உண்டியல் [ஜனநேசன்]
திருப்பதி வந்தாயிற்று.
முன்பே முடிவு செய்தபடி நடந்தே மலையேறி
தர்மதரிசனம் செய்வதுதான் தம் குடும்ப
வருமானத்துக்கு ஏற்றது என்று இவர்கள் அடிவார
வரிசையில் நின்றனர். காலை மணி
ஆறாகியிருந்தது .சூரியக்கதிர்கள் நீண்டு
மலைமரங்களைத் தீண்டிய போதும்
குளிர் விலகவில்லை. குளிர்காற்று
மேனியைக் கிள்ளி சில்லிப்பை உடலெலும்பு வரைக் கடத்தியது.
ஆட்டுவித்தால் ஆடாதாரே என்று பாடச்செய்தது . இவர் தனது துண்டால் காதுகளை இறுக்கி தலையில்
கட்டிக்கொண்டார். மனைவி முந்தானையால் தலையில்
இறுக்கமாக முக்காடிட்டுக் கொண்டாள் .மகள் சுடிதார் துப்பட்டா கொண்டு
போர்த்திக் கொண்டாள். மகன் ஜீன்ஸ் பேண்ட்டும், டீசர்டுமாக இருந்தவன் அப்பாவின் சால்வையை வாங்கி குளிர் உடலுக்குள்
நுழைவதைத் தடுக்கப் போராடி நடந்தான். குடித்த
டீயின் வெப்பம் நடுக்கும் குளிரைத் தடுக்க முடியவில்லை. தந்தரையாக
இருந்தால் வேகமாக நடந்தால் குளிரின் தாக்கம் தெரியாது. மலைப்பாதை ஏற்றத்தில் வேகமாக எப்படி நடக்கிறது. மெதுவாகத்தான் நடந்தார்கள். ஏற்றமான பாதையில் நடக்கும்போது
சுவாசிப்பின் வேகம் கூடியதால் உடலெங்கும்
வெப்பம் பரவி வியர்வை அரும்பியது. ஒருசிரமத்தின் போது மற்றொரு சிரமம் ஆசுவாசத்தை உணர்த்துகிறது. இதற்கு
ஒத்திசைவாக ‘சிறுத்தைப்புலிகள் உலவுது ‘ எனும் உயிரச்சத்தை கிளர்த்தும் எச்சரிக்கை பலகையின் அருகே
மான்களும் , மயில்களும் உலவின. இதுதான் வாழ்க்கை ஓட்டத்தை சுலுவாக்கும் வண்டிமசி ! . தேகத்தின் மயிர்கால்கள் எல்லாம் சிலிர்த்து குளிரை எதிர்ப்பது போல்
நின்றன. நடை தொடர்ந்தது..
திருப்பதி
பயணம் குறித்த அவரவர் மனரதம் புறத்தை மறந்து தம்தம் சிந்தனை தடத்தில் நகர்ந்தது . இவருக்கு ஐம்பத்தைந்து
வயசாகிறது. இப்போது தான் திருப்பதி பயணம் ,மகள் பேரைச்சொல்லி நனவாகிறது. மகளுக்கு வேலை கிடைத்தால் திருப்பதிக்கு போவது என்று
மனைவி வேண்டியிருந்தாள். பட்டப்படிப்பு
முடித்த மகள் சர்விஸ்கமிசன் எழுதியதில் பக்கத்து நகர ஐஸ்கூலில் கிளார்க் வேலை
கிடைத்தது. அந்தா இந்தான்னு ஆறுமாசம் ஆகிருச்சு. இப்பதான் மூணுநாள் லீவு கிடைச்சது.
தூரக்கெடுவு தடை எதுவுமில்லை. கிளம்பிவிட்டார்கள்.
மகளுக்கு
வேலை கிடைச்சதால இந்த பயணம் குதிர்ந்தது. கைக்கும் வாயிக்குமா வகுத்துப்
பிழைப்புக்கே போராடிகிட்டு மகளை, மகனை
அரசாங்க பள்ளியில செலவில்லாம
படிக்கவச்சு ஓரளவு மேடேறி இருக்கோம். இன்னும் மகன் படிச்சு ஏதாவது வேலையில் உட்கார்ந்தால் தான் தலை நிமிரமுடியும்.
அடே அப்பா , ஐஸ்காரர் என்ற பெயரில் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தள்ளுவண்டியில் ஐஸ் விற்கிறதில தொடங்கிய வாழ்க்கை. இந்த மகராசி வாழ்கைப்பட்டு வந்து கடன்கப்பி இல்லாம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. அவளுக்கும் , தனக்கும் குடும்பவழியா
எந்த உதவியும் இல்லை. உபத்திரவமும் இல்லை. தானும் ஒத்தைபேறு, அவளும்
ஒத்தைபேறு .பெரிய அளவுக்கு சந்தோசமுமில்லை, சடவுமில்லை. ஒரு மக, ஒரு மகன்.
