செம்புக்குள்
முளைவிடும் விருட்சம் (ஜனநேசன்)
எட்டுமணிக்கே வெயில் சுள்ளென சுட்டது
வியர்வைபொங்க மெதுவாக
பிரியா தெருவில் நடந்தாள் .வலது தோளில் சாப்பாட்டு பை மெல்ல ஊஞ்சல்
ஆடியது..வயிற்றில் எட்டுமாத சிசு உதைத்தது.தொட்டிமீன் போல் அங்குமிங்கும்
நகர்ந்தது.இதை உட்கார்ந்து ரசிக்க நேரமில்லை. வேகமாக நடக்க இயலவில்லையே என்ற
வருத்தமே அவளது வேகத்துக்கு தடை போட்டது.நத்தை தனது உமிழ்நீரில் வழுக்கி நகர்வது
போல் இவள்தனது சிந்தாத கண்ணீரின் வைராக்கிய விசையில் நகர்ந்தாள் . வெயிலுக்கு
உறுத்தாதவெளிர் நிற பருத்தி ஆடை தான்,
இருந்தும் வெயிலின் ஊடுருவலைத் தடுக்க
முடியவில்லை ..வயிற்று சுமையை வெகு சீக்கிரம் இறக்கி விடுவாள்.வாழ்க்கை சுமையை
எப்போது இறக்கி வைக்க, கணவன் திரும்ப
வரப்போகிறான்...? வயிற்றுபாரத்தை மறைக்க முடியாது. மனப் பாரத்தை மறைத்து புன்னகை
பூசிய முகத்தோடு நடக்கிறாள் .முன்பெல்லாம்
பத்து நிமிடத்தில் பெருங்களத்தூர்
மின்ரயில் நிலையத்துக்கு நடந்திடுவாள் .இப்போதெல்லாம் இருபது நிமிடங்கள் ஆகிறது
.’பொறுத்துக்கடா செல்லம் ,அம்மாவுக்கு வலிக்குது.இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா
ரயில் ஏறிருவேன் .அப்ப நீ விளையாடு .நீ
இருக்கிற உலகம் உருண்டைன்னு சுத்தி சுத்தி வா, சூரியக் குஞ்சு .கொதிக்காத சூரியக்
குஞ்சு! கொஞ்சி விளையாடும் தெய்வக் குஞ்சு’ என்று சிசுவிடம் பேசிக் கொண்டே தூரத்தையும் ,வலி துயரத்தையும் கடக்க
முயன்றாள் .
நிலைய
வாசலுக்கும் நடைபாதைக்கும் இடைவெளியில்
ஒரு கழைக்கூத்தாடி மேளம் கொட்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தை தளர் நடையோடு கையைக் காலை ஆட்டி ஆடுவது போல் நடந்து சென்றது.” “மஹா
ஜனங்களே,மான்குட்டி டான்சை பாத்திங்கோ ...இப்போ அழகு தேவதை ஒன்னு நெருப்பு வளையத்தில்
நுழைந்தாடுவதைப் பாருங்கோ.. .என்று மடமடவென்று மேளத்தை தட்டிவிட்டு இரண்டடி
விட்டமுள்ள வளையத்தில் நாலாபுறமும்
பந்தத்தில் தீ பொருத்தினான் ..இதற்கிடை யில்
அந்தப் பெண் தனது இடுப்பிலுள்ள ஒருவயது குழந்தையை காசு போடுவதற்காக விரிக்கப்பட்ட துணியில்
உட்கார வைத்த்தாள் .ஹே ..ஹே ..என்று சத்தம் எழுப்பி எல்லாருடைய கவனத்தை ஈர்க்க
கைதட்டி ,கைகால்களை விரித்தும் மடக்கியும் சத்தம் கொடுத்தாள் .பிரியா கவனித்தாள்
,ஒல்லியான அவள் வயிறு சற்று மேடாக இருந்தது.அவள் உடலை பின்னோக்கி அரைவட்டத்தில்
வளைத்தாள் . . முன்வயிறு மேடாக தெரிந்தது .பெரிய
கல்வைத்த மோதிரம் போல் இருந்ததுஅவளது பின்னோக்கி வளைந்த இடுப்பு..! பிரியாவுக்கு
மனதை பிசைந்தது .அவளுக்கு நாலு மாசமோ
,ஐந்து மாசமோ ..... .கண்ணீர் முட்டியது .கைப் பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய்
எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் .அந்த பெண் குனிந்து பிரியாவின்
முகத்தையும்,வயிற்றையும் பார்த்தவுடன்
வானத்தை நோக்கி வணங்கிவிட்டு பிரியாவின் வயிற் றருகே கைகளைக் குவித்தாள் .பிரியாவால் அங்கு நிற்க
இயலவில்லை ,முந்தானையால் வயிற்றை மூடி வேகமாக நகர்ந்தாள்..கழைக்கூத்தாடி மேளத்தைக்
கொட்டி “மகராஜ்மாரே எல்லாம் வகுத்துக்குதான்
இந்த பாடு! .இரக்க மனசுக்காரங்க உதவுங்க சாமிகளா...”என்று சொல்ல அந்த இரண்டு வயது
குழந்தை தனது காலையும் ,கையையும் ஆட்டி ஆடுவதுபோல் பாவித்து தட்டேந்தி
கூட்டத்தாரிடம் சென்றது.
