Sunday, 21 August 2022

சுமைதாங்கிகள் (ஜனநேசன்)

               சுமைதாங்கிகள்             (ஜனநேசன்)

 

அந்த முதியதம்பதியரது ஆட்டோ கூட்டநெரிசலில் மெல்ல ஊர்ந்தது.  ரயிலுக்கு நேரம் நெருங்கிவிட்டது என்ற உணர்வு அலைக்கழித்தது  அவர்களது இதயத்துடிப்பு துள்ளிப் பாய்ந்தது.  பரபரப்பு தொற்றியது. நத்தை மீதமர்ந்து செல்வது போல் உணர்வு. வெயிலின் புழுக்கத்தில் வியர்வை நசநசத்தது. வாகனப்புகையில் காற்றும் சூடாகவே இருந்தது. கண்கள் கடிகாரத்திற்கும் ஆட்டோநகர்வுக்கும் இடையே ஊசலாடியது. ஆட்டோ ஒருவகையாக நெரிசலில் மிதந்து ரயில்நிலைய வாசலை எட்டியது. வெளிக்காற்றின் உற்சாகத்தில் நொடிப்பொழுதில் சாமான்களை இறக்கினர்.

பகல் நேரமாதலால் சுமைதூக்கிகள் தென்படவில்லை. சக்கரபொதியை அவர் எடுத்துக் கொண்டார். மனைவி இருபைகளைத் தூக்க இயலாமல் தூக்கி இடுப்பு வளைந்து நின்றார். முதியவர் தனது சக்கரபொதி மீது ஒருபையை வாங்கி இருத்திக் கொண்டார்.  இன்னொரு பையின் காதுகளை ஆளுக்கொரு புறம் பிடித்து ஊர்ந்தனர்.  ரயில்வர பத்துநிமிடங்களே இருக்கின்றன. அதற்குள் மூன்றாவது நடைமேடைக்குப் போயாக வேண்டும். ஒன்று மேம்பால படி ஏறிப்போகணும் .இல்லையேல் சுரங்கப்பாதையில் இறங்கி குறைந்த எண்ணிக்கையில் படிகள் ஏறணும். சுரங்கப்பாதை நோக்கி நகர்ந்தனர்.

மனைவி உயரத்திற்கேற்ப கணவர் தன்உடலை வளைத்து பையின் காதுகளைப் பற்றி சக்கரப்பொதியை இழுத்தவாறே நகர ஆறடி மனிதர் ஐந்தடியாக வளைய வேண்டிருந்தது. இடுப்பைக் கடுத்தது. இறங்குபடி வந்ததும் சக்கரப்பொதிமேல் இருந்த பையை முதுகில் போட்டுக் கொண்டு இடக்கையில் சக்கரப் பொதியையும் வலத்தோள்பட்டையில் கைப்பையையும் இருத்திக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கினார். மனைவி கைப்பிடிக் கம்பியைப்  பிடித்தபடி மெல்ல இறங்கினார்.  நாற்பத்தைந்து வருஷம் குடும்பச் சுமையை சுமந்துவரும் மனைவிக்கு கொஞ்சம் இளைப்பாறுதல் .பத்து எட்டுகளுக்கு ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தபடியே கணவர் முன்நகர்ந்தார். ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் தனது சுமைப்பொதியை யும் துப்பாக்கியையும் சுமந்து மேடு பள்ளங்களில் நடந்தது நினைவு வர தளர்ந்த உடலில் மிடுக்கு கூடியது. ஒட்டவெட்டிய நரைத்த கிராப் .ஐந்தாம்பிறை நிலவை மூக்குக்கு கீழே பொருத்தியது மாதிரி வெண்மீசை , வெயிலுக்கு கண்குழிக்குள் பதுங்கிய விழிகளோடு சேர்ந்து குறும்புன்னகை யைப் பளிச்சிட்டது. பழைய நினைவுகளின் ஊக்கத்தில் படியேறி சுமையை இறக்கி மனைவிக்காக காத்திருந்தார். மனைவி தளர்ந்த தேகத்தைச் சுமந்து ஊர்ந்து படியேறினார்.

