தெளிவு ... [ஜனநேசன்]
[குறுநாவல் ]
கோபமும் தாபமும் உந்தித்
தள்ளிய வேகத்தில் வீட்டைவிட்டு
வெளியேறி பிரியா சொகுசுப் பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.
அவளைப் பேருந்தில் ஏற்றிவிடக் கூட கணவன் வரவில்லை. ஜன்னலோர இருக்கை. தனது பொதியைக்
காலுக்குக் கீழேயே வைத்துக் கொண்டாள் வண்டிப் புறப்படும்வரை
அருகிலிருக்கும் இருக்கைக்கு ஆள்வரவில்லை. நல்லதாயிற்று ; முகக்கவசத்தை சரி செய்துகொண்டாள். கேட்பானைக் காதில்
பொருத்தி விருப்பமானப் பாடலை கைப்பேசியில்
அமைத்து கண்களை மூடினாள் . வண்டிக்குள்
ஓடும் திரைப்படத்தின் ஓசையோ, நடத்துனர், சக பயணிகளின்
உரையாடல்களோ காதில் விழவில்லை.
பெருங்களத்தூரில்
வயோதிகவாலிபர் ஒருவர் ஏறி இவளருகில்
உட்கார்ந்தார். விளக்குகள் அணைக்கப்பட்டன
.குறைந்த இருள்; மனத்துள் ஒளிந்த ஆசைகள்
நிழலாடத் தொடங்கின. அவரவர் இயல்பு.
சூழலுக்குத் தக்க மனதின் மேடையிலும், வெளியிலும் ஆசைக்கூத்துகள் அரங்கேறும்.
உறக்கத்தின் திரை விழும்வரை
நினைவுக்கூத்துகள் தொடரும்.
நமது
நாயகி பிரியாவின் அருகில் அமர்ந்த வயோதிகவாலிபன் தனது இடதுதோளினை பிரியாவின் மீது உரசினான் .
அவள் முறைத்தாள்; தூங்குவது போல்
குறட்டைஒலி அவனது தொண்டையிலிருந்து வந்தது.வயிறோ, நெஞ்சோ
அசையவில்லை. அவள் புரிந்துகொண்டாள். ஜன்னலோரம் நகர்ந்தாள்.சிறிதுநேரம்
கழித்து அவனது இடதுகை அவளது வலத்தொடை மீது மெல்ல பட்டது.அவள் அவனது அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தாள்.
அவனதுகை
தொடையில் மேல்நோக்கி மூன்றங்குலம் நகர்ந்து அவளது
அசைவு, இசைவுக்காக காத்திருந்தது. இவள் மடியில் வைத்திருந்த
சிறுதோள்பையிலிர்ந்து எடுத்த பேனாவின்
மூடியை உதடில் கவ்வி நீக்கி
நொடிப்பொழுதில் கூர்முனையை அவனது கைமீது
கவனமாக இறக்கி அழுத்தினாள். அவன் கையை உதறி நகர்ந்து உட்கார்ந்தான். அந்தக்குத்தில் அவனுக்கு ரத்தம் வந்திருக்ககூடும். களம்
பலவற்றில் விழுப்புண் பல பட்டவன் போலும்.
பேனாவின் கூர்முனைக் குத்திய வலியை
அவனது உதடு வெளியே விடவில்லை.
இடக்கையின் மீது வலிக்கு ஒத்தடம்
கொடுப்பது போல் எச்சில் நனைத்த கைக்குட்டையை அவனது வலக்கை சுற்றியது.
இதற்குப்பின் அவன் திருச்சியில்
இறங்கும்வரை அவனது மூச்சுக்காற்று கூட அவளது திசைக்கு வரவில்லை. ‘ தனியா
இருக்கிற பெண்களைப் பார்த்தாலே இவன்களுக்கு வக்கிரப்புத்தி பேயாட்டம் போடுதே; பொதுஇடம்,
பொது ஒழுக்கம் என்ற கூச்ச நாச்சமில்லையே ?
ஆசையை அடக்கவேணாம் ? ‘ என்ற எண்ணமே அவளை நாக்கை கடிக்கச் செய்தது. அவளது நித்திரையும் நிம்மதியும் தொலைந்தது.
நினைவுத்திரை விரிந்தது. அவள் மறக்க நினைத்து, நிம்மதி தேடும் பயணம் வாய்க்கவில்லை.
********** -2 -**********
பிரியாவும், கணவன் முருகேசும்
மென்பொறியாளர்கள் . சென்னையில்
இருவேறு பன்னாட்டு
நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். ஒரு
சனிக்கிழமை இரவு , மென்பொறியாளர்களின்
கொண்டாட்டக் கூடுகையில் அறைத்தோழிகள்
தம் நிறுவனத்தில் பணியாற்றும் முருகேசை
பிரியாவுக்கு அறிமுகப்படுத்தினர்.
இதற்குமுன்பே தோழிகள் முருகேசின்
பணிநேர்த்தியை, எந்தப் பெண்ணிடமும் சிக்காத ஆளுமையையும் , பணித்தலத்தில் சிக்கல்களை
விடுவிக்க உதவும் மதிநுட்பத்தையும் அடிக்கடி பேசியது பிரியாவின் மனதில் அவனைப்பற்றி
ஒரு பிம்பத்தை எழுப்பியிருந்தது.
முருகேசும் பிரியாவும்
தங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒரே மாவட்டம், சுற்றிவளைத்த உரையாடலில் தெரிந்தது ஒரே சாதி; ஒரே படிப்புநிலை. இருவரது தோற்றமும்
ஒருவரை ஒருவர் ஈர்த்து நெருக்கமாக உணரச் செய்தது. நட்புவட்டங்கள் வழி இருதரப்பு
பெற்றோர் காதுகளுக்கு போனது. ஜாதகங்கள் பரிமாறினதில் கட்டங்களும் பொருந்தியது;
பெற்றோரும் சுற்றமும் வாழ்த்த மணம்
முடித்தனர்
கல்யாணம் முடித்த மறுவாரமே 2020 பிப்ரவரி 29 ல் வேளச்சேரியில் இருவரது பணித்தலத்திற்கு அருகே ஒரு அடுக்ககத்தில் குடியேறினர். பணிநேரம்
இருவருக்கும் இரவு பகலாக மாறிவரும் முரண்பாடுகளுக்கு இடையில் தனிக்குடித்தனம் ஊர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமைகளுக்காகஏங்கினர்.
இத்தருணத்தில் கொரோனா பொதுமுடக்கம்
வாழ்க்கையை முடக்கிப் போட்டது. ‘வீட்டிலிருந்தே வேலை முறை’ நடைமுறைக்கு
வந்தது. கணவனது கிராமத்திற்கு போக அவளுக்கு மனமில்லை; மனைவியின் கிராமத்துக்கு போக
அவனுக்கு மனமொப்பவில்லை. இதற்கிடையில் ‘
கொரோனா தாக்கத்தால் ஊதியகுறைப்பு. இதற்கு
ஒப்பாதவர்கள் விலகிப் போகலாம் ‘ என்ற மின்னஞ்சல் மிரட்டி மென்னியைக் கவ்வியது .
கொஞ்சமாவது சந்தோசம் வேண்டுமானால்
பெருந்துயரத்தை சுமந்தாகணும். நித்தம் வானளாவப் பறந்து வலசை போக விரும்பிய பறவைகள்
நான்கு சுவருக்கிடையில் கணினித்திரையில் வரும் கட்டளைகளை
செயல்படுத்தும் அடிமை எந்திரமாகிப்
போனார்கள்.
ஊரிலிருந்து பெற்றோர்கள்
அடிக்கடிப் பேசுவர். “ ஒருவாட்டி வந்து
போங்க; இப்ப வீட்டிலிருந்தே வேலைபார்க்கிறமுறை தானே .மெட்ராசிலிருந்து ஒத்தைப்பேரா
இருந்து அவதிபட்றதுக்கு இங்க வந்து மனுச மக்களோட இருந்து வேலை பார்க்கலாமில்ல.நல்லதைப்
பொல்லதைதிங்கலாமில்ல !”என்றார் முருகேசின் அப்பா.
“எங்ககம்பனிவேலைநேரத்துக்கும்
,கெடுபிடிக்கும் கிராமத்தில சரிப்பட்டு வராது . போக்குவரத்து சரியாகட்டும் வர்றோம்.”என்று சமாளித்தார்கள்.
“ சரி,
நல்லபடியா, பதுவுசா இருங்க . காலாகாலத்தில ஒரு பேரப்பிள்ளையை கண்ணில காட்டுங்க “
“பேரப்பிள்ளைக்கு இப்போ என்ன அவசரம். இங்க சென்னையில சொந்தமா ஒரு வீடும்,காரும்
வாங்கினதுக்கப்புறம்தான் குழந்தைகுட்டிக. நாங்க சென்னையில எங்க சம்பாத்தியத்தில்
வீடுவாசல்,காரும், தேருமா இருந்தா உங்களுக்குத்தானே பெருமை “
“ அது
கிடக்கட்டும். பேரப்பிள்ளைகளை விடவா எங்களுக்கு சாகிற காலத்தில் காரும், வீடும் சந்தோசத்தை கொடுத்துறப் போகுது. ? பருவமறிந்து
பயிர் செய்யணும். கிணத்து ஊத்து தூர்ந்துறாம வெள்ளாமை செய்யணும்னு
பெரியவங்க அனுபவம் . எங்களைக் காடு வா வாங்குது. வீடு போ போங்குது .நீங்க
ரெண்டுபேரும் படிச்சவங்க . இதுக்கு மேல என்ன சொல்ல? நீங்களே புரிஞ்சு
நடந்துக்குங்க. “
உணர்வுதோய்ந்த இந்த வார்த்தைகளின் கனம் இவர்களது
வாயைக் கட்டியது. ஆனாலும் பதில் சொல்லணுமில்லை.
“கொரோனா கழியட்டும் நல்ல செய்தி சொல்றோம்
“ என்று தப்பித்தார்கள்.
“ கிடைச்ச வாழ்கையை சுகமா அனுபவிக்கணும் .
