கடிவாளமற்று ... ஜனநேசன்
“ அம்மு , இன்னைக்கோட பதினஞ்சு நாள் முடியுது. இருமல் ,தும்மல் அறிகுறி ஏதுமில்லை . மாப்பிளையை உள்ளே வந்து இருக்கச் சொல்லு. நானும் அப்பாவும் வராந்தாவில இருந்துக்குறோம் .” சொன்ன அம்மாவை மகள் முறைத்தாள் .” என்னம்மா , என்னை அந்தாளுகிட்ட மாட்டி விட்டுட்டு , நீங்க ரெண்டு பேரும் தப்பிச்சு நிம்மதியா தூங்கலாமுன்னு பாக்கிறிங்களா. ரெண்டு வருஷமா அந்த ஆளுகிட்ட பட்ட பாடு போதாதா. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா வீட்டிலிருந்து வேலை செய்யறேன் .பழையபடியும் அந்தாளை உள்ளே சேக்கணும்னு நினைக்கிறீங்களா ...”
“சீ, வாயை மூடு. வெளியே வராந்தாவில் மருமகன் ,உள்ளே மகளுன்னு தனியா பிரிச்சி வச்சுட்டு நாங்க உள்ளே உன்கூட நிம்மதியாவா தூங்கினோம். உலகமே கொரனாவாலே தலைகீழே புரண்டு பொது அடைப்புன்னு சுருண்டு கிடக்குது . அந்தத் தம்பி பெத்த தாய் தகப்பன் வீட்டுக்குப் போகாம , தான் செஞ்ச தப்பை உணர்ந்து பொண்டாட்டி பிள்ளைன்னு தேடி வந்திருக்கானே , அதை மதிக்காம இருக்கலாமா. சரி, நீ வேலை பார்க்கிற. உனக்கு புருஷன் வேணாமின்னு இருந்திறலாம். அப்பனை பார்த்ததும் தவந்து தாவுதே ஒரு வயசு பிள்ளை , அதுக்கு அப்பன் வேணாமா . உனக்கு ஆயி ,அப்பன் நாங்க இருக்கப்போயி உனக்கும் உன் பிள்ளைக்கும் ஆதரவா இருக்கோம், இதே கணக்கா உன் பிள்ளைக்கு அப்பன் வேணுமில்லை. திருந்தி வந்தவனோடு வாழப்பாரு.”
மகளிடம் பதில் பேச வார்த்தைகள் இல்லை. கடந்த ஐந்து மாதமாகவே கணவனுக்கும் அவளுக்கும் உறவில் கொஞ்சம் உரசல் இருந்தது. கையில் ஆறு மாதக் குழந்தையை பராமரித்துக் கொண்டும் வீட்டில் இருந்தே ராப்பகலா அலுவலக வேலையையும் செய்து கொண்டும் அவதிப்பட்டாள் . இந்த நிலையில் கணவனை கவனிக்கவில்லை. பிள்ளையும் ,வேலையும் முக்கியாமா ,புருஷன் முக்கியாமானு கேட்டு உரண்டு பண்ணி குடிச்சிட்டு வந்து இம்சை பண்றவனை என்ன செய்யிறது. தை பொங்கலை சாக்கிட்டு அம்மா வீட்டுக்கு மதுரை வந்தவள் ,இங்கேயே அலுவலக வேலையைப் பார்த்தபடி தங்கி விட்டாள்.. குழந்தையை அம்மாவும் ,அப்பாவும் கவனித்துக் கொள்கிறார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. புருஷன் தொல்லை இல்லை. உடலுக்கும் மனசுக்கும் தேவையான ஒய்வு கிடைக்கிறது. பதற்றமோ பரிதவிப்போ இல்லாத சமவெளி நீரோட்டமாக வாழ்க்கை ஓட்டம். இந்த நேரத்தில் கொரோனா சுனாமி உலகத்தில் எல்லாவற்றையும் புரட்டி போட்டு வேடிக்கை பார்க்கிறது. இவள் முன்னமே வீட்டிலிருந்தபடி வேலை அனுமதி பெற்று தாய் வீட்டுக்கு வந்து விட்டாள். பொது அடைப்பு அறிவிக்கப்பட்டு நிறுவனம் வெளியேற்றிய பின் கணவன் வந்து சேர்ந்தான்.
