Monday, 26 November 2018

தீட்டிய கட்டையில்...



          தீட்டிய கட்டையில்...

                                       ஜனநேசன்9442283668     


காலை மணிஆறிருக்கும்.உடற்பயிற்சியையும் சுவாசப்

பயிற்சியையும் முடித்து எழும் நேரம். கதவு மெலிதாகத் தட்டப்பட்டாலும் ஒலி உரத்துக் கேட்டது.மனதில் பல கேள்விகளோடு கதவைத் திறந்தேன்.

எண்பது வயது மதிக்கத் தக்க பெரியவர் நின்றிருந்தார்.வாசல் விளக்கொளியில் ஊடுருவிப் பார்த்தேன்.அவர் பெயர் பழனிச்சாமி. .எனது தந்தையார் காலத்திலிருந்து கடந்த முப்பது வருடங்களாக  அவரது குடும்பதாரிடம்தான்  முடிவெட்டிக் கொள்வது.பெரியவரே உள்ளே வாங்க.என்றேன். அவர் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்து உட்காருவதற்கு தரையைப்பார்த்தார். “சும்மா சேரிலே உக்காருங்க”. அவர் கொஞ்சம் கூச்சத்தோடு உட்கார்ந்தார்”.என்னங்க நாங்கதான் உங்களைத்தேடி வருவோம்.நீங்க என்னை இந்த வயதிலும் தேடி வந்திருக்கீங்க.

டீ,காபி சாப்பிட்றீங்களா ?”அவர் பதில் சொல்லுமுன முதல்ல தண்ணியைக் குடிங்க,என்று தண்ணீர்பாட்டிலைநீட்டினேன்.அவர்  மெல்லிய கூச்சத்தோடு ஒருமிடறுகுடித்துவிட்டு,பாட்டிலை ஓரமாக வைத்தார்.என்ன விஷயம் சொல்லுங்க.என்றேன்.

“ஒண்ணுமில்லை. தம்பி,என்பேத்தியா மகனை ராத்திரி பத்து மணிவாக்கிலே போலீஸ் பிடிச்சுட்டுப் போயிருச்சு, அவன் கடைக்கு வர்ற வாடிக்கைபையன் ஒருத்தன்  பாலிடெக்னிக் காலேஜ் பீஸ்கட்டணும்னு ஒரு செல்போனை விற்றுகொடுக்கச் சொல்லி                                                     குடுத்திருக்கான். அது    திருட்டு        செல்லுன்னு                     ,இவனைப் போலிஸ் பிடிச்சிட்டுப் போயிருச்சு. .என்மகன் வழிப்பேரன்களும் கவருமென்ட்டு வேலைகள்ள அங்கங்கங்க இருக்காங்க.இருந்தாலும் அவன்களுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது. அதனால்தான் டெபுடி கலக்டரா இருக்கிற உங்களைத் தேடிவந்தேன்.தொந்தரவை மனசில வச்சுக்காம உதவணும் தம்பி.உங்களைத் தவிர எங்களுக்கு தெரிஞ்சவங்க  வேறு யாருஇருக்க ?”.

பேச்சு சத்தம் கேட்டு மனைவி எழுந்து வந்து பார்த்த நிழலாடியது.  அவள் ஆடைகளைசரிசெய்துகொண்டே”,வாங்க “என்று  தலையசைத்து     வரவேற்றாள்.    .பழனிச்சாமி தனது கனத்த சரீரத்தை எழுப்பி தலைஉயர்த்தி    வணங்கி   அமர்ந்தார். ”டீயில சர்க்கரைப் போடலாமா .”.

“எதுக்குங்கம்மா காலையிலே உங்களுக்கு  தொந்தரவு?; இப்பதான்  சாபிட்டுட்டு வந்தேன்” “எங்க வீட்டுக்கு வந்திட்டு டீ சாப்பிடாட்டா எப்படி,? சக்கரை  போடலாமில்ல?”                                    அவர்    கூச்சத்தோடு சொன்னார் “,அரைச்சக்கரை தாயீ” ; டம்ளரில் வாய்வைத்துக் குடிக்கத் தயங்கினார். பெரியவரே சும்மா வாய்வைத்துக் குடிங்க..; .அவர்  குடித்தார்.           ,                 “நான் பதினோரு மணிக்கு டவுன் போலிஸ்ஸ்டேசனுக்கு      வந்திர்றேன் . பயபடாமப் போங்க.” என்று  சொல்லி முன் வாசல்வரை அவருடன் சென்று  அனுப்பிவைத்தேன்.

பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்குமுன் எனது நேர்முக அலுவலரைத் தொடர்பு கொண்டு இந்த வழக்கு பற்றி காவல்நிலையத்தில்  விசாரித்து விவரம் சொல்லப் பணித்தேன்.  அலுவலகம் சென்று அன்றைய முக்கிய பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திவிட்டு காவல்நிலையம் கிளம்பினேன்.

பழனிச்சாமியின் முடிதிருத்தும் கடை நான் பிறப்பதற்கு முன்பே  எழில்நிலையம் என்ற பெயரில் மிகப்பிரபலமாக இருந்தது.இன்று மாவட்டத் தலைநகராக இருக்கும் இவ்வூர் சிறுநகரமாக இருக்கையில்  ஐந்தாறு முடிதிருத்த நிலையங்களே இருந்தன ,அவற்றுள்  எழில்நிலையத்துக்கு தனிச் சிறப்புண்டு . எனது அப்பா 1940களில்  பதின் பருவத்தில்  இக்கடையில் தான் முடிதிருத்திக் கொள்வாராம்.அப்போது பெரும்பாலும் எல்லா சாதியினரும் குடுமி  வைத்துக் கொண்டிருந்த காலம். இந்தஊரில்   .இவர் கடையில்தான் கிராப் வெட்டுவது தொடங்கிய தாம். நகரில் கிராப் வெட்டுவது பற்றி பெரும் கிளர்ச்சியைப் போல எதிர்ப்பும் ,ஆதரவும் இருந்ததாம்.எங்க அப்பாவும் நண்பர்களும் இவரிடம் கிராப்பு வெட்டிக்கொண்டு வெளியே போனபோது எங்கோ போகக் கூடாத இடத்துக்குப் போய்  செய்யக்கூடாததை செய்ததைப் போல் பார்த்தார்களாம்.வீட்டிலும் ,வெளித்திண்ணையிலும் பெரும்பாலான அப்பாக்களின் பேசுபொருளே  எழில்நிலையமும், கிராப்பு வெட்டும், ,அங்கு கிடைக்கும் செய்தித்தாள்களும் , புத்தகங்களும் தாம்.! அந்நாள் இளைஞர்களுக்கு புதுப்புது   சிந்தனைகளைக்  கிளர்த்தும் இடமாக இருந்தது அவரது கடை.!.

அப்பா சொல்லியிருக்கிறார் ,கிராப் வெட்டுவதில் பிரபலமான கடை, மீசை வைப்பதில் இரண்டாகியதாம்.! மீசையில்லாமல் மொழுமொழு முகத்தோடு திரிந்தவர்கள் பாரதியார் மீசை  ,ஹிட்லர் மீசை என்று மீசைகளால்  இளைஞர்களைக் கவர்ந்த பழனிச்சாமிக்கு உலகப்போர் நடந்த காலத்தில் ‘ஹிட்லர் பழனி’ என்றே பெயர் பிரபலமானதாம்.இந்த சமயத்தில் தான் கம்பீரமாக கருதப்பட்ட  ஹிட்லர் மீசையை கோமாளித் தனமாக்கியது சார்லி சாப்ளின் படங்கள்.! சார்லி சாப்ளின் ரசிகரான பழனிச்சாமியின் மகன் குமாரசாமி ஹிட்லர் மீசையை, புருவத்தை சற்று திருத்தி சாப்ளின் மீசை நிபுணராக வெளிப்படுத்திக் கொண்டார். இளைஞர்கள் குமாரசாமியிடம் காத்திருந்து முகம் திருத்திக் கொண்டார்கள்.

