தொடுகை
(ஜனநேசன் )
மணி பதினொன்று ஆகிவிட்டது .மதுரை சந்திப்பி
லிருந்து டேராடூனுக்கு பதினொன் னரைக்குப்
புறப்படும் விரைவு வண்டி நடைமேடைக்கு இன்னும் வந்து சேரவில்லை. வண்டியில் உட்கார்ந்து விட்டால் பரபரப்பு
இல்லாமல் படுக்கவோ ,படிக்கவோ செய்யலாம். அறிவிப்பு பலகையில் மாற்றமில்லாமல் பழைய
தகவலே ஒளிர்ந்து நகர்ந்தது. நடைமேடை பெஞ்சில்
அமர்ந்துகொண்டு மனைவி கைப்பேசியில் காதுஒலிப்பான் மூலம் சூப்பர் சிங்கரை கவனித்துக்
கொண்டே இவரது முகத்தையும் கைகடிகாரத்தையும் மாறிமாறி பார்த்தார். பேரப்பிள்ளைகள் இருக்கும்போது செல்லைப் பார்க்க கூடாது;
என்ற முடிவை தனக்கு சாதகமாக்கி எந்த
நேரமும் செல்லை நோண்டிக் கொண்டி ருப்பவள்,இவர் வண்டி பற்றி கவனிக்காமல் எதோ பராக்குப் பார்த்துக் கொண்டு இருப்பது போலல்லவா தன்னை ஏளனமாகப் பார்க்கிறாள் என்று சினம் மூக்கு முனையில் இருந்து உதட்டில் குதித்து சுடுசொற்களை உந்தித் தள்ளும்
தருணம், .அறிவிப்பு ஒலித்தது! “பதினோருமணி முப்பது
நிமிடங்களுக்கு புறப்பட வேண் டிய டேரா டூன் விரைவு வண்டி,டேராடூனிலிருந்து வரும் அதன் இணைவண்டி இரண்டுமணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருப்பதால் இங்கிருந்து ஒருமணி
முப்பது நிமிஷத் தில் இரண்டாவது நடைமேடையில் இருந்து புறப்படும். .பயணிகளின்
சிரமத்திற்கு வருந்து கிறோம்.” என்று மும்மொழிகளில் முழங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் இரண்டு மணிநேரம்
காத்திருக் கனுமே எரிச்சலாக இருந்தது.
எதிர் முனையிலிருந்து புறப்பட்ட இதற்கு இணை ரயில் தாமதமாக வந்தால் இந்த
முனையிலிருந்து புறப்படவிருக்கும் வண்டி
ஏன் தாமதமாகப் புறப்பட வேண்டும் ? இது
என்ன தர்க்க நியாயம்?புரியவில்லையே ...! கோபம் வந்தது,யார் மீது கோபப்
படுவது?
ஒரு ரயில், ஒரு நிலையத்துக்குள், இந்த நடைமேடையில் நுழைந்து. இந்தப் பெட்டி
இந்த இடத்தில நிற்கவேண்டும் .இன்ன வண்டி இந்த தண்டவாளத்திலிருந்து இத்தனை யாவது நொடியில் அடுத்த தண்டவாளத்தில்
நகர்ந்து அடுத்தவண்டிக்கு வழிவிட வேண்டும் என்று துல்லியமாய்க் கணித்து சிறு
விபத்தில்லாமல் இயங்கும் ரயிவே
வலைப்பின்னலின் நிர்வாகத்திறன் அம்மாடியோவ் எவ்வளவு அளப்பெரியது ! ஆனால் இந்த
மாதிரி தாமத த்தை தவிர்க்க முடியாதா? இதனால்
எத்தனை பேர் நடுவழியில் நடுநிசியில் உரிய வசதிகளோ,ஏற்பாடுகளோ இல்லாமல் தவிக்க
விடுவது சரியா......என்ற சிந்தனை ஓட்டதிற்கிடையே எத்தனையோ வண்டிகள் வருவதும் போவதும்
பயணிகள் இறங்குவதும் ஏறுவது மாக நடுஇரவிலும் இயங்கிக் கொண்டிருந்தது மதுரை
சந்திப்பு. ..
