Thursday, 28 March 2024

அம்மத்தா பவன்

 

                   அம்மத்தா பவன்   [ஜனநேசன் ]

  இன்னிக்கு ராத்திரி  அம்மத்தாபவனில்  சாப்பிடனும்னு  நினைத்ததும் , நாலுவகை சட்னிகளும் , கத்தரிக்காய்  முருங்கை சாம்பாரின் ருசிக்கலவை நாவிலூறியது . அதன் மணமும், குணமும் மூளையைத்  தாக்கி  மற்ற சிந்தனைகளை  வழிமறித்தது . கைப்பேசியை சொடுக்கி மணி பார்த்தேன். மணி ஐந்து தான் ஆகுது. மேற்குவானத்தைப்  நோக்கினேன் ; செம்மஞ்சள் ஆடை அசைய , நாள்விடாய்  தீர்க்க  சூரியன்  வீடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . இரவுணவுக்கு இன்னும் மூணுமணி நேரம் கழிக்கணும் . வீட்டில்  நிலைகொள்ள முடியலை ; மூளை ,  வயிற்றைக் கிள்ளிவிட்டது . சரி ,  நாக்கு விட்ட வழின்னு , முகக்கவசத்தை மாட்டிகிட்டு கோச்சடை நடுத்தெரு விலிருந்து  பெத்தானியாபுரம் குறுக்குத் தெருக்கள் வழியாக  புட்டுத்தோப்பை  நோக்கி இருசக்கரியை இயக்கலானேன் .

**

  இந்த  அம்மத்தாபவன்  எப்படி அறிமுகம்  ஆனதுன்னா , இப்படி ஒருசமயம்  வீடு         பராமரிக்கிறதுக்காக , ஐதராபாத்திலிருந்து  நான் மட்டும்  மதுரை வந்திருந்தேன். மனைவி , தை, சித்திரை திருவிழாக்களின்போது மட்டும் வருவாள். பயண அலுப்புக்கு  பயந்து “நான் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கிறேன். உங்களுக்குத்தான் காலுல சக்கரம் கட்டியிருக்குதே  நீங்க போயிட்டு வாங்கன்னு”ட்டாள் . வீட்டில் ஏசி, மற்றும்  சில குழாய்களை  சரிசெய்யவும்,  ஒட்டடை அடிக்கவும்  ஆள்வேணும்முனு ,  பெத்தானியா புரத்தில்  குடியிருக்கும்  உறவினரிடம்  உதவி நாடினேன் .   

  உறவினரும்  எங்களைப் போலத்தான்  இங்கே வீடுகளைக் கட்டி, ரெண்டை  வாடகைக்கு விட்டுட்டு, சென்னையில்  தனது மூன்று பிள்ளைகளிடம்  மாறி ,மாறி இருந்து பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்கள். இவரும் , அந்த அக்காவும் மூன்று மாதத்துக்கொரு தரம் வந்து ஒருவாரம் தங்கி  தாங்கள் குடியிருந்த வீட்டை  சுத்தம் செய்தும் , வாடகை வசூல், மற்றும்  வீடு பராமரிப்புகளை ஒழுங்கு செய்துவிட்டு  சென்னைக்குத் திரும்புவர்.  அதனால்  அவர் இருக்கிறார்  என்று கைப்பேசியில் பேசி தெரிந்துகொண்டு  அவர் வீட்டுக்குப் போனேன்.  எனது தேவைகளைச் சொல்லவும்,  ஒவ்வொரு வேலைக்கும்  ஒரு ஆளை அமர்த்திக் கொடுத்தார். மறுநாள் வேலை தொடங்குவதாகத் திட்டம் .  அவருடன் உலக நடப்புகளைப் பேசிக்கொண்டிருந்தேன் ;  மணி எட்டாகிவிட்டதை  வயிறு  சொல்லியது .