பழனிச்சாமிக்கு குடுமிக்காரர்கள் எதிரிகளான நிலையில் இவரிடம் இப்போது  முதியவர் ,இளையவர் இருதரப்பும் வருவதில்லை.சிறுவர்கள் மட்டுமே கிராப்வெட்ட வந்தார்கள். ஒரே கடையில் மகனுக்கு கிராக்கி;அப்பனுக்கு அணுகுவாரில்லை என்ற நிலையில் கடையை மகனுக்கு முழுதாக விட்டுத் தர முடியவில்லை. புதிய கடை வைக்கவும் வசதி இல்லை. அதனால .இடது பக்க நாற்காலி மகனுக்கும் ,வலதுபக்க நாற்காலி அப்பாவுக்கும் என பாகப் பிரிவினை ஏற்பட்டது.பழனிச்சாமிக்கு ஹிட்லரின் மீதான கிறுக்கும் செருக்கும் சாப்ளினையும்,தனது மகனையும் எதிரியாகக் கருதச் செய்தது.அதனால் மகனின் வளர்ச்சி, மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கு பதிலாகப் பொறாமையை தூண்டியது,ஆகவே கண்ணுக்கு புலப்படாத சுவரால் பாகப் பிரிவினை ஏற்பட்டது.! .ஒரே கடையில் மகனுக்கு கிராக்கிகள் மொய்ப்பதும் ,அப்பாவுக்கு  அணுகுவார் இல்லாமல் ஈயோட்டும் நிலையும்  பழனிச்சாமிக்கு பொறுக்கவில்லை.

 இந்த சமயத்தில் பழனிச்சாமிக்கு நேதாஜி கை கொடுத்தார்.மீசையில்லா நேதாஜி கிராப் என்று நேதாஜி படங்களை வைத்து தேசியவாதிகளை ஈர்க்கலானார்.! ’மீசைஇல்லாமலும் மனிதன் வீரமாக இருக்கலாம் !மீசை என்பது அழகியல் ரீதியான கற்பிதமே’   மீசையில்லா நேதாஜி தனது வீரத்தாலும் விவேகதாலும் மக்களுக்கு சுதந்திர உணர்வு ஊட்டியது   பழனிச்சாமிக்கு தெளிவைத் தந்தது. .வாடிக்கையாளர் விரும்புவது போல் முடி திருத்துவதே தனது  வேலை என்று உணர்ந்து கொண்டார்.  குமாரசாமி தன் வாடிக்கயாளர்களை தக்க வைக்க  பகத்சிங்  மீசை, கட்டபொம்மன் மீசை என்று அறிமுகம் செய்தார். இதே நேரத்தில் அக்கடையில் தமிழ்நாடு, குடியரசு ,விடுதலை,  திராவிடநாடு  என  , பல புரட்சிகர  பத்திரிகைகளும்                                                                                                                                                 
 குமாரசாமி   பக்கத்தில் புழங்கின.                                                                
                                                                                                                                                                                                         , தினத்தந்தி    ,நவசக்தி  ஆனந்தவிகடன் சுதேசமித்திரன்போன்ற பத்திரிகைகள்பழனிச்சாமி பக்கத்தில் கிடக்கும்.     ,         ,                                                                                         . .நான்கூட பழனிச்சாமி பக்கம் போய்தான் தினத்தந்தியில் கன்னித்தீவு படிப்பது வழக்கம்.

குமாரசாமியின் சம்பாத்தியத்தைக்  கண்டு பெண்கொடுக்க நிறையபேர் வந்தனர்.நல்லா சம்பாதிக்கும் மகனைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கெட்டுப்  போவான் என்று தனக்குத் தானே  சமாதானப்படுத்திக் கொண்டு மகனிடம் உறவாடிக் கொண்டார்.