அப்பாடா டேராடூன் விரைவு வண்டி இரண்டா
வது மேடையில் வந்து நின்றது.மனைவியை தொட்டு கைபேசியிலிருந்து விடுவித்தார். மணிக் கணக்கில் கண்ணருகே ஒளியைப் பார்த்துக்கொண்டு இருந்த மனைவி கண்கள் ஒளிக்குருடில் தடுமாறி விழப்போனார், இவர் மனைவியை மீண்டும் உட்கார்த்தி ஆசுவாசப்படுத்தி
,பின் ஒரு கையில் அவரைப் பிடித்துக்கொண்டும் ,மறுகையில் சாமான்களை
நகர்த்திக்கொண்டும் மெல்ல ஊர்ந்து ஈரடுக்கு குளிர்வசதி பெட்டியில் முதலில் மனைவியை
ஏறச்செய்து பின் சாமான்களோடு இவர் ஏறினார்.வயது ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டால்
ஒவ்வொரு அசைவிலும் கவனமாக இருக்கவேண்டி இருக்கிறது.உடல் நலத்தில் எந்தவித
பாதிப்பும் ஏற்படாமல் கடுங் கவனத் தொடு இயங்க
வேண்டி யிருக்கிறது.கண்ணாடிக் கதவை உள்ளே
தள்ளி மனைவியைப் போகச் செய்து இவர்
சாமான்களோடு இவர்களது இருக்கை பதினொன்று ,பதிமூன்றில் உட்கார்ந்தனர் .விரிப்பான்
வாங்கி மனைவி க்கு பதினொன்றில் படுக்கை
விரித்து உட்காரச் செய்து, தனக்குமான இருக்கையை விரித்து அமர்ந்து நெட்டி
முறித்தார்அடுக்கடுக்காய் கொட்டாவிகள் பரிந்தன..,.
இந்த வண்டி இந்நேரம் கரூரைத் தாண்டி இருக்க ணும். இந்த வண்டியில் ஏறினால்
கரூரைத் தாண்டியபின் தான் இவருக்கு தூக்கமே வரும்!.கரூர் இவருக்கு
பிறந்த ஊர் மாதிரி.கரூர் போகும் வரை இவரது பள்ளிப்பருவ நினைவுகள் குமிழிகளிட்டு அலைபொங்கி பத்து வயது பருவத்துக்குள் இழுத்துச் சென்றுவிடும்.! ஆனால் இப்போதே உறக்கம் இமைகைளைச் சுண்டி உள்ளே
இழுக்குது ! .மனைவி படுத்தவுடன் குறட்டையில் சஞ்சாரம் தொடங்கி விட்டார். . பயணச்
சீட்டு பரிசோதகர் வரும் வரை சமாளிப்போம் கழிவறை போய்வந்தார் .பரிசோதகரிடம் சீட்டையும்,அடையாள அட்டையையும்
காட்டியதும்,நன்றி சொல்லிப் படுத்தார். .வண்டியின் தாலாட்டில் தூங்கிப் போனார்.
வண்டி மெல்ல நின்றதில் தாலாட்டின் லயம்
குறைந்து நித்திராயணம் அறுபட்டது.விளக்கை எரியவிட்டு மெல்லிய கரங்களின் தொடுதலில் இலைநீர் பட்ட பறவை போல்
படபடத்து எழுந்து ..கரூரா என்றார்.ஆமாம் என்ற ஒரு இளம்பெண்ணுடன் பழுத்த பழமாக
மூதாட்டி நின்றிருந்தார்.
“ப்ளீஸ் சார், இந்த
பாட்டிக்கு இந்த இடத்தை குடுக்கலாமா.. ,நீங்க
மேல பனிரெண்டில் படுத்துக்குங்க.....” என்று கெஞ்சினாள் . தானும் மூத்த குடிமகன்தான்
என்று வாயைத்திறக்க முயன்றார் . அந்த பாட்டியைப் பார்த்ததும் வாயை மூடி தலை
இசைத்து எழுந்து படுக்கையை சுருட்டி மேலே பனிரெண்டில் விரித்து மேலே ஏறினார்.கிழவியும்,குமரியும்
ஒரே சுருதியில் நன்றி என்றார்கள்.இவர் மேலே படுத்து அறுந்த தூக்க இழையை முடிந்து
ஆரோகணித்தார்.
