Monday, 26 November 2018

பிறிதின் நோய்


பிறிதின் நோய்
-           ஜனநேசன்

விபத்தில் விழுந்து பட்ட வலியினை விட விசாரிப்பின் வலி அதிக ரணமாக இருந்தது. நேரிலும், தொலைப்பேசியிலும் இவரிடம் விசாரிப்பவர்களிடம் ஆதியோட அந்தமாக விவரித்து சொல்வது இவருக்கு சள்ளையாக இருந்தது. எனினும் அவர்கள் இவர் மீதான அன்பாலோ, அக்கறையாலோ சமூகக்கடமை காரணமாகவோ விசாரிக்கிறார்கள். அவர்களிடம் பாராமுகமாகவோ சிடு சிடுப்பாகவோ இருப்பது பண்பில்லை என்று தனக்குத் தானே தேற்றிக் கொள்வார்.
விபத்தில் சிக்கிய இவரை யாரும் பார்க்காமலோ, கேட்காமலோ இருந்திருந்தால் அந்த சமூக ஒதுக்கல் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்?. இத்தகைய புறக்கணிப்பை இவரால் தாங்கிக் கொள்ள முடிந்திருக்குமா….?
வருகிறவர்கள் எல்லாம் பழங்கள், ஹார்லிக்ஸ் என்று கொண்டு வந்து குவிப்பது இவருக்கு கூச்சமாக இருந்தது. இவராக உண்ணவோ, குளிக்கவோ, உடுக்கவோ இயலாத நிலையில் இவரது மனைவியே இவருக்கு வலது கையும், இடது கையுமாக இருந்தார். இந்த இடர்ப்பாட்டில் இவரை விசாரிக்க வருபவர்களிடம் முகம் சுளிக்காமல் பேசி, அவர்களுக்கு தக்கபடி சர்க்கரை குறைச்சோ, இல்லாமலோ, அளவாகவோ, டீயோ, காபியோ, ஹார்லிக்ஸோ கொடுத்து உபசரிக்கும் இவரது மனைவிக்கும் பெருஞ்சிரமம்!
மனைவி என்ன நினைக்கிறாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். வேலைக்காரம்மாள் கேட்டாள் “ஏம்மா நம்ம சாருக்கு எம்புட்டு ஆளுக பழக்கம்! பழங்களும், ஹார்லிக்ஸ{ம் வாங்கிவந்து வரிசை வரிசையா வந்து விசாரிச்சிட்டுப் போறாங்க..”
“ஆமாம், லட்சுமி, இத்தனைக்கும் நாங்க யாருக்கும் ஒன்னும் சொல்லலை யாரு மூலமோ கேள்விபட்டு, வந்தவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லியே இவ்வளவுபேரு வந்தாங்க. சொல்லியிருந்தோம்னு வச்சுக்க, டீ, காபி, போட்டும் பாத்திரம் கழுவியும் உன்னால தீராது” நீ வீட்டுக்குப்போகும் போது பழங்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் எடுத்து வச்சிருக்கேன், மறக்காம எடுத்திட்டுப்போ பிள்ளைகளுக்கு கொடு” என்று பெருமிதமாகச் சொன்னது இவருக்கு ஆறுதலாக இருந்தது.
இதெல்லாம் இருக்கட்டும் ஒருபக்கம் விசாரிக்கவந்தவர்கள் ஒவ்வொருத்தரும் மருத்துவராக மாறி யோசனைகள் சொன்னதை இவரால் தாங்க முடியவிலலை! ஒருத்தர் சொன்னார் “நம்மூரு சந்தைப் பேட்டையில நுடவைத்தியசாலைக்குப் போங்க. ஒரு முட்டைக்கட்டு, ஒரு மாவுக்கட்டு, ஒரு தைலக்கட்டு, மும்மூணு ஒன்பது நாள்ல எல்லாம் சரியாயிரும். மிஞ்சிப் போனா ஒரு ஆயிரம் அல்லது ஆயிரத்தைனூறு செலவு ஆகும்!”