இதற்கு உதவியாக முன்பு பகத்சிங் ,சார்லி சாப்ளின் மீசை வைத்துக் கொண்டவர்கள் ஹிட்லர் மீசையின் மறுவடிவமான  பாரதிதாசனின்   மீசைவைக்க  பழனிச்சாமியை நாடினர்.கடையை  பிரித்த கண்ணுணரா சுவர் தகர்ந்தது! .கண்ணாடிக்கு மேல் சுவரில் இருபக்கங்களில் வைக்கப்பட்ட ஹிட்லர்,சாப்ளின், நேதாஜி, முத்துராமலிங்கத்தேவர், ஜோசப்ஸ்டாலின், மாக்சிம்கார்க்கி, பகத்சிங்,வீரபாண்டியகட்டபொம்மன், பாரதி, பாரதிதாசன், தியாகராஜ பாகவதர் போன்ற மீசையால்,சிகை அலங்கார அடையாளத்தால் அடையாளப் படுத்தப்பட்டவர்கள் படங்களெல்லாம் ஒரே வரிசையில் நெருக்கமாக வைக்கப் பட்டன! .அவர்கள் பற்றிய  புத்தகங்களும் ஒரே இடத்தில் உலவின.

இப்பிரமுகர்களின் கொள்கையால் இரு பிரிவாக பிரிந்து விவாதித்த வாடிக்கையாளர்களும் ஓரிடத்தில் கூட, மகன் குமாரசாமியின் கல்யாணம் பெரியார் தலைமையில் சீர்திருத்த கல்யாணமாக நடந்தது.பொதுவாக இதுமாதிரி கல்யாணத்தில்  கலந்து  கொள்ள போக்குவரத்து செலவாகவும்,இயக்க நிதியாகவும் பெரியாரின் எடைக்கு எடையாக வெங்காயமாகவோ, தானியமாகவோ,நாணயங்களாகவோ  பெற்றுக் கொள்ளும் பெரியார்  “முடிதிருத்தும் தோழர் பழனிசாமி முடி திருத்துவதோடு  சமூகத்தையும்         திருத்தும் பணியைச்   செய்கிறார் .அவரிடம் பயணச் செலவுநிதி கேட்க வேண்டாம்” என்று சொல்லி விட்டாராம்.! காங்கிரஸ் ,தி.க.,திமுக,கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்கள் எல்லாம் ஒருமனதோடு திருமணத்தில்  கலந்து கொண்ட செய்தி நகரமே அன்னம்பாரித்து பேசியது.

  காலப்போக்கில்   எழில்நிலைய வாடிக்கையாளர்கள் பலர் அரசு அலுவலர்களாகி இருந்தனர்! ஒரு சிலர் இன்றைய எதிர்கட்சிகளில் முக்கிய தலைவர்களாகினர்! அவர்கள் அனைவரும் கல்யாணத்தில் கலந்து கொண்டு ,வந்தவர்களை வரவேற்பது முதல், பந்தியில் பரிமாறுவது வரை  வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.! மொய் வாங்கவில்லை; வந்தவருக்கெல்லாம் சீர்திருத்த மணம் குறித்த சிறு பிரசுரம் வழங்கப் பட்டது.!

குமாரசாமி தனது  பிள்ளைகளப்  படிக்க வைத்தார்.அவர்கள் அரசுப்  பணிகளில்  வெவ் வேறு ஊர்களில் அமர்ந்து விட்டார்கள். பழனிச்சாமியின் மகள் வகையில்தான் முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது மகளுக்கு பேரன்தான் இந்த வழக்கில் மாட்டிக் கொண்ட பழனிக் குமார் என்ற இளைஞன், ஸ்டார் கிங்ஸ் சலூன் நடத்தி வருகிறான்.இவனது வழக்கு பற்றி எனது நேர்முக அலுவலர் விசாரித்ததில் அது ஒரு இடியாப்பச்  சிக்கலாக இருந்தது.
பழனிகுமார் கடை வாடிக்கையாளன் முருகன் என்பவன் இவ்வூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறான் .பக்கத்து கிராமத்திலிருந்து வந்து  படிக்கும் இவனுக்கு குறிப்பிட்ட நாளில் தேர்வுக்கட்டணம் கட்ட இயலவில்லை. இவன் தனது வகுப்பில் படிக்கும் வசதியான மாணவன் அருண்குமாரிடம்  தேர்வுக் கட்டணம் செலுத்த  கடனாக பணம் கேட்டுள்ளான். எப்போதும் காசு புழங்க மாலைநேரங்களில் ஜாலியாகத் திரியும் அவன் ஒருசெல்போனைக்  கொடுத்து இது எனக்கு பர்த்டே கிப்டாக வந்தது ,காஸ்ட்லியான போன்! இதை விற்று தேர்வுக் கட்டணத்தைக் கட்டிவிட்டு மீதியைக்  கொடு.இன்னைக்கு உனக்கும் பார்ட்டி உண்டு என்றிருக்கிறான்.