விழிப்பு தட்டியது.கைபேசியை மினுக்கி மணி
பார்த்தார் .மணி ஆறு. இறங்கி வண்டி நிற்குமிடத்தை ஜன்னலூடே பார்த்தார்.சேலம் இப்பத்தான் வருகிறதா
என்றபடி தமது பையைத் திறந்து பற்பசை,பல்துலக்கியை எடுத்து பையை மூடி கழிவறைப்
பக்கம் நகர்ந்தார்.கழிப்பறை இரண்டிலும் ஆளிருந்தனர் .பல்துலக்கி காத்திருந்து காலைக் கடமைகளை முடித்து திரும்பினார்.இனி தூக்கம் வராது,
ஆகவே கீழே படுத்திருக்கும் மனைவியின் காலருகே உட்கார்ந்தார்.தொடுவுணர்வு
சுட்டு மனைவி தலையை தூக்கிப் பார்த்தார்.நான்தான் .நீ தூங்கு என்று தைரியம் சொன்னார்.
கைப்பேசியை இயக்கி இணைய செய்தித் தாளை மேல் மேச்சலாக நகர்த்தினார்.கழுத்து
வலிக்க மெல்ல நிமிர்ந்தார் .எதிரே இருந்த பாட்டிசாய்ந்து உட்கார்ந்து இவரையே பார்த்துக்கொண்டு
இருந்தார். இவருக்கு கூச்சமாக இருந்தது. “என்ன பாட்டி தூங்கலையா....”
என்றார். பாட்டி ,”நான்
எப்பவுமே அஞ்சரை மணிக்கு எழுந்திருச் சிருவேன் .இன்னைக்கு அலுப்பிலே ஒருமணிநேரம்
கூட அசந்திட்டேன் “.உடம்பிலுள்ள தளர்வும் சுருக்கமும் பேச்சில் இல்லை .தெளிவாக
கணீரென்று இருந்தது.இந்த பேச்சின் சிறு இடைவெளியில் மூன்றுமுறை மேலே படுத்திருக்கும் பேத்தியை பார்த்தார் .அவள்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.பாட்டியின் முகத்தில் சிறு அசௌகரிய மேகம் கடந்து
போனது.இவர் கேட்டார், “பாட்டி நீங்க எங்க அம்மா மாதிரி; டாய்லட் போகணு முன்னா
சொல்லுங்க ,அந்த ரூம் வரை கூட வர்றேன்.” பாட்டி இவர் முகத்தை ஊடுருவிப்
பார்த்தார்.வருஷம் கூடக்கூட வைரம் விளைந்து ஜொலிக்கும் என்பார்களே அதுபோல் பாட்டியின் பார்வை ஜொலித்தது.மீண்டும்
மேலே பார்வையை வீசினார்.பேத்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .அவர் முகத்தில்
சின்ன முறுவல் முகச் சுருக்கங்களை விரித்து வெட்டி மறைந்தது. .இவரது காலின்
பின்னுள்ள பையைக் காட்டி வெளியே இழுக்கச் சொல்லி ,அதிலிருந்து
பற்பசை,பல்துலக்கியை எடுத்து மூடினார்.மெதுவாக எழுந்தார்.இவரைப் பார்த்தார்,இவர் எழுந்ததும் வலது தோள்பட்டையின்
பின்புறம் சட்டையைப் பற்றிக் கொண்டார்.இவர் மெல்ல ஊர்ந்து கண்ணாடிக் கதவை இழுத்து
திறந்து,கை கழுவும் கோப்பை முன் நின்றார்.பாட்டி பல்துலக்கி,சுவரைப் பிடித்தபடியே
கழிவறை போய்வரும் வரை நின்று,அவர் வெளியே வந்ததும் மீண்டும் இருக்கைக்கு அழைத்து
வந்தார்
.பாட்டி உட்கார்ந்ததும் சொன்னார்.”உங்களுக்கு இரண்டு முறை நன்றி
சொல்லணும்.ஆனா சொல்லத் தோணலை.அதுதான் ஏன்னு யோசிச்சு பார்த்தேன் .புரிபடலை.” என்று
சொல்லி மறுபடியும் ஊடுருவிப் பார்த்தார். இவருக்கும் அவரைப் பார்த்ததுபோல் ஓர்
உணர்வு !.இப்படியான ஒரு மனுசியை இப்பத்தான் நெருக்கமாகப் பார்க்கிறார் . .நாலரையடியாய் சுருங்கிய முன்வளைந்த உடல்.பாலைவன மணல்வெளியில் காற்று வீசிவீசி
வரிவரியாய் மணல் படிந்திருப்பது போல் காலம் வரைந்த முதுமைக் கோலத்தின் வரிகள் உடல்
முழுதும்!. காற்றில் ஆடும் தளர்வான சட்டைபோல் தளர்ந்தாடும் தோல்.சுண்டக் காய்ச்சிய
பாலை இழைஇழையாய் திரித்தது போல் தலை முடி.