குழந்தை குட்டிகளைச் சுமந்து, உடலைக்
கெடுத்து அவதிப்படக்கூடாது.வனப்பும்
வாலிப்பும் இருந்தாத்தான் இந்த நவீன காலத்தில் போட்டியை சமாளிக்க முடியும் “
என்பது பிரியாவின் கொள்கை. இதில் ஒவ்வொரு நாளும் கணமும் எச்சரிக்கையாக
இருக்கிறாள்.
அவ்வப்போது அவளது தோழிகள் இவளது வாயைக் கிளறுவார்கள். “ அடப் போங்கடி ,
உங்களை மாதிரி உடனே பிள்ளைகளைச் சுமந்துகிட்டு அரைக் கிழவிகளாக நொம்பலப் படச்
சொல்றீங்களா. வாய்ப்புள்ளவரை சந்தோசமாக
இருப்போம். பிள்ளை குட்டிகள் எல்லாம் ஒரு பொசிசனுக்கு வந்தப்புறம் பார்ப்போம்” “ உங்களை மாதிரி
ஜாலியா அனுபவிப்போமுன்னு தள்ளிப் போட்டவங்க
பலரு இப்போ செயற்கைமுறையில
கருத்தரிக்க ஆஸ்பத்திரி
வராந்தாக்களில் தவம் கிடக்கிறாங்க ;
சுட்டபின் தீயின்னு அலற்ரதுக்கு,நமக்கு முந்தி பட்டவங்க அனுபவத்தை நாம எடுத்துக்கணுமில்லை “ என்ற
தோழிகளின் தொடர்புகளை துண்டித்து விட்டாள்
. தோழிகள் போன் என்றால் மௌனித்து விடுவாள். குறுஞ்செய்திகளைக்கூட பிரியா நிராகரித்து விடுவாள் .
முருகேசின் நண்பர்களும் வாயைக்
கிளறினர் “ மாப்ஸ் , என்ன வேலுண்டு வினை
இல்லைங்கிற கதையா ? “
“
என்னை பத்தி உனக்கு தெரியுமில்ல. எல்லா நாளும் சொர்க்கவாசல் தான் மாப்ஸ் ! எத்தனை நாளைக்குத்தான் வாங்குற சம்பளத்தைப் பூராவும் வீட்டு
வாடகைக்கு கொடுக்கிறது? ஒருலோனைப் போட்டு
சென்னையில் நல்ல தனிவீடா வாங்கி, கடனை அடைக்கணும். அப்புறம் சூப்பரா ஒரு
காரு வாங்கிட்டு குழந்தை, குட்டி
பெத்துக்கலாமுன்னு திட்டம்! “
“அப்போ
கிழவனும் கிழவியுமா குழாய்மூலம் பெத்துக்கப் போறீக...! வாழ்த்துகள் “ என்று
நக்கல் செய்தனர். அவன் சிரித்தபடி
நண்பர்களை அடிக்க கையை ஓங்கினான்.
தனிகுடித்தன தொடக்கத்தில் இவர்களே
ஒருவருக்கு ஒருவர் உதவி சமைத்தனர். இது ருசிபேதங்களுக்கு இடையில் தனி ருசியையும் வாழ்வில் தனி சுவையையும் கூட்டியது. ஆனால் நிறுவனங்களின் வேலைநேர முறைமை
கூட்டுச்சமயலுக்கு பொருந்தி வரவில்லை.
நேரம் கிடைத்தவர் மட்டுமே சமைப்பது ருசிபேதத்தை வளர்த்தது; ஓய்வுநேரத்தை
விழுங்கியது . ஊடலையும் , முரண்டையும்
பெருக்கியது. மகிழ்ச்சியை விரட்டியது.
வாழ்வில் கசப்பைக் குறைக்கணும்; வெளியிலிருந்து எடுப்புணவு அவரவர் ருசிக்கு
வரவழைத்தார்கள். இது ஓய்வைத் தந்தது. இல்லறத்தேர் இயல்பு நிலைக்கு வந்தது .நாலு சுவருக்குள் அடங்கிக் கிடத்தலை முறியடிக்க ஓய்ந்த
நேரமேல்லாம் விதவிதமான படங்களைப்
பார்த்தார்கள். அவை மனதுக்கும், உணர்வுக்கும் றெக்கை கட்டிவிட்டன. உண்ணுமுணவில் கலந்த வகை வகையான செயற்கை சுவையூட்டிகள் உணர்வைக் கிளப்பின. செயற்கைத் திணவுகளை இயற்கையால் திருப்தி படுத்த இயலவில்லை. எந்த ஊற்றும் , குழாயும் வாய் மூடின
பாத்திரத்தை நிரப்பிடுமா...? உப்பு நிறைய தின்றால் உண்டாகும் நீர்த்தாகத்தை தீர்க்கலாம் ; தேகத்தின் தாகம் தீர்க்கலாகுமா .
மனதிலும் சோர்வுற்றார்கள் .தாகம் அடங்கவில்லை. வயிற்றுப்பசி ருசியறியாது;
வயிறு நிறைந்தால் குடல்பசி அடங்கிவிடும்
.திணவெடுத்த உடல்பசி அடங்குமா? ருசிகண்ட
பூனை நாவை சுழற்றி அலைவதுபோல்
அவளது மனம் அலைந்து திரிந்தது
வீடே அலுவலகமானதால் வீட்டுச் சமையல் இல்லை என்றானது. உடல்வேலை குறைந்தது; உடல் சும்மா இருந்தால் மனம் சும்மா
இருக்குமா..?.படுத்தாள்; புரண்டாள்; இமைகள் மூடினாலும் மனம் திறந்து கொண்டது;
மனத்திரையில் ஆசைப்பேய் அசுரரூபம் கொண்டு
குதித்தாடியது. அவனிடம் வம்பிழுத்தாள்.
“ப்ளீஸ் , வேலை செய்யவிடு; நீ வேலை பார்க்கும்போது நான் உன்னை
தொந்தரவு பண்றேனா .ரெஸ்ட் கிடைக்கும்போது
ரெஸ்ட் எடு. ரெண்டுபேரும் ப்ரீயா இருக்கும்போது மத்ததெல்லாம் வச்சுக்கலாம்.
“ என்றான் முருகேஷ் .
“
ஹ்ஹும் , இந்தப் பேச்சுக்கு குறைச்சல் இல்லை. “என்று சுவர்ப்பக்கம் புரண்டாள்.மனக்குதிரை கட்டவிழ்ந்து
ஓடியது. ‘ ஆம்பிளைக நெனைச்ச
நேரத்தில் நெனைச்ச இடத்தில் ருசி பார்த்துட்டு வந்துர்றானுக.அதே ஆசை
அவஸ்தைகள் பொம்பிளைகளுக்கும்
இருக்குமில்லை...? பொம்பிளைக அப்படி
நடந்துக்க கூடாதா .. இப்பதான் வேறுவேறு
மாதிரியான உறவுகளைக் கூட கோர்ட்டே
ஏத்துக்குதில்ல....’
அவளது மனத்துள் இருந்து இன்னொரு
குரல் ; “ ஐயோ, எனக்கு என்னாச்சு ? என்புத்தி ஏன் இப்படி தாறுமாறாப் போகுது.
கண்டதைக் கடியதை தின்னதால ஹார்மோன்கள்
ஆட்டிவைக்குதோ ...?
எட்டாப்பு படிக்கும்போது நாளமில்லா சுரப்பின்னு சந்திரா டீச்சர் சொன்னப்ப , நான் நாணமில்லா
சுரப்பின்னு சொன்னதை பக்கத்தில் இருந்த பிரேமாவும் சேர்ந்து சிரித்தாள்.; டீச்சர் , என்னவென்று விசாரிக்க, நான் பயந்தபடி
எழுந்து கிசுகிசுத்த குரலில் நாணமில்லாசுரப்பி என்றேன். சந்திரா டீச்சர்
,‘வெரிகுட் . நல்ல உணவுகளைச் சாப்பிட்டு நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுக்குள்
வைக்கலைன்னா அது நாணமில்லா நடத்தையில் தள்ளிவிடும் .அதனால இந்த விடலைப் பருவத்தில்
நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடவேண்டும். போதிய உடலுழைப்பும், உடற்பயிற்சியும்
செய்ய வேண்டும்.! ‘ என்று சொன்னார். எல்லாப் பிள்ளைகளும் கை தட்டி
சிரித்தனர். ‘
இது
அவளது நினைவுக்கு வந்ததும் சிரிப்பு குமிழியிட்டது. இந்த நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சு கிடைந்தா பைத்தியம் பிடிச்சிரும் போல.
கொஞ்ச நாளைக்கு எங்காது வெளியே போய்வந்தா
மனசு தெளியலாம். இங்கேயே இருந்தா எதாவது ஏடாக்கூடமா நடந்திருமோன்னு பயமா இருக்கு ‘
எழுந்தாள் ; முகம் கழுவி முடியை சரி செய்துகொண்டாள்; நல்ல சுடிதாரை உடுத்தினாள் ; நாலைந்து நாளைக்கு
தேவையான துணிமணிகளையும் , வங்கி அட்டை,
கணிப்பொறி, இணைய இணைப்பு கருவிகள். ஹெட்போன்
முதலானவற்றை பொதியில் திணித்துக் கொண்டாள். அவனருகே போய் ,” நான்
ஊருக்குப் போறேன் “
“ டேய்,
என்ன கோவமா ?ரெண்டு நாள் பொறுடா. இந்த பிராஜக்டை முடிச்சிட்டு நானும் வர்றேன்.