இன்னொருத்தர் சொன்னார் “புத்தூருக்கு போனா ஒரே கட்டுல எலும்பு முறிவு சேர்ந்திடும்!”
இன்னும் சிலர் “அந்த எலும்பு முறிவு மருத்துவரை பாருங்க அருமையா பார்ப்பார். மருத்துவ விடுப்பு சான்று கூட அவரே தந்திருவார் மருத்துவ காப்புறுதியிலேயே செலவை சமாளிச்சிறலாம்”
“அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு போங்க. காசு செலவானாலும் நல்ல ட்ரீட்மெண்ட்”
சிடு சிடு வென்று வேலை வேலைன்னு எவரிடமும் முகம் கொடுத்து பேசாது திரிந்தவர் இவற்றை எல்லாம் சிரித்த முகத்தோடு சகிக்கப் பழகிக் கொண்டார்.
இன்னொரு நண்பர் பேசியதை இவரால் பொறுக்க முடியவில்லை. அவர் கேட்டார். உங்களுக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி? என்ன கிரகதிசை? இதுக்கு என்ன பரிகாரம்னு உங்க ஜாதகத்தை பாருங்க. “உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம்!”.
இவர் சொன்னார், “எனக்கு கெட்ட நேரமில்லை. நல்ல நேரம் தான்! என் பைக்மீது பக்கவாட்டில் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் எனது வண்டி மேலே போய் கீழே விழுந்ததில் நானும் மேலே போய் கீழே விழுந்த போது தலையில் அடிபடாதிருக்க வலது கை ஊன்றினேன். வலது கை எலும்பு முறிவுதான். தப்பித்துக் கொண்டேன். தலையில் அடிப்பட்டிருந்தால்… பேரபாயம் அல்லவா நேர்ந்திருக்கும்! அந்த போக்குவரத்து நெரிசலான ரோட்டில் ஒரு வாகனமும் வராமலிந்தது நல்ல நேரமல்லவா” என்றார் இவர். அவரோ “ஆமாம், கெட்ட நேரத்தில் ஒரு நல்ல நேரம்” என்றார்.
“ஆமாம் எதிர்கொள்ளாத கொடுரத்திற்கு எதிர்கொண்ட துயரம் தேவலை தான்!” என்றார் இவர்.
ஆமாம், அந்த ஆட்டோ டிரைவரை என்ன செஞ்சீங்க?” ஆட்டோ டிரைவரை என்ன செய்ய? அவர் என் மேலே மோதனுமுன்னா ஓட்டி வந்தார்? ஏதோ கவனக் குறைவிலே நடந்திருச்சு. அவரு கிட்ட நஷ்டஈடா வாங்க முடியும்.அவரு பதறிப் போய் அந்த ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்திட்டு நடுங்கிப்போய் நின்றார். நான் அவரை போகச் சொல்லிட்டேன்.” “அப்போ அவருக்குத்தான் நல்ல நேரம்!” என்றார் நண்பர்.
இவர் அடிக்கடி மனதுள் வேண்டிக் கொள்வார் எந்த ஆஸ்பத்திரியிலும் இருந்து சிகிச்சை பெறாத வாழ்க்கை வேண்டும். இவர் அடுத்தவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது கூட “நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க!” என்றே சொல்லுவார்.
ஆனால் இன்று மருத்துவமனையில் தங்கி அறுவைச்சிகிச்சை செய்யும் நிலை வந்துவிட்டதே.
அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சக்கரையும் இரத்த அழுத்தமும், இதய இயக்கமும் இயல்பாகவே இருந்தன. கவலை இல்லை. மயக்க மருந்தும் சோதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்றார்கள். இவரது இரு புதல்வர்களும் உடன் வந்தார்கள். இளைய மகன் ஒரு மருத்துவர் என்ற ரீதியில் மருத்துவமனை நிர்வாக அனுமதியுடன் அறுவை சிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மயக்க மருந்து நிபுணர் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய வலது கையில் மயக்க ஊசி செலுத்தினார். பத்து நிமிடத்திற்குள் கை மரமரத்து போகவேண்டும். ஆனால் மரமரப்பு ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இவரது கையைத் தொடுவதையும், கிள்ளும்போது ஏற்படும் வலியையும் சொன்னார். ஒருவேளை மயக்கநிலை தாமதமாக வரலாம். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள். பத்து நிமிடங்கள் நகர்ந்தன. அவர்கள் பேசிக்கொள்வதெல்லாம் இவருக்கு கேட்டுக் கொண்டிருந்தன. இவர் சிரித்தார். சுற்றியிருந்த மருத்துவர்கள் எல்லோரும் அதிர்ந்து என்னவென்று விசாரித்தனர். “எனது மூத்த மகனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்தபோது இதேபோல் மயக்க நிலை ஏற்படத் தாமதமானது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் தூக்கம் வராமல் முணங்கிக் கொண்டிருந்தான். எங்களது உடல்வாகே மயக்கத்துக்கு எதிரானது போலிருக்கு” என்றார் சிரித்தபடி.
அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணருடன் கலந்தார். அறுவை சிகிச்சை செய்யும் பகுதியில் மட்டும் மரமரத்துப் போவது மாதிரி இன்னொரு முறை மயக்க மருந்து கொடுத்துப் பார்க்கலாம்” என்றார். மயக்க நிபுணர் அறுவை சிகிச்சை நிபுணர் மறுதலித்தார். “ஒருவேளை மிகக்கூடுதலான மயக்கமாகி எதிர்வினையாகிவிட்டால் என்ன செய்வது. ஆகவே இந்த அறுவை சிகிச்சையை நாளைக்கு வைத்துக் கொள்வோம். இன்னொரு முறை முன்சோதனை செய்து கொள்வொம்” என்று இவரது மருத்துவர் மகன் கருத்து தெரிவித்தார். அறுவை சிகிச்சை தாமதமாவது கண்டு இவரது பெரிய மகனும், மனைவியும் நெருப்பின் மீது நின்றது போல் தவித்துக் கொண்டிருந்தனர். இளைய மகன் வெளியில் வந்து விவரம் சொல்லி ஆறுதல் படுத்திவிட்டு உள்ளே வந்தார். அறுவைசிகிச்சை தள்ளிப்போடப்பட்டது.
மருத்துவர்களுக்கிடையே மனக்கசப்பும் கருத்து மோதலும் வெளிப்பட்டது. “நோயாளியின் உறவினரை அறுவை சிகிச்சைக் கூடத்திற்குள் அனுமதித்திருக்கக் கூடாது. அவர் இல்லாமல் இருந்தால் இந்நேரம் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும்” என்று மயக்க மருந்து நிபுணர் கடுப்போடு சொன்னார். “அதை விடுங்க, நோயாளிக்கு மயக்கநிலை ஏற்படாமல் எப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்! நோயாளியின் உடல் ஒத்துழைக்காமல் எதிர்வினை காட்டினால் என்னாவது. ஆகவே தான் இன்னொரு முறை மயக்க சோதனையை தெளிவாகச் செய்த பின் அறுவைச்சிகிச்கை மேற்கொள்வோம் என்று முடிவெடுத்தோம். இன்னொரு விஷயம் நோயாளியின் மகன்கள் இருவரும் அரசு உயரதிகாரிகள் சிகிச்சையில் ஏதாவது சிக்கல் என்றால் நாம் அதை சமாளிக்க முடியாது.