சுரங்கத்துக்குள் மின்னும்
வைரங்கள் போல் குழிந்த கண்கள்!.இப்படியான மனுஷி யையோ ,இவரை ஒத்த இளமைக்காலப்
பெண்களையோ பார்த்த நினைவில்லை பாட்டியும் இவரையே உற்றுப் பார்த்துக்கொண்டு
இருக்கும்போது அந்த கூர்நோக்கின் வெப்பம் தாளாமல் இவரே பேசினார்.
“ எங்கே பாட்டி ,இந்த தள்ளாத,ஓய்வெடுக்க வேண்டிய
வயதில் பயணம் ?” “தள்ளாத
வயதா....எனக்கா...” என்று சிரித்த வாயில் தளர்ந்த உதடுகள் நெளிந்து வளைந்து ரோஜா இதழ்களைப் போல் மிளிர்ந்தன. .வடிவிழந்த முகவாய் தாங்கிய பல்செட்டில்
அலட்சிய சிரிப்பு மின்னி மறைந்தது. பாட்டி தொடர்ந்தார். “உங்களுக்கு கூட வயசு
அறுபதைத் தாண்டியிருக்கும் போல...நீங்க மை பூசியிருக்கீங்க. எனக்கு அது தேவை
இல்லை,அவளவுதான்.சரி ,நீங்க கேட்டுட்டீங்க,சொல்றேன். இவ என் மக பிள்ளை பேத்தி ஐ ஏஎஸ் கோச்சிங்கில் சேரனுமுனா !.சென்னையில்
என் ஸ்டுடென்ட் ஒருத்தன் போலிஸ் ஆபிசரா இருக்கான்
.அவன்கிட்ட இவளை அறிமுகப்படுத்திட்டு ,அப்படியே கோச்சிங்கில் சேர்த்துட்டு
வரணும்.என் ஸ்டுடென்டை நான் பார்த்து பேசுறதுதான் பொருத்தமாக இருக்கும் .அதனால
நான் கூடப் போகிறேன்.”
“வாழ்த்துகள் பாட்டி.! நீங்க கரூரேவா ...பக்கத்திலேயா ...” . ,
.”ஆமாம்.ஜவகர்பஜாருக்கு
பின்னாலே மேட்டுத்தெரு.;. .வாசவி ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருந்து ரிடையராகி இருபது
வருசமாச்சு.!’