கொடைக்கானல், மூணார்னு ஜாலியா போயிட்டு வரலாம். ““ நோ. என்னைத் தனியே விடு. எனக்கு நிம்மதி தேவை “ என்று
ஆட்டோவுக்கு போன் பேசியபடி வெளியே
நடந்தாள் .கையிலிருக்கும் வேலையை இடையில்
நிறுத்தி எழவும் முடியவில்லை; மனைவியை
தடுத்து உள்ளே இழுத்து வரவும் முடியவில்லை.கையறுநிலை. மனைவியின் பிடிவாதப்போக்கு
ஒருபக்கம்; எதிர்கால விளைவை எண்ணும் மனம் ஒருபக்கம்; பிரச்சினைகளைத் தீர்க்க
முனையும் அறிவு ஒருபக்கம்; வேலைநிர்பந்தம் ஒருபக்கம் என்று நாலாபக்கமும் அவனைச் சுண்டி இழுத்தன. வெயில் பட்டால் நிழலருமை தெரியும்; போய் வரட்டும் என்று மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றான்.
வெளியே ஆட்டோ புறப்படும் சத்தம் ஒலித்து காற்றில் கரைந்தது.
********* -3 -********
பிரியாவுக்கு மனம் நிலை கொள்ளாமல் அலைவுற்றது. இவ்வளவு நாகரீக நவீன காலத்திலும் ஒருபெண் தனியாக
நடமாடுவதில் எவ்வளவு பிரச்சினைகள்
? சுற்றிலும், மனிதர்கள், கண்காணிப்பு காமிராக்கள் என்று பலவிருந்தும் எவ்வளவு துணிச்சலாக தன்னிடம் ஒருத்தன் அத்துமீறி நடக்க முயற்சிக்கிறான்
என்றால் பொதுச் சமூகமனநிலை எவ்வளவு கெட்டுக் கிடக்கிறது. இதுக்கு எதிராக தன்னாலான எதிர்ப்பை பதிவு
செய்யும்விதமா அவனது கையில் விழுந்த பேனாமுனைக் குத்து இன்னும்
பத்து நாளைக்கு அவன் இடதுகையால் எந்த
வேலையும் செய்யமுடியாது. எப்படி
காயமானதுன்னு யார் கேட்டாலும் சொல்லவும் முடியாது. இந்த ஜென்மத்துக்கு இந்தமாதிரி
அடாவடித்தனத்தை நினைச்சுக்கூட பார்க்கமாட்டான் .
சரி, நாமபாட்ல
வண்டியில் ஏறி மதுரைக்கு
போயிக்கிட்டு இருக்கோம்;
வீட்டுக்குப் போனா ..அம்மா, ‘ மாப்பிளைத் தம்பி வராம, நீயா வந்திருக்கே ,
எதுவும் சண்டை சடவான்னு ‘ கேட்கும்; ‘
மாப்பிளை நல்லா வச்சுகிறாரா.. ஏன் இந்த ரெண்டு வருசத்தில புழுபூச்சி ஒண்ணுமில்லை,
டாக்டருகிட்ட ரெண்டுபேரும் போனீங்களா ..’
இப்படி நூறு கேள்வி அம்மா மட்டுமில்லை,
அந்த ஊருல பார்க்கிற ஒவ்வொரு பொம்பிளையும்
கேட்பாங்களே.. . நொந்து நூலாகிப் போவோமே... அப்பா என்னைப் பார்த்த
பார்வையிலே அவரு எதாவது
நினைச்சு கேட்காமலே கவலையில் கண்கலங்குவாரே....அது ஆகப்பெரும்
தண்டனையே... யோசிக்காம வெளியே
வந்துட்டமே....
பரவாயில்லை...அந்த நாலுசுவருக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பயித்தியம்
பிடிச்சுரும் ; கொஞ்சம் தனியா வெளியே போய்வந்தா தேவலைன்னு தானே வெளியே
வந்தோம். வசந்தா பெரியம்மா வீட்டுக்குப் போவோம். பெரீம்மா பிள்ளையில்லா
காலத்தில என்னை பெத்தபிள்ளை கணக்கா
தூக்கிக் கொஞ்சித் திரியும். அதுக்கு
ரெண்டு மகள்க , ஒரு மகன் பிறந்த பின்னும், நீதாண்டி
எம்மூத்தபிள்ளைன்னு இன்னமும் கன்னம் தடவி
முத்தம் கொஞ்சுமே. அதோட அனுபவமும் வெள்ளந்தியான பேச்சுகளும் நமக்கு நிம்மதி தரலாம்; நல்ல முடிவெடுக்க உதவலாம். இந்த ஆறுதல் உறக்கத்தை
தந்தது . ‘மாட்டுத்தாவணி
இறங்குறவங்க இறங்குங்க’ என்ற குரல்
விழிக்கச் செய்தது.
இறங்கி
எதிரில் இருக்கும் உணவகத்தில் ஒரு டீயை குடித்துவிட்டு, இனிப்புப் பலகாரங்கள் ,
பழங்களை எடுக்கச் செய்துவிட்டு உணவக ஓய்வறையில் காலைச் சுமையை இறக்கி மனப்பாரம்
குறைந்தவளாக வெளியேறினாள். அடுத்த
பயணம் ஆண்டிபட்டிக்கருகே உள்ள கிராமம்.
விண்ணை
முட்டும், கோபுரங்களும் , தெருக்கள் தோறும் திருவிழா சத்தங்களும்,பல்கலைக்கழகமும்,
மருத்துவ,பொறியியல்,கலை அறிவியல் கல்லூரிகள் என அறிவூட்டும் தலங்கள் நிறைந்திருந்த போதும் , மதுரை இன்னும் ஒரு
பெரியகிராமமாகவே தன்னைத் தக்கவைத்துக்
கொண்டிருப்பதுவியப்பை ஏற்படுத்துகிறது.
உசிலம்பட்டி கணவாயைக் கடக்கும்போது செம்புழுதிக்காற்று பேருந்தின்
ஜன்னலுக்குள் நுழைந்து முகத்தை
தடவி குசலம் விசாரிக்கத் தொடங்கியது. கூந்தலுக்கு இறக்கை முளைத்தது. தலையை
கைகுட்டையால் இறுகக்
கட்டிகொண்டாள்.பள்ளிநாள்களில் கல்விச் சுற்றுலா
சென்றது நினைவுக்கு வந்தது; அப்போது காற்று பேருந்துக்குள் நுழைந்து இவளது
இரட்டை சடையை உயர்த்தி இறக்கையாக்கி பட்டம்பூச்சியாக உணரவைத்தது மனதுக்கு உற்சாகம் ஊட்டியது.
ஆண்டிபட்டியில் இறங்கி பெரியம்மாவின் கிராமத்துக்கு ஆட்டோவில் போனாள்.
பெரியம்மாவீட்டின் வெளியே பருத்திமார்படல் மூடியிருந்தது. தோட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கு
.பருத்திமார்ப்படலைத் திறந்து பிரியா உள்ளே போனாள். வீட்டுக்கதவின் சாவியை வைக்குமிடம் தெரியும். என்றாலும் அவள் வீட்டைத் திறந்து உள்ளே போக விரும்பவில்லை.
முற்றத்தில் பெரியப்பாவின் கயிற்றுக்கட்டில் இருந்தது. தூக்கமின்மையும், பயணக்களைப்பும் அழுத்தியது. , கைப்பொதியையும் ,
தின்பண்டங்களையும் கட்டிலுக்குகீழே மறைத்து
வைத்தாள் . இணைய இணைப்புகளை சார்ஜில்
போட்டு கட்டிலில் படுத்தவள் துப்பாட்டவைக் கொண்டு முகத்தையும், உடலையும்
மூடினாள். படுத்த நொடியில் குறட்டைச் சத்தம் கட்டிலைத் தாலாட்டியது.
வீட்டிற்குள் யாரோ ஒருபெண்
நுழைந்து கட்டிலில் படுத்திருக்கிறாள் என்று பக்கத்துவீட்டார் சொல்லவும்
பெரியம்மா, இளையமகள் கோபித்துக்கொண்டு வந்திருக்காளோ என்று பதறி பறந்து வந்தாள். பிரியாதான் வந்து அசந்து
தூங்குகிறாள் என்றறிந்து நிம்மதியை சுவாசித்தாள்.
மீண்டும் தோட்டத்துக்குப் போய்
நாற்றுநடும் பணியைத் தொடர்ந்தாள்.
மூன்றுமணி வாக்கில் தோட்டவேலை முடிந்து
பெரியம்மா வந்த பிரியாவை உலுக்கி
எழுப்பினாள்; .” என் தங்கம் பிரியா கண்ணு எந்திரிடா , ஆத்தாடி எம்புட்டு அலுப்பு, இப்படி அடிச்சுப்போட்ட கணக்கா உறங்குறே ? மணி மூணுக்கு மேலாகுது எந்திரிடா செல்லம் “
“பெரீம்மா , மணி மூணாச்சா” பதறி எழுந்தவள் ,
பெரியம்மாவின் அணைப்பிலிருந்து
விடுவித்துக்கொண்டு குளியறைப்
பக்கம் ஓடினாள். பிரியா குளிர்ந்தநீரில் முகங்கழுவி புதுபித்துக்கொண்டு வந்து கணிப்பொறியை இணைத்து
இயக்கினாள்.கணிப்பொறி உயிர்ப்புறும் இடைநேரத்தில்
பெரியம்மாவிடம் குசலம்
விசாரித்தாள்.
“நாங்க
நல்லாயிருக்கோம். நீ எப்படியிருக்கடா தங்கம்? மாப்பிளைத் தம்பி வரலையா ? சும்மாதானே, சடவுகிடவு இல்லையே.? மதியம் சாப்பிட்டியா . செத்த நாழியில கடலைவறுத்து காபி வச்சத் தர்றேன். ”
“இல்லே
பெரீம்மா, இந்தக் கொரோனா அடைப்பில வெளியே எங்கும் போகமுடியலை. இப்பத்தான்
வெளிநடமாட்டமே தொடங்கியிருக்கு.
வேலைநெருக்கடி. ஒந்தம்பி வரமுடியலை.
உன்னைப் பாக்கனுமுன்னு நினைச்சேன். கிளம்பி வந்திட்டேன். அதுவும் இங்கிருந்தே வேலை செய்யிற தோதுல தான்
வந்திருக்கேன் . கொஞ்சம் வேலையை ஆரம்பிச்சுக்கிறேன். அப்புறமா இடையில பேசறேன்.” என்று கணினிக்குள் புகுந்தாள்.