  அவரே தொடங்கினார் , “ மாப்பிள்ளை , உங்கக்கா  இல்லாத நேரமா வந்தீட்டிக ; உங்களுக்கு  சாப்பிட ஒன்னும் கொடுக்க முடியலை ; கோவிச்சுக்காதீக . வாங்க  வெளியே போய் டிபன் சாப்பிட்டு வரலாமு”ன்னு அழைத்தார். அவரைத் தொடர்ந்தேன் . வீட்டுக்கு எதிர்த்தாப்பில் , மெயின் ரோட்டிலே  வசந்தபவன் , அப்புறம் வேறு வேறு ரெண்டுமூன்று  பரோட்டாக்கடைகள்  இருந்தன. அவற்றை தவிர்த்து , ஆரப்பாளையம் சாலையில் நடந்தார் . பேருந்து நிலையத்தை ஒட்டி எதிரெதிரே இருந்த  ரெண்டு மூன்று உணவகங்களைக் கடந்து   ஆற்றோர சாலையில்,  மதுரை விரிவாக்கம் பற்றி பேசிக்கொண்டே  நடந்தார் . எனக்கு பசியில்  எதிர்க்கேள்விகள்  எழவில்லை. மஞ்சள்நீர் தெளித்த ஆடுபோல  அவரிழுவைக்கு நகர்ந்தேன் . புட்டுத்தோப்புக்கே  கூட்டிவந்து விட்டார் . சாலையின் இருபுறங்களிலும்  லேத்து பட்டறைகளும் , கார், லாரி மெக்கானிக் ஒர்க் ஷாப்புகளுமே  தெரிந்தன . உணவகத்துக்கான  அறிகுறிகளே  இல்லை.

  சாலையை விட்டு வடபுறம் சந்தில் திரும்பினார். நூறடியில் ஒரு கோயில்தான்  தெரிந்தது . இதுவரையில் கிரீஸ், எண்ணெய் பிசுக்கு நாற்றங்களை  முகர்ந்த மூக்குக்கு, திடீரென கமகமத்த அம்மாவின் சமையலறை வாசனை !. சந்துமுனையில்  விளக்கு கம்பத்தின்கீழ்  ஒரு மூதாட்டி இட்டலி அவித்துக் கொண்டிருந்தார் . எதிரே  அடுப்பில்  தோசை வெந்து கொண்டிருந்தது. அந்தம்மாவைச்  சுற்றிலும்  பெரியது ஒன்றும்  சிறியது மூன்றுமாய்   அலுமினிய, பாத்திரங்கள் தட்டுகளால் மூடப்பட்டிருந்தன  . எதிரே  நாலு பிளாஸ்டிக் ஸ்டூல்களில்  அமர்ந்த நாலுபேர்  இடக்கையில்  ஏந்திய பிளாஸ்டிக்தட்டில் இட்லியை , சட்னிகளில் , சாம்பாரில் புரட்டி, புரட்டி விழுங்கிக் கொண்டிருந்தனர் .  இன்னும் மூவர்  தட்டேந்தியபடி , சட்டினி சாம்பாரில் ஊறிய இட்லி , தோசைகளை  ரசனையோடு  தின்று கொண்டிருன்தனர் .

 அந்தம்மா  எங்களைப் பார்த்ததும்  தலையை நிமிர்த்தி அசைத்து கண்களும், உதடுடுகளும்  மலர வரவேற்றார் . பெண்உதவியாளர் ; “கொஞ்சம் பொறுங்கண்ணே , உட்கார்ந்து சாப்பிடறவங்க  எந்திரிக்கட்டும்  “ என்றார் . எங்களுக்கு பின் வந்த ஒருவர், “நாலிட்லியும் , ஒரு ஆம்லட்டும்  கொடும்மா  , நான் நின்னுகிட்டே தின்னுக்கிறேன் “ என்கவும்  அந்தப்பெண் , பிளாஸ்டிக் தட்டில் அளவாக வெட்டப்பட்ட இலையில் , சட்னிகளையும் நாலு இட்லிகளையும்  வைத்து அதன்மேல்  சாம்பாரை ஊற்றினாள் .  

  இதற்கிடையில் அம்மா, வெந்த தோசையை  எடுத்துட்டு  ,ஒரு கைப்பிடி மக்கில்  முட்டையை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம், பச்சைமிளகாய் , உப்பு, மிளகுத் தூள்களைக் கலந்து சிறு ஸ்பூனால்  கலக்கி தோசைக்கல்லில் ஊற்றினாள் .ஆனால் இதே நேரத்தில் அவரது  பார்வை சாப்பிடுபவர்களின் முகங்களையும், அவர்களது தட்டுகளையும் உசாவி வேகும் ஆம்லட்டின் பக்குவம்  பார்த்தது .  அதை புரட்டி போட்டு இரண்டு சொட்டு எண்ணெய் தூவினாள்.