இந்த பேச்சுக்கள் எல்லாம் இவரது காதில் விழுந்தன. இவருக்கு இப்போது அரை மயக்க நிலை. கைவலி ஒருபுறம், கருத்து வலி ஒரு பக்கம். முள்ளிடை மலர்ந்த நெருஞ்சி போல விழித்தும் விழியாத கண்களால் மலங்க மலங்கப் பார்த்தார். மகன்கள் இருவரும் கூடிப் பேசினர். “அப்பாவை வீட்டிற்கு அழைத்துப் போகிறோம். நாளைக்கு காலை வருகிறோம்” என்று சொல்லி இவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
அப்புறம் இளைய மகன் படித்த ஒரு அறக்கட்டளை மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மருத்துவ மனையில் கடல்போல் நோயாளிகள் கூட்டம் அலை மோதியது. பல மாநிலத்தவர்கள் பல மதத்தவர், பல சாதியினர், பல மொழி பேசுபவர்கள் அவரவர் அடையாளங்களுடன் தென்பட்டனர் நோய்மை முகங்களில் நம்பிக்கை பூசியபடி! நோய்மைக்கு சாதி, மத மொழி, பேதங்கள் உண்டா என்ன? அம்மருத்துவ மனையில் பூரண மயக்கமருந்து கொடுத்து அறுவை சிகிச்சை முடிந்தது. இரண்டுநாள் கவனிப்பிலே எலும்பு முறிவுக்கு வைக்கப்பட்ட உலோகப்பட்டை சரியாக பொருந்தியுள்ளதை எக்ஸ்ரே மூலம் அறியப்பட்டது. கைவலி இல்லை. தொட்டில் கட்டி அசைக்காமல் இருந்தது சள்ளையாக உணர்ந்தார். மூன்றாம் நாள் உடலுறுப்பு இயக்க பயற்சி தரப்பட்டது. இப்பயிற்சியில் தான் கூடுதல் வாதையை உணர்ந்தார். எலும்பு முறிவின் போது ஏற்பட்ட வலியை விட உடலியக்க சிகிச்சைக்கான வலி தாங்க முடியாமலிந்தது. நோய்மையை விட சிகிச்சை வலிமிக்கது என்ற பழமொழி நினைவுக்கு வந்து கிச்சு கிச்சு மூட்டியது.
கைகட்டோடு மருத்துவமனை கழிவறைக்கு போவது அளப்பரிய அவஸ்தையாக இருந்தது. ஒவ்வொரு தனிவார்டிலும் ஒரு சிறிய அறையிலிலேயே கழிக்கவும், குளிக்கவும் அமைப்பிருந்தது. ஒருவர் மட்டுமே உள்ளிருக்க முடியும். உதவியாளர் உள்ளே நுழைந்தால் படுசிரமம். இவருக்கு இயற்கை உந்துதலைக் கழிக்க அச்சலுத்தியாக இருந்தது. கழித்து தானே ஆகவேண்டும். இவர் மட்டும் அங்கலாய்ப்புடன் உள்ளே நுழைந்து வேகமாய் கதவை சாத்தினார். கதவிடுக்கில் மாட்டிய பல்லி ஒன்று துள்ளி விழுந்தது. வால் மட்டும் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தது. பல்லி தப்பித்து ஓடி நவீன கழிவு கோப்பையில் இடுக்கில் ஒளிந்து கொண்டது. சுவரேற இறங்க உதவும் வால் அறுந்தாலும் பல்லி இயங்குகிறது! நாளா வட்டத்தில் வாலும் வளர்ந்து விடுகிறது. மனிதனுக்கு உறுப்பு போனால் போனதுதான். அவன் தான் வேறுவேறு உபயங்கள் உபகரணங்கள் உதவியால் உபாதைகளோடு இயங்க வேண்டியிருக்கிறது.
நல்லவேளை, மேற்கத்திய கழிவு கோப்பை கொஞ்சம் சிரமக் குறைவோடு இயற்கை உந்தலைக் கழித்தார். துணைவியார் வெளியிலிருந்து நான் வரட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். இவர் எல்லாம் முடித்து விட்டேன் என்றதை துணைவியார் நம்பாமல் பார்த்தார்.
வலது கை பாதிக்கப்பட்டதால் கழிவறை விஷயத்தில் பிரச்சினை இல்லை. சாப்பிடும் போது மட்டும் மனைவி ஊட்டுவார். சிலசமயங்களில் மனைவி பிசைந்து வைத்ததை ஸ்பூனில் எடுத்து சாப்பிடுவார். இடது கை அடிபட்டிருந்திருந்தால் என்ன செய்வது? என்ன, உண்பதும், கழுவுவதும் ஒரே கையில் தான்!.