பிள்ளைக பிறக்கிறதுக்கு முன்னால ஊரைச்சுற்றி
இருந்த தோட்டங்களில் விவசாய வேலைகளுக்குப் போனாள். ஊரு வளர்ந்தது ,
தோட்டமெல்லாம் வீடுகளாச்சு . வேலை
அற்றுப்போன சமயம், மகள் பிறந்தாள். மகளைப் கவனிக்கவே நேரம் போதலை. வேலை
தேடவில்லை. வர்ற வருமானத்துக்குள்ள
குடும்பவண்டி நகர்ந்தது . நாலுவருசம் கழிச்சு மகன் பிறந்தான் .வீட்டில் ஆள் எண்ணிக்கைக் கூடவும் அவளுக்கு
வீட்டில் வேலை கூடியது.
இவருக்கு அலைச்சல் கூடியது. முன்பு ரெண்டு
பள்ளிகூடத்தின் முன்னே , இடைவேளை, மதியச்சாப்பாடு
நேரங்களில் ஐஸ்வண்டியை நிறுத்தி
வியாபாரம் செய்தவர், இப்போது ஊரெல்லாம்
சுற்றி கட்டட வேலைகள் நடக்கும் இடங்களில் எல்லாம் இவரது ஐஸ்வண்டி மணி ஒலிக்கும். தொண்டை
குளிர்விக்கும்.
ஊர்வளர, பிள்ளைகள் வளர செலவும் பெருகியது. தள்ளுவண்டி மூணுசக்கர சைக்கிளில் வெள்ளை
பேன்ட், வெள்ளைசட்டை, வெள்ளைத் தொப்பி சகிதமாக குச்சிஐஸ்களோடு,கப் ஐஸ்களும்
விற்கலானார். இவரது வண்டி ஒவ்வொரு பகுதியில்
நிற்கும் நேரத்தைக் கொண்டே அந்தப் பகுதியில் புழங்கும் மக்கள் நேரத்தை
கணித்து விடுவார்கள் ; அந்த அளவுக்கு சுறுசுறுப்பும் ,நேரந்தவறாமையும் , தனது வாடிக்கயாளர்களின்
உளவியலை அறிதலும், சிரிப்பைக் கிளர்த்தும் பேச்சும்
இவருக்கு கைகொடுத்தது . ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவெங்கும் சுற்றி வழமையான வியாபாரத்தை
எட்டிவிடுவார்.அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலனிப் பக்கம் ரோட்டோரமாக ஐஸ் விற்கப் போனார். அங்கிருந்தவர் ஒருவர் ; ” ஐஸ்க்காரரே ஊருக்குள்ளே
ஐஸ் விக்கலைன்னாத்தான் எங்கஏரியா உங்களுக்கு நினைப்பு வருமாக்கும். அதுவும் காலனிக்குள்ளே வரமாட்டிங்க;
ரோட்டோரம் நின்னு மணி ஆட்டிகிட்டு இருப்பீக “ . “ அப்படியில்ல தம்பி. வாரநாளுகள்ல , உங்க ஆளுக பிழைப்பு தளுப்பு பார்க்க வெளியே
போயிருவீங்க. பெரியாளுக இல்லாதப்ப தெருக்குள்ள விளையாடுற நண்டு சிண்டுகளுக்கு யாரு காசுகுடுத்து ஐஸ் வாங்கித் தருவாக.
அந்தப்பிள்ளைக மணி சத்தம் கேட்டதும் கூடி
நின்னு கையில காசு இல்லாம ஏக்கத்தோடப் பார்க்கிறப்ப , எனக்கு ஈரக்குலையைப்
பிடுங்கிற மாதிரி இருக்கும். ஒருத்தர் ரெண்டு பேருன்னா ஒசியாகூட
ஐஸ் குடுத்துறலாம். பத்து பன்னெண்டு பிள்ளைகளுக்கு ஐஸ் குடுத்தா என் பிழைப்பு என்ன ஆகிறது ? அந்த அளவுக்கு ஐவேசு இருந்தா நான் ஏன் இப்படி தெருத்தெருவா திரியிற பிழைப்பைப் பார்க்கிறேன். இங்கின ரோட்டில வண்டியை நிறுத்தி மணிஅடிச்சா, காசு
உள்ள பிள்ளைக வரும் . இல்லாதவக வர மாட்டாக. இது தான் என் பிரச்சினை. எனக்கு சேரியும்
ஒண்ணுதான் , குடியானவதெருவும் ஒண்ணுதான். ஏவாரத்துகு ஏது சாதி? “ என்றார். கேள்வி
கேட்டவர் ஒரு பால்ஐஸ்குச்சி வாங்கி சுவைத்துக் கொண்டே போய் விட்டார். மழை வந்தால்தான் பெரும் சிரமமாகிவிடும் .
