கரையேறுதல்
-ஜனநேசன்
விடிந்தால் ஒரு வருஷம் ஆகிறது. காதலில் தோற்றவர்கள் இருவர் கல்யாணம் பண்ணிக்கொண்டால் என்ன! என்ற சுகமான கற்பனையை நிகழ்த்திக் காட்டாலாமே! சிந்தனை செயலானது! ஒரு வகையில் இருவருக்கும் கத்திவிளிம்பில் நடப்பதுபோல்தான் வாழ்க்கை தொடங்கியது.
இவள் அலைப்பேசியின் நாவை மௌனமாக்கி வைத்திருந்தாள். எனினும் அழைப்புகளின் அதிர்வு முணு முணுத்துக்கொண்டிருந்தது. இன்று சனிக்கிழமை இரவு பல மென்பொறிஞர்களுக்கு இரவெல்லாம் திரிசங்கு சொர்ககம்! அந்த சொர்க்கத்தில்; மிதந்து கொண்டிருக்கும் இவளது சிநேகிதிகள், சினேகர்கள்தாம் அழைப்பார்கள். இந்த ஓராண்டு நிறைவைக் கொண்டாட, வாழ்த்த அழைக்கிறார்களா? பழையதைக் கிளறி புதியவாழ்வில் குழப்பத்தினை உருவாக்க அழைக்கிறார்களா எதுவாயிருந்தாலும் என்ன..? அவர்களது வாழ்க்கை ஓட்டத்திலிருந்து விலகிய இவர்களது நீரோட்டத்தில் கல்லெறிய அனுமதிக்கக்கூடாது. அவர்களது சிநேகம் உதட்டளவு தொடங்கி உடலளவில் கொண்டாடுவது. இவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது. இவள் அலைப்பேசியை மினுக்கி அழைப்புகளை நோட்டமிட்டாள். முகம்சுளித்து அணைத்தாள். கண்களை மூடினாள். மனத்திரையை மூட முடியவில்லை.
இவளும் அவனும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவளது அடக்கமான சுபாவம்
சுறுசுறுப்பான உழைப்பும் நுணுக்கமான சிக்கல்களுக்கும் எளிதாகத் தீர்வு காணும் விவேகமும், தற்பெருமை இல்லாமையும் எழிலான உடலமைப்பும் அவனை ஈர்த்தவை. துறுதுறுப்பான இயல்பு; யாரிடமும் நகைச்சுவை மிளிரப்பேசும் பாங்கு : எளிதாக சினத்தை வெளிப்படுத்தா பண்பு அர்பபணிப்பு மிக்கவன் போலக் காட்டும் வெளிப்பாடு இவை எல்லாம் இவளை அவனுடன் பழகத்தூண்டியவை. முதல் சந்திப்பிலியே பலகாலம்
பழகியதுபோலப் பேசினான். இது இவளது தனிமைச் சுவரைத் தகர்த்தது! பழக்கம் நெருக்கமானது.