கொரோனா அச்சம் மருந்து கண்டறியாத உயிர்ப்பயமாக பரவிய பின் புருஷன் ,பெண்டாட்டின்னு பார்க்க முடியுமா.. பதினைந்து நாளாவது தனிமை படுத்தப்பட்ட பின் தானே உள்ளே அனுமதிக்க முடியும்.. வெளி வராண்டாவில் படுத்திருந்த பெற்றோர்கள் வீட்டுக்குள்ளும் , மருமகன் வெளி வராண்டவுக்குள்ளும் தங்கவும், அங்கேயே கணிப்பொறியில் அலுவலக வேலை செய்யவும் ஏற்பாடானது. .மருமகன் குளிக்க கழிக்க வெளியில் உள்ள அறை . வீட்டின் உள்ளே அவள் குளித்து தலை உலர்த்த வெளியே அவனைக் கடந்து செல்லும்போது அவளது வாசம் மட்டுமே அவனைத் தொடும்..
அவளும் அவனும் ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர, பேச்சோ ,ஏற இறங்க,கிறங்கல் பார்வை பரிமாற்றமோ இல்லை. நேரா நேரத்துக்கு டீ ,பலகாரம், சாப்பாடு ,சூடுதங்குபாத்திரத்தில் வரும் . காலியான பாத்திரங்களை .வேலைக்காரம்மா எடுத்து செல்லும்.. வீட்டுச்சிறைக்குள் நரகமான மௌனச்சிறை அவனை அழுத்தும் . மாமியார் ,மாமனார் அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் அதீத மரியாதை வழிய பேசுவார்கள். அதில் தயக்கமும் சமுகவிலகலும் உறைந்திருக்கும் . ஆனால், குழந்தை எல்லோரும் கவனிக்காத நொடியில் அப்பாவிடம் தவழ்ந்து வந்து இருக்கையை இழுக்கும். மழலை மிழற்றும். வேலையில் உறைந்திருக்கும் அவன் மழலை கதகதப்பில் உருகி எழுந்து அணைத்து கண்கள் கசிய கொஞ்சுவான். இந்த ரசாபாச குரல் கேட்டு அவள் முணுமுணுக்க மாமியார் வந்து இதமாகப் பேசி குழந்தையை வாங்கிச் சென்று குளிப்பாட்டுவார். கையருகே வந்த சொர்க்கம் பறிபோன உணர்வு அவனை உழற்றும். உடனே தீர்க்க முடியாததை சற்று பொறுத்தே ஆகவேண்டும் . அவனது கணிப்பொறியின் இடது ஓரம் அந்த மழலையின் படத்தை இருத்தி வேலையைத் தொடர முயலுவான்.
வீட்டு உள் ஹாலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மகள் வந்ததும் அவளது வேலை பாதிக்கக் கூடாதென்று வராந்தாவுக்கு வந்தது. இப்போது மருமகன் வராந்தாவில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உளறல்பெட்டி வாய்மூடி உட்கார்ந்திருக்கிறது. பெரியவர்களுக்குத் தான் சிரமம். மாமியாரவது பேத்தியை கவனித்துக் கொள்வதில் ,அவள் தூங்கியதும் ,வேலைக்காரம்மவிடம் பேசுவதில் பொழுது நகரும். மாமனாருக்குதான் நீண்ட நரகமாய் நாள் ஊர்ந்திடும் . மருமகன் குளிக்கப் போன நேரத்தில் தொ.கா செய்தி பார்ப்பார். அச்சுறுத்தும் கொரானா செய்திகளாகவே இருக்கும். அடுத்தடுத்து நீட்டிக்கும் பொது அடைப்புகள், சமூக விலக்கம், தனித்திரு ,முககவசம் அணிந்திரு, கைகளைக் கழுவி இரு இப்படியான எச்சரிக்கைகள் ஏற்கத்தக்க தாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் வேறு அர்த்தங்களைத் தருகிறதோ என்ற ஐயம் தோன்றியது . மாட்டுக்கு வாய்மூடி . குதிரைக்கு கண்மூடி . மனுஷனுக்கு மூக்கிலும் வாயிலும் மூடி வாழ்க்கை நகருகிறது .ஆனால் குதிரைக்காவது கடிவாளம் போட்டு சவ்வாரி செய்யலாம். ஆனால் தடுப்புமருந்து என்னும் கடிவாளமில்லாத குதிரையாக அல்லவா கொரானா இருக்கு, இதில் சவாரி செய்பவர் கதி புரியாத கதியாக இருக்கே ! . பெரியவர் தானாக சிரித்துக் கொள்வார். அக்கம் பக்கம் பார்த்து சிரிப்பை புதைத்து கொள்வார் . புலம்பெயர்ந்து கால்நடையாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து போகும் அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைப் பார்க்கும்போது கசியும் கண்ணில் ரத்தவாடை வீசுவது போல் உணர்வு. இந்தக் காட்சிகளை பார்க்காமல் இருக்கவே தனது தொ.கா பெட்டி முடங்கிக் கிடப்பது நல்லதுதான். ஆனால் நம்மை சுற்றி நடப்பதை உணராமல் இருப்பது என்ன மனிசத்தனம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மருமகன் வந்து விட்டார்.. இவர் பெட்டியை அணைத்தார் .