அரைமணிநேரத்தில், பெரியம்மா கொஞ்சம் சீம்பால்கட்டியுடன், வறுத்த கடலையும்
கொண்டு வந்தாள்.பிரியா ஏறிட்டாள். “
நேத்து நம்ம மாடு குட்டி ஈனுச்சு. சீம்பால்
காச்சி நடவு முடிஞ்சதும் ஒன்
தங்கச்சிமாருக்கு ஒன் பெரியப்பாகிட்ட கொடுத்து விடலாமுன்னு இருந்தேன். தலைமக உனக்கு முதல்ல கொடுத்து வச்சிருக்கு. தின்னுடி செல்லம் “ என்றவாறே
பிரியாவின் இரு கன்னத்தையும் தடவி
நெட்டிமுறித்து முத்தமிட்டாள். பிரியா
கணினியில் கண்களை உழுதவாறு
சீம்பால்கேக்கை சுவைத்து வலது கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் இணைத்து
நல்லாயிருக்கு என்று சைகை செய்தாள்.
“ ஏண்டி தங்கம்,
உனக்கு இனிப்பு கொடுத்துட்டேன். நீ
எப்போடீ எங்களுக்கு இனிப்பு கொடுக்கப்போறே ?கல்யாணமாகி ஒன்றறை வருசமாச்சில்ல ...? “
என்னை
வேலைபார்க்க விடு என்று பிரியா
சைகை செய்தாள்.
“ என்னமோடீ உங்கவேலை,ஓவியமாத்தான் இருக்கு.! நாங்க
கறவைமாட்டை நீளமான கயிறைக்கட்டி
சுத்திசுத்தி மேயவிட்டு, நேரம்பார்த்து பாலைக் கறக்கிறதுகணக்கா உங்களை வயரால இணைச்சு
இஷ்டத்துக்கு அலையவிட்டு உங்க கம்பனிக்காரங்க வேலையக் கறக்கிறானுக. சரி, மருமகத் தம்பியும் இப்படி வெளியே வந்து வேலை செய்யலாம்ல்ல . டவுனு புழுக்கத்தில
அடைஞ்சு கிடைக்கிறதுக்கு
இங்கே வந்து ராத்தலா காத்தாட மனுசமக்களோட
இருக்கலாமுல்ல ...? ”
என்னை
வேலைசெய்ய விடும்மா என்று
கெஞ்சுவதுபோல் மீண்டும் பாவனை செய்தாள்.
பெரியம்மா சமையலில் இறங்கினாள்.
ஏழுமணி வாக்கில் நெய் கலந்த
பருப்பும், மிளகுரசமும், முட்டைப்
பொரியலும் அரிசிச்சோறும் தனித்தனித் தட்டுகளில் பெரியம்மா வைத்துப் போனாள். சுவையும் சூடும் மூக்கை வருடி, பசியைத்
தூண்டவும் பணியை இடைநிறுத்தி எழுந்து கழிவறைப் போய் வந்தாள் .
ரெம்பநாளைக்குப் பின் வீட்டுச் சாப்பாடு.
உட்கார்ந்த வேகம் வைத்த உணவெல்லாம் உள்ளேபோய்
ஏப்பமாக வெளியேறியது.
ஏழரை மணி வாக்கில்
சித்தப்பாவுடன் பெரியமருமகன் வந்தார்.பெரியம்மா; “ வாங்க தம்பி , உங்கம்மா , மீனா, பிள்ளைக
எல்லாம் சும்மா இருக்காகளா ...மழை,தண்ணி
எல்லாம் எப்படி ?” முந்தானை இழுத்து போர்த்தி நாணம் குழைந்த குரலில் கேட்டபடி
ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தாள்.
“
எல்லாரும் நல்லா இருக்காங்கக்கா. ஒரே
நாளில் ஊத்துன மழையில் கம்மாயில், கிணத்தில் தண்ணி ஏறிருச்சு. ஒருபோகம் பண்ணலாமுன்னு நம்பிக்கை
வந்துருச்சு . அதான் பொன்னி நாத்து
கிடைக்குமான்னு வந்தேன். மாமாவைப் பார்த்தேன்.”
“ தம்பி, கைகாலை கழுவிட்டு வாங்க, சோறு சூடா
இருக்கும்போதே சாப்பிட்டுருங்க. ஊருக்குள்ள
போனா வர நேரமாயிரும் . நீங்களும்
வாங்க, தம்பியோடு சேர்ந்து சாப்பிட்டுருங்க “
வீட்டுக்குள் நுழைந்ததும் பெரியப்பா
, “ பிரியா எப்பமா வந்தே. மாப்பிளை
வந்திருக்காரா “ என்று கேட்க, பிரியா; “
மத்தியானம் வந்தேன்ப்பா. வேலையை முடிச்சிட்டு
பேசுறேன்ப்பா “ என்றாள். பின்னால் வந்த
தங்கை மாப்பிளை; “யாரு, பிரியா மதினியா,
நல்லாயிருக்கேளா. அண்ணன்
வந்துருக்காகளா “ என்கவும் பிரியா
வலதுகையை ஆட்டி சிரித்துவிட்டு வேலையைத்
தொடர்ந்தாள்.
அவர்கள்
சாப்பிட்டுவிட்டு
கிராமத்துக்குள் நாற்று
விசாரிக்கப் போனார்கள். ஒன்பதுமணி
வாக்கில் பிரியா கழிப்பறை சென்று
திரும்பினாள். பெரியம்மா முட்டைப்பொரியல் வறுத்த சட்டியில் கொஞ்சம்
சோற்றை இட்டு புரட்டி
வாயில்போட்டு ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்தாள்
. பெரியம்மாவுக்கும் ஏப்பம்
பரிந்தது. பிரியா கவனித்தவாறே வேலையைத்
தொடர்ந்தாள் .
பிரியா அன்றைய வேலையை முடித்து
படுக்கப்போகும் போது மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. அடுப்படியில் போய் தண்ணீர்
முகர்ந்து குடிக்கையில் புழங்கிய
பாத்திரங்கள் விளக்கப்பட்டு பளிச்சென்று
சிரித்தன. படுக்கையில் வசந்தாபெரியம்மா புரண்டு
கொண்டிருந்தாள். சிறுபிள்ளையாக இருக்கும்போது பெரியம்மாவைக்
கட்டிப்பிடித்தும், கால்போட்டும்
படுத்தது நினைவில் வந்தது.
அதுபோல இப்பவும் படுக்க
ஆசை. பிரியாவுக்கு திடீரென்று ஓர் எண்ணம்
மனதை சுட்டது. ‘நாம
வயிற்றுப்பசியில தூக்கம் வராமப்
புரள்றோம் ; மக புருசனைப் பிரிஞ்ச உடல்ப்பசியில
கட்டிப்பிடிக்கிறாளே ‘னு
வசந்தாம்மா நினச்சுறக் கூடதே
என்று குப்புறப்படுத்தாள் . தூங்குவதுபோல்
பாவனை பண்ணினாள்.
கண்கள் மூடினாலும் மனம் திறந்தே
இருந்தது. கணவன் முருகேஷ்
ஓயாமல் குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தான் ; “ ஏய்,
சுமூத்தா ஊருக்கு போயிருப்பென்னு நினைக்கிறேன். ஏன்டா, ஒரு வார்த்தை பேசக்கூடாதா
? அவ்வளவு கோபமா .. ப்ளீஸ் பேசுடா. அத்தை, மாமா என்ன சொன்னாங்க. இந்த பிராஜக்ட் முடிஞ்சதும்
நானும் வந்திர்றேண்டா; அப்படியே , தேக்கடி, மூனாறு எல்லாம் போய் ஜாலியா
என்ஜாய் பண்ணுவோம், ஓகே ? “
“ஏய், தினந்தோறும் விதவிதமாய்
விருந்து வச்சிட்டு , இப்போ
வம்பட்டினியில் , காயப்போட்டுட்டு
போயிட்டீயே, உனக்கே நல்லா
இருக்கா ...சொல்லு. என் உடம்புல
உள்ள ஒவ்வொரு திசுவும் உன்னைத்
தொட ஏங்கித் துடிக்குது.
நிறைய உப்பைத் தின்னவன்
தண்ணிக்கு ஏங்கி பயித்தியமா
அலையுறமாதிரி உடம்பும், மனசு
அலையுதடி பாதகத்தி. ரெண்டு வார்த்தை
முகங்கொடுத்து பேசு. மௌனமாய்க் கொல்லாதடி ராட்சசி ....”
“இரவுநேரம்
பிறரைப்போல என்னையும் கொல்லும் துணையிருந்தும் இல்லை என்று
போனால் ...ஊரென்ன சொல்லும் “ இப்படி உணர்வைக் குழைத்து ஏகப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தான் .
இச்செய்திகள் இவளுக்கு
குளிர்காயும் தீயைப்போல
தேவையாகவும் இருந்தது. தேவையற்றும்
இருந்தது.உடலுக்குள் தீயை தூண்டியவன்
சரியாக அணைக்க வேண்டுமல்லவா ..?
அணையா கங்குகள் சாம்பல் பூத்து
என்னைத் தீய்த்தனவே ,, இப்படிதானே நானும்
வெந்து உழன்றேன் ; அனல்
கக்கினேன். இருவரும் சேர்ந்து அணைக்கவேண்டிய
தீயல்லவா காமம் ? நீ சரிந்தாய்;
நான் எரிந்து கரிந்தேன் . மாப்ளே அவதிப்படு ; நான்
தீண்டாமலே எரிந்து அல்லல் படு ...’ என்று மனதுக்குள் கனன்று கனன்று நீராவிப்போன வெற்றுப்பாத்திரம் போல் பெருமூச்சு விட்டவள் அவளறியாமல் தூங்கிப்போனாள்.