சக பொறியாளர்கள் வேலை இறுக்கத்தினை சனிக்கிழமை இரவில் தளர்த்திக் கொள்ளக்கூடுவர். மன இறுக்கம் பணி நெருக்கடிகளை உதறி தளர்த்திக் கொள்ளும் கொண்டாட்டம்தான்! மனதை இலேசாக்க பீர்விருந்து. விதவிதமான துரித உணவுகள். கொண்டாட்ட உணர்வில் பணமோ பண்பாடோ பொருட்டல்ல! தன்னை மறக்கனும்! மனம் மிதக்கணும்! கடந்த ஐந்துநாட்கள் கசக்கிய மூளையின் சுருக்கத்தை, முடிச்சுகளை தளர்த்துவதாக எண்ணி குதித்தார்கள்; ஆடினார்கள்; பாடினார்கள்; குதூகலித்தார்கள்; இணைகளாய் சேர்ந்தார்கள்! மனதளவில் இணையாவிட்டாலும் தாங்களாக நிறுவிய சொர்க்கத்தில் திளைத்தார்கள். குதூகலத்தை உணர்ந்தார்கள். பொங்கும் நுரைக்குமிழ்களில் தெறிக்கும் வண்ணங்களில் கிளர்ச்சி கண்டார்கள். இந்த வண்ணக்குமிழ்கள் ஒரு நாள் கொண்டாட்டம் தான். அது தரும் கிளாச்சி, எல்லாவற்றையும் மீறும் உணர்ச்சிதரும் ஈர்ப்பு அவர்களை சனிக்கிழமைகளுக்காக ஏங்கச்செய்து. ஐந்து நாட்கள் உடலாலும்
உள்ளத்தாலும் நசுக்கி நைந்த சக்கையாக பிழியும் நிர்வாகம்தரும் பணி நெருக்கடிகள் பெரிதாகத் தோன்றவில்லை. வானவில் வண்ணக்குமிழ்களின் மறக்கடிப்பில் மிதந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் இவளும் அவனும் மிக நெருக்கமானார்கள்! சகாக்களைப் போல சகலமும் மறந்து எல்லையில்லா இன்பம் காணும் மோகமும் வேகமும் பற்றி படர்ந்தது. அவன் எல்லைதாண்ட முயலுகையில் இவள் சுயவுணர்வோடு தடைபோட்டாள். ஒவ்வொரு வாரமும் இந்தக் கண்ணாமூச்சும் கபடி விளையாட்டும் தொடர்ந்தது. இவள் பிடிபடவில்லை. அவன் கொஞ்சினான்; குலவினான் குழைந்தான், வளைந்தான்; கெஞ்சினான். இவளது உறவில்லை எனில் இந்த உலகமே நரகம்! வாழ்வே வெற்று பதர்; என்று பாவனையில் அழுதான். மது போதையில் இருவரும் இருந்தனர். என்றாலும் இவள் நிதானமாக இவ்விஷயத்தில் இருந்தாள். கல்யாணம் ஆன அடுத்தநொடியே இந்த எல்லையைத்தாண்டலாம் என்றாள் இவள்.
அவன் நம்பச் சொல்லி ஆயிரம் சத்தியம் செய்தான். எல்லாசாமிகள் மீதும் சத்தியம் செய்தான். இவள் முடிவிலிருந்து மாறாவில்லை. குடும்பத்தினரின் சம்மதத்தோடு கல்யாணம் செய்து கொள்வோம். மற்றதெல்லாம் அப்புறம்! தழுவுகிறாள் ஆனால் நழுவுகிறாள். அணைத்துக் கொள்ளுகிறாள். அவிழ்க்க நெருங்கினால் எரிக்கிறாளே? வீட்டாரை சமாதானம் செய்து கல்யாணம் செய்து கொள்வேன். சம்மதி, சம்மதி! எனது, ஆண்மையின் புலம்பலுக்கு நிம்மதி கொடு. கைவிட மாட்டேன் என்றெல்லாம் அரற்றினான். உன்னைத் தரவில்லை என்றால் என்னை மாய்த்துக்கொள்வேன். மிரட்டினான் வாழ்வது ஒருமுறை என்றாலும் சரியாக வாழ்வோம் பெற்றோர் மகிழ வாழ்வோம் என்றாள் இவள்.
அவனது தழுவலுக்கு சிக்கி நழுவும் இவளின் நிதானம் அவனை சூடேற்றி காய்ச்சிய இரும்பு குழம்பாகி தக தகக்கையில் திடீரென்று தண்ணீரில் மூழ்கச்செய்தது போல் சுர்ரென்று ஒலி எழுப்பி வீழச்செய்தது போல உணர்ந்தான். நல்ல வேகத்தோடு விரைந்து கொண்டிருக்கும் காரின் ஒரு சக்கரம் மட்டும் காற்றை இழந்து நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்வது போல உணர்ந்தான்.