‘நீங்க டிவி பார்க்கணுமின்னா பாருங்க மாமா. நான் சாப்பிடத்தானே போறேன்”
“வேண்டாம் மாப்பிளை, நீங்க மனசு ஓர்மையோட சாப்பிடுங்க .டிவி பார்த்தா ரத்தக்கண்ணீர் வருது.”
பெரியவர் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மெல்ல பூனைநடையில் வெளிக்கதவை திறந்து சென்று பால் வாங்கி வருவார். செய்தித்தாள் விநியோகம் பரவலாக இல்லை. செய்தித்தாள் அபூர்வமாகத் தான் வரும். குறைந்த பக்கங்களில் முந்தைய விலையில் கிடைக்கும். வாங்கி புரட்டின பக்கமெல்லாம் கொரோனா செய்தியும் ,மத்தியஅரசு மருத்துவர்களுக்கு கை தட்டச் சொல்வது. விளக்கை அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றச் சொல்வது .விமானம் மூலம் பூ தூவச் செய்வது மாதிரியானச் செய்திகள் அவருக்கு உவப்பானதாக இல்லை. மக்கள் தொகை பெருக்கத்தால் தான் பெருநகரங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று மந்திரிகள் சொல்லுவது கேட்டால் சிரிப்பு வருகிறது. கிராமப் புறங்களில் விவசாயமும் ,அதைச் சார்ந்த தொழிலும் சிதைந்து போனதாலே பெருநகரங்களை நோக்கி மக்கள் குவிகின்றனர். .சிறுநகரங்களில் தொழிற்சாலைகள் தேவையான அளவு இருந்தால் இந்த அளவுக்கு புலம் பெயர்தல் இருக்குமா ? தொற்று பரவுமா , இதையெல்லாம் அரசியல்வாதிகள் மறைத்துவிட்டு மக்களையே குறை சொல்லுகிறார்கள். இதெல்லாம் சகமனிதர்களிடையே பகிரக் கூட இயலாத வகையில் தனித்திரு ,விலகியிரு, ஊரடங்கு உத்தரவுகள் வாய்க்கட்டு போடுகின்றன என்று முதியவர் தனக்குதானே பேசிக் கொண்டே பாலை வீட்டில் கொடுப்பார். இதற்குள் அம்மா , முதல்நாள் மாலைநடையின் போது கணவர் பறித்து வந்த வேப்பிலைகளை அரைத்த விழுதை மஞ்சள்தூளோடு தண்ணீரில் கலந்து வாசல் தெளித்திருப்பார். அது சிமெண்ட்டு தரையில் வித்தியாசமான நிறக்கலவையோடு மணக்கும். அதில் வெள்ளிக்கோடில் கோலம் மலர்ந்திருக்கும். இந்தத் தோற்றம் பெரியவரின் நொந்த மனசுக்கு ஒத்தடம் கொடுக்கும்.