ஆமாம், நிரந்தரமாய் இரு கைகளும் பயன்படுத்த இயலாதவர்கள் என்ன செய்வார்கள்? ஆக கையில் இடது என்ன வலது என்ன? அது வாழ்வதற்கு பயன்படுவதாக இருந்தால் சரி! என்று சிந்தனைகள் ஓடின.
கை இயக்க பயிற்சிதான் மிகுந்த வலியாக இருந்தது. ஏறக்குறைய இருபது நாள்கள் கட்டுப் போடப்பட்டு இயங்காத நிலையில் அசைவற்று இருந்த விரல்களும், கையும் விடைத்து இருந்தன. விரல் இணைப்புகள், மணிக்கட்டு, முழங்கை வலது தோள்பட்டை என ஒவ்வொரு பகுதியையும் அழுத்தியும் மெழுகுபத்து போட்டும், மின்னதிர்வு கொடுத்தும் மசாஜும் செய்யப்பட்டது. வலி கடுமையாக இருந்தது. தாங்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு முனங்கினார் நெளிந்தார். வலது கை எலும்புகளையும், நரம்புகளையும் கலைத்து பின் இணைதத்துபோல் இருந்தது. பிரிச்சு மேஞ்சிருவேன் என்பார்களே இது அது தானோ என நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டார். பற்கள் இறுகி வாய்கதவுகளை இறுக மூடியிருந்தார். அம்மா பிரசவிக்கும் போது கூட இவ்வளவு கொடுமையான வலியை அனுபவித்திருக்க மாட்டார். உடலியக்க சிகிச்சை முடிந்ததும் அந்தக் கூடத்தில் நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருந்தார். மனைவி ஆறுதலாக தோளைத் தொட்டபடி இருந்தார்.
அடுத்த அறையில் ஒரு சிறுமி அழும் சத்தம் கேட்டது. மெல்ல கண் திறந்து பார்த்தார். தொடை எலும்பு முறிந்து கட்டுப் போடப்பட்ட சிறுமிக்கு காலசையச் செய்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் மருத்துவர். இன்னொரு பெண்ணுக்கு இடுப்பெலும்பு முறிந்தற்காக தொடையையும் இடுப்பையும் அழுத்திபிடித்து மெல்ல மெல்ல அசைக்கச் செய்தார் பயிற்றுநர். அந்தப் பெண் வலிதாங்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு விம்மினாள். பார்க்கவே மனதை பிசைந்தது. இதை எல்லாம் பக்கத்து அறைக்குச் சென்று பார்த்து வந்து மனைவி சொன்னார்.
ஆண்கள் கூடத்தில் விபத்தில் முழங்கால் மூட்டு விலகிய வாலிபர் ஒருவரை குப்பற படுக்க வைத்து காலை பின்பக்கமாகச் சாய்த்து சாய்த்து நிமிர்த்தி, அசைத்து இறுகிய தசைக்கும் மூட்டுக்கும் தளர்வான இயக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார் பயிற்றுநர். அந்த வாலிபர் அம்மா அம்மா வென்று முனங்கி அரற்றினார்.
இப்படி விதவிதமான எலும்புமுறிவு நோயாளிகள், அவர்களின் வலிகளைப் பார்த்தார். இவரது வலி வலியாகத் தெரியவில்லை. மெல்ல மனைவி துணையின்றி எழுந்து நின்று வலது கையைத் தூக்கி மெலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்தபடி நடந்தார். இவர் முன் பெரும் பெரும் வலிகள் கோடுகாளக நீண்டு நீண்டு நின்றன!. இவர் மிக மிகச் சின்ன வலிக்கோட்டின் தொடக்க புள்ளியாகத் தெரிந்தார்.
“வலிகள் இல்லாத உலகம் சாத்தியப் பட வேண்டும்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.


No comments:

Post a Comment