடனே பேங்கில போட்டுரும்மா, இல்லாட்டி செல்லாம போயிரும்னு’ எங்க வகுத்தில கொள்ளியை சொருகிட்டு போயிட்டாரு. எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. விடியற வரைக்கும் தூக்கமும் வரலை. நாம குடுத்ததை விட கூடக் குடுத்திருக்காருன்னு சந்தோசப்படவும் முடியலை. இக்கட்டான நிலையில் மாட்டிவிட்டுட்டாருன்னு விசனப்படவும் முடியலை. திங்கக்கிழமை பேங் திறந்ததும் என் பேரில பாதியும், மகள் பேரில பாதியுமா போட்டுட்டு வந்தோம். இப்போ ரூபா எடுக்க பேங்குக்கு போனா ஒரு வாரத்துக்கு இருபத்தி நாலாயிரம் தான் எடுக்கமுடியும்ன்னு சொன்னாங்க. ஆனா ஒரு நாளைக்கு இரண்டாயிரம் இரண்டாயிரமா மட்டும் தான் எடுக்க முடியுது. நித்தம் நாலாயிரமா எத்தனை நாளைக்கு மூனு லட்சத்தை எடுக்கிறது. தை பிறந்தா முதல் முகூர்த்தத்தில மகளுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கு. எப்படி நடத்தப் போறேன்னு வதை பட்றேன். அதான் விடியக்காலையில பேங்க் வாசல்ல மகளுக்கு இடம்போட்டுட்டு வாட்சுமேன் கிட்ட சொல்லிட்டு வாறேன்” பால்க்காரம்மா பதட்டம் தணியாமல் பேசினார்.
அவனுக்கு இதெல்லாம் விநோதமாய் இருந்தது. காண்ட்ராக்ட்காரர் வாரக்கூலி கொடுத்தால் வயிறாரக் கஞ்சி, இல்லாட்டி குப்பை பொறுக்கி கிடைக்கிற காசில கால்வயிறு, அரைவயிறு கஞ்சின்னு நமக்கு விதிக்கப்பட்டிருக்கு. நமக்கும் லட்சத்துக்கும் என்ன லவி இருக்குன்னு? நினைத்துக் கொண்டான்.
டீக்கடை முன் ஒரு கார் வந்து நின்றது. நாலு இளைஞர்கள் வந்தார்கள். டீ கேட்டார்கள். டீ குடிக்கும் இடைவெளியில் அக்கடையில் என்னென்ன இருக்குன்னு நோட்டம் விட்டனர். குட்டே பிஸ்கட், மேரி பிஸ்கட், பில்டர்வில்ஸ், கோல்ட்பிளாக், சிஸர்ஸ் சிகரட்டுகள் இருப்பதை எல்லாம்; எடுக்கச் சொல்லி வாங்கினார்கள். மொத்தம் எழு நூற்றி இருபது ரூவா வந்தது.இரண்டாயிரம் ரூவாய் நோட்டைக் கொடுத்தார்கள். டீக்கடைக்காரருக்கு ரெண்டாயிரம் ரூவாய் நோட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்கிட்ட சில்லரை இல்லை. எழுநூறு ரூவாய் குடுங்க. இல்லாட்டி சரக்கை வச்சிருங்க. உங்க யாவாரம் வேண்டாம்” என்றார் கண்டிப்புடன். அவர்கள் பதிலொன்றும் பேசாமல் சாமான்களோடு வண்டியை நெருங்கினார்கள்.