வீட்டுக்காரம்மாவும் வேலைக்கரம்மாவும் வெளியே துவைத்த துணிகளை உதறி காயப்போட்டனர். வேலைக்காரம்மா சொன்னாள், ” கொரோனா புண்ணியத்தில் உங்க மருமகனை உள்ளே சேத்துக்கிட்டீங்க . உங்க மகளுக்கு ஒரு நிம்மதி. எங்க வீட்டில வம்பு சண்டை இழுத்துகிட்டாவது காலை சுத்திக்கிட்டு வந்த மகனை கொரோனா பிரிச்சிருச்சு . யாரோ சென்னைக்கு கார் ஓட்டிகிட்டு வான்னு கூப்பிட்டதும் ஊரடைப்பு காலத்தில் ஓட்டுகூலி கூடக் கிடைக்குமுன்னு ஆசைப்பட்டு போனவன் சென்னையில் மாட்டிக்கிட்டான். போக்குவரத்து தடையில் ரயிலு ,பஸ்ஸில்லாமல் கஞ்சி ,தண்ணிக்கு வழியில்லாமல் என்ன பாடு படுறானோ தெரியலை. வெளியே நிலைமை சரியில்லை , போகாதீங்கன்னு மருமக சொல்லியும் கேட்காமப் போனான். வெளியே போனால் திரும்ப வீட்டுக்குள் நுழையக்கூடாது என்றாள். எங்கே கிடந்து சீப்படறானோ ,தெரியலை . பள்ளிக்கூடம் மூடியிருக்கிறது. மருமக பார்த்த ஆயா வேலைக்கு சம்பளம் போடலை .வேலையாவது நிலைக்குமான்னு தெரியலை. இலவச அரிசியும் ,நீங்க குடுக்கிற சம்பளமும் தான் பேரப்பிள்ளைகள் உசுரை காப்பாத்திகிட்டு இருக்கு. யார் யாரெல்லாம் உதவி செய்யறதாக டிவியில் சொல்றாங்க, அதெல்லாம் அவங்கவங்க வேண்டிய ஆளுகளுக்கா குடுக்கிறாங்க .நீங்க குடுக்கிறதை வச்சு உசிரைக் காப்பத்துரோம்ம்மா ”. அங்கலாய்த்துப் புலம்பினாள். “ கவலைப் படாதே லட்சுமி, உன் மகனுக்கும் நல்ல விமோட்சனம் பிறக்கும், வெயிலில் திரிந்தவனுக்கு நிழல் கிடைக்காமலாப் போகும் .” “ புண்ணியவதி உங்க வார்த்தை பலிக்கட்டும்மா.” என்றபடி லட்சுமி பிழிந்த துணியை உதறினாள். நீர்த்திவலைகள் உதிர்ந்து குளிர்ந்த காற்று உடலைத் தழுவி வெட்கையைத் தணித்தது.
உள்ளறையில் தெற்கு பார்த்து அவனும் , வடக்கு பார்த்து அவளும் திரும்பி அவரவர் பணியைத் தொடர்ந்தார்கள். அம்மா செருமலோடு உள்ளே வந்து சமையல் கட்டில் சமைப்பதும், வெளியே பேத்தியை தூக்கி வந்து சோறூட்டுவது, தூங்கியதும் உள்ளே கொண்டுவந்து படுக்க வைப்பது போன்ற வேலைகளைச் செய்வாள். புருஷன் உள்ளே வந்ததன் பின் அவனுக்கு சோறு போடும் வேலை . அவளுக்கு. ஒருமணி ஆனதும் தட்டும் ,கரண்டியும் உரசி பேசிக்கொள்ளும். குழம்பின் மணம் வரும். உணவு வகைகள் எல்லாம் இவனுக்கு பிடித்தவையாகவே இருக்கும். .இறுகிய முகத்தோடு திரும்பிப் பார்ப்பான். அவள் கணிப்பொறி முன் அமர்ந்திருப்பாள். அவளது காதுகளுக்கும் ,முதுகுக்கும் கண் முளைத்திருக்கும். அவன் கை கழுவி முதல் முறை வைத்த சோறை மட்டும் சாப்பிட்டுவிட்டு மறு சோறு வைத்துக் கொள்ளாமல் எழுந்து விடுவான். வெளியில் வந்து வீட்டுமுன் சற்று உலாத்திவிட்டு , தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை செல்லமாகத் தடவுவான். .பின் கணினி முன் உட்கார்ந்து விடுவான். உடல்மட்டும் தான் திரும்பி இருக்கும் .உள்ளமெல்லாம் அவளை சுற்றி வரும்.