இதற்கிடையில் சகபணியாளர்கள் மூலம் பேசி இவளை வழிக்கு கொண்டுவர முயன்றான். இவள்
அவர்களுக்கும் புத்தி சொல்லி அனுப்பினாள். அழுத்தக்காரி, உலகம் புரியாதவள், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவள் என்ற அவர்கள் இவளுக்கு பட்டம் சூட்டினர். அருகே நெருங்க விட்டவள். பருக அனுமதிக்கவில்லை இனி ஒத்துவரமாட்டாள் என்ற அவனும், தன்னை உறிஞ்சி சக்கையாகத் தூர எறிந்துவிட்டுப்போக நினைக்கிறான் என்று இவளும் தெளிந்தார்கள். இவள் தனியானாள். அவன் வேறுவேறு துணை தேடினான் இவளை இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்ற நிர்வாகத்தை தூண்டினான். இவளது பணித்திறன் மூன்றாள் பணித்திறன் என்று தெளிந்த நிர்வாகம் சட்டைசெய்யவில்லை. அவனைக் கழற்றிவிட்டது.
இவள் சூடுபட்ட பூனையாளாள்; இது சனிக்கிழமைக் கொண்டாங்களிலிருந்து விலகி அறையிலேயே தஞ்சமானாள். வேலைவிட்டால் வீடு, வீட்டிலிலும் தனிமை விரட்டாதிருக்க மடிக்கணினியை கொண்டுவந்து கண்ணும் மனதும் ஒத்துழைக்க மறுக்கும் வரை வேலையில் மூழ்கினாள். நிர்வாகம் இவளைக் குழுத் தலைவரிலிருந்து துணைமேலாளர் வரை உயர்த்தி இரட்டைவேலை வாங்கியது. ஞர்யிற்றக்கிழமையில் ஓய்வு ஒழிவுக்குப்பின் கோவில் செல்லத் தொடங்கினாள். இன்னொரு வீழ்ந்தமலர் வாடிவிடாமலிருக்கு இவளுடன் துணை சேர்ந்தாள். இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு கோயிலுக்கு மத மாச்சரியம் பாராமல் சென்று வந்தனர். மனம் ஒருமைபட்டது போலிருந்தது! வீட்டாரோடு பேச நேரம் கிடைத்தது. இரண்டுநாள் விடுப்பு கிடைத்ததால் சொந்த கிராமம் மடிக்கணினியோடு
போய் வந்தாள். கிராமத்து அம்மா அப்பாவுக்கு கைநிறைய பணம் கொடுத்து வீட்டை புதுப்பிக்க செய்தாள். அம்மா அப்பாவின் மகிழ்ச்சியும் பெருமிதமும் இவளுக்கு மன நிறைவையும் ஊக்கத்தையும் தந்தது. ஊருக்குப்போய்த் திரும்பினால் புதுஉற்சாகத்தோடு வேலையில் மூழ்குவாள். இவளுக்கு விடுப்பு கொடுப்பது பற்றி நிர்வாகம் தயங்குவதில்லை.
இவளுக்கு ஞாயிறுகளில் கோவில்களுக்கு செல்லாமல்இருக்க முடியவில்லை. இதுவும் ஒருபுதுவித போதையாக உணர்ந்தாள். ஒரு முனையிலிருந்து விடுபட வேண்டுமானால் மற்றொரு முனைக்கு சென்றுதான் தீரவேண்டியிருக்கிறது. நடுவாந்திரம் மனதுக்கு பிடித்த இடத்தில் தன்னை இருத்திக் கொள்ளும் இடம் தேர்வாகும்வரை இந்த எதிர்முனைப் பயணம் பாதகமில்லை என்று எண்ணினாள். இவளோடு சேர்ந்த இன்னொருத்திக்கும் கோவில்பயணம் உகந்த ஆறுதலாகவே இருந்தது. இவர்கள் இருவரது பேச்சுகளில் சுற்றி உள்ள எதார்த்தமும் போலித்தனங்களும், இவற்றிக்கு இடையே ஊடாடும் மனிதர்களும் பேசுபொருளானர்கள். ஒரு விஷ சுழற்சியிலிருந்து தப்பி கரையேறியவர்கள் போல ஆறுதல் கொண்டார்கள். எதிர்கால வாழ்வுபற்றி பேசினார்கள்.