டீக்கடைக்காரர் கடுப்பாகி “ என்னய்யா செல்லாத நோட்டை குடுத்திட்டு சரக்கை அள்ளிட்டுப் போறீங்க? நில்லுங்கய்யா”
“ஏய், கவர்மெண்ட் நோட்டை செல்லாத நோட்டுன்னு சொன்னா போலிஸ்ல போன் பண்ணி கேஸ் போட்ருவோம்”
“ஏய்யா இந்த நோட்டை டவுன்னுக்குள்ள மாத்த முடியாமத்தானே ஊருக்கு ஒதுக்குப்புறமா வந்து மாத்திறீங்க. அந்த போலிசை கூப்பிடு. என் சரக்கை எல்லாம் கொல்லையடிச்சிட்டுப் போறீங்கன்னு புகார் பண்றேன்”
பேசிகிட்டு இருக்கும் போதே அவர்கள் வண்டியை கிளப்பிட்டு போய்விட்டார்கள். மாஸ்டர், பால்க்காரம்மா, அவன் மூன்று பேரும் உறைந்து போய் நின்றார்கள். மாஸ்டர் அந்த இரண்டாயிரம் ரூபாய் தாளைத் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார். முகமெல்லாம் அதிர்ச்சி பரவி இருந்தது. பால்க்காரம்மா சொன்னது “தம்பி பேங்கில இந்த மாதிரி நோட்டைத்தான் தர்றாங்க” என்றார்.
பெருமூச்சோடு அவன் சாக்குபையை எடுத்துக் கொண்டு எழுந்தான்.
“இருப்பா, டீ போடறேன் குடிச்சிட்டு போவே!”
“என் கிட்ட ஆறு ரூவாதான் இருக்கு. கடுங்காப்பி போதும்!”
“பரவாயில்லை. எப்பையும் போல அஞ்சுரூவா குடு இன்னிக்கு பால் டீ போட்டு தாரேன் குடி!”
“அவன் கூச்சத்தோடு பால்டீ குடித்தான். புன்னகையால் நன்றி சொல்லி தலையாட்டி கிளம்பினான் அவன்.
கடையை விட்டு வெளியேறியதும் அவனுக்குள் ஒரு குழப்பம். நடுத்தரக் குடும்பத்தினர் அதிகம் குடியிருக்கும் தெற்குபக்கத் தெருவுக்கு போவதா, பணக்காரர்கள் பெரிய பெரிய பங்களாவில் குடியிருக்கும் வடக்கு பக்கத் தெருவுக்குப் போவதா?
நடுத்தர மக்கள் குடியிருக்கும் தெற்குத் தெருவில் பழைய பேப்பர், அட்டை பெட்டி, பழைய சட்டை, துணி மணிகள் நிறைய கிடைக்கும்     வடக்கு பக்கம் பிளாஸ்டிக் கழிவுகள் தான் கிடைக்கும். சமயங்களில் அசிங்கமான சமாச்சரங்கள் கிடக்கும். அவற்றை பார்த்து காறிதுப்பிவிட்டுத்தான் நகரணும், பலனில்லை. ஆனாலும், அவன் மனசு இன்றைக்கு வடக்குப் பக்கம் போயிட்டு ஒன்றும் கிடைக்கலைன்னா தெற்குத்தெருப் பக்கம் போகலாம் என்று ஒற்றைக் காலில் நின்றது வடக்கு பக்கமே நகர்ந்தான்.
இதற்கு முந்தி வடக்கு பக்கத் தெருவில் அவனுக்கு ஏமற்றமும் அருவறுப்புமே அனுபவமாக இருந்தது. ஆனாலும் அவனது மனசும் முரண்டு பிடித்தது வியப்பாக இருந்தது. போய் தான் பார்ப்பமே, காசா, பணமா செலவு? கொஞ்சம் தூரம் கூட நடக்கணும் அவ்வளவுதானே என்று நினைத்துக் கொண்டான். வடக்குத் தெருவில் ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த அட்டைப் பெட்டியை கிண்டி திறந்தான். முகத்தில் ரத்தக் கவிச்சி தாக்கியது. அதிர்ச்சியுடன் முகத்தில் வாயையும், மூக்கையும் துண்டால் கட்டிக் கொண்டு அட்டை பெட்டியை முழுதாகத் திறந்தான். ஆறுமாத சிசு பிண்டம் விறைத்து கிடந்தது! அதை இப்பவும் நினைத்தாலும் கைகள் நடுங்குது, மனசு பதறுது, என்ன மனிதர்கள்? எப்படியான சாவு? இயல்பான சிதைவா, கொலையா? அந்த பிண்டத்தின் தலையில் காலில் ரத்தம் உறைந்த காயங்கள். அவனது பதற்றம் அடங்க ரெம்ப நேரமானது. ராத்திரி தூக்கத்திலும் அந்த பிண்டம் கண்முன் தோன்றி அமைதியாகச் கிடந்த அவனது வாழ்க்கை பாட்டை கேலி செய்வதாக இருந்தது.