பழனிக்குமார் பழைய போன்களை வாங்கி விற்கும் வழக்கம் உள்ளவன்.

முருகன், பழனிக்குமரிடம்   வந்து பரீச்சைபீஸ் கட்டணும்  அண்ணே இதை விற்றுக் குடுங்கன்னு கெஞ்சியிருக்கிறான். இது விலை உயர்ந்தபோன் உனக்கு எப்படி கிடைச்சதுன்னு இவன் கேட்டிருக்கான் .அவன்  . .சிங்கப்பூரிலிருந்து  எங்க மாமா அனுப்பி வச்சது என்றிருக்கிறான். இந்த காஸ்ட்லி போனை உடனே விக்கப் போனால் மூவாயிரம் ரூபாயிக்கு கூட வாங்கமாட்டங்க!.தேடி வர்றவங்க கிட்டத்தான் கூடுதல் விலைக்கு விக்கமுடியும். இப்போதைக்கு உனக்கு பீஸ்கட்ட தோதா ஒரு ஆயிரம் ரூபாய் புரட்டித் தர்றேன்! .நான் படிக்காட்டாலும் உன்னை மாதிரி பையன்களுக்கு உதவனுங்கிறதுக்காக இதை செய்யிறேன். இந்த செல்லு எவ்வளவு கூடுதல் விலைக்குப் போகுதோ என் கமிஷனை எடுத்துகிட்டு  மீதியை தருவேன் என்று சொல்லி பழனிக்குமார்  அங்கேயும்இங்கேயுமாய்ஆயிரம்ரூபாய்புரட்டிக் கொடுத்திருக்கிறான்.

அந்த செல்போன் இந்த ஊரில் இருக்கிற முக்கியமான அரசியல் பிரமுகருடையது. அவருடைய மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை  என்ற கோபத்தில் அந்த செல்லை எடுத்து வந்து விற்று விட்டான். அந்த செல்லில் முக்கியமான எண்களும் ரகசிய வரவுசெலவு குறிப்புகளும்  உள்ளதாம். அந்த பிரமுகர் தனக்கு வேண்டிய காவல் அதிகாரியிடம் சொல்லி மகனை ரகசியமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

அரசியல்வாதியின் மகன் அருண்குமார் மாலை ஏழுமணி வாக்கில் டாஸ்மாக் கடையிலிருந்து வெளிவரும்போது  காவலர் மடக்கிப் பிடித்து ரோட்டோரம் நிறுத்தி வாயை ஊதச் சொல்லி , பைக் சாவியை பிடுங்கிக் கொண்டு “,ஸ்டேசனுக்கு வா” என்று அதட்டியிருக்கிறார்.