பிரியா நடைமேடைக்கு
வரவும் ,கடற்கரைக்குச் செல்லும் மின்ரயில்
வந்தது.ஏறி உட்கார்ந்த பின்தான் சீரான சுவாசத்தை உணர்ந்தாள்.’தான் தான் கருமாயப்
படுகிறோம் என்றால் தன்னைவிடவும் மோசமாக சிரமப் படுபவர்களும் இருக்கிறார்களே.....’
மின்வண்டி காற்றாடி யின் குளிர்ந்த காற்று இதமாக இருந்தது. புறப்பட்ட வண்டியின் தட
தட சத்தம் இவளோட இதயத்துடிப்பையும் சிசுவின் துடிப்பையும் ஒன்றிசைந்து ஒலிப்பதாக உணர்ந்தாள். அனிச்சையாக வயிற்றைத்
தடவினாள் .பெரும் குடத்தை தடவுவதுபோல்
இருந்தது .அவளுக்கு தான் வணங்கும் பெரிய பித்தளைச் செம்பு நினைவுக்கு
வந்தது.! கண்ணீர் பொங்கி வழிந்தது .முந்தானையை சரிசெய்யும் வேகத்தில் துடைத்துக்
கொண்டாள்.
பிரியாவும்
,சுரேஷும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்தனர்.சாதி ஏற்ற
தாழ்வு அவர்களது எதிர்கால வாழ்வுக்கு அனுமதிக்காது என்று அறிந்து தங்களைக் தாமே
கட்டுப்படுத்த முயன்றனர்.அவர்கள்
ஒருவரையொருவர் பார்க்க தவிர்த்தாலும் மனது கட்டுப் படவில்லை.இந்த சமூகத்தை
எதிர்த்து வாழ்ந்து பார்ப்போம் என்று இணைந்தனர்.சுரேஷ் கல்லூரியில் வளாகத்
தேர்வில் பிரபல மென்பொருள் நிறுவனத்தால் தேர்வு செய்யப் பட்டான்.சுரேஷ் பணியில்
சேரக் கிளம்பும் போது பிரியாவும் அவனுடன் வருவதாக புறப்பட்டுவிட்டாள்.அவன் தங்குமிடம்
எல்லாம் ஏற்பாடு செய்துகொண்டு மூன்று நான்கு மாதங்களில் வந்து அழைத்து செல்வேன்
என்பதை ,அவள் ஏற்கவில்லை. தன்னை தனது குடும்பத்தார் வேறு ஒருவனுக்கு மணமுடிக்கத்
திட்டமிடுகின்றனர் .தன்னை விட்டுச் சென்றால் வாழ்வை முடித்துக் கொள்வேன் என்று
அழுது அடம்பிடித்தாள். அவன் வேறு வழியின்றி அவளை அழைத்துச் சென்றான். அவளது
குடும்பத்தார் அவர்களை முப்பத்திரண்டு திசைகளிலும் தேடினர்.பிடிக்கமுடியா நிலையில்
காவல்துறை மூலம் ஆள்கடத்தல் புகாரில் தேடினர்.நண்பர்கள் மூலம் அறிந்து மாவட்டக்
காவல்துறை கண்காணிப்பாளரிடம் சரணடைந்தனர் .அவளே அவனுடன் விரும்பிச் சென்று மணமுடித்துக் கொண்டேன்.,மணமான எங்கள் உயிருக்கு
பாதுகாப்புக் கொடுங்கள் என்று மனு கொடுத்து காவல்துறை பாதுகாப் போடு மாவட்டத் தலைநகரில் நண்பர்கள் உதவியோடு ஒரு
வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு
பாதுகாப்பாக பலபிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தூர இருந்து கண்காணித்து
வந்தனர்.இந்த பாதுகாப்பு வளையத்துள் பிரியாவின் அப்பா வகையினர் ஊடுருவ முடியவில்லை
!