அவள் வெளியே வந்து தூங்கும் குழந்தையைப் பார்த்து ,”ஏம்மா ,பாப்பா சரியா சாப்பிடலையா ,வயிறு ஒட்டிப் போயிருக்கு “ என்று சத்தமாக அவன் காதில் விழும்படி கேட்பாள். அம்மா புரிந்து கொண்டு அப்பாவைப் பார்ப்பாள். அவர் முறுவல் பூப்பார். அம்மா அடுத்த கணத்தில் ,” பிள்ளை வயிறு உடமைப்பட்டவளுக்குத்தான் தெரியும். இனிமே நீயே உன் பிள்ளைக்கு வயிறார ஊட்டிவிடு .” என்றாள். மகள் பேச்சற்றுப் போனாள். இதெல்லாம் அவனது பாம்பு செவியில் விழுந்து புன்னகையை மலர்விக்கும். இப்படியான நாடகம் ரெண்டு நாள் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்கும் வேலை ஓடவில்லை. ஆனால் ஊடலின் புது வகையான சுவையை உணர்ந்தனர் இருவரும் எதிரெதிர் திசை நோக்கி படுத்திருந்தாலும் அவரவர் கனவில் ஒன்றாகவே வேறுவேறு உலகில் உலவி மகிழ்வில் மிதந்தனர் .
மூன்றாம் நாள் காலை அவன் எழுந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தை அவனது மடியில் வந்து தொற்றிக் கொண்டது. டீயைக் குடித்தவாறே அவன் குழந்தையின் முதுகை இதமாய்த் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மென்தட்டலும் குழந்தையின் இதயத் துடிப்பும் ஒன்றவும் பிள்ளை சொக்கிச் சிரித்தது. அப்படியே சிறுநீரை கழித்து விட்டது. ஆஹா அப்பாவை அபிசேகம் பண்ணீட்டியேடா செல்லம் , என்று அருவருப்பின்றி தூக்கினான். இதைக் கவனித்த அவளுக்கு சிரிப்பு குமிழியிட்டது. வாயை இறுக்கி மூடினாள். க்ர்ர் என்று காற்று ஒலிக்குமிழாக வெடித்தது. அவன் குழந்தையைக் கொஞ்ச முகத்தின் அருகே கொண்டு போகவும் கரும்புதறாய் முடி மண்டிக் கிடப்பதை கண்டதும் குழந்தை வீரிட்டு அழுது கால்களை உதறியது.
“முகத்தை கரடி மாதிரி வைச்சிருந்தால் குழந்தை பயபடத்தானே செய்யும்” என்றபடி குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கினாள். அம்மாவின் அரவணைப்பில் அழுகையை நிறுத்தி அவளது தோளில் சாய்ந்து கொண்டது. அவன் சிறுநீர் கீழே சிந்தாமல் லுங்கியை லாவகமாக சுருட்டிக்கொண்டு கழிவறை பக்கம் போகும்போது பீரோவில் இணைந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். அவனுக்கே கோரமாகத்தான் தெரிந்தது. கரடி மாதிரி இல்லை, சிங்கமுகக் குரங்கு மாதிரி இருக்குன்னு அவள் சொல்லி இருந்தால் கூட தப்பில்லை என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான். அவன் குளியலறை சுவற்றில் பிணைக்கப் பட்டிருந்த கண்ணாடி முன் முகச்சவரம் செய்தான் .முகம் பளிச் என்றிருந்தது. ஆனால் தலையில் மண்டியிருந்த முடி விகாராமாகத் தெரிந்தது. தன்னிடமுள்ள ட்ரிம்மர் கொண்டு ஒழுங்கு படுத்த முயன்றான். பக்கவாட்டில் குறைக்க முடிந்த அளவு தலையிலும் ,பின்பக்கத்திலும் முடியை சீராய் ஒழுங்குபடுத்த முடிய வில்லை. அலங்கோலமாய் இருந்தது. மொட்டையடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் தனக்குத்தானே பிசிறு இல்லாமல் எப்படி மொட்டை அடித்துக் கொள்ள முடியும். என்று குழம்பி நின்றான். அவள் சொன்ன மாதிரி கரடி கணக்கா இருந்திட்டு போகட்டுமுன்னு விட்டிருக்கலாம். பாதி சிரைத்தும் சிரைக்காமலும் இப்படி ஒரு சிக்கலில் மாமனார் வீட்டில் மாட்டிக் கொண்டோமே. மாமனாருக்கு வழுக்கைத் தலை. அவருக்கு கவலை இல்லை. நாமல்லவா சிரைக்கவும் முடியாம, மழிக்கவும் முடியாம ரெண்டுங்கெட்டானாக மாட்டிக் கொண்டோமே என்று குமைந்து கொண்டிருந்தான்.