  இருவர்  சாப்பிட்டு எழுந்து கைகழுவி காசுதர  வந்தனர் . நாங்கள் இருவரும் அந்த இருக்கையில் விரைந்து அமர்ந்தோம் . சாப்பிட்டவர்கள்  அவரவர் தின்றதைச் சொல்லி காசு தந்தனர் . அம்மா நிமிர்ந்து அவர்களது கண்களை ஏறிட்டு, அவர்களது கணக்கை ஏற்று காசை வாங்கினார். இன்னொருவர் சாப்பிட்ட கணக்கு சொல்லும்போது, அவரது கண்ணை ஊடுருவி “ஆம்லட் மறந்துபோச்சுல்ல , காசிருந்தா குடுப்பா ; இல்லைன்னா  நாளைக்கு வரும்போது சேர்த்துக் குடுப்பா . “

  அவர் பின்கழுத்தை  சொறிந்தபடி , அம்மா மன்னிச்சுக்குங்க, எதோ ஞாபகப்பிசகில் தப்பு நடந்திருச்சு ;   இதோ ஆம்லட்டுக்கும் சேர்த்து எடுத்துக்குங்க . எங்கம்மா மாதிரி  வயிறு கெடாம, ருசியா செஞ்சு தர்ற உங்களை ஏமாத்திட்டு ,  நான் முன்னேற முடியுமாம்மா , தின்னதுதான்   செரிக்குமாம்மா “ என்று குரல் நெகிழ்வோடு பணத்தைக் கொடுத்து கும்பிட்டுப் போனார்.

  உதவியாளர்,  இலைபோர்த்திய  பிளாஸ்டிக் தட்டில் , எங்களுக்கு ஆவிபறக்கும் இரண்டு இட்லிகளையும் , அதைச்சுற்றி  , தக்காளி, கொத்துமல்லி, புதினா, தேங்காய் சட்டினிகள் ஒவ்வொன்றும் அளவாக  வைத்து எங்களிடம் கொடுத்தாள்.  இரட்டை நிலாக்களைச் சுற்றி நான்கு கோள்கள் இருப்பதுபோல்  தோன்றியது.  அதை நாங்கள் வாங்கியதும்  இட்லியின் மீது தேவையான அளவு சாம்பாரை ஊற்றினாள் . உதிர்ந்த நட்சத்திர பொன்துகள்கள் போல வெந்தபருப்பு மலர்ந்து கிடந்தது  . சாம்பாரில் ஊறிய இட்லியை பிட்டு , ஒவ்வொரு சட்டினியிலும் தொட்டும் புரட்டியும் வாயில் போடும்போது  நாக்கில் பட்ட கலவையான சுவை எனது அம்மாவை நினைவூட்டி கண்ணீர்  துளிர்த்தது .

   உதவியாளர் , “காரமா இருக்காண்ணே “ என்று  தண்ணீரை செம்பைத் தந்தார்.  தின்று முடிப்பதற்குள்  பௌர்ணமிக்கு முந்தினநாள் நிலாபோல வட்ட தோசையை தட்டில் வைத்து, “ அண்ணே, உங்க தோதுக்கு  மடக்கிகிங்கண்ணே” என்றார்.

“மாப்பிள்ளே , ஆம்லட், ஆபாயில்  போடச்சொல்லவா  மாப்பிள்ளை “

“ எனக்கு இதுவே போதும் மச்சான் . நீங்க  சாப்பிட்றதா  இருந்தா, நான் உங்களுக்கு கம்பனி தர்றேன் “

   அவர் கேலி தொனிக்க சிரித்தபடி ,”அம்மா , ரெண்டு பிளைன் ஆம்லட்  “                   பாதித்தோசை தின்பதற்குள்  ஆம்லட்  சூடாக மூன்று மணி வெயில் போல  வந்தது . ஆம்லட்டை பிய்த்து , புதினா, மல்லி சட்டினிகளில் புரட்டி , சூட்டைத் தணித்து , சுவையைக் கூட்டி  ருசித்தோம் .  