தந்தை முகம்
காணாமல் வளர்ந்த மகனுக்கு சாதி வெறியர் களால் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து வருமோ
என்று அஞ்சி அம்மா உயிரை விட்டாள் ..
போலீஸ் பாதுகாப்போடுதான் அம்மாவின் இறுதிச் சடங்குகள் நடந்தன.அம்மாவின் காரியங்கள்
முடிந்தவுடன் அக்கா, அம்மா தெய்வமாக நினைத்து
வணங்கிய பித்தளை செம்பைக் கொடுத்து ,”அந்த
சாதிக்காரங்க நோட்டம் பார்த்துகிட்டு சுத்திசுத்தி வர்றாங்க ,விரசா, கண்ணு காணா
சீமையில்போய் பதுவுசா ,கருத்தா
பிழைச்சுக்குங்க கண்ணுகளா..! .அம்மாவும் ,அப்பனும் தெய்வமா துணை நின்னு
காப்பாத்துவாங்க! ,அவங்களை மறக்காம கும்பிட்டு வாங்க கண்ணுகளா....” என்று அக்கா
கண்ணீர் பொங்க பயபக்தியோடு அவர்களிடம் செம்பைக் கொடுத்தாள். காவல்துறையின்
அனுமதியுடன், சென்னை யில் வக்கீலாக இருக்கும் பால்ய நண்பன்பாலு உதவியுடன்அவர்களது ஊர்மக்கள் கால்படாத பெருங்களத்தூரில் வீடு பார்த்து
குடியேறினர்.முதல் நாளில் அந்த செம்பில் நிறை நீர் நிரப்பி கும்பிட்டுத் தனிக்
குடும்பத்தைத் தொடங்கினர்.
பிரியா அந்த
செம்பு பற்றிக் கேட்டாள்..இந்த செம்பு எனக்கு அப்பாவாக மட்டும் இருந்தது .இனிமேல் எனக்கு அம்மாவும் ,அப்பாவும் ,நம்ம
குலதெய்வமும் இதுதான்! என்று
மெய்சிலிர்த்து சொன்னான் சுரேஷ் . அவள்
புரியாமல் கேட்டாள் .. சுரேஷ் நிதானித்து உணர்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு சொன்னான்.
“நான் நாலு
மாத சிசுவாக அம்மா வயிற்றில் இருக்கும் போது ஊருக்குள் நடந்த சாதிச்சண்டையில் எங்கள் மாமாவை வேற்று சாதிக்காரர் அரிவாளால்
வெட்டப்போகையில் அப்பா போய்த் தடுத் திருக்கிறார்
;அரிவாள்வெட்டு அப்பா மீது பட அப்பா அந்த
இடத்திலே இறந்திட்டாராம்.அப்பா இறந்த போது நான் நான்கு மாத சிசு இதை எங்கூரு வழக்கப் படி
நிறைசெம்புல எல்லார் முன்னால நாலு முல்லைப்
பூவை போட்டு குறிப்பால சொல்லியிருக்காக. எங்க அம்மா வையும் ,நான் பிறந்த பின்னும்
எங்க சொந்தக் காரங்கதான் உதவி செஞ்சாங்க.கொஞ்சம் எனக்கு விவரம் தெரிஞ்ச பின்னால
ஒருநாள் எங்க சொந்தக் காரங்க எல்லாம் வந்து இந்த செம்பு எங்க அப்பாவின் நினைவா
கும்பிடுவதாக சொன்னாங்க.!இந்த செம்பை கும்பிடும்போது எனக்கு ஏற்பட்டமாதிரி யாருக்கும் இப்படி ஒரு
கொடுமை நேரக்கூடாது.சாதிவெறி இல்லாத மனுசனா வளருனும்னு உறுதியோடு தான் நான் வளர்ந்தேன்.நம்ம கல்யாணத்தில் கூட சாதி
பிரச்சினை வந்திரக் கூடாதுன்னுதான் தயங்கினேன்.நீ பிடிவாதமா நின்னு என்னை
ஜெயிச்சிட்டே ! ஆனா உங்க அப்பாவும் அவரோட ஆளுக மிரட்டலில் தன் மகனை வாரிசு இல்லாம கொன்னுருவாங்கலோ..தந்தை இல்லாம
வளர்த்த பிள்ளைக்கு சாதியினால இன்னொரு ஆபத்தா ...என்று அம்மா புலம்பி புழுங்கிச்
செத்தார்.....”சொல்லி தொண்டை உடைந்து குமுறினான்
இவளும் அவனைக் கட்டிப்
பிடித்து ,என்னாலதனே உங்களுக்கு இவ்வ ளவு பிரசின்னை ..? இனி எந்த ஜென்மத்திலும்
எங்க வீட்டரையோ ,அந்த
சாதிக்காரங்களையோ நினைச்சுகூட
பார்க்க மாட்டேன் . .உங்களையும் ,உங்களைச் சேர்ந்தவரையும் எந்த சூழ்நிலையிலும்
விட்டுத்தர மாட்டேன்!. என்று விம்மி விம்மி அழுதாள் .!