குளியலறையில் ஒரு மணி நேரமா என்ன செய்யிறான் என்று அவள் எட்டிப் பார்த்தாள். கண்ணாடி முன் அலங்கோலமான தலையோடு அவன் விழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஒரு சீப்பை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். “மண்டையையும் ஆளையும் பாருங்க... .காமெடியன் தலை மாதிரி” என்றபடி அவனிடமிருந்த ட்ரிம்மரை பிடுங்கினாள். அவன் செய்வதறியாது நின்றான். அவள் அவனது தலையை சீப்பால் வாரி, ட்ரிம்மர் கொண்டு சீப்பின் அரவணைப்பில் முடியை ஒழுங்கு படுத்தினாள் . பக்கவாட்டிலும் சீராக்கினாள். இப்போது தலை ஓரளவு வடிவுக்கு வந்திருந்தது. அவன் கண்ணாடியைப் பார்த்தான். “தாயே, சகலகலாவல்லி “ என்று சொல்லி கும்பிடுவது போல் கைகூப்பினான். அவள் கலகலவென்று சிரித்தாள். பெய்த மழையில் கசடுகள் எல்லாம் அடித்து வெளியேற்றி தெளிந்த நீரோட்டம் ஓடுவது போலிருந்தது, குளிச்சிட்டு வாங்க என்ற சொல்.!
அன்று வேலைக்கார லட்சுமி துணிகளை காயப் போடும்போது , அம்மா சொன்னாள்; “ லட்சுமி , இந்தா இந்த கேசரியை வாயில் போட்டுக்க .சில்வர் டிபன்பாக்ஸில் வச்சிருக்கிறதை , வீட்டுக்கு கொண்டு போய் பிள்ளைகளுக்கு கொடு, பிள்ளைக திங்கட்டும்.” அம்மா கொடுத்த நெய்கேசரி விழுக்கென்று தொண்டைக்குள் இறங்கியது .கடைவாயில் ஒதுங்கிய முந்திரிபருப்பை மென்றபடி , “ மகளும் மருமகனும் ஒண்ணு சேர்ந்ததுக்கு இனிப்பாம்மா “ அம்மாவின் முகத்தெளிவைப் பார்த்தவாறே லட்சுமி தொடர்ந்தாள்., “அம்மா என்கிட்டேயும் ஒரு இனிப்பான சேதி இருக்கு !. கொடுக்க இனிப்பில்லை. நீங்க குடுத்த இனிச்ச வாயில சொல்றேன் ; எம்மவன் நேத்து சாயந்திரம் வந்துட்டான். மெட்ராசில பிடிச்சு பதினாலு நாள் அடைச்சு வச்சிருந்தாகலாம். கொரானா கிரோனா எதுவுமில்லைன்னு திறந்து விட்டுட்டாகலாம். திருச்சி வரைக்கும் பேப்பர்வேனில் தொத்திகிட்டு வந்தானாம். திருச்சியிலிருந்து இங்கிட்டு நூறு மைல் நடந்தே வந்திருக்கான். கால் பாதமெல்லாம்ம் பாளம் பாளமா வெள்ளரிப் பழமாட்டம் வெடிச்சி காலெல்லாம் வீங்கிக் கிடக்குது. முகமெல்லாம் வத்தி சோர்ந்திருந்தாலும் , குடிகிடி இல்லையா ,முகம் களையா இருக்கு. பிள்ளை வைராக்கியமா நடந்து வீடு வந்து அம்மான்னு வாசல்ல மயங்கி கிடந்தான். நான் அந்த நேரம் கொஞ்சம் கண்ணசந்து படுத்திருந்தேன். மருமகதான் புருஷன் சத்தம் கேட்டு வைராக்கியத்தை விட்டுட்டு பதறி தூக்கி சத்தம் குடுத்தாள் . வீட்டுக்குப் பின்னால விளையாடிகிட்டு இருந்த பிள்ளைகளும் ஓடியாந்து அலறுற சத்தம் கேட்டு எந்திருச்சுப் போய் பார்த்தேன். ஈரக்குலை பதற முகத்தில் தண்ணி தெளிச்சு உட்கார வச்சேன். மருமக கிட்ட சொல்லவும் ஒருகரண்டி சோற்றிலே மோரை ஊத்தி நைய்ய பிசைஞ்சு கொண்டு வந்து குடுத்தா. கடகடன்னு அன்னப்பால் வயித்தில் விழவுந்தான் பிள்ளை முகத்தில் சீவன் வந்தது.