ஊர்த் திருவிழாவுக்கு வருமாறு அம்மாவும் அப்பாவும் அழைத்தார்கள். இரண்டு நாள் விடுப்பில் கிராமம் போனாள். அம்மா அவளைப் பார்த்து கட்டி அணைத்துக் கண்ணீர் பெருக்கினாள். “என்னஞ்சே வயசாகிட்டேபோகுது. கண்ணெல்லாம் குழிவிழுந்து கிடக்கு. கைப்பிடி அரிசிபோடலாம் போலிருக்கு. நேரம்தவறாம சாப்பிடிறியா, நல்ல தூங்கிறியா ஒழுங்கா தலைகுளிக்கிறியா, நான் பெத்தமக எந்தத்தப்பு தண்டாவுக்கும் போகமாட்டே, நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உலகம் கெட்டுக்கிடக்குது. சூதானமா நடந்துக்ஞ்சே! நாலுபேரு நாலுவிதமா பேச இடங்குடுத்திறக்கூடாது” என்று அம்மா பாசமழை பொழிந்தாள் அம்மாவின் ஒவ்வொரு சொல்லிலும் பாசம் மட்டுமல்ல எச்சரிக்கையும், சமூகஅச்சமும் அடுக்கடுக்காய் சாண்ட் விச்சாகப் படிந்திருந்தன.
“யம்மா நா, நீ பெத்த பிள்ளை கவனமா இருப்பேன். கவலைப்படாதே” என்று அம்மாவுக்கு இவள்பதில் சொன்னாள். உள்ளுரில், சுற்றுப்பட்டில் இருக்கும் மாப்பிள்ளைகள் பற்றி அம்மா சொன்னாள். அந்த மாப்பிள்ளைகள் ஒற்றை பட்டம் வாங்கியவர்கள்; பக்கத்து நகரில் ஒருத்தர் கொரியர் அலுவலகத்தில், இன்னொருத்தர் அரசு அலுவலகத்தில் ஏழுத்தராக, இன்னொருத்தர் ரியல் எஸ்டேட் புரோக்கராக, பைனான்சியராக இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அவர்களிடையே ஒற்றுமை அந்திமங்கினால் அவர்களும் மயங்கித்திரிவர் என்றும் அறியவந்தது.
“இன்னும் ஒரு வருஷத்துக்கு ப்ராஜெட் ஒப்பந்தம் இருக்கும்மர் அதைக் முடிக்கணும் அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அம்மா அப்பா வாயை அடைத்தாள். எதிர்காலம் எண்ணங்களோடு வேலைக்குத் திரும்பினாள். போலித்தனமில்லா அன்பு பெற்றோரிடம் நெருக்கத்தையும், வாஞ்சையையும் கூட்டவே செய்தது.
இந்த மென்பொருள் தொழில் நிலையாமையை நிலையாக நங்கூர மிட்டுக் கொணடே இருந்தது. புதிது புதிதாக பலர் தளிர்க்கிறார்கள் பழையவர்கள் உதிர்க்கப்படுகிறார்கள். தனித்தனி அடைப்புகளில் உட்கார வைக்கப்பட்டவர்கள். வேலைக்கு இடையே பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் மௌனமும் இறுக்கமும் நிறைந்த மின்னஞ்சல் கட்டளைகள் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. உரையாடலும், உறவாடலும் இல்லாத மௌன அடிமைகளாக டாலர்கள் ஆட்டுவிக்கின்றன. ஒரு நாள் விடுப்புக் கிடைத்தாலும் இறுக்கத்தை தளர்த்த நிலைமறக்க அமைகிறார்கள். பண்பாடு, சமூகவரையறைகள் மீறல் தற்காலிக உற்சாகத்தை சிளர்த்துகின்றன. ஆண்களைவிட பெண்களே நிறைய பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கே நிறைய பணிச்சுமைகள். பணிச்சுமைக்கேற்ப ஊதியமில்லை. இங்கு எதிலாவதொரு வகையில் தனித்தன்மையைக் காட்டித்தான் ஊதிய உயர்வையோ, விடுப்புகளையோ, பணி நீடித்தலையோ பெற முடியும். பணிமூப்புக்கு, பணித்திறனுக்கு ஏற்ப ஊதிய முறைமையோ பொதுவிதிகளோ இல்லை! நியமி, நீக்கு! ஹையர் அண்ட் பயர்ன்னு விதிகள் நிலைத்து காலூன்றி நிலையாமையை உருவர்த்கிக் கொண்டே இருக்கிறது. இந்த பிராஜக்டில் வேலை பார்ப்பவர் அடுத்த பிராஜக்ட்டில் இருப்பரா என்ற உறுதியில்லதா பணியமைப்பு! முறைமை அற்ற முறைமை! இந்த சுழற்சிக்கோளத்திற்குள் அதன் வேகத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருப்பவரே நீடிப்பார். தயக்கமோ, தாமதிப்போ சுழற்சிக்கு வெளியே அதல பாதாளத்தில் தள்ளிவிடும்! பெருஞ்சக்கர சுழற்சியில் தம்மை பொருத்திக் கொள்பவரே கொஞ்சகாலம் நீடிப்பர்.