காவல்துறையினரின் பாதுகாப்போடு இருந்தபோது இணையத்தில் வேலை தேடியபோது இந்திய
ராணுவத்தில் மின்பொறியா ளர் பணிக்கு கேட்பு வந்திருந்தது விண்ணப்பித்தான்..இதற்கான
இணையதேர்வுக்கு அழைப்பு வந்தது.கலந்து கொண்டான்.தெரிவானதாக பணி ஆணை வந்தது .பிரியாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி
டேராடூனில் பணியில் சேர்ந்தான் .பயிற்சி முடிந்ததும் எங்கு பணியமர்த்தப் படுகிறானோ
,அங்கு குடியிருப்பு வசதி தரப்படும்.அங்கு போய்விடலாம் .அதுவரைக்கும் நண்பரின்
உதவியால் ஒரு வேலை பார்த்துக் கொண்டு இவள்
சென்னையிலே இருப்பது என்ற முடிவில் சுரேஷ் வடக்கே,இவள் தெற்கே என்று
இருக்கிறார்கள்.
சுரேஷ் பணியில் சேர்ந்த
மறுவாரமே இவள் கருவுற்ற செய்தியைச்
சொன்னாள் . வயிற்றில் குலக்கொழுந்து
வளரும்போது ,கணவனும் மனைவியும் தனித்தனியாக இருக்க வேண்டிய தாயிற்றே ..என்ற
வருத்தம் இருவரையும் அலைக்கழித்தது . என்ன செய்வது? ஒருவருஷம் தானே சமாளித்துக்
கொள்வோம்...என்று ஒருவருக்கொருவர் ஆறுதல்
சொல்லிக் கொண்டார்கள்.டேராடுனில் ஆறுமாதம் தான் பயிற்சி.பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து ராணுவ பாதுகாப்பு மையங்களிலும்
பதினைந்து நாட்கள் வீதம் சிறப்பு
பயிற்சியாம். .வடமாநிலங்களில் இறுதியாக தற்போது
காஸ்மீரில் பயிற்சி என்று சொன்னான்.இதற்குபின் தென் மாநிலங்களில் பயிற்சி.
,அனுதினமும் இரவு, இணைப்பு கிடைக்கும்போதெல்லாம் வீடியோ அழைப்புகளில் பேசிவிடுவான்
..பயிற்சியின்போது வழங்கப் படும் ஊதியத்தில் பாதியை அவள் பெயருக்கு அனுப்பி
விடுவான். வீடியோவில் என்ன பேசினாலும் நேரில் இருந்து அவளோடு உறவாடி ,வலியின்போது,
,அயற்சியின்போது கணவன் பக்கத்தில் இருந்து
ஆறுதல் சொல்வது போலாகுமா....துடித்து அங்கும்மிங்கும் அசையும் சிசுவுக்கு அப்பா வெளியிலிருந்து
கொடுக்கும் முத்தத்தில் அவளுக்கு வலியெல்லாம் பறந்துவிடாதா ...
எட்டு முடிந்து
ஒன்பதாம் மாதம் பிறக்கப் போகுது.இன்னும் பத்து நாளோ பதினைந்து நாளோ குழந்தை
பிறந்து விடலாம்.இவள் வேலை பார்க்கும் தம்பு செட்டித் தெரு வக்கீல் அலுவலகத்தில்,”
ஓய்வு எடுத்துக் கொண்டு ,பிரசவம் ஆனப்புறம் உங்களுக்கு எப்போ முடியுதோ அப்போது
வாங்க” என்கிறார் மூத்த வழக்கறிஞர் செந்தில்நாதன்.ஆனால் வீட்டில் சும்மா படுத்தே
இருந்தால் கைகால்கள் வலிப்பது போலிரு க்கிறது.அதைவிட மனச்சிலந்தி கவலை வலைகளைப் பின்னி பின்னி
சிந்தனையை முடக்கி ,நிம்மதியை கெடுக்கிற கொடுமை தாங்க முடியவில்லை.