**********- 4-*********
வசந்தாபெரியம்மா எத்தனைமணிக்கு எழுந்தாளோ
தெரியாது. சமையல் உட்பட அனைத்து
வேலைகளையும் முடித்து ஏழுமணிக்கு
பிரியாவை எழுப்பினாள். “அடியே
தங்கம் எந்திரிடா,மணி ஏழு ஆச்சு;
உனக்கு இட்லி ,சாம்பார்,
நிலக்கடலைச் சட்னி எல்லாம்
செஞ்சுவச்சிருக்கேன். குளிச்சு சாப்பிட்டுட்டு நம்ம கிழக்கு தோட்டத்துக்கு வா.
இன்னைக்கும் நடவு இருக்கு.
வீட்டுக்குள்ளே இருக்காம,செத்தநாழி காலாற
நடந்து வாடா செல்லம் .என்ன பொழைப்போ.. காலையில்
வெயில்முகம் பார்க்காம,
ராத்திரி நட்சத்திரங்களைப் பார்க்காம
உள்ளேயே அடஞ்சுகிடைக்றீக. இப்படியிருந்தா உடம்பு வீரியம் கெட்டு நோய்க்கிடங்காயிரும்;
எந்திருச்சு ராத்தலா காலாற நடந்து வா.
கதவை ஒருசாய்ச்சு வச்சிட்டு
தோட்டத்துக்குப்போறோம்.சுதாரிப்பா இரு; இல்லாட்டி தெருநாய் புகுந்து எல்லாத்தையும் தின்னுட்டுப் போயிரும். “
“
சரிம்மா, இதோ எந்திரிச்சிட்டேன்.”
பிரியா எழுந்தாள். கண்ணுக்குள்
ஆற்று மணலைக் கொட்டியதுபோல் கண்
நெகுநெகுன்னு உறுத்தியது. கதவை
மூடிவிட்டு காலைக்கடன்களை முடித்து
கைப்பேசியை இயக்கினாள். முருகேஷ்
குறுஞ்செய்திகளால் காதல் ஆலாபனை
செய்திருந்தான். தோளைக் குலுக்கி , வழியாதடா என்று பதிலிட்டு செய்திகளை
அழித்தாள் .
சாப்பிட உட்கார்ந்தாள்;ஆறு இட்டலிகள்
இருந்தன. மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டாள்;முருங்கைக்காய் சாம்பாருக்கும்,கடலைச்சட்டினிக்கும் ஆறு இட்லிகளையும் விழுங்கிய
மாயமறியாள் .பெரியம்மாவின் கைருசியா, வீட்டுச்சமையலுக்கு ஏக்கமா
தெரியவில்லை .
‘ ருசி வெட்கமறியாது போலும் !
எச்சரிக்கையாக இருக்கணும். கதவு
திறந்திருந்தால் தெருநாய்கள்
நுழைந்துவிடும் என்றும், சூரியமுகம், நட்சத்திரமுகம் காணாவிட்டால் உடம்பு
நோய்க் கிடங்காகிரும்னு
பெரியம்மா சொன்னது சாதாரண வார்த்தைகள் அல்ல. ‘ யோசித்தபடி நடந்தாள்.
தன்னுடம்பு தனக்கே சுமையாக
இருப்பது போல் உணர்வு.
நாற்றுப்பாட்டின் ஒலி இவளை
ஈர்த்தது. உடலெடையை சமன்செய்து
வயல்வரப்பில் கவனமாக நடக்கணும்
என்ற எச்சரிக்கை உணர்வில் அவளது
நடை, தேர் அசைவானது.
வசந்தாபெரியாம்மா பத்துப் பெண்களுடன் சேர்ந்து நாற்று நட்டுக் கொண்டிருந்தாள் .அவர்களுள் ஒருபெண்
பாடிக்கொண்டே நாற்று நடவு செய்தாள்
.
“ ஆத்தா
பூமித்தாயே உம்மடிமேலே , உம்மடிமேலே
நாத்து நட்டு வாரோம், நாத்து நட்டு
வாரோம்
ஆத்தா
உம்மனசு போல பயிரு விளையணும் உயிரு வளரணும்
சோராம சுணங்காம சிசுவுக்கு பாலூட்டுற மாதிரி -
பயிரு
வாடாம வதங்காம மழை மாரி
பொழியணும் தாயே
கழனி
கரையெல்லாம் வெளைச்சல் பொலியணும்
காத்து
கருகல் அண்டாம , மாசு மருவு மண்டாம – தாயே
காத்து நிக்கணும் , கடன் கலக்கம்
தீக்கணும் ...
தானானே தானனன்னே தானானே தானனன்னே
தன்னானே தனனனன்னே ...... “
என்று அந்தப்பெண் பாடிக்கொண்டே
குனிந்தும் நிமிர்ந்தும் நாற்றை நட்டாள்
; உடனிருந்த பெண்களும் பின்பாட்டாகப்
பாடிக்கொண்டே நாற்று நட்டுக்கொண்டே தம் தம் நிறையில் நகர்ந்தனர். நாற்றுகட்டுத் தீரத் தீர வரப்பிலிருந்து பெரியப்பாவும், இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணும் நாற்றுக்கட்டுகளை பெரியம்மாவிடம் எறிந்தனர். தாவிவரும் கிளிக்குஞ்சைப் பிடிப்பதுபோல் பெரியம்மா
லாவகமாகப் பிடித்து
நடவுசெய்கிறவர்களுக்கு பிரித்துக்
கொடுத்தாள்.
‘ சேற்றில்
நாற்றுநடும் பெண்களின் முகம்
,சேற்றுவயலில் புழுக்களைப் பொருக்கி பறக்கும்
கொக்கு போல பளிச்சுன்னு எவ்வளவு
பொலிவாக இருக்கிறது ! சிட்டியில நாமும் முகத்தை
பிளிச் செய்து என்ன என்னமோ ஹெர்பல் ட்ரீட்மெண்ட் எல்லாம்
செஞ்சுக்கிறோம் இவ்வளவு பொலிவு இல்லையே ! ‘ என்று நினைத்தபடியே
பிரியா நின்றாள். நிழலும், ஆளரவமும் உணர்ந்து
அண்ணாந்த பெரியப்பா; “ வா பிரியா,
சூதானமா அந்த பூவரசு மரத்தடியில போய் உட்காரும்மா.”
“வாடி தங்கம், ஏறுவெயிலில் வந்துட்டே . மரத்தடியில உட்காரு. நீ சிறு வயசில
இந்தப்பக்கம் ஓடித் திரிஞ்சு, புழுதியில் புரண்டதெல்லாம் ஞாவகம்
வருதா. “
“ஆமாம்
பெரீம்மா. இங்க வந்து இதெல்லாம் பார்க்கும்போது
பத்துவயசு குறைஞ்சமாதிரி இருக்கு.
இங்கேயே இருக்கலாம் போலிருக்கு “ என்றபடி
மரத்தடிக்குப் போய் அங்கிருந்த ஒருகல்லில்
உட்கார்ந்தாள்.
‘என்னை
மாதிரி உடல் கட்டுள்ள பெண்ணு தானே அவ , எம்புட்டு அழகா குனிந்து, நிமிர்ந்து, நாத்து நட்டும், பாட்டு பாடி
உற்சாகப்படுத்தியும் முன்னால நகர்கிறாள் . நம்மால உடம்பைத் தூக்கி நடக்கவே அச்சலுத்தியா
இருக்கே “ என்று பெருமூச்சு
விட்டாள்.
ஏறுவெயிலும்,
மரத்தின் நிழலும்,ஈரக்காற்றும் ,
ஆறு இட்டலிகள் தின்ற மதமதப்பும்
கண்களைச் சொக்கியது ; வீட்டுக்குப் போகிறேன்
என்று சொல்லி பிரியா ஊர்ந்தாள்.
**********- 5 -*********
வீட்டுக்குள் போகாமல் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்தபடியே தெருவைப்
பார்த்தாள். மதியநேரம்
வெறிச்சோடிக் கிடந்தது. வாகன
இரைச்சல் இல்லாத கிராமத்து தெருக்களின் மௌனப்பாட்டுக்கு ,கிளிகளும்,
குருவிகளும்,காக்கைகளும் குரலெழுப்பி சுருதி சேர்த்தன.
கிராமத்தில்
கொரோனா குறித்த அச்சமோ , விழிப்புணர்வோ இல்லை.
இங்கே வந்ததிலிருந்து இவளும்
முகக்கவசம் அணிவதில்லை. கைப்பேசியை மினுக்கி மணியை பார்த்தாள்; ஒருமணியை
நெருங்கியது. நிறைய வீடியோக்கள் கவர்ச்சியான
தலைப்புகளில் கண்ணைச் சிமிட்டி
அறிவித்தன. அந்த தலைப்புகள்
அடங்கிக்கிடந்த இவளது மனக் கொதிப்பை கிளர்ந்தன . ‘ இதிலிருந்து விடுதலை பெறத்தானே பட்டிக்காட்டில் தஞ்சம் புகுந்தோம் . மீண்டும் வேண்டாம்
அந்த ஆதாமின் ஆப்பிள்கள் ‘.
அறிவிப்புகளை
நீக்கினாள்.குறுஞ்செய்திகள்
குவிந்து கிடந்தன. அனைத்தும்
கணவனிடமிருந்து தான்.
“...நான்
மட்டும் தனியே நரகத்தில்
உழலுவதோ சொல்லடி சிவசக்தி
ஒரு
வார்த்தைப் பேச ஒரு யுகமோ.... முகம் காட்ட
தயக்கமோ நிலவே .. வெடித்து நெருப்பில்
தவழவிடு ...மௌனமாய் புழுங்கிக் புழுங்கிக் கொல்லாதே எரிமலையே ...
வா வா வந்து என்னோடு சண்டை
போட்டுக் கொண்டாவது இரு ...” .இப்படி
ஏகப்பட்ட புலம்பல்கள் பிரியாவின் மனதைப் பிசைந்தது. யாரோ
வெளிப்படலைத் திறக்கும் சத்தம்.
சிலிர்த்து கைப்பேசியை அணைத்து எதிரே நோக்கினாள்.
பக்கத்துவீட்டுச்சிறுமி கையில் ஒரு
நோட்டோடு வந்தாள்.”அக்கா , இந்தப்படம் நல்லாயிருக்கான்னு பார்த்து சொல்லுக்கா.”