சார் நான் இனிமேல் குடிச்சிட்டு பைக் ஓட்ட மாட்டேன் சார் ;எங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னு போட்ருவார் சார் இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்க சார்....”என்று அழுது கண்ணீர் பெருக்கிட்டான். உங்க அப்பா யார்,உனக்கு குடிக்க பணம்  தந்தது யார் .? என்று  காவலர் கேட்டதற்கு அவன் பதில் சொல்லாமல்  அழுது கொண்டே இருந்தான்.அவனது சட்டைப் பையில் கைவிட்டு கல்லூரி அடையாள  அட்டையை எடுத்து ,அவனது அப்பா பெயரை பார்த்து ,அவர் என்ன தொழில் பண்ணுகிறார் போன்ற விவரங்களைக்  காவலர்    கேட்டார் . அவன் பெருங்குரலெடுத்து அழுதான்.பதில் சொல்ல வில்லை.உங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்து வண்டியை எடுத்துட்டு போ  ”  என்று காவலர் சொல்ல   “சார் எங்கப்பா கட்சித் தலைவர் சார் ,நான் குடிக்கிறது தெரிஞ்சா  கொன்னுருவார்  சார்”                             .”                                                                                   “என்டா  உங்க காலேஜில செல்போன் திருடி விக்கிற கேங்லீடர் நீ தானேமே”                                                          “ சார் அப்படியெல்லாம் இல்ல சார்.” ‘நீ செல்போனைத் திருடி விற்றதுக்கு சாட்சி இருக்கு;இந்த வயசில நீ கேங் லீடராடா” என்று சொல்லிக் கொண்டே காவலர் அவனது  கன்னத்தில்  அறைந்தார். வலது கன்னத்தில் தீ பிடித்தது போல் காந்தல்!  அவனுக்கு பொல பொலவென மேல்நீரும் கீழ்நீரும் வழிந்தது.

அவன் செல்போனைத் திருடியதை ஒத்துக்!கொண்டு தனது சகவகுப்பாளி முருகன் மூலம் சலூன்கடை பழனிக்குமாரிடம் விற்கக் கொடுத்த விவரத்தைக்  கக்கிவிட்டான். அருண்குமாரையும் ,முருகனையும் விட்டுவிட்டு  பழனிக்குமாரை சலூனில்  பிடித்து அடித்து காவல்நிலையத்தில் வைத்து, வருகிற,போகிற காவலர்கள் எல்லாரும் அடித்து துவைத்ததில் அவன் மயங்கி விழவும் வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறார்கள்.வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.என்று நேர்முகஅலுவலர் விசாரித்து அறிந்ததை எல்லாம் சொன்னார்.            .
பழனிச்சாமி மகள் குடும்பத்தார் கண்ணீர் வழிய மனதில் தோன்றிய தெய்வங்களை எல்லாம் வேண்டியபடி காவல்நிலையம் எதிரில் காத்து கிடக்கிறார்கள். பழனிச்சாமி மூன்று தலைமுறைகளைக்  கண்டுவிட்ட
வாழ்க்கையில் இத்தகைய கொடுமையைக் கண்டதில்லை. காமராஜர் பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, ராமமூர்த்தி பாலதண்டாயுதம் ,கல்யாணசுந்தரம், போன்றவர்களிடத்தில் அருகில் நின்று  பழகியவர்! இப்படியான அரசியல்வாதி குறித்தும் காவல்துறையினர் வன்மம் குறித்தும் கற்பனை   பண்ணிக்கூட பார்த்திருக்க    மாட்டார்.  இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதுகூட மலபார் காவலர்கள்  இவரது கடைக்குள் புகுந்து பத்திரிக்கைகளையும் புத்தகங்களையும்  எடுத்துக் கொண்டு எச்சரித்து விட்டு சென்றார்களே தவிர .கைது பண்ணவோ ,அடிக்கவோ இல்லை.!

காவல்நிலையத்துக்கு ஐநூறடி முன்னே மரநிழலில்  வண்டியை நிறுத்தச் சொன்னேன் . நேர்முக அலுவலரிடம் காவல் நிலையத்துக்கு தொலைப்பேசி செய்து சம்பந்தப்பட்ட காவலதிகாரியிடம் இந்த வழக்கு தொடர்பாக துணையாட்சியர்  பேச விரும்புவதாக சொல்லச் சொன்னேன.

சார்பு ஆய்வாளர் தொடர்பில் வந்தார். துணையாட்சியர் என்றதும் பவ்வியமாகப்  பேசினார்.