கடந்த பத்து நாளாக சுரேஷிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
அலைப்பேசியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று அறிவிப்பு மட்டுமே. .எல்லைப் பகுதியில்
அனுதினமும் தீவிரவாதிகளின் ஊடுருவல்,சுடல் ,வீரர்கள் கடத்தல்
,முறியடித்தல்,இருபக்க உயிர்ச்சேதங்கள் இப்படியான ஊடகச்செய்திகள் இவளை
வாட்டுகின்றன’ ‘.சுரேஷ் வயிற்றிலிருக்கும் போதுஅவன் தந்தை இறந்தது போல் அவன் பிள்ளை வயிற்றிலிருக்கும் போது அவனுக்கு
ஏதேனும் நேர்ந்திடுமோ... அய்யோ ...அவன் இராணுவத் திற்கு போகத் தயங்கும் போது நான்தானே அவனைப் போகச் சொன்னேன் ...
பயிற்சிக் காலம் தவிர போர்க்களத்தில் வேலை
இல்லை என்றுதானே போகச் சொன்னேன் ...நானே எனக்கு கெடுதல் செய்து கொண்டேனோ...’
இப்படியான எண்ணங்கள் சனி ,ஞாயிறு இரு நாள்களிலும் இவளைக் கடைந்து கண்ணீரைப்
பெருக்கியது. திங்கள் விடிந்தவுடன்
அலுவலகம் போனாலாவது நிம்மதி கிடைக்கும்.பணியில் தன்னை மறக்கலாமென்று தான் இயலாமையோடு வெயிலில் புறப்பட்டாள். அந்த
கழைக்கூத்தாடிகள் கூட கணவனும் மனைவியாய் சேர்ந்தே திரிகிறார்கள் .இன்பமோ ,துன்பமோ
,வலியோ ,சுகமோ பகிர்ந்துகொள்ள வாய்த்திருக்கிறது ...தனக்கு அதுகூட வாய்க்கவில்லையே
என்று சிந்தனை தடதடத்து ஓடிகொண்டிருக்கிறது.பெருங்களத்தூரிலிருந்து எத்தனை
நிறுத்தங்கள் ..எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் ஏறுகிறார்கள் ,இறங்குகிறார்கள்
,பேசுகிறார்கள் ,,,எதையும் திறந்திருக்கும் இவள் கண்கள் உணர்த்தவில்லை!
,கண்களும் உறைந்திருக்க எண்ணங்கள் அடிநீரோட்ட மாக ஓடிக் கொண் டிருந்தன. தானுறைந்தாலும் தன்னுணர்வு விழித்துக் கொள்ளும்
போலும் கோட்டை ரயில் நிலையம் வந்ததும் அடுத்து கடற்கரை நிலையத்தில் இறங்க
தயாராகும் வழக்கம் .தன்னுணர்வுக்கு
வந்தாள்.கடற்கரை நிலையம் வந்ததும் மெல்ல கவனமாக இறங்கினாள் . மெதுவாக கட்டிடங்களின்
நிழல்குளிர்ச்சியிலே நகர்ந்தாள் தேசிய .வங்கி அருகிலுள்ள ஏ டி எம் அறையுள் நுழைந்து
பணம் எடுக்க முயன்றாள் .ஐந்து நிமிட இயக்கத்துக்கு பின் ,தயவுசெய்து உங்களது
வங்கியின் வேறு கிளையை அணுகுங்கள் என்று
தகவல் மின்னியது.எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டு ஐம்பதடி தள்ளியுள்ள அடுத்ததேசிய வங்கி பண எடுப்பறை க்குப் போனாள் .அங்கும் ஐந்து
நிமிடம் காலும் இடுப்பும் கடுக்க காத்திருந்ததுதான் மிச்சம்.திடீர்னு மருத்துவ
மனைக்குப் போகணுமுன்னா என்ன செய்யிறது? கொஞ்ச தூரம் தள்ளி அடுத்த தெருவில் ஒரு
தனியார் வங்கி பண எடுப்பறை இருந்தது நினைவுக்கு வந்தது.வெயிலில் ஊற்றெடு த்த வேர்வை உடலெங்கும் நமநமத்தது எரிச்சலாக
இருந்தது.பல்லைக் கடித்துக்கொண்டு நடந்தாள்.இவளுக்கு முன் ஐந்து பேர் வரிசையில்
நின்றார்கள்.கர்ப்பிணி என்பதறிந்து இவளை பணமெடுக்க அனுமதி த்தார்கள்.இவளுக்கு
கூச்சமாக இருந்தது.முகத்தில் நன்றி மிளிர இவளது அட்டையை செருகினாள்.இந்த எந்திரத்தில்
ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும்.இவள் எடுத்துக் கொண்டு
அவர்களுக்கு நன்றி சொல்லி நடந்தாள். வழக்கறிஞர் செந்தில்நாதனுக்கு இவளது குடும்ப நிலை தெரிந்ததால்
இவளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் இல்லை.