அக்கா என்ற அழைப்பு மேனி சிலிர்க்கச்செய்ததுநகர்ப்புறத்தில் பிள்ளைகள் ஆண்ட்டி என்றழைத்துஅரைக்கிழவியாக்கி விடுவர்
. பட்டிக்காட்டு சிறுமி பாசத்தோடு அக்கா என்றழைத்து வயசை உயர்த்தாமல் மனசு
குளிரச் செய்திட்டாள்.
“என்னடி
தங்கம்,” என்று அணைத்துக் கொண்டாள்.
சிறுமி காட்டிய நோட்டைப் பார்த்தாள்.
சிரிப்பு குபுக்கென்று குமிழியிட்டது. அடக்கி கொண்டாள். ” உன்பேரும் பிரியாவா,
வெரிகுட், நைஸ்நேம்.மூணாப்பு படிக்கிறியா. மயில் தலை நல்லா போட்டுருக்கே. இன்னும் கழுத்து நீளமாவும் , நடுவில் கால்வட்ட அளவில் முன்னோக்கி வளைந்தும் இருக்கணும் . இப்போ வாத்துக்கு மயில் தலை வச்ச
மாதிரி இருக்கு. பென்சிலைக் குடு நான் போட்டுக் காண்பிக்கிறேன். அப்புறம் அதைப்
பார்த்து நீயே அதுமாதிரி போடு. “
“சரிக்கா”
என்று பென்சிலைக் கொடுத்தாள். பென்சில் அவளது சுண்டுவிரல் நீளமே இருந்தது. பிரியா அந்தபென்சிலை வாங்கி படம் வரைய முயன்றாள். முடியவில்லை. பென்சில்
பிரியாவின் கைக்கு வாகாக இல்லை. “ஏ, பிள்ளே , இம்புட்டூண்டு பென்சிலில்
எப்படிடி வரைஞ்சே ? எங்கைக்கே பிடிபடலை. வேற பென்சில் இருக்காடீ . “
என்று கேட்டுக்கொண்டே தன் கைப்பையிலிருந்து பேனாவைஎடுத்துபிரியா மயில்
வரைந்து காட்டினாள் .பிரியா வரைந்த மயில்படத்தை பார்த்து சிறுமி தனது பென்சிலால் மயில் வரைந்தாள்.
“ வாவ்,
சூப்பர்டி செல்லம்.. மயில் நல்லா வந்திருக்குடி. பென்சில் பெருசா இருந்தா
இன்னும் சீக்கிரமா, நல்லா வரையாலாமுடி.”
பிரியா சிறுமியின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொஞ்சினாள்.
“தேங்க்ஸ்க்கா , எங்க ஸ்கூல்ல நிறையபேரு
அரை பென்சில் தான் வச்சிருக்கோம். முழு பென்சிலை பாதியாக்கிதான் எங்கம்மா கொடுத்துவிடும்.இது தீர்ந்தப்புறம்,
இன்னொரு பாதியைக் குடுக்கும்.” சிறுமியின் குரலில் வறுமையை மிஞ்சிய சாமர்த்தியம் தொனித்தது.
வரைதலின் திறன் பென்சிலின் நீளத்தில்
இல்லை. கையாளும் லாவகத்தில் தான் இருக்கிறது என்ற உண்மை !; சோறு
பரிமாறுறது கரண்டியின் நீளத்தில் இல்லடி,
பரிமாறுற விதத்தில் இருக்கிறது என்று ஒருமுறை
அம்மா சொன்னதும் நினைவில்
மின்னியது. மனசை உலுக்கி அடிவயிற்றை பிசைந்தது. “இந்தாடி தங்கம் இந்த பேனாவை என்
ஞாபகமாய் வச்சுக்கிட்டு அந்த
பென்சிலை உன் ஞாபகமாக் கொடு “
“தேங்க்ஸ்க்கா “ சிறுமி
துள்ளிக்குதித்து வீட்டுக்கு ஓடினாள்.
பிரியாவுக்கு கணவன் முருகேஷ்
நினைவு வந்தது. தீராதாபத்தில் புருஷனை
நோகடித்து விட்டோமோ...“டார்லிங்
சாப்பிட்டியாடா” என்று குறுஞ்செய்தி
அனுப்பினாள். பதில் வரக் காணோம். மணி ரெண்டாகியதே ,தானும் தின்னுட்டு மூணுமணிக்கு கணினிமுன்னால
உக்காருணுமே பதறி எழுந்தாள்.
*********-6 -*********
அன்று பணி மூன்றுமணி நேரத்திலே முடிந்து
விட்டது.நடப்பு பிராஜக்ட் குறித்த கருத்தாடலும் , அடுத்த பிராஜக்ட் குறித்த அறிமுகமும்
மட்டுமே இருந்தது. மணி ஐந்துதான் ஆகிறது. மெல்ல நடந்து தோட்டத்துபக்கம் போயிட்டு வரலாம். அந்திவானத்து
அழகைப் பார்த்து பலவருசமாச்சு ;பிரியா
வீட்டைப் பூட்டி கிளம்பினாள் .
ஊருக்கு வெளியே சுற்றிலும் தோட்டங்களும், வயல்களும் நீர்கண்ணாடி சூழ பச்சை
பூண்டிருந்தன. நாற்றுகளூடே நீர்கண்ணாடிஅந்திமஞ்சளைப் பூசியிருந்தது.காற்று
தண்ணீரைக் கிள்ளி கிச்சுகிச்சு மூட்ட இளநாற்றுகள் குலுங்கின.
மெய்மறந்து நின்ற பிரியா, யாரோஅழைப்பது கேட்டுதன்நிலைக்கு
வந்தாள். “ என்னக்கா, வயத்தண்ணிஎல்லாம் மஞ்ச குளிச்சிருக்கிறதைப் பாக்கிறியளா
,நீங்க பட்டிணத்தில ஏதோதோ பூசி நிறத்தை மாத்துவீங்க, எங்களுக்கு வெயிலுதான்,
கறுக்கவும் வைக்கும், செவக்கவும் வைக்கும் “ என்று கலகலன்னு சிரிச்சவாறு கிழக்கு தோட்டத்திலிருந்து மேற்குநோக்கி இடுப்பில் கைக் குழந்தையோடு வந்துகொண்டிருந்தாள். கருத்த அவளது முகத்திலும்
குழந்தை முகத்திலும் செம்மஞ்சள் ஜொலித்தது
.
அந்தப்பெண்தான் வரப்பில் பெரியப்பாவுடன்
நின்று கிளிகுஞ்சுகளை எறிவதுபோல் நாற்றுகட்டுகளை நடவுசெய்பவர்களுக்கு
எறிந்து கொண்டிருந்தவள். திடீரென்று, தண்ணீர்தொட்டிப் பக்கம் போய்
கைகால்கழுவி சேலையில் துடைத்து ,
பூவரசமரத்தில் கட்டிய தொட்டிலில் இருந்த குழந்தையை நோகாமல் எடுத்தாள்; மரத்தூர் மறைவில்
உட்கார்ந்து பத்துநிமிடத்துக்குள் பால் கொடுத்து சிணுங்கிய சிசுவை மெல்ல ஆட்டி
தூங்கச் செய்துவிட்டு மீண்டும் நாற்று பரிமாற வந்துவிட்டாள் குழந்தைப் பசியை
எப்படி உணர்ந்தாள் ? எவ்வளவு வேகமாய், லாவகமாய் சிசுவுக்கு பாலூட்டிவிட்டு
வேலைக்குத் திரும்பினாள். !
இதையெல்லாம்
பார்த்துகிட்டிருந்த பிரியாவுக்கு
ஆச்சரியமாக இருந்தது. “பால் நினைந்தூட்டும் தாய் “’னு படித்ததை நேரில்
பார்த்த பரவசம்.! அவளிடம் பிரியாவுக்கு
பிரியம் உண்டானது. அவள் பிரியாவிடம்
நெருக்கமாகப் பேசியது மகிழ்வூட்டியது. பிரியா சிநேகமாக சிரித்து ,அவளது சிசுவின் கன்னத்தை வருடி
முத்தம் கொஞ்சினாள். அந்தப்பெண்
ஏகசந்தோசத்தில் துள்ளலோடு நடந்தாள்.
அந்தி கருக்கத்
தொடங்கியது. வானத்தில் வலசைபோன பறவைகள் , விரிந்த அம்புமுனையாய், கால்வட்ட
ஆரமாய் வடிவங்கள் பூண்டு தம்தம்
கூடுகளுக்குத் திரும்பின.காக்கை, குருவி, புறா, மைனா என பறவையினம் ஒவ்வொன்றும் வெவ்வேறு உயர தளத்தில் பறப்பதாகத் தெரிந்தது. அவற்றின்
ஒழுங்கும் ஓர்மையும் பிரியாவின் மனதைக் கவர்ந்தது.உணவுக்கான தேடல்
முடித்து அன்றாடம் வீடு திரும்பல் எவ்வளவு
இனிமையானது. என்ற சிந்தனை இவளை சுட்டது.
நாம்தான் கூட்டைவிட்டு வெளியே வந்துட்டோமோ ... என்ற ஏக்கம் படர்ந்தது .
“என்னடி
தங்கம் , மானத்தை அண்ணாந்து கூடு அடையிற பறவைகளைப் பார்க்கிறீயா... அதுக மரத்தில்
அடைஞ்சு கரப்புரன்னு பேசிக்கிறதைப் பார்க்கணும்,அதுக எம்புட்டு சந்தோசமா
இருக்குதுக!நம்ம மனுசப்பதருக தான் ஒருத்தரோட ஒருத்தர் மனசுவிட்டு பேசாம, இறுகிப்போய் கிடக்கோம் “ பெரியம்மா சொன்னாள்.
தன்னைச் சொல்கிறாளோ?பிரியாவுக்கு பகீர் என்று
மனம் பதறியது.