“சார்,குற்றம் சாட்டப்பட்ட பைய்யன்  எனக்கு வேண்டிய குடும்பத்துப் பையன் .அவர்கள் ஒரு காலத்தில் இந்த ஊரின் முகத்தையே மாற்றியவர்கள் .இன்று அந்தப் பையன் சலூன்கடை வைத்திருக்கிறான் என்பதற்காக எளியவர்களாக இருப்பவர்கள்  குற்றவாளிகள் என்று முடிவு செய்துவிடக்கூடாது . .அந்த வழக்கு தொடர்பான விவரங்களை எனக்கு வேண்டியவர்கள் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டேன். .அவன் மீது வழக்கு பதியாத நிலையில் எனது பொறுப்பில் அவனை வெளியில் விடுங்கள்.எனது நேர்முக அலுவலரை அனுப்பி வைக்கிறேன்.   ”எதிர் முனையில் சிலநொடிகள் மௌனம் காத்த சார்பு  ஆய்வாளர் ,”சாரி சார் ,இந்த கேஸை இன்ஸ்பெக்டர் தான் டீல் பண்றாரு,அதனால நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. .டெபுடி கலக்டர் பேசினாருன்னு இன்ஸ்பெக்டரிடம் சொல்லுகிறேன்.இப்போ இன்ஸ்பெக்டர் ஒரு கேஸ் விஷயமா வெளியே போயிருக்கிறார் ,வந்ததும் நீங்க பேசிய விவரம் சொல்லுகிறேன்.”என்று தொடர்பை முறித்தார்.

வேம்பும் ,புங்கையும் பரப்பிய நிழல் வெயில் தகிப்புக்கு இதமாக இருந்தது!.புங்கை கிளை கவட்டையில் ஒரு சிலந்தி வலை பின்னிக்கொண்டு அங்குமிங்குமாய் இழைகளை இணைத்தபடி இருந்தது.இதை பார்த்துக்கொண்டு இருந்த மரப்பல்லி மெல்ல நகர்ந்து தனது வாலால் சிலந்திவலையை கலைத்தது .நிலைகுலைந்த சிலந்தி தொங்கி  மரக்கிளையில் தொற்றியது .மின்னல் வேகத்தில் நாக்கை நீட்டியபடி பல்லி சிலந்தியை நோக்கி விரைந்தது. .சிலந்தி கிளையின் மேல்பக்கமாக பறந்து தப்பியது!.பல்லி கண்களை உருட்டி  நாக்கை உள்ளிழுத்துக் கொண்டது.சுற்றிலும் வாழ்தலுக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.என் மனம் திடுக்கிட்டது .      கொதித்து பெருமூச்சு விட்டிருக்கும் பழனிச்சாமி குடும்பத்தார் மனம் குளிரச் செய்யவேண்டும்.

காவல் நிலையத்துக்கு  ஆள்விட்டு பழனிச்சாமி குடும்பத்தாரை வரவழைத்தேன். பழனிச்சாமி  என்னை பார்த்ததும் அழாமல் தவிர்க்க உதடுகளை இறுக மூடிக்கொண்டு நெஞ்சு குலுங்கினார்.கண்ணீர் மடை உடைந்து  பெருக்கெடுத்தது. பழனிச்சாமி குரல் தழுதழுக்க  சொன்னார்.” தம்பி,இன்னைக்கு காலையிலே எம்பேத்தியா,  உள்ளே  இருக்கிற மகனுக்கு நாலு இட்லியை வாங்கிட்டுப் போய்  கொடுக்கப்  போயிருக்கா; ;அங்கிருந்த  போலீஸ்காரர் ஒருத்தர் வாம்மா களவானியை பெத்த களவானி ,உம்மவன் களவாண்டு குடுத்த காசில மகன் உடம்பை தேத்த வந்தியான்னு காதுகூசும் வார்த்தைகளில்  மானாங்கண்ணியா  பேசிட்டான் ;  .பேத்தியா நாண்டுக்கப் போறேன்னு குமுறி குமுறி அழுகிறா ...நீங்கதான் எங்க குடும்பத்தைக்  காப்பத்தணும் “என்று கண்ணீர் விட்டார்.