கொடுத்த குறிப்புகளைக் கொண்டு வழக்குரையை பிழையின்றி தட்டச்சு செய்திடுவாள் . இவளிடம்
முக்கிய வழக்கு உரைகளை முன்கூட்டியே
கொடுத்து நிதானமாக தயாரிக்கச் செய்திடுவார் .இடைச்செறுகலாக வாதக் குறிப்பு களைச்
சேர்க்கவேண்டுமெனில் சொன்னவுடன் நொடிப்பொழுதில் முடித்துக் கொடுப்பாள்.ஆகவே
இவளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் இல்லை.
திங்கட்கிழமை எல்லாரும் பரபரப்பாக இருந்தனர் இவள் அலுவலகத்தில் நுழைந்தவுடன் .மூத்தவர்களை
வணங்கி தனது இ டத்தில் கைப்பையை வைத்து விட்டு கழிவறை சென்று முகம்கழுவி வந்தாள் .
இவளுக்கு வேலை ஏதும் கொடுக்கப் படவில்லை.கொண்டு
வந்திருந்த சூடுதங்கு குடுவையிலிருந்த பாலை ஊற்றிக் குடித்துவிட்டு அன்றைய செய்தித்தாளைப்
புரட்டினாள் .காஸ்மீர் எல்லையில் பதற்றம்.தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும்
கடுமையான துப்பாக்கி சூடுகள்.இருபக்க உயிரிழப்புகள் அறியப் பட ,இயலவில்லை.என்று
படங் களோடு செய்தி வந்திருந்தது.அவளுக்கு மயக்கமாக வந்தது.இருக்கையிலே சாய்ந்து
கண்மூடினாள்.வக்கீல்கள் எல்லோரும் நீதிமன்றம் போயிருந்தார் கள்.அலுவலக உதவியாளர்,
பிரியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.சூடாக பால் ஊற்றிக் கொடுத்து
சற்று ஓய்வெடுக்கச் சொன் னார்..பத்து நிமிடம் கழித்து ஒரு ஆட்டோவை வரச்சொல்லி
ரயில்ஏற்றிவிட்டார்.
வயிற்றில்
உறங்கிய சிசு விழித்துக்கொண்டு புரளத் தொடங்கியது.சிசுவை மெல்லத் தடவிக்கொண்டே
கண்ணயர்ந்தாள் ,இறங்க வேண்டிய இடம்
நெருங்க அனிச்சையாக விழித்து இறங்க
தயாரானாள்.வெயில் உச்சத்தில் தகித்தது.கடல் பக்கத்தில் இருந்தும்கூட காற்றைக்
காணோம் !உயரமான கட்டடங்கள் தடுத்து விடுகின்ற னவா...காற்றின் உறுப்புகளான மரங்கள்
குறைந்து போனதா....இந்த வெக்கையில் நடை
தோதுப் படாது.என்று ஆட்டோ பிடித்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
சாப்பிடத் தோன்றவில்லை .வயிற்று
பிள்ளக்காகவாவது தின்றாகவேண்டுமே.குழந்தைக்கு ஊட்டுவது போல் பாவனையில் உண்டாள்.பிள்ளையின்
துடிப்பு அதிகமாக இருக்கிறது .இடுப்பு வலிப்பது போலும் வலிக்காத மாதிரியும் இறுக பிடித்த மாதிரியும் உணர்வு.இன்று மாலையோ
,நாளை காலையோ மருத்துவரைப் பார்க்க சுரேஷின் நண்பரின் மனைவி கமலா அண்ணியை
அலைப்பேசி யில் தொடர்பு கொண்டாள்.மருத்துவர் நாளை பதினோரு மணிக்கு வரச்சொன்னதாக அண்ணி சொன்னாள் .அம்மாவோ ,மாமியாரோ பக்கத்தில்
இருந்தால் தம் அனுபவத்தின் அடிப்படையில் யோசனை சொல்வார்கள் ;கண்ணாக உருத்தாக
கவனித்துக் கொள்வார்கள்.தனக்குத்தான் மாமியாரில்லை . அம்மாவை உதறி வந்து விட்டோம் ;அம்மா வீட்டாரே