“
என்னம்மா சொல்றே, “
“ஆமாடி , நாம என்ன பறவைகளா போனவுடனே அடைஞ்சுக்க ?,வீட்டுக்குப்
போனமா, குளிச்சமா, தின்னமா, உறங்குனமானு இருக்கா,..? சோறு தண்ணி ஆக்கணும்,
மாடுகன்னு பராமரிக்கணும்,பிள்ளைகளை பார்க்கணும் ;ஆந்து ஓய்ந்து படுக்கும்போது
புருசனையும் ஆத்தணும்.இதே பொம்பளைக விதியா போச்சு “
“என்ன
பெரீம்மா, பெரியப்பா உன்னை இன்னுமா.... “
“அடப்போடீ
, பொதுவா பொம்பிள்ளைக பாடுகளைச் சொன்னேன்.
உங்க பெரியப்பனை ஏன் வம்புக்க இழுக்கறே ? அவுரு தங்கமான மனுஷன். அன்னிக்கும் சரி,
இன்னிக்கும் சரி, அவுருனால எனக்கு ஒரு இமிசையும், இன்னலும் இல்லை.குறையும்,
முறையும் இல்லை! அவருக்கு வேணுங்கிறப்ப நானும், எனக்கு வேணுங்கிறப்ப அவரும் ஒத்துப்போனோம் ; அப்பப்ப கூடக்குறைவு இருக்கும்
;ரெண்டுபேரும் ஒரே இலையில ஒண்ணா சாப்பிடும்போது ரெண்டுபேருக்கும் வயிறு
நிறையுறது முக்கியமில்லை ; மனசு நிறையுறதுதான்
முக்கியம். அந்த மனப்பக்குவம் வந்துருச்சுன்னா கோபதாபத்துக்கு இடமில்லைடி செல்லம்,உப்பு உறைப்பு நாக்கு கேட்கும் ;ஆனா , உப்பு கூடினா
திங்கமுடியாது, உமட்டும் ; உறைப்பு கூடினா
நாக்கு வெந்துரும் ;குறைஞ்சா சரி செஞ்சுறலாம்..
எனக்கு ரெண்டுவயசு இளையவளான உங்கம்மாவுக்கு நீ பொறந்து ரெண்டு வருஷம் கழிச்சுதான் மீனா எனக்குப் பொறந்தா .ஆனா அவ பொறக்குறதுக்கு
முந்தியும் நாங்க சந்தோசமாத்தானே இருந்தோம்.விவசாயத்தில சில மண்ணு வாகு,விதைவாகு,நீர்வாகுக்கு
உடனே பலன் கிடைக்கும். சில சமயம் தாமசமா பலன் கிடைக்கும். அதுக்காக விவசாயத்தை
விட்டுறமுடியுமா.?
நீயும்
,மாப்பிள்ளைத்தம்பியும் படிச்சவங்க, விவரம் தெரிஞ்சவங்க, விவசாயக் குடும்பத்தில் பொறந்தவங்க, உங்களுக்கு
யாரு சொல்லியும் தெரிய வேண்டியதில்லை.காலாகாலத்தில் ஒரு பேரப்பிள்ளையை எங்க கண்ணுல காட்டுங்க.! குழந்தை செல்வம் தர்ற
சந்தோசத்துக்கு மிஞ்சினது எதுவுமில்லை. பிள்ளைகளைப் பார்த்துதான் எங்க அலுப்பு,
சலிப்புகளை மறந்து சிரிக்கிறோம். சீவிக்கிறோம்.நீங்களும் இதைப் புரிஞ்சிக்கணும்டி செல்லம்.”
பிரியா பெரியம்மாவின் கைகளை செல்லமாக பற்றினாள்.
பேசிக்கொண்டே வீடுவந்து விட்டார்கள்.
இராத்திரி படுக்கையில் பிரியாவின்
நினைவில் பெரியம்மாவின் பேச்சு பல
அர்த்த இழைகளை விரித்து விரித்து வியப்பில் ஆழ்த்தியது. பெரியம்மா தன்னைப்போல்
படித்தவள் இல்லை. ஆனால் கணவன்,மனைவி இருவரும் கடுமையாக உழைத்தபோதும் தன்னகங்காரம் கொள்ளாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து
ஊர்மெச்ச வாழ்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை, சச்சரவு வந்து கண்டதுமில்லை,
கேட்டதுமில்லை.! அவர்களது அனுபவத்துக்கு
முன் தன் பொறியியல்படிப்பும், தன்னகங்காரமும்நொறுங்குதே!பால்யத்திலிருந்து
தற்போதுவரை தானறிந்த பெரியம்மாவின்
நினைவுகளிலே கண்ணயர்ந்தாள்.
*********- 7 -********
அடுப்படியில்
பாத்திரங்களின் அசைவுகள்
பெரியம்மாவின் தனிமையைப் பகிர்வதாக இருந்தது.பிரியா எழுந்து போய், ” பெரீம்மா நான் உதவட்டுமா” என்றாள் ; “ அடப்போடீ , போய் குளிச்சிட்டு வா,
நான் இன்னும் பத்தாளுக்கு சமைப்பேன்.”
பெரியம்மா சிரித்து விரட்டினாள். இவள் குளியலறைபோய் காலைக்கடனை முடிச்சு , பெரியம்மா
வைத்திருந்த வெந்நீரில் குளித்து
நிமிர்ந்தாள். குளியலறை சுவர்க்கண்ணாடியில்
நீர்த்திவலை படிந்து மங்கலாக இருந்தது. பிரியா உலர்ந்த துண்டால் கண்ணாடியைத் துடைத்தாள்;
மங்கல் நீங்கி பிரியாவின் முகமும் பளிச்சிட்டது. உற்சாகம் பொங்கியது. வேறு
ஆடைகளை அணிந்துகொண்டு கைப்பேசியை இயக்கினாள்.
“..கோப்பையில்
உதடுவைத்து மதுவை சுவைக்கையில் உன்
உதட்டில் என் உதடு வைத்து உறிஞ்சுவதுபோல் ...பித்தேறி கண் சொக்குதடி . தலை
வெட்டப்பட்ட ஆடுபோல் உடலுறுப்பெல்லாம் துடித்து
திசை உணராமல் சுவற்றில் முட்டி
விழுகிறது. அடி,மாயக்காரி கோப்பை நிறைய விஷத்தை நிரப்பு; உன் உதட்டால்
உறிஞ்சுவதுபோல் உறுஞ்சி உயிர்விடுகிறேன் ...பிரிவின் துயரினும் உயிர்விடுதல் நிம்மதி..”என்ற குமுறலோடு இரண்டு
கோப்பைகளும், இரண்டு ஒயின்புட்டிகளும் கண்சிமிட்டி கோரமாய் சிரித்தன.
“ ஐயோ,
சனிக்கிழமை விருந்துகளில் குடித்துப் பழகியவனை , அதிலிருந்து மீட்டினோமே;
இப்போ நாமலே வறட்டு வீம்பு பண்ணி அவனைக்
குடியில் தள்ளிவிட்டோமே.ஐயோ...“கணவனை
அழைத்தாள். ‘நீங்கள் பேசவிரும்பும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை
ஏற்கும் நிலையில் இல்லை.’என்று மூன்றுமொழிகளில் முழங்கியது. எரிச்சலாக இருந்தது. பிரியாவுக்கு பதற்றம் ; மனசும்
உடலும் நிலை கொள்ளவில்லை.இப்பவே கணவனை பார்த்தாகணும். நெஞ்சு படபடத்தது.
பதற்றத்தை மறைத்து,“ பெரீம்மா, ஆபிசிலிருந்துஅவசரத்தகவல் ; உடனே
கிளம்பணும். உடனே வரச்சொல்றாங்க; இப்பவே காருல கிளம்பினா,சாயந்திரம்
அஞ்சுமணிக்கு ஆபிஸ் போய்ருவேன். “என்றபடி ஆண்டிபட்டி
கால்டாக்சிக்கு பேசினாள்.
“என்னடி, இப்படி காலில கொதிதண்ணியை ஊத்துனமாதிரி
குதிக்கிற. செத்தப்பொறு. தட்டப்பயறு கொழம்பு உனக்கு பிடிக்குமுனு வச்சிருக்கேன்.
நாலு இட்டலி தக்காளிகொத்சு வச்சு தேக்கஇலையில் கட்டிதர்றேன். பசிச்சப்ப
தின்னுக்க.தம்பிக்கும் உனக்கும் கடலை உருண்டைகளும், பாசிபருப்பு உருண்டைகளும்
கொடுத்து விடலாமுன்னு இருந்தேன். எதோ
தந்தி வந்தமாதிரி பதறி கிளம்புறியே தாயி”
.
நொடியில் துணிமணிகளை பொதியில்எடுத்து வைத்தாள் .பின் , வீட்டில் சாமி படத்தின் முன் கும்பிட்டு ,
பெரியம்மாவிடம் திருநீர் வைக்கச்
சொன்னாள்.கலங்கிய பிரியாவின் கண்களை
துடைத்து . ”பயபடாதடிசெல்லம்,எல்லாம் நல்லபடியா நடக்கும் !”
‘பெரியாம்மா எதை நினைச்சு சொல்றாளோ , வாழ்வரசி
சொல்றபடி நல்லதாகவே நடக்கட்டும்’ பிரியா
மனசுக்குள் வேண்டிக் கொண்டாள்.
“பெரீமா,,அவசரமா
கிளம்புறேன்னு பெரியப்பாகிட்ட சொல்லிரும்மா. இப்படியே ஊருக்குப்போய் அம்மாகிட்ட ரெண்டுநாளாவது இருந்துட்டுப்
போலாமுன்னு நினைச்சிருந்தேன்.இப்போ திடுதிப்புனு கிளம்புறமாதிரி ஆயிருச்சு.நீ
எதுவும் அம்மாகிட்ட சொல்லிறாதே ; நான் அம்மாகிட்ட எதமா சொல்லீர்றேன் “
வாசலில்
கார்சத்தம் கேட்டது. பிரியா கழிவறைக்குப்
போய் வருவதற்குள் பெரியம்மா வாசலில்
வந்து சகுனம் பார்த்து நின்றாள். “சரிடி
தங்கம், நீ கொண்டுவந்த சாமான்கள் எல்லாம் எடுத்துகிட்டியானு சரிபாத்துக்க. தைரியமா போயிட்டு ரவைக்கு
பெரியாப்பவுக்கு போன் பேசு”.