  உதவியாளர் கழுவிய தட்டுகளில்  இலைகளை வைத்துக் கொண்டே , யாருக்கு என்ன தேவை என அவரது கண்கள்  நோட்டமிட்டன . அம்மாவின்  கண்களும்  சாப்பிடுபவர் முகங்களையும், தட்டுகளையும் துழாவிக் கொண்டே , இட்லிசட்டி மூடியை நீக்கி , வரும் ஆவியின் மணம் கொண்டே வெந்ததை அறிந்து,  வெந்த ஈடுதட்டுகளை வெளியே எடுத்தார்  . தோசை, ஆம்லட் வார்த்துக்கொண்டே  இட்லி குழிகளில் ஊற்றியிருந்த  மாவு ஈடுகளை  பதமாக வைத்து , மூடியை பொருத்தினார் . உதவியாளர்  வெந்த இட்லிகளை சூடுதங்கு டப்பாவில் கை சுடாமல் , வடிவம் மாறாமல் வேகவேகமாய் வைத்து மூடினாள் . அம்மா காலியான ஈடுதட்டில் துணியை சுருக்கமில்லாமல் பரத்தி , அளவளவாக மாவெடுத்து  ஊற்றினாள் . அம்மாவுக்கு  கண்ணும் , கைகளும் ரெண்டா, இல்லை புராண படங்களில் உள்ள பெண்கடவுளைப் போல  நான்கா  என்று நினைக்கத் தோன்றியது .

  நாங்கள்  உண்டு எழுந்தோம். மைத்துனரே  உண்ட கணக்கைச் சொல்லி பணம் கொடுத்தார் .அம்மா புன்னகையோடு  வாங்கிக் கொண்டார். மைத்துனர்  பேசத் தொடங்குமுன்,  நான்  அவரது  கைகளைப்பற்றி , “மச்சான், டிபன் ருசி அற்புதம் !. மறுபடியும்  எங்கம்மா கையில்  சாப்பிட்ட  அனுபவம் ! இவ்வளவு தூரம், நடக்க வைக்கிறீங்களேன்னு  சள்ளையாத்தான்  நினைச்சேன் . இந்த ருசிக்காக  எவ்வளவு தூரமும் நடக்கலாம் ! இனி, நான் தனியா இருக்கிறப்போ  ராத்திரி டிபன்  இங்கதான் ! ரொம்ப நன்றி மச்சான் . பார்சல் தருவாங்களா ? “

“ ஆமாம், மாப்பிளை, ருசி மட்டுமில்ல , விலையும் கம்மி ; சீப் அண்ட் பெஸ்ட் !. பார்சல் வாங்குனமுன்னா ,  கட்டித்தர ஏற்பாடில்ல . ஆனா, சட்டினிக , சாம்பாருகனு தனித்தனியா வாங்க டிபன்கேரியர்  கொண்டுவந்து   பார்சல் வாங்கலாம். அக்கம் பக்கத்தார் எல்லாம்  பாத்திரங்கள் கொண்டுவந்து தான் வாங்கிட்டுப் போறாங்க  ! ஏழுமணி வாக்கில வந்தா, உட்கார்ந்து சாப்பிடறவங்களை விட பார்சல் வாங்குறவங்க தான்  அதிகம் ! இந்தம்மா  பள்ளிக்கூடத்துப் பிள்ளைக நாலு பேருக்கும் , கடையை  எடுத்து வைக்க உதவும்  நாலு காலேஜ் பசங்களுக்கும்  இலவசமா திங்கக் கொடுப்பாங்க ! இந்தக் கடையில் விழுகிற இலைகளையும் , குப்பைகளையும் , ராத்திரி ஒன்பதுமணிக்கு  துப்பரவுப்பணியாளர்  ஒருத்தர்  வண்டியில் எடுத்துகிட்டு , அவரது வீட்டுக்குத்  தேவையான்  உணவையும் வாங்கிப் போவார் . “

 “ ஆமாம், மச்சான், புட்டுத்தோப்பில சிவன் புட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடக்குமே , அப்பவும் இங்க கடை போடுவாரா , அம்மத்தாபவன் பேரை யாரு வச்சா  ? “