எமனாக இருக்கிறார்கள்.அக்கம் பக்கத்தில்
இருக்கிறவங்க தான் தனக்கு எல்லா உறவுகளும்!.உதவும் உள்ளங்களைப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டியது தானே! .இவள் உடல்நிலையைக் கருதி கமலா இரவில் பிரியாவுடன்
தங்குகிறாள் . இம்மாதிரியான சமயத்தில் மனசு தைரியம்தான் சுகப் பிரசவத்திற்கு
உதவும்.உற்றார் உறவெல்லாம் ஆத்மார்த்த ஆதரவுதான் .நம் சுமையை நாம்தானே சுமந்தாக
வேண்டும்! .நாங்க பக்கத்தில் இருக்கிறோம் .உனக்கும் பிள்ளைக்கும் எந்த பாதிப்பும்
வராது என்று தைரியப்படுத்தினாள் . கமலா.இளம்சூட்டில் வெந்நீர்வைத்து இடுப்புக்கு
கீழே ஊற்றிட்டாள் .சற்று இதமாக இருந்தது
பிரியா .உண்டதும் , சுரேஷ்
எண்ணுக்கு முயன்றாள் தொடர்பு
கிடைக்கவில்லை. .பலமுறை தொடர்பு கொண்டாள் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு
கொள்ளவிரும்பவில்லை அல்லது அவரது சாதனம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என்ற
பதில்கள் எரிச்சலூட்டின.ஆனாலும் அவனது முறுவல் பூத்த முகம் அவளது மனதை வருடிக்
கொடுத்தது..அந்த நினைவிலே உறங்கி விட்டாள் .
உடல்
அலுப்பில் கண்ணயர்ந்தாலும் நள்ளிரவில் மனம் விழித்துக் கொண்டது.சிசு புரண்டு
புரண்டு வந்தது அம்மவைப்போலவே.! ...
எல்லையில் இராணுவமுகாமிலிருந்த அதிகாரிகள் கடத்தல்...ராணுவம் மீட்கப் போனதில் இருபக்கமும்
உயிரிழப்புகள் ,உயிரிழந்தவர்கள் யார்
யாரெனத் தெரியவில்லை என்ற செய்திகள் கனவிலும் நினைவிலுமாய் அவளை நிலையில்லாமல்
அலைக்கழித்தது . மங்கலாக சுரேஷின்
முகம்போல் ஓருருவம் இளனகையோடு மின்னி மறைந்தது.எழுவாள் ,உட்காரவும் இயலாமல்
,நிற்கவும் முடியாமல் மீண்டும் படுப்பாள்.விடிந்த பாடில்லை.எப்போது கண்ணயர்ந்தாலோ
தெரியவில்லை.
ஏழு மணிக்கு கமலா எழுப்ப, பிரியா ,கனத்த இமைகளை விடுவிக்க முயன்றாள் .சிசுவின்
துடிப்பை மிருதுவாக சாந்தப் படுத்தி னாள்.அதன் பசி அமர்த்தியாகவேண்டுமே. பைய்ய இடுப்பைப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தாள்.கைப்பேசியை
மினுக்கினாள் .தவறிய அழைப்புகளோ ,குறுஞ்செய்திகளோ அவனிடமிருந்து வந்திருக்கவில்லை
மாறாக இராணுவ முகாம்களில் அலுவலர்கள் கடத்தப்படுவது ,கொல்லபடுவது போன்ற நிகழ்வுகள் நினைவிலாடிக் கொண்டிருந்தன. .கடவுளே சுரேஷ்க்கு எந்த ஆபத்தும்
நேர்ந்திடக் கூடாது.அப்படி நேருமென்றால்
எங்கள் இருவர் உயிரையும் எடுத்துக்கோ....எங்களை வாட்டி எடுக்காதே...’.மனசுக்குள்
குமுறினாள்.கமலா வற்புறுத்தலில் பல்துலக்கி முகம் கழுவி கட்டிலிலே அமர்ந்தாள்
,நீண்ட பின்னலைப் பிரித்து கூந்தல் உதறி எண்ணெய் தடவி மீண்டும் பின்னலிடுவது
அச்சலாத்தியாக இருந்தது. கமலா தந்த இட்டலியை நிதானமாக உண்டாள்.