மற்றொரு நாள் அதே வடக்குத் தெருவில் வேரொரு குப்பை தொட்டியில் ஈர்ப்பான ஒரு பிளாஸ்டிக் பை கிடந்தது. ஆர்வத்தோடு எடுத்துப் பார்த்தான். ஈரம் கசிந்த ஆணுறைகள், அவனுக்கு குமட்டல் வந்தது. அப்படியே கையை உதறி காறி உமிழ்ந்து நடந்தான். தெற்;குத் தெருவிலும் அசிங்கங்கள் கிடக்கும். ஆனால் அவற்றை பளபளப்பாக மூடி எறிய மாட்டார்கள். பார்த்தவுடன் கழிவு என்று தெரிந்துவிடும்.
அவனது பகுதிக்காரர்கள் அடிக்கடி சொல்லுவார்கள் “வடக்குத் தெரு பங்களாக்களில் வசதியான ஆள்கள்தாம். நோய் நொடி பாதிப்பு, மழைக்கஞ்சி காச்ச, கோயில் திருவிழான்னு பண உதவி கேட்டா அவங்க இல்ல. இவங்க இல்ல. நாளைக்கு வாங்க, வாங்கி வைக்கிறோம் என்று இழுத்தடித்து கடைசிவரைக்கும் கொடுக்கவே மாட்டார்கள்.
சரி இன்னிக்கு மனசு நோங்குது போய் பார்ப்போமே என்று வடக்கு தெருவில் நடந்தான். தெருவுக்குள் இன்னும் ஆள் நடமாட்டம் தொடங்கவில்லை. ஒரு வீட்டிலிருந்து வேலைக்காரன் போல ஒருத்தன் ஒரு மஞ்சள்துணிப்பையுடன் வேகமாகவும் பின்னால திரும்பி திரும்பி பார்த்தபடி பரபரப்போடு நடந்தான். தெருவின் வலது ஓரமாக நடந்தவன் சந்தின் முனைகடந்த சில நொடிகளில் வெறுங்கையுடன் திரும்பி வேகமாக நடந்து வீட்டிற்குள்  நுழைந்து கதவை சாத்தினான்.
வேலைக்காரனின் நடத்தையை பார்த்ததும் அவனுக்குள் ஒரு பொறிதட்டியது. மெல்ல சாவகாசமாக நடந்து தெருமுனையைத் திரும்பினான்.
ஒரு பத்தடி தாண்டியது அங்கு ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. மெல்ல சென்று முன்னெச்சரிக்கையாக வாயையும் மூக்கையும் துண்டால் இறுக்கி கட்டிக்கொண்டு ஒரு சின்னகுச்சியை எடுத்து குப்பையை கிளறினான். வாழை இலை, காய்கறிக் கழிவுகளின் அடியில் அந்த மஞ்சள்பை தெரிந்தது. மெல்ல பையை இழுத்தான். வேறு யாரும்  தெருவில் வருகிறார்களா என்று பார்த்தான். ஆள்நடமாட்டம் இல்லை. இருநாய்கள் ஒன்றை ஒன்று விரட்டி ஓடிக்கொண்டிருந்தன. நிதானமாக பையின் முடிச்சை அவிழ்த்தான். பைக்குள் பேப்பர் கற்றிய பொட்டலம் இருந்தது. ஒரு முனையை கிழித்து பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். எவரும் இல்லை. பைக்குள் 500, 1000 ரூவாய் நோட்டுக் கட்டுகள். கைகள் நடுங்கின. பையை சுற்றியுள்ள அழுக்குகளைத் துடைத்துவிட்டு மின்னல் வேகத்தில் அந்தபையை தனது சாக்குபையில் போட்டுக் கொண்டான். உடல் படபடத்தது. சிறுநீர் கழித்தால் தேவலை என்று உணர்ந்தான். தொட்டிக்கு எதிர்புறம் இருந்த சாக்கடையோரம் உட்கார்ந்து எழுந்தான். உடலெல்லாம் வியர்வை பூத்திருந்தது. அவ்வளவு ரூபாய் நோட்டுக்களை அவன் கண்ணால் கூட பார்த்ததில்லை. விறுவிறுவென்று வீடு நோக்கி நடந்தான்.
எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கு தெரியவில்i. குடிசையின் படலைத் திறந்தான் . மனைவி அடுப்பின் முன்னால் இருந்தாள். உள்ளே நுழைந்ததும் குடிசையின் படலை மூடினான். மனைவி ஏறிட்டு பார்த்து வாய் திறப்பதற்குள் மஞ்சள் பையைக் காட்டி சத்தமிடாமலிருக்க சைகை செய்தான். பாயை விரித்து மஞ்சள் பையைத் தலைகீழாகக் கொட்டினான். ஆயிரம் ரூபாய் கட்டுகள் பதினாலும், ஐநூறுரூபாய் கட்டுகள் எட்டு! ஒழுங்கற்று ரப்பர் பேண்டால் பிணைக்கப்பட்டிருந்தன. இதை யாரை வைத்து எண்ணுவது. என்ன செய்வது என்று திகைத்துப் போயிருந்தான். மனைவி அவனை உற்று பார்த்தாள். “ வடக்குதெரு குப்பைத் தொட்டியில் கிடந்தது” என்றான். அவனது முகம் பளிச்சிட்ட மறுநொடியில் கவலை கப்பி இருண்டது.
கூரையிலிருந்து பல்லி ஒன்று உச்சு கொட்டியது. அவள் நிமிர்ந்து பார்த்தாள். “என்னய்யா மிதப்பில இருக்கே! நாய்க்கு தேங்காய் கிடைச்ச மாதிரி…. இதை வச்சு இப்போ என்ன செய்ய! இன்னிக்கு கஞ்சிக்க ஆகிறதைப் பாரு” என்றாள். அவனுக்கு எதையோ இழந்தது போல முகத்தில் பூத்த பெருமை உடைந்து காற்று போன பலூன்போல முகம் சுருங்கி தொங்கியது. பெருமூச்சு விட்டான்.
“சரி கொஞ்சம் காபிதண்ணி இருந்தா குடு. குடிச்சிட்டு வெளியில் போயிட்டு வாறேன்”. என்று சாக்கை எடுத்து மடக்கி இடுப்பில் சொருகினான். அவள் கொடுத்த கடுங்காப்பியை தண்ணீரைக் குடிப்பதுபோல விழுங்கினான். மெல்ல தளர்வான நடையோடு வெளியே வந்தான்.
தெருவில் கூட்டமாக நாலைந்துபேர் நின்று ஏதோ ரகசியம் போல் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அருகில் போகாமல் காதை கூர்மையாக்கிக் கேட்டான். “பணம் மாத்திற விவகாத்தில் சந்தேகப்பட்டு காண்ட்ராக்ட்காரரை போலிஸ் பிடிச்சிட்டுப் போயிருச்சாம். டீ.வியில சொன்னாங்களாம்”.
அவனுக்கு பகீர் என்றது. எதுவும் புரியவில்லை. மெல்ல நகர்ந்தான் “இன்னிக்கு வயிற்குப்பாட்டுக்கு ஏதாவது வழி பார்க்கணுமே”.
               

No comments:

Post a Comment