“ மாப்பிளே , புட்டுதிருவிழாவப்ப  , சனக்கடல்ல கடை  வைக்க முடியுமா ? அந்த ஒருவாரமும்  அம்மா வீட்டிலதான்  இட்லிக்கடை நடக்கும் . தெருக்காரங்களும் , பக்கத்தில லேத்துகளிள்ள வேலைசெய்யிறவங்க  வந்து  பசியாத்திட்டுப் போவாக !  கையேந்தி பவனா இருந்த இட்லிகடையை  சனங்கதான்  அம்மத்தாபவன்னு  சொல்றாங்க. போர்டோ, விளம்பரமோ இல்ல ! . சனங்க மனசுக்கு பிடிச்சுருச்சுன்னா , அதை மாத்தமுடியுமா ! “

“ ஒத்த பெண்ணாக இருந்துகிட்டு  எல்லாம் சிஸ்டமேடிக்கா  செய்யிறாங்களே  ! இவுங்களுக்கு  பிள்ளைகளோ , உறவுகளோ இல்லையா ?”

“ ஒரே மகனை என்ஜினியருக்கு  படிக்க வச்சது . இப்போ அவரு பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கிறார் . வருசத்துக்கு ரெண்டுதடவை வருவார். இந்தம்மா, மகன்  கூப்பிட்டும் போகலையாம் . தெம்பு இருக்கிறவரை இங்கயே  இருக்கேன் ; முடியாதப்ப பார்க்கலாமுன்னுருச்சாம் !  இந்தம்மாவைப் பத்தி புட்டுத்தோப்பு சனங்க பெருமையா  பேசிக்கிறாங்க “

  இப்படி அந்த அம்மாவின் பெருமைகளைப்  பேசிக்கொண்டும் , ஆற்றோரசாலையின்  குளுமைக் காற்றையும் , ஆற்றின் குறுக்கே கட்டிய பாலங்களின் மேல் ஒளித்தோரணங் களாக  ஒளிரும் விளக்குகளையும், ஒளிஎறும்புகளாக  ஊர்ந்திடும்  வாகனங்களையும்,  ரசித்துக்கொண்டும்  நடையலுப்பு உணராமல் வீடுவந்து சேர்ந்தோம் .                                    இதன்பின்  நாங்கள்  ஒவ்வொருமுறை மதுரை வரும்போதும் எங்களுக்கு  இரவு உணவு ஊட்டுவது அம்மாபவன்  தான் ! ஒரு சிலநாள்கள் மனைவியோடு   இருசக்கரியில்  வந்து  சாப்பிடுவேன் . சிலநாள்  நான்  உண்டுவிட்டு டிபன்கேரியரில்   மனைவிக்கு வாங்கிப் போவேன் . மனைவியும்  அம்மாவும் ருசிபாவங்களை பரிமாறியதில் குடும்ப நண்பர்கள் ஆகிப்போனோம் .

  ஒருநாள் ஏழுமணிக்கே அம்மத்தாபவனுக்கு போயிட்டேன் .அம்மா , பள்ளிமாணவிகள்  நால்வருக்கு  பாத்திரங்களில் இட்டிலி கொடுதனுப்பும்போது , “கண்ணுகளா, தின்னதும் தூங்கியிறக்கூடாது , பத்துமணி வரைக்கும் படிச்சிட்டு, உறங்கி  வெள்ளென எந்திரிக்கணும் “ அன்புதொனிக்க அம்மா  சொல்லவும் , “ சரி அம்மத்தா” என்று  மாணவிகள் ஒரேகுரலில் பதிலிட்டு   வாங்கிப் போனர்கள் . அவர்கள் காசேதும் கொடுக்கலை . அம்மாவின் முகம் மலர்ந்து  சோடியம் விளக்கொளியில் பொன்னிறம் காட்டியது .

  இதே சமயத்தில் கிரீஸ்படிந்த உடையோடு மூன்று லேத்துபட்டறைத் தொழிலாளர்கள் , அம்மாவின் முன் வலதுகையை ஏந்திநின்றார்கள் . தோசை வார்த்து நிமிர்ந்த அம்மா, புன்னகையோடு ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு சிறு இலைத்துணுக்கில் ரெண்டு ஸ்பூன் இட்டிலிமாவை  வைத்துக் கொடுத்தார் . அவர்கள்  மாவை வாங்கிக்கொண்டு  ஆற்றங்கரை நோக்கி நடந்தனர் .