இந்த சுழற்சி வட்டத்தில் அவன் வெளியேற்றப்பட்டபின் இவன் வந்தான். இவன் பார்க்க சுறுசுறுப்பானவனாகத் தோன்றினான். ஆனால் யாருடனும் அதிகமாகப் பேசிக் கொள்வதில்லை. புன்னகை மட்டும்தான் வெளிப்படுத்துவான். வேலையிலே மூழ்கிக் கிடப்பான் யாரும் தனது சிக்கலான பணியை மறைத்து வேலை முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தினறிக் கொண்டிருப்பதைக் கண்டால் தானாகச் சென்று உதவுவான். சூட்சுமத்தைச் சொல்லி அவர்களை மிளிரச் செய்வான். எந்த திடீர் விருந்திலோ, கடப்பாடிலோ, மாட்டிக் கொள்ளமாட்டான். சனிக்கிழமைக் கொண்டாட்டங்களிலோ, குழு விருந்திலோ, சிக்கமாட்டான். இப்படியான தனித்துவமான சூழலில் இங்கும் இவனும் இவளும் தூர தூர இருந்து ஒருவரை ஒருவர் கவனித்தனர். நெருங்கி பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. இவளும் இவனும் பார்த்துக்
கொண்டதில் மனதை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
இவன் இப்படி தனித்து இருப்பதன் காரணம் என்னவென்று இவள் கேட்டாள். இவன் இவளது முகத்தை ஊடுறுவி எதையோ வாசித்தறிந்தவன் போல உணர்ந்தான்; சொல்லத் தொடங்கினான்.
இவனும் அவளும் ஒரே மென்பொருள் சேவை நிறுவனத்தில் பணியாற்றினர். இவன் குழுத்தலைவராக இருந்தான். இவனது குழுவில் அவளும் இன்னும் மூவரும் பணியாற்றினர். குழுத்தலைவன் என்ற முறையில் அவளது பணியிலுள்ள சிரமங்களைக் களைய உதவினான். புதிதாக வந்தவள் படும் பணிப்பளுவை குறைத்து உதவினான். இவனது அறிவின் நுட்பமும், எதையும் எளிதாகத் தீர்க்கும் லாவகமும், பழகும் பண்பும், பேச்சின் இனிமையும் அவளை ஈர்த்து இருவரும் மனதால் நெருங்கினார்கள். சனிக்கிழமை இரவு குதூகலக் கொண்டாட்டங்கள் இருவருக்கும் இடையே உள்ள திரைகளை விலக்கின. அந்த விடுதியின் குறைந்த வெளிச்சம் கூச்சத்தையும் விரட்டியது. ஒவ்வொரு வாரமும் கழியக் கழிய இவர்களது நெருக்கம் கூடியது. எல்லைகள் தகர்ந்தன நான்கு ஐந்து வாரங்களில் பெண் மருத்துவர் ஆலோசனை தேவை ஏற்பட்டது. அடி ஆழம் வரை மூழ்கிநீந்தும் இன்பத்தை அனுபவித்தனர். இப்படி நாட்கள் விரைகையில் அவளும் ஒரு குழுத்தலைவியாக பணியில் உயர்ந்தாள். பணி நிமித்தம் அடிக்கடி மனிதவள அலுவலருடன் விவாதமும், நெருக்கமும் கூடியது. மனிதவள அலுவலர் மூலம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு நெருங்கியது. இவனிடமிருந்து அவள் விலகிதூரம் போவதாகப்பட்டது. மனக்கீறல் விரிசலாக விரிந்தது. அவளுக்கு மனிதவள அலுவலர் கடவுச் கீட்டாக இருந்தார்; விசா கிடைத்தது. அவள் பறந்து விட்டாள். இவனை அங்கே அவள் அழைத்துக் கொள்வதாகச் சொன்னது வெற்று மொழி, விடுபடும் வழி என்று உணர்ந்தான்.