“அது தெலுங்குப்
பள்ளிக்கூடம் தானே.....!’ பாட்டி தலையிசைத்தார்
. இவர் தொடர்ந்தார்.”அப்போ நீங்க சரோஜா டீச்சரா....!..? பாட்டியின்
முகத்தில் பவுர்ணமி வெளிச்சம்.! “நீ...நீ ..யாரு ..? “
“நா...நான்...”என்று
தடுமாறிய படியே இவர் தன் பெயரைச்
சொன்னார்.பாட்டி கம்பிச்சுருள் போல் குதித்து முன்னால் வந்து இவரது வலது தோளை
தட்டினார்.கண்ணீர் பொங்க! “உங்க அப்பா மாதிரி ஒரு ராட்ஷனை சாரி, மோசமான மனுசனை
இன்னைக்கு வரைக்கும் பார்த்ததில்லை.! “ என்று சொல்லி வா பக்கத்தில வா...” என்று
இவரை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து
,முகம் பார்த்து பேசுவதற்கு எதுவாக ஜன்னல் பக்கத்தில் தலையணையை வைத்து சாய்ந்து
உட்கார்ந்து கொண்டார்.
“அன்னிக்கு அமராவதி
ஆற்றில் நடந்தது ஞாபகமிருக்கா...’ இவர் பால்யத்துக்குள் இருந்து பேச்சற்று தலை
இசைத் தார். சரோஜா டீச்சர் தொடர்ந்தார்.
“நீ என்கிட்டே
அஞ்சாம் வகுப்பு படிக்கிற.முழுப் பரீட்சை லீவு.மேமாதம் .கடுமையான தண்ணீர்பஞ்சம்
.ஞாயிற்றுக் கிழமை காலை பதினோரு மணிவாக்கில் நானும், எனது,மகனும்,இரு இளைய
மகள்களும் ஆற்றுக்குப் போய் ஒரு சின்ன ஒடுகாலில் நான் துணி துவைத்து அலசி அலசி
தரத் தர எனது பிள்ளைகளோடு பிள்ளையாய் நீயும் துணிகளை வாங்கிக்கொண்டு போய் உதறி
,காற்றுக்கு பறந்து விடாமல் கொதி மணலில் விரித்த துணியின் ஒவ்வொரு முனையில் கையளவு
மணலைக் குவித்து காய வைத்து கொண்டுருக்கீர்கள் . அப்போது படவா என்ற சத்தம் என்
காதை அறைகிறது.நான் திரும்பிப் பார்த்தேன் கதரில் .வெள்ளை வேட்டி ,வெள்ளை
ஜிப்பாவில் கண்கள் சிவந்து ,பல்லை நறநறன்னு கடித்து உதடு துடிக்க உன் அப்பா நின்றார். நீ அவரை நோக்கி ஓடுகிறாய்.நான் பயந்து
நடுங்கி பாவடையை ஏற்றிக் கட்டியபடி நிற்கிறேன். உன் அப்பா வை பார்த்ததும்
என்பிள்ளைகள் பயந்து என்னிடம் வந்து ஒண்டுகிறார்கள் .. உன் அப்பா உன் சட்டையை
,டிரவுசரை அவிழ்க்கச் சொல்ல,நீ அவிழ்த்து வெற்றுடம்பாய் நிற்கிறாய். உன் அப்பா
அந்த உச்சி வெயிலில் சுடுமணலில் உன்னை
புரளச்சொல்லி ,இனிமேல் இப்படி யாரு கூடவும் ஆற்றுக்கு வருவியா...வருவியா...என்று ஆவேசமாய்
கேட்க ,கேட்க ,நீ உருண்டபடியே வர
மாட்டேன்ப்பா ,வரமாட்டேன்ப்பா என்று நீ கதறக்
கதற உன்னை புரள வைக்கிறார்..,
நான் ஈர்த்துண்டைப் போர்த்திகிட்டு உன் அப்பாவிடம்
,அவனை நான் கூப்பிடவில்லை. அவனாக என்
பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே வந்து விட்டான். அவனை துணி காயப்போடச் சொல்லவில்லை. அவனா கவே
பிள்ளைகளோட பிள்ளையாய் அவர்களோடு துணி காயப்போட்டு விளையாடிக்
கொண்டிருந்தான்.இதில் நான் எதாவது தப்பு செஞ்சேன் நினைச் சிங்கினா
மன்னிச்சிருங்க.பையனை கொதிக்கும் மணலில் வாட்டதிங்க...என்று கண்ணீர்