பிரியா
சிரிப்பை முகத்தில் வரவைத்து
கையசைத்தாள் ; கார் புறப்பட்டது.
*********- 8-*********
கார் புறவழிச்சாலையில் பறந்தது. அதையும் மிஞ்சி ப்ரியாவின் மனம் ஒளிவேகத்தில் பாய்ந்தது.
ஐந்து நிமிடத்திற்கொரு முறை புருஷன் முருகேசை
அழைத்தாள்.‘நீங்கள் பேசவிரும்பும் சந்தாதாரர் எந்த அழைப்பையும் ஏற்கும்நிலையில் இல்லை.’என்ற அறிவிப்பு மட்டுமே காதை அறுத்தது.
பக்கத்து வீட்டுக்காரருக்கு பேசினாள் ; ‘நீங்கள்
பேசவிரும்பும் சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் ‘
என்ற அறிவிப்பு வந்தது.
‘அடங்காப்பசி தீரா துயரத்தை
தந்துவிட்டதே. கணவன் தவறான முடிவெடுத்திருந்தால் வாழ்வு இருண்டுவிடுமே ...அடங்காமை ஆரிருள்
உய்த்து விடும் என்று படித்தமாதிரி ஆகிருமே... ஐயோ.!
‘ஒருத்தன் போனா ஆயிரம்பேரு ! வயசும் வாலிபமும்
இருக்கிறவரை அனுபவிக்க வேண்டியது தானே.ருசி தேட ஆரம்பிச்சா, ஆசைதீர கிடைக்கிற இடமெல்லாம் அனுபவிக்க வேண்டியதுதானே
? ‘
‘சீ,கருமம். தெருநாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம் .? நம்ம அம்மா,
அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாம் எவ்வளவு கண்ணியமா வாழ்றாங்க!.நம்ம பார்க்க
ஊருலகத்தில எத்தனைபேரு பூத்து , காய்க்காம கருகியிருக்காங்க.வாலிபவயதில் விதவை ஆனாங்க ;அவுங்கெல்லாம் திணவெடுத்தா
திரிஞ்சாங்க...? இரண்டு கரைகளுக்குள் ஓடினால்தான் நதி. கரையில்லாமல் ஓடினால் , அது
காட்டாறு. அதனால் அழிவுண்டன்றி , ஆக்கபூர்வமா உயிருக்கு உதவியுண்டா.?
தொட்டுக்கத்தான் ஊறுகாய் ; வயிறு நிறைய திங்க இல்ல.! ஊறுகாயை வயிறுநிறைய
தின்றவருண்டா.திரியில் எரிந்தால் வெளிச்சம் தரும் தீபச்சுடர் என்போம். வணங்குவோம்.
ஒழுங்கின்றி எரியும் தீயை பழித்து அழிக்கத்தான் முயல்வோம். இதுவரை பட்ட
அனுபவங்களைக் கொண்டு, நதியாய், தீபச்சுடறாய் ஒளிவிடுவோம் ‘ என்று சிந்தனைக்
கயிறிழுப்பு போரில் அயர்ந்தாள்.
வேகத்தடை
குலுங்கலில் கண்விழித்தவள் கைப்பேசியை இயக்கி மணி பார்த்தாள். ரெண்டு மணி.
விழுப்புரத்தை கார் நெருங்கியது.“டிரைவர்
,ரோட்டோரம் நல்ல ஓட்டலாப் பார்த்து நிறுத்தி சாப்பிட்டுட்டு ஓட்டுங்க.”
“நீங்க சாப்பிட்றிங்கனா நிறுத்துறேன். நான் லாங்
டிரிப்புல சாப்பிடறதில்லை. டீ மட்டும்
குடுச்சுக்குவேன் “
“எனக்கு பசிக்கலை. நீங்க டீ குடிச்சிட்டு வாங்க.
“ ஓட்டுநரை அனுப்பிவிட்டு ஜன்னல் கதவை
இறக்கி கணவனுக்குப் பேசினாள்;
“ நீங்கள் பேசவிரும்பும் சந்தாதாரர்எண் தற்போது பேசும் நிலையில் இல்லை “ என்ற பல்லவி
தான். இவளுக்கு அச்சத்தைப் பெருக்கியது.
மீண்டும் அக்கம்பக்க வீட்டார் எண்களுக்கு தொடர்பு கொண்டாள். “இணைப்புக்கு அப்பால்
உள்ளது “ என்ற குரல்தான் மனசை அறுத்தது .
“ஐயோ கடவுளே எவரும் போனை எடுக்கவில்லை. அந்த பிளாட்டில் யாருக்கு என்ன நேர்ந்தது? ஒருவேளை முருகேஷ்
தற்கொலைக்கு முயன்று எல்லோரும் மருத்துவமனையில் காத்துக்கிடக்கிறார்களா?
அப்படியென்றால் யாராவது தன்னைத்தொடர்புகொண்டிருக்கணுமே? ஒருவேளை , முருகேஷ் அறைக்குள்ளே
உணர்வற்று கிடக்கிறானோ... ஐயோ கடவுளே .. நான் என்ன செய்வேன். என் அடங்காத்தனத்துக்கு இவ்வளவு
பெரிய தண்டனையா ..?
ஓட்டுநர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல்
நாலுமணிக்கெல்லாம் வேளச்சேரிக்குள் நுழைந்து விட்டார்.வீட்டு அடையாளம் சொல்லவும் வீட்டின் முன்னே கார் நின்றதுதான் தாமதம்,
அடுத்த நொடி மாடிப்படி ஏறிவிட்டாள்.
********- 9 -********
வீட்டின் வாசல் முன் மூன்றுநாள் தூசி படர்ந்திருந்தது.அவன் வெளியே வரவில்லையா ? அல்லது, வெளியே போனவன் திரும்பி உள்ளே வரவில்லையா..? குழப்பமாக இருந்தது. சாவிதுளைக்குள் ஊடுருவி நோக்கினாள். கதவு உள்பக்கமாகப் பூட்டி இருந்தது. தட்டினாள் , குரலுயர்த்தாமல் , கதறினாள். உள்ளே அசைவில்லை. அச்சத்தால் வேர்வை பொங்கியது. கைப்பையைத் திறந்து மாற்றுசாவி கொண்டு திறந்தாள். மூத்திரக் கவிச்சி முகத்தில் அறைந்தது. உள்ளறைக்குள் ஓடினாள்.
முருகேஷ் குப்புறக் கிடந்தான் . வெக்கைகாற்றை ,ஒயின்,மூத்திர வாசனைகளோடு காற்றாடி சுழற்றிக் கொண்டிருந்தது. “வந்துட்டேன்டா டார்லிங் எந்திரிடா “ என்று உடலை உலுக்கி எழுப்பினாள். அசைவில்லை. மூக்கருகில் கைவைத்தால் சுவாசம் இருந்தது. இவளுக்கு உயிர் மீண்டது.
அவனை மல்லாக்க புரட்டினாள். குளிர்பெட்டியைத் திறந்து குளிர்ந்தநீரை அவனது முகத்தில் தெளித்தாள். கண்ணிமை திறக்கவில்லை. வாயைத் திறக்க முயன்றாள் ; முடியவில்லை.பல்கிட்டி பூட்டியது போலிருந்தது. கன்னத்தில் சுரீர் என்று அறைந்தாள். முகத்தில் அசைவில்லை . இறுகியமுகம் தளரவில்லை. இவளுக்கு அழுகை முட்டியது. கைநாடியைப் பிடித்துப் பார்த்தாள். துடிப்பு வேகம் குறைவாக உணர்ந்தாள்.நெஞ்சுப்பகுதியில் மெல்லக் மெல்லக் குத்தினாள்.
மாடி வராண்டாவில் நின்று ஓட்டுநரைக் கையசைத்து மேலே வரச்சொன்னாள். ஓட்டுநர் வந்து மூத்திரவெள்ளத்தில் படுத்துக் கிடந்தவனைப் பார்த்ததும், “ வெறும் வயிற்றில் ராவாக அடிச்சிருப்பார் போலிருக்கு. ஓவரானதும் மட்டை ஆயிட்டார் “ என்று கூறி நாடி பிடித்துப் பார்த்தார்.துடிப்பு குறைவாக இருந்தது. நெஞ்சில் குத்தி மசாஜ் பண்ணிகிட்டே , அவளிடம் அவனது ஈரத்துணியை மாற்றச் சொன்னார்.
அவள் துணிகளை மாற்றினாள். லுங்கியிலிருந்து தூக்கமாத்திரை அட்டை விழுந்தது. அதில் நான்குமாத்திரைகள் பிய்க்கப் பட்டிருந்தது . இமைக்கும்வேகத்தில் ,திறந்திருந்த கணினியைக் கவனித்தாள் ; கணினியை மினுக்கினாள் ; கம்பனியின் செய்திப்பெட்டி திறந்து சுட்டி வார்த்தைகளை சிமிட்டிக்கொண்டிருந்தது. “ கடந்த ஒருவாரமாக உங்களது பணிவேகம் குறைந்து காணப்படுகிறது ; உங்களிடம் கவனச்சிதறல் உணரப்படுகிறது. சிலகாலம் ஓய்வெடுத்து உங்கள் சிந்தனையை ஒழுங்கு செய்துகொள்ளுங்கள்.“ “ ஐயோ கடவுளே , என்னை இப்படி தவிக்க விட்டுட்டாரே என்ன செய்வேன்....” பிரியா குமுறினாள்.
“அழாதீங்க. காப்பாற்ற வேண்டியதைப் பார்ப்போம் “ ஓட்டுநர் சொல்லவும் இருவரும் அவனைத் தூக்கிச் சென்று காரில் கிடத்தினர். பிரியா வீட்டைப்பூட்டி வரவும் கார் மருத்துவமனை நோக்கி பறந்தது.
No comments:
Post a Comment