அவரது மகளும் பேத்தியும் விம்மி விசும்பினர் .. மனதை பிசைந்தது..பொது இடத்தில இப்படி அழக்கூடாது.இந்த கேஸு விசயமா எல்லா விவரத்தையும்  விசாரித்து தெரிந்து கொண்டேன். நான் இருக்கிறேன் .கவலைப் படாதீங்க என்று அவரது தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னேன்.அருகில் இருக்கும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி  சாப்பிடச் சொன்னேன் “.நீங்கள் போங்க ,பையனை எந்த சிக்கலும் இல்லாமல் வெளியே  கொண்டு வருவது என் பொறுப்பு.கவலையில்லாமல் போங்க.”
அவர்கள் தயங்கி என்னைத் திரும்பி திரும்பி பார்த்தபடி நகர்ந்தனர் . அவர்களது பார்வை இதயத்தை வறுத்தது.     நேர்முக அலுவலரிடம்  காவல் ஆய்வாளரைத்  தொடர்பு கொள்ளச் சொன்னேன்.அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தது.    அவர் தொடர்புக்கு வரவில்லை. அரைமணி கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட போதும் ஆய்வாளர் பேசவில்லை. அலுவலகத்தில் பணியில் கவனம்  ஓர்மைப் படவில்லை. ஆய்வாளருக்கும் அந்த அரசியல்பிரமுகருக்கும் உள்ள நெருக்கத்தில் ஆய்வாளர் பேசுவதை தவிர்க்கிறாரா?  உண்மையிலே பணி நெருக்கடியில் உள்ளாரா....?  நானே மதிய உணவு வேளையில்  எனது சொந்தப்  போனிலிருந்து பேசினேன்.ஆய்வாளர் தொடர்பில்  வந்தார்.

“பழனிக்குமார் மீது எந்த வழக்கும் பதியாத நிலையில் அவனை காவல்  நிலையத்தில்  வைத்து  ஏன் சித்திரவதை படுத்துகிறீர்கள்” என்று கேட்டதற்கு ஒரு சில வினாடிகள் கழித்து, , “அவன் இதுபோல திருட்டு செல்களை வித்தது குறித்து வேற ஸ்டேசன்களில் வழக்குகள் இருக்கா என்று விசாரிக்கச் சொல்லி இருக்கேன்; தகவல்கள் வந்ததும் அவனை விடுவது பற்றி முடிவெடுக்கலாம் .இதுதான் எங்க நடைமுறை.” . என்றார். “இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை எல்லாம் ஒரு அப்பாவி தலையில் சுமத்தத்   திட்டமிட்டு ,அவனையும் அந்த குடும்பத்தையும் வதைக்கிறீர்களா... நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்   .இன்னும் ஒருமணி நேரத்தில அவனை வெளியே விடவில்லை என்றால் இது தொடர்பாக நான்  காவல்துறை இயக்குனர் வரை செல்லத் தயங்க மாட்டேன்” என்று  சொல்லிஇணைப்பைத்துண்டித்துவிட்டேன்.  .                                           அரைமணிநேரம் கழித்து பழனிசாமியிடமிருந்து போன் வந்தது.எடுத்தேன், .குரல் தழுதழுக்க பேசினார்.;” இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டு ஏய்யா ,டெபுடி கலெக்டருக்கு  வேண்டியவங்கன்னு முன்னாலேயே சொல்லி இருக்கலாமில்ல?இந்தமாதிரி இனிமே திருட்டு செல்லுகளை வாங்கி விக்கமாட்டேன்னு ஏட்டய்யா கிட்ட உன் பேரனை எழுதி குடுக்கச் சொல்லி  கூட்டிட்டு போய்யா! நீங்க செய்யிற தப்பினால அதிகாரிகளுக்குள்ளே மனக்கசப்பு வருது.பெரியவரு நீங்களாவது சொல்லவேணாமா?கூட்டிட்டு போய்யா ,என்று சொன்னாரு.எழுதி குடுத்துட்டு கூட்டியாந்திட்டேன். தம்பி ,நீங்க இல்லாட்டி என் பேரனை  கிரிமினல் லிஸ்டில் சேர்த்து ஆயுசுமுழுக்க அலையைவிட்டிருப்பாங்க! ரொம்ப நன்றிதம்பி! சாயந்திரம் பேரனைக் கூட்டிகிட்டு வீட்டுக்கு வர்றேன் .”என்று அழுகையோடு சொன்னார்.

No comments:

Post a Comment