சென்னை செல்லும் விரைவுவண்டி முப்பதுநிமிடம் தாமதமாக வந்துகொண்டு  இருக்கிறது என்ற அறிவிப்பு ஆசுவாசப்படுத்தியது. இவர் ஒரே மூச்சில் அனைத்து சாமான்களையும் வாகாய் எடுத்துக்கொண்டு தமக்கான பயணப்பெட்டி வருமிடத்தில் இருந்த கருங்கல் இருக்கையில் அமர்ந்தார். மனைவியும் வந்தமர்ந்து கைகால்களை உதறி நெட்டி முறித்தார்.

“பயணத்தின்போது சுமையைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று எத்தனை தடவை சொன்னாலும் , எவ்வளவு சிரமப்பட்டாலும் நமக்கு புத்தி வர்றதில்லை!”

“ஆமாம் , சுமக்கணும்னு எனக்கு நேர்த்திக்கடனா?  பேரப்பிள்ளைகளுக்கு எதோ மர்மக்காச்சலுங்கிறாக. அதுக்கு கைப்பக்குவமா சுக்கு, மிளகு,  திப்பிலித்தூளும் தேன்பாட்டிலும் , நிலவேம்பு கசாயம் ரெண்டுபாட்டிலும் , பனங்கற்கண்டும், பிள்ளைக பிரியமாகத் திங்கிற பலகாரங்களும் தான் கொண்டு வர்றேன். இதுகூட இல்லாம எப்படி பேரப்பிள்ளைகளைப் பார்க்கிறது? சுக்கு ,மிளகு, திப்பிலிக்கு கட்டுப்படாத காய்ச்சலும் இருக்குமா? ஆமாம் ,மர்மக் காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் அது இதுங்கிறாகளே?  என்னது?“

“எல்லாம் இயற்கைக்கு விரோதமாக சுற்றுப்புறச்சூழல் கெட்டுப்போனதால் வரும் கேடுகள் தான்.”

ரயில் தடதடத்த ஓசையோடு வந்து பெருமூச்சுவிட்டு நின்றது.  பயணிகள் இறங்கியதும்,  மனைவியை ஏறச் செய்து ஒவ்வொரு சாமான்களாக ஏற்றி பின், இவர் அவற்றை தம் இருக்கை நோக்கி நகர்த்தினார். மூத்த குடிமக்கள் இருவருக்கும் இந்தமுறை கீழிருக்கைகளே ஒதுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமே. மனைவிக்கு விரித்து படுக்கச் செய்தார்.  இவரருகே மேலிருக்கைகாரர் அமர்ந்திருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் டிக்கட்டைக் காட்டிவிட்டு கொஞ்சம் படுத்து கண்அயரலாம். ரயிலை பிடிக்க வந்த பரபரப்பும் , வெயிலும் ,சுமையும் , அறுபத்தைந்து வயதுக்கான உடல்தளர்வும் அவரை அசத்தின.  ரயில்பயணம் அவருக்கு புதிதல்ல. பதினைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியபோதும் அதற்குபின் இருபத்தைந்து ஆண்டுகள் மத்திய வருவாய்த்துறையில் பணியாற்றிய காலத்திலும் அவர் ரயிலிலே தான் பயணித்து இருக்கிறார். தமது இரு பெண்பிள்ளைகளுக்கு திருமணம் செய்வித்து பேரப்பிள்ளைகள் பிறந்த பின்னும் தொடரும் ரயில்பயணம் இன்று போல் இவ்வளவு அலுப்பாக இருந்ததில்லை. வண்டி ஏறியதும் தூங்கவே தோன்றுகிறது. கொட்டாவி பரிந்தவண்ணம் இருந்தது. உடல் தளர்ச்சியும் புறச்சூழல்கள் ஏற்படுத்தும் மனத்தளர்ச்சியும் தயிர் மத்தாக கடைந்தன.