  நான் தோசையை நால்வகைச்சட்டினி , சாம்பாரில் புரட்டித் தின்றுகொண்டே , “என்னம்மா , அது ? ” என்கவும் ,” கையில் ஒட்டிய  கிரீசை  இட்லிமாவைத் தேய்த்துக் கழுவினால் , பிசுக்கில்லாமல் போயிரும்!. அதுக்குதான் மாவை வாங்கிகிட்டு ஆத்துக்குப் போறாங்க . கழுவிட்டு வந்து இங்க சாப்பிடுவாங்க .”   இட்லிமாவுக்கு இப்படியொரு மகிமை உண்டா,  உழைப்பாளி மக்களின் பட்டறிவை  வியந்துகிட்டே ரெண்டு இட்லி கூடுதலா  சாப்பிட்டுடேன்.

  இன்னொருநாள் போனபோது , அலுவலர்கள் தோரணையில் இருந்த நான்குபேர் இட்லி, தோசை, ஆம்லட்  வாங்கி ருசித்து சாப்பிட்டுவிட்டு , பணம் எவ்வளவு என்று கேட்டுக் கொடுத்துட்டு , “ நல்லா ஹோம்லியா , சீப் அண்ட் பெஸ்டா  இருக்குமா , வர்றோம் “ என்று போனார்கள் .  அவர்களுடன் வந்த ஓட்டுநரை மெல்ல விசாரித்தேன் . அவர்கள் நால்வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளாம் . அம்மாவின் கையேந்தி பவனில் ஆரோக்கியமில்லாத உணவு விற்கப்படுவதாக  புகார் வந்ததாம். அதை சோதித்து பார்க்க வந்தோம்  என்றார் .

 அம்மாவிடம் வந்தவர்களைப் பற்றி கூறினேன் .” என் பிள்ளைகளுக்கு செய்யிறமாதிரி  சமைச்சு தர்றேன் . லாபம், பாவம் நினைக்கறதில்லை . எல்லாம் அந்த மீனாட்சி தாய் பார்த்துக்குவா “ என்று கண்கள் மின்ன  மேல்நோக்கி கும்பிட்டார் .

  மற்றொருநாள்  ஏழரைமணிக்குப் போனபோது  , அம்மா கடையருகே  போலிஸ்வேன் நின்றிருந்தது . மக்கள் கூட்டமாக  நின்றனர் .  நான்  இருசக்கரியை  ஒரமாக  நிறுத்திவிட்டு  நிமிர்கையில் , காவலர்வாகனத்தில்  சட்டையில்லாது நின்ற இருவரை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது . வண்டியின் பின்னால்  சிகப்புச்சட்டைக்காரர் இருசக்கரியில்  தெருக்காரர் ஒருவரை ஏற்றிக்கொண்டு விரைநதார் . அங்கே நின்றிருந்த ஒருவரிடம்  விசாரித்தேன்.

  இரண்டுபேர் குடிபோதையில்  அம்மாகடையில்  இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது பாத்திரங்களில்  இட்லி வாங்கிக் கொண்டிருந்த  மாணவிகளை பார்த்தபடி இந்த இட்லிகளும்  சமைஞ்ச பிள்ளைகது கணக்கா மெத்துன்னு இருக்குதுல்ல பங்காளின்னு  ஒருத்தன் சொல்லவும் , அவனும்  வேறொன்னு  கொச்சையா சொல்லி சிரிச்சிருக்கான் . இதைக்கவனித்த  அம்மா, “ பொண்ணுக, சிறுசுக  வர்ற இடத்தில் ஒழுங்கு மருவாதையா திங்கணும் , இல்லாட்டி எந்திரிச்சு போயிறணும் .மரியாதைகெட்ட ஏவாரமெல்லாம்  தேவையில்லை “

  ஒருத்தன் தாளிச்ச  மிளகாயைக் காட்டி  “ பங்கு, சாம்பாருல  கரப்பான்பூச்சி செத்துகிடக்கு , உமட்டுது , எந்திர்றா போவோம்னு  “ ரெண்டுபேரும் கரைச்சல்  பண்ணிக்கிட்டு இருந்தாங்க . இட்லி வாங்கவந்த  பிள்ளை ஒண்ணு , அம்மத்தா கடையிலே ரெண்டுபேரு குடிச்சிட்டு வந்து தகராறு பண்றாங்கன்னு தெருவுல சொல்லவும் , தெருசனங்க  திரண்டுவந்து  அவன்களை பிடிச்சு லைட்டுகம்பத்தில் கட்டிவச்சு  அடிச்சாங்க . இதுக்குள்ள  இந்த ஏரியா கவுன்சிலர் வந்து , அடிக்கிறதை தடுத்து . போலிசுக்கு  தகவல் சொல்லவும் , ரோந்துவண்டி வந்துருச்சு .   