விட்டேன்.அடுத்தவர் பிள்ளைக்காய்,மூன்றாவது மனுசர் முன்னால கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டேன்! .நீ அந்த கொதி மணலில் உருண்டது
நானே உருண்டது மாதிரிஇருந்தது. ஒரு வாரம் நான் சரியா தூங்கலே .கொடிய கனவை பகலில்
கண்ணு முன்னால பார்த்தமாதிரி இருந்தது....”என்று கண்ணீர் பொங்கினார். இவர்தனது முதுகைத் தடவினார் .மணல்கள் உதிர்வது போல்
உணர்வு.உடலெங்கும் ஒட்டிய மணலை அப்பா கதர்துண்டால் துடைத்து ,கொதி மணல் பதிவின்
சிவந்த புள்ளிகளில் நோகாமல் தேங்காய் எண்ணெய் நீவி ,வெற்றிவேர் விசிறி கொண்டு வீசி,சாப்பிடச்
செய்து தூங்க வைத்ததும் ;தூங்கி
எழுந்ததும் தேர்முட்டிக்கு எதிரிலுள்ள சாந்தி பவனில் ஜிலேபியும் ,ரோஸ் மில்க்கும்
வாங்கிக் கொடுத்து கண்கலங்க என்னை கவனித்து கொண்டிருந்த அப்பா நினைவில் வந்தார். இவருக்கு
விம்மலும் ,விசும்பலும் கட்டுப் படுத்த முடியவில்லை.இவரது மனைவி திடுக்கிட்டு
எழுந்து என்னங்க என்று பதறினார். .இவர் கையமர்த் தினார் .
நீண்ட மௌனத்திற்குப் பின்
டீச்சர் கனத்த குரலில் கேட்டார்.. “ உங்க அப்பா,அம்மா.....?” இவர் டீச்சரின் முகத்தைப்
பார்த்தார்.கடுங்கோடையில் மணல்வெளியில்
பெய்த திடீர் மழையை உள்ளீர்த்து பொதுபொதுத்து கிடக்கும் மணல் போல முகம் வீங்கி காணப்பட்டது.எனினும் டீச்சரின்
கண்கள், சுமந்த மழையை எல்லாம்
கொட்டித்தீர்த்த வானம் போல் பளிச்சென்று இருந்தன.
இவர் குமுறலைக் கட்டுப் படுத்தி உடைந்த குரலில் ..”அப்பா பதிமூணு வயசில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இறந்து
விட்டார்.அம்மா என் முப்பது வயசில் இறந்தார்.” என்று சொல்லி உதடுகளை இறுக்கி
கொண்டார் .கண்ணீர் உருண்டது.டீச்சர் முன்னால் நகர்ந்து இவரது தலையைக் கோதி தோளில்
மென்மை யாகத் தடவினார் அன்று அப்பாவின் முன்னால் முதுகை தடவி ஆறுதல் சொல்ல
முடியாமல் போன வருத்தம் தீர்ந்த உணர்வு சரோஜா டீச்சர் முகத்தில்.! ஆனால் இவரோ .இறந்த அம்மா,அப்பாவின் கைகளின் தொடுகையை
டீச்சரின் கை தொடலில் உணர்ந்து சிலிர்த்தார்.
நீண்ட மௌனத்திற்கு பிறகு டீச்சர்,” நீ ஆறாவது
படிக்க வேற ஸ்கூலுக்கு போயிட்ட; உன்னை பார்க்க முடியலை.ஆனால் அடிக்கடி உன்னையும் ,உன் அப்பாவை நினைக்கும்போது
ஒரு சிந்தனை எழும் இப்படிப்பட்ட அப்பா
வளர்க்கும் பிள்ளை ,ஒன்று வன்முறையாளனாக வளருவான் .அல்லது ரொம்ப நல்ல மனிதனாக
வளருவான் ..! நீ எப்படி இருப்பாயோ என்ற
கவலை வரும். ஆமாம் நீ எப்படி....? “
இவர் டீச்சரிடம் ,”என்னை இவ்வளவு நேரம் பார்த்தீங் களே நீங்களே சொல்லுங்க....’’ என்றார் முறுவலுடன் ..
********************************************************************************************
No comments:
Post a Comment