பக்கத்தில் இருந்தவர் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு தாளை இவர் வாங்கி வாசித்தார். மத்திய அரசு அறுபதாயிரம் கோடி ரூபாய் கடன் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்தது குறித்து செய்தி விமர்சனம் வந்திருந்தது. இனி வரும் பட்ஜெட்டிலும் கார்பரேட் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டிவரி குறைக்கப்படும். வங்கி ,இன்ஸ்யூரன்ஸ் ,தொலைப்பேசி முதலான பொதுத்துறை பங்குகளை தனியாரிடம் விற்றும், ரயில் போன்ற எல்லா சேவை மட்டத்திலும் ஜிஎஸ்டிவரி உயர்த்தியும் பட்ஜெட் பற்றாக் குறையை சரிசெய்யப்படும் போன்ற செய்திகள் இவருக்கு எரிச்சலாக இருந்தது. மறுபக்கத்தைப் புரட்டினார்; மூன்றாம் ,ஐந்தாம்,எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ,அம்மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்பில் சேர நுழைவுத்தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இது வரும் கல்வியாண்டில் நடைமுறைப் படுத்தப்படும் என்ற செய்தியும் இவர் கண்களை உறுத்தி மனதை பிசைந்தது. செய்தித்தாளைத் திருப்பிக் கொடுத்தார்.                                                                 பக்கத்துபயணி ,“தான் ஐம்பத்திரண்டு வயதிலேயே தொலைப்பேசி துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு இந்த அரசு தள்ளியது. என்போன்ற லட்சம்பேர் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டோம். மக்கள் சொத்தை இந்த அரசு சூறையாடிவிட்டு பொதுமக்கள் மீது சுமையைத் திணிக்கிறது“ என்றார்.                                                 இதை எல்லாம் மக்கள் எப்போது உணரப் போகிறார்கள் ? இவருக்கு மனச்சோர்வும் உடல்தளர்வும் அழுத்தின. கண்களை  இமைக்கதவுகள் மூடத் துடித்தன .பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் காட்டிவிட்டு கண்ணை மூடலாம் என்று பயணச்சீட்டை எடுத்து பொழுதைநகர்த்த பயணச்சீட்டை வாசித்தார். ‘தூங்கும்வசதி இருக்கைக்கு இருபது சதம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது‘ வாசித்தார். நேரடியாக வங்கிகணக்கு மூலம் இணையத்தில் பயணச்சீட்டு பதிவுசெய்ததால் இவருக்கு கட்டணஉயர்வு விவரத்தை பார்க்க அவகாசமில்லை .                                                                     மேலும் வாசித்தார்; ‘நீங்கள் பெறும் முதியோருக்கான கட்டணச்சலுகை நாற்பத்து மூன்றுசதவீத பொதுமக்களின் கட்டணத்திலிருந்து பெறுகிறீர்கள் என்பது நீங்கள் அறிவீர்களா ' என்ற வாசகங்கள் கண்களை நெருப்புக்கோல் கொண்டு சுட்டதுபோல் உணர்வு உச்சந்தலையை எட்டியது. இந்த வாசகத்தை  வாசிக்கும் விவரமறியா  எந்த இளைஞனும் மூத்தகுடிமக்கள் மீது வெறுப்படைவார்கள்  அல்லவா. இப்படி  மக்களை மோதவிடும்  அரசு  இளைஞர்களுக்காவது  வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறதா ? மனித வாழ்வின் இருமுனைகளான இளையவர்களையும் முதியவர்களையும் மதிக்காத நாடு உருப்பட வழியுண்டுமா… உடலெங்கும் காந்தல் பரவியது! கருத்து திரண்ட மழைமேகத்தை  காற்றடித்து கலைத்தது போல் உறக்கவுணர்வு கலைந்தது .

[மார்ச்.மார்ச்2.020..புதிய ஆசிரியன்]


No comments:

Post a Comment