   போலிஸ்காரங்க  லத்தியை சுழட்டி விசாரிச்சதில் , “பக்கத்து ஓட்டல்காரர் , எங்களுக்கு  குடிக்கக காசு கொடுத்து அம்மாகடையில் சலம்பி , நாளைப்பின்னே  கடை நடத்தாமச் செய்யணும்னு   சொன்னாரு . இங்க வந்தா இந்த தெருசனங்க எங்களைத்  தொவைச்சு தொங்கப் போட்டுட்டாங்க . நீங்களும் அடிச்சா  எங்க உடம்பு தத்தனேரிக்கு  தான் ! ” என்று கதறவும் அவுங்களை ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போர்றாங்க. அவனுக  ரவுடி லிஸ்ட்டில இருக்கானுகலாம் . கவுன்சிலர் பிராது கொடுக்கப் போறாரு . அவிங்களுக்கு  இனி கவருமன்ட்டு களிதான்  !

  அம்மாவின் முகத்தை  ஊடுருவினேன்  சலனமற்ற  முறுவல் . இவ்வளவு  கலவரம்  நடந்திருந்த போதும் பதற்றம்  அம்மாவின் முகத்தில்  காணவில்லை . அன்று அம்மா பரிமாறிய சட்டினிகளில் காரமும் , இதமும்  சமஅளவில் உணர்ந்தேன் .                               ***                                                                      இந்த சம்பவங்களுக்குப்  பின் கொரோனா முடக்கம். ரெண்டு வருசத்துக்குப் பின்  இன்றுதான்  அம்மத்தாபவனுக்கு  போகிறேன் . அம்மத்தாபவன்  நினைவுகளின் வழி மனசு பயணித்தாலும் , நெருக்கடியான வாகன  போக்குவரத்துகளுக்கிடையே    எப்படி  இருசக்கரியை ஓட்டினேன்  என்று ஆச்சரியம் அடங்கவில்லை . புட்டுதோப்பில்  வேகங்குறைத்து  அம்மத்தாபவன்  பக்கம்  திரும்பினேன்.

  அம்மாகடையைக்  காணோம். புதியதாக டெம்போவேனில் ,இருபுற பக்கவாட்டிலும் சன்னல் போன்ற அகல திறப்பில்  உணவுபண்டங்கள்  வைக்கப்பட்டிருந்தன . ரெண்டு மடக்கு மேஜைகள் போடப்பட்டு  ஐந்தாறுபேர்  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜீன்ஸ் அணிந்த இருவர் பக்கத்தில்  நின்றிருந்தனர் .

 ஐயோ, இதென்ன  பாஸ்ட்புட்  வண்டிமாதிரியில்ல  இருக்கு ? அம்மததாபவன்  என்னாச்சு? அம்மாவுக்கு என்னாச்சு ?பதற்றத்தில்  நாக்கு வறண்டது . சரி , வந்தது வந்துட்டோம். அவசரப்பட்டு   திரும்பாம , விசாரிப்போம்னு  போனேன்.  வண்டிக்குள்  சுடிதார் சுந்தரியாக ஒருபெண் பளிச்சுன்னு  சிரித்தமுகத்தோடு , வெளியில் டேபிளில்  சாப்பிடுபவர்களைக்  கவனித்திருந்தாள் . அவளிடம்  , “அம்மத்தாபவனு  அம்மா எங்க “

 அவள் எதிரே கைகாட்டி ,” வளர்த்தியா  இருக்கிறாரில்லா  , அவருகிட்ட கேளுங்க  “

  “தம்பி, அம்மத்தாபவன்  அம்மா...”