பொண்டாட்டியை பார்த்து மாலை மாலையா கண்ணீர் விடறான். நான் இனிமே உங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன். குடிகிடி இல்லாம கிரமமா இருப்பேன். என்னை சேத்துகுங்கன்னு பொண்டாட்டி யையும் என்னையும் மாறி மாறி பார்த்து அழுகிறான். அவன் அழுவுறதைப் பார்த்து பிள்ளைகளும் அழுதுருச்சுக . மனசு கேட்கலை. இதமா வெண்ணி வச்சு அதுல மஞ்சத்தூளு போட்டு விளாவி குளிக்கச் சொல்லி வேற துணிமணிகளை மாத்தச் சொன்னோம். அவன் குளிச்சு வந்ததும் தேங்காய் எண்ணெய்யில மஞ்சள்தூளைக் குழைச்சு வெடிச்ச பாதத்தில கோழி இறகால பரவலா போட்டு விட்டேன். பிள்ளை உஸ்ஸ் உஸ்ஸ் ன்னு முனங்கினதைப் பார்த்து, மருமக அடுப்படிக்குள்ளே போயிட்டா. ஆறுமணிக்கு படுத்தவன் தான் எந்திருக்கல. ராத்திரி பத்துமணிக்கு வலுக்கட்டாயமா எழுப்பி ரெண்டுகிளாஸ் அன்னப்பால் குடிக்க வச்சோம்.”
“உம்மவனுக்கு இருமல் கிருமல் ,மூச்சுத்திணறல் இல்லையே.”
“ மீனாச்சிதாய் புண்ணியத்தில் இருமல் ,திணறல் இல்லை.ஆனா காச்சல் இருந்தது. மண்டையடி காச்சலுன்னு வந்தா போட்டுகிறதுக்காக டோலோ மாத்திர ரெண்டு வச்சிருந்தேன். அதில ஒண்ணை ராத்திரி கஞ்சி குடிக்கும்போது குடுத்தேன். அலுப்புக்காச்சல் தான். காலையில தெளுச்சியா எந்திருச்சு காலை நீட்டி உக்காந்திருந்தான். காபியை குடுக்கச் சொல்லிட்டு வந்திட்டேன்.”
“மகன் வந்திட்டான். கவலை தீர்ந்தது.நிம்மதியா நீ பிழைப்பை பார்க்கலாம்“
“ எங்கேம்மா நிம்மதி. இந்தக் கொரோனா பிரச்சினை தீர்ந்து பழையபடி அவங்கவங்க பிழைப்புத் தளப்பைப் பார்க்கணும் . பிராந்திக் கடை திறந்ததும் மகன் பழையபடி குடிக்கப் போகாம இருக்கணும் ,அப்போ தான் நிம்மதி !’ என்றபடி துணியை உதறி கொடியில் போட்டாள். ஈரத்திவலைகள் கண்ணில் தெறித்து திரண்டிருந்த கண்ணீரோடு கலந்து உருண்டது. .
அந்த கவலை வீட்டுக்காரம்மாவையும் தொற்றிக் கொண்டது .
No comments:
Post a Comment