இவன் மனம் உடைந்து போனான். அந்நிறுவனத்தில் வேலைபார்க்க மனம் ஒப்பவில்லை அந்நிறுவனத்தில் ஜன்னல் திரைச்சிலைகளும், கழிவறைக் கண்ணாடிகளும் அவனை வதைத்தன அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி இந்நிறுவனத்தில் இணைந்தான். குடும்ப வறுமையை தீர்க்க கொஞ்சம் காலம் மென்பொருள் துறையில் பணியாற்றுவதே உசிதம்! தங்கையையும், தம்பியையும், படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்து விட்டு தன்னை பற்றி என்ன முடிவும் எடுக்கலாம் என்று உற்சாகத்தை தருவித்துக் கொண்டு இந்நிறுவனத்தில் பணியில் மூழ்கினான். தனித்து உலாவினான். சூடுபட்ட பூனைகள் இரண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவனது கதையைக் கேட்டு பெருமூச்சு விட்டாள். இருவரது வாழ்வும் ஒரு வகையிம் ஒத்திருந்தது. நேரம் கிடைக்கும் போது இவர்கள் இருவரும் இந்த மென் பொருள்துறை குறித்தும், அதன் எதிர்கால சாத்தியங்கள் குறித்தும் பேசினர். தம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பேசுவர். இவர்கள் இருவரது கருத்துக்கள் ஒத்துப் போயின. ஒத்த அனுபவம், ஒத்த சிந்தனை என நெருங்கினர்.
எனினும் இருவரது முந்தைய அனுபவங்கள் எச்சரிக்கையோடு நகர்த்தியது. இருவேறு கப்பல்கள் மூழ்கியதில் தப்பிய இருபயணிகள் சிக்கிய ஒரு மிதவையைப் பிடித்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். வீழ்த்திய சூறாவளி இவர்களை அவைகழித்தது. ஒரு மிதவையைப் பற்றி கரை நோக்கி இருநபர்கள் பயணித்து கரையேறிய பின்னும் இணைந்து பயணித்தால் என்ன என்ற சிந்தனை இருவரையும் பிணைத்தது.
இணைந்த பயணம் குறித்து இவளே பேசினாள். அவன் சொன்னான் தனது தங்கையையும், தம்பியையும் படிக்க வைத்து கரைசேர்க்க வேண்டும். அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து வந்தவன் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பான வாழ்க்கை சூழலுக்கு உத்தரவாதம் கிடைத்தால் தனக்கு மறுப்பில்லை.
இவள் சொன்னாள் தான் ஆதிக்கசாதியின் பின்னணியில் வந்தாலும் குடும்ப பொருளாதாரச் சூழலில் இவளும் ஒடுக்கப்பட்டவளே. இவள் படிப்பிற்கோ முயற்சிக்கோ சொந்த சாதிக்காரர்கள் உதவியதில்லை. தற்போதைய இவளது முன்னேறிய நிலைகண்டு பொறாமைப்பட்டு பழிப்பவர்கள் உண்டே தவிர பெருமைப்பட்டு பேசுவோர் இல்லை. ஆனால் எந்தக் சூழலிலும் தனது தாய் தந்தையரை கைவிடாமலிருக்க உத்தரவாதம் தந்தால் இணைந்து பயணிக்க மறுப்பில்லை. சாதிக்கென்று தனி உறுப்புகள் இல்லை. தனித்திறமை இல்லை. இயற்கை எல்லாருக்கும் பொதுவான, சம திறனை வழங்கி இருக்கிறது. வாழ்க்கைச் சூழல் இதனை வடிவமைத்து வளர்த்தெடுக்கிறது. ஆகவே சாதி பெரிதில்லை. இணைந்து வாழ்ந்து காட்டுவதே பெரிது என்ற புள்ளியில் ஒன்று பட்டார்கள்.