மணி பத்தரை
ஆகப்போகிறது இன்னும் கால்டாக்சி யைக் காணோமே....என்று வாசலில் நின்று தெருவைப்
பார்த்தாள் .பிரியாவும்மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல வேண்டியவற்றை எடுத்துக்
கொண்டு வாசல் கதவருகே வந்து நின்றாள்.தெரு முனையில்
ராணுவ வாகனம் வந்து கொண்டிருந்தது.மிலிட்டரி வண்டி மாதிரி தெரிகிறதே..என்று கமலா சொல்லி முடிப்பதற்குள் பிரியா ஐயோ சுரேஷ் ,,என்று அலறியபடி சாய்ந்தாள்
இமைக்கும் நொடியில் கமலா ஓடி பிரியாவைத்
தாங்கிப் பிடித்தாள்.மயக்கமுற்ற
பிரியாவின் கால்களின் ஊடாக நிணநீர் வடிந்தது’.அம்மா பனிக்குடம் உடைந்து விட்டது போலிருக்கே’ என்று
கதவை மூடிவிட்டு பிரியாவின் ஆடையை ஒதுக்குவதற்குள் வீரென்று மழலைக் குரல்
தொடர்ந்தது. பூப்போல குழந்தை மேனியை வெளியே எடுத்து இளஞ்சூட்டு வெந்நீரால்
துடைத்து கட்டிலில் மென்மையான துணிகளை மெத்தை போல் விரித்து படுக்க வைத்தாள்.பிரியாவின்
மயக்கத்தை தெளிவிக்க தண்ணீரால் முகத்தை துடைத்துக்கொண்டு இருக்கையில் வீட்டின் முன் வாகனங்கள் நிற்பதும் பூட்ஸ் கால்கள்
ஒலியும் கேட்டன..கமலா எழுந்து பதற்றத்தோடு இலேசாக கதவைத்திறந்து தலையை வெளியே காட்டினாள்.சுரேஷ் இராணுவ உடையில் வாசலை
நோக்கி வந்து கொண்டிருந்தான்.,கமலா சிரித்த முகத்தோடு கையை அசைத்து வெளியவே நிற்க சொன்னாள். பிரியாவை மீண்டும் முகம்
துடைத்து முழுபலத்தையும் செலுத்தி தூக்கி படுக்கையில் படுக்க வைத்ததாள் .அரைமயக்கத்தில்
முனகலோடு பிரியா ஒத்துழைத்தாள் .பிரியா
இமை விரித்து குழந்தையை முனகலோடு
தடவிக்கொண்டு இருந்தாள் .கமலா
கதவை ஒருச்சாய்த்து திறந்து சுரேஷை மட்டும் வரச் சொன்னாள் . சுரேஷ் பதற்றத்தோடு பிரியா
என்று சத்தம் கொடுத்தவாறே உள்ளே நுழைந்தான்.பிரியாவின் காதுமடல்கள் பரபரக்க இமைகள்
படபடக்க சத்தம் வந்த திசையில் முகத்தை திருப்பினாள்.அவன்
அவளது அருகே சென்று குனிந்து “சாரி ,பிரியா சர்ப்ரைஸா இருக்கும்ன்னு ப்ளைட்
ஏற்ரதுக்கு முன்னால சொல்லல ..” ...முத்து முத்தாய் கண்ணீர் வழிய குழந்தையைக் காட்டி அவனது நெஞ்சில் குத்தியபடி
மயங்கினாள்.சுரேஷ் குழந்தை மீது பார்வையை பரவவிட்டபடி பிரியாவை நோகாமல் படுக்க
வைத்தான் .கமலா ஆர்வத்தோடு குழந்தையைப் பார்த்தாள்.பெண்குழந்தை என்றாள். பிரியா
நமக்கு அம்மா பிறந்திருக்கா பாரு என்று பாலுக்காக வாயை வாயைத் திறந்த குழந்தையைக்
காட்டி , சுரேஷ் அவளை பதனமாக தொட்டு எழுப்பினான்.
*********************************************************************************************************************ஜனநேசன்
, 9442283668. Rvjananesan89@gmail.com
வணக்கம் ஐயா.
ReplyDeleteசிறுகதை விறுவிறுப்பாக சென்றது. கடைசி நிமிடம் வரை திக். திக். உணர்வோடே படிக்க வேண்டியிருந்தது. முடிவு சுபமாக இருந்ததில் மகிழ்ச்சி. சாதியை எதிர்த்துப் போராடுபவர்கள் வாழ்ந்தாக வேண்டும். தோற்பதில் எனக்கும் உடன்பாடில்லை.