 “சார் வாங்க. உட்காருங்க . அவுங்க  என்னம்மா தான் . கொரோனா அடப்பப்ப  , நாங்க பெங்களூரிலிருந்து  இங்க வந்துட்டோம் . இங்க வந்து  ஒருமாசத்தில அம்மாவுக்கு  கொரோனா  வந்திருச்சு . நாங்க  அவுங்களைக் காப்பாத்த  அதிகபட்சம் முயற்சி பண்ணினோம் , காப்பாத்த முடியலை .  அம்மா  விருப்பபடி , அம்மாவோட இருந்து  சமையலிலும்,  பரிமாறலிலும்  உதவியா இருந்தவர்களை  வைத்து இந்தக்கடை நடத்துறோம்  . அம்மா செய்த கைபக்குவத்தில்  சட்னிக சாம்பாரு எல்லாம்  வீட்டிலே  தயார் பண்ணி கொண்டாந்துருவோம். இங்க கேஸ் அடுப்பில் இட்லி ,தோசை , ஆம்லட்னு  சுடச்சுட  செஞ்சு தர்றோம்.  நிறையபேரு  அம்மாவை விசாரிச்சு வர்றாங்க . நீங்க ஐதராபாத்திலிருந்து  அம்மாவைப் பார்க்க வர்றீங்க . உள்ளே அம்மாவைப் பாருங்க .”  ஓரடிக்கு ரெண்டடி சட்டகத்தில் மல்லிகைச்சரம் மணக்க அம்மாவின் முகம் அன்றலர்ந்த மலராக சுடர்ந்தது . நான் கண்கள் துளிர்க்க அம்மாவைப் பார்க்கும்போது , மருமகள்  எழுந்து கைகளைக்கட்டி நின்றாள்.

 அம்மாவின்  சாயலும் , மென்மையும்  மகனின்  முகத்திலும், அகத்திலும்  தெரிந்தது .  ரெண்டு இட்லியும் , ஒரு தோசையும்  சாப்பிட்டேன் . அம்மாவின்  கைருசியை  நாக்கு கண்டுகொண்டது  .

  சாப்ட்வேர் வேலையில்  லட்சக்கணக்கில்  சம்பாரிக்கிறதை விட்டுட்டு,  எப்படி இந்த கேட்டரிங் வேலை ஒத்துபோகுது  தம்பி  என்றேன் .                                        “ சிறுவயசிலியே அப்பாவை இழந்த என்னை , அம்மா இந்த இட்லிகடை நடத்தித்தான்  காப்பாற்றி, படிக்கவைத்து எஞ்சினியராக்கியது . பிறருக்கு உதவி தாமும் உயரும் உத்தியை  அம்மா இந்தத்தொழில் மூலம்  உணர்த்தியது . தனது அர்பணிப்பால் சனங்க மத்தியில , மணிமேகலைங்கிற பேரு மறந்து அம்மத்தானு பேரு வாங்கியது . எனக்கே சமயத்தில் அம்மாவின் பெயர் மணிமேகலைங்கிறது   மறந்து போயிரும் !!

  இந்தத்தொழில்  படாடோபமாத் தெரியலையே தவிர ,  இதில் கிடைக்கிற நிம்மதி  சாப்ட்வேரில் இல்லைங்கய்யா !. அதுல, கம்ப்யூட்டர் முனையில் அடிமையாக ராப்பகலா உழன்றோம் . இதில மனுசர் பசி அடங்குறதை நேருக்கு நேர் அவுங்கவுங்க முகங்கள்ல பார்க்கிறோம் . இந்த நிம்மதியை , கோயில்ல நாம மதிக்கிற சாமியைக் கும்பிடறப்பகூட  நான்  உணரலை ! என்கிட்டே இருபதுபேர் வேலை  பார்க்கிறாங்க . இதேபோல  இன்னொரு  டெம்போவேனில்   கேட்டரிங்  மதுரை ஜங்சன்  முன்னால  அனுமதி வாங்கி நடத்துறோம்.  கல்யாணம் போன்ற எல்லா விசேசங்களுக்கும்   கேட்கிற பண்டங்களை செஞ்சு அவுங்க இடத்திலேயே  தர்றோம். ஏழைப்பிள்ளைகளுக்கு  படிக்க உதவறோம் . எல்லாம் அம்மா காட்டிய வழி  “ அவர்  சொல்லச் சொல்ல  என் கண்கள்  கசிந்தன .                                                        உங்க பேரு என்ன தம்பி , “அமுதன்  “  வாழ்த்துகள்  ஆபுத்திரனே  என்று கைகுலுக்கி  விடைபெற்றேன் .                                                                   

 

                    ***** 

பேசும் புதிய சக்தி – ஜூலை -2023    

                                         

 

 

 

 

 

 

No comments:

Post a Comment