காதலில் தோற்றவர்கள் இருவரும் வாழ்க்கையில் வெல்ல நண்பர்கள் கரம் கொடுக்க முன் வந்தார்கள். காலையில் அம்மன் கோவிலில் எளிமையான திருமணம்! முன் பகலில் நண்பர்களை இருதரப்பு சாட்சிகளாகக் கொண்டு திருமணப் பதிவு செய்து கொண்டனர். பெற்றோருக்கு கொஞ்சம் காலம் தாழ்த்தி தகவல் சொல்லி வரவழைப்பது என்று முடிவானது.
தொடக்கத்தில் ஒவ்வொரு நாளையும் உண்ணுவதில், உடுத்துவதில், உறங்குகையில் பழைய நினைவுகளின் சாயல் விழாமல் நகர்த்துவது கத்தி விளிம்பில் நடப்பது போல்தான் இருந்தது. போகியில் பழங்கசடுகளை எரிப்பது போல் பரஸ்பர நம்பிக்கையின் ஒளியில், வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டார்கள். ஒருவர் மீது மற்றவர் காட்டும் அக்கறையில் எதிர்கால நலன் கருதி ஒருவரை ஒருவர் மதித்தலில் இன்பம் பொங்குவதை உணர்ந்தார்கள். சந்தேக நிழல்படாத சந்தோசத்தில் கால்பாவினர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், சிந்தனையிலும் கிடைத்த வாழ்வை சிதைத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு விரவி இருந்தது.
இவளுக்கு நடுநிசியில் வந்த அலைப்பேசி அழைப்புகள் இவளுடன் முன்பு பணியாற்றி வேறு நிறுவனங்களுக்குப் போனவர்கள். சனிக்கிழமை மிதப்புகளின் ஊடே பொங்கிய குதூகலக் குறும்புகளாக இவளது ஓராண்டுக்கு முந்தைய நிகழ்வுகளை இன்றைய நடப்புகளோடு ஒப்பிட்டும், இறந்தகால நிகழ்வுகளை புதைகுழியிலிருந்து தோண்டி மறு உடல்கூராய்வு செய்வதாகத்தான் இருக்கும். முதலில் அவர்கள் விட்டேற்றியான வார்த்தைகளை எறிந்து மனதை புண்படுத்திவிடுவார்கள். இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பண்போடு வருத்தம் தெரிவிப்பதாக நாடகமாடுவார்கள். அவர்கள் ‘சாரி’ சொன்னாலும் கிளரப்பட்ட ரணம் ஆறிவிடுமா என்ன? இதை எல்லாம் உணர்ந்தேதான் அந்த அழைப்புகளை நிராகரித்து விட்டாள்.
இவளுக்கு அடிவயிற்றில் எதோ துடிப்பது போல இருந்தது. இந்த தொடர்துடிப்பு இவளது இறுக்கி மூடிய கண்களைத் திறக்கச் செய்தது. கண் திறந்தாள். விடிந்திருந்தது. வெளிச்சம் பால்போல் பரவியிருந்தது. இவளுக்கு நினைவு பளிச்சிட்டது. “ஆஹா இன்று பெண் மருத்துவரை சந்திக்க தேதி வாங்கியிருக்கிறோம். சிசுவின் வளர்ச்சிநிலை அறிந்து அதை பராமரிக்க செய்ய வேண்டியவை அறிந்து கொள்ள வேண்டுமே” என்று துள்ளி எழுந்து இவனை எழுப்பினாள்.
No comments:
Post a Comment