என்றாலும் மழையின் பாதிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனநிலை இருந்தது. ஊர்
செழித்தால்தானே சனங்ககிட்ட காசு புழங்கும்; நமக்கு ஏவாரம் நடக்கும் என்ற
தெளிவு இருந்தது. ஆனாலும் மழையாலும்,
வெயிலாலும் பாதிக்கப்படாத பிழைப்பு தன் சக்திக்குள்ளே
என்ன கிடைக்கும் என்று மனதுக்குள்ளே தேடுதல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒன்றும் பிடிபடவில்லை. இவரது அலைச்சலில்
சந்திக்கும் மக்களின் வாழ்நிலை,
பாடுகளும், அனுபவங்களும் தன் சக்திக்குள்ளே தீர்வைத் தேடும்
மனநிலையை படியச்செய்தது. ஆகவே பேச்சும் செயலும் கனிந்தே இருக்கும். அதீத ஆசை கிடையாது. தனது பிள்ளைகள்
தன்னைப் போல் அலையாது பிறருக்கு உதவுறமாதிரி
கண்ணியமான அரசுவேலையில் அமர்ந்தால்
போதும். அவர்களது தலைமுறை பிரச்சனைகளை
அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் என்று அழுத்தமான
எண்ணம் இவருக்குள் பதிந்திருந்தது..
ஒருசமயம்
புயல் வந்து அடைமழை பிடித்துக்
கொண்டது. இரண்டுநாள் வீட்டுக்குள்
முடங்கிப் போனார். கையிலிருந்த காசும்
கரையத் தொடங்கியது. இந்த
மழைக்காலத்தை சமாளிக்க பட்டாணி சுண்டல்
தயார் செய்து பெரிய எவர்சிவர் தூக்குவாளியில் எடுத்துக் கொண்டார்; மழைக் கொங்கானி
போட்டுக்கொண்டு பேருந்துநிலையம் ,
கடைவீதி, கோயில்வாசல் என்று மக்கள் மழைக்காக ஒதுங்கி நின்ற இடங்களுக்கு சென்று
விற்றார். அன்றைய வகுத்துப்பாடுக்குப் போக
பெரியளவுக்கு மிச்சம் இல்லை.
அலைஞ்சு திரிஞ்சாலும் விற்காமல்
போனால் கை நஷ்டம் ஏற்படவே
வாய்ப்புண்டு. தயாரிக்கும் சரக்கு
ஒருநாளாவது தாக்குப்
பிடிக்கணும் என்று யோசித்தார். சமோசா தயாரிக்கும் யோசனை வந்தது.
ஒருநூறு
சமோசா தயார் செய்து ,நான்கு டீக்கடைகளுக்கு இருபத்தைந்து வீதம் போட்டார். டீ கடைக்கார்களுக்கும் லாபம்
இருந்தது. இவருக்கும் அடக்கவிலையவிட இரண்டுபங்கு
லாபம் நின்றது. வீட்டில் , மனைவிக்கும், இவருக்கும் தயாரிப்பு வேலை இருந்தது. என்றாலும் அலைச்சல்
குறைவு. தயாரிப்புக்கு வேறு
யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லை. சரக்கு
தங்காமல் தேவைக்கு ஏற்ப தயாரித்தால்
கனிசமான லாபமும் இருந்தது. சரக்கின் தரம் வாடிக்கையாளர்கள் எண்ணிகையை பெருக்கியது. தெருமுனை டீக்கடைகள் ,
சினிமாக் கொட்டகை, சிறு தொழிற்சாலைக் கேண்டீன்களுக்கு தேவைக்கேற்ப சமோசாக்களை தயாரித்து விநியோகித்தார்.தொழில் சூடுபிடித்தது. பதினைந்தாண்டுகால ஐஸ்காரர் பெயர் உதிர்ந்து சமோசாக்காரர் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.
பிள்ளைகளுக்கு படிப்பு, புத்தகம் துணிமணி செலவுகளை யாரையும்
எதிர்பார்க்காமல் செய்யமுடிந்தது.
இரண்டு வருசத்தில் தம் வாடகை வீட்டையே ஒத்திக்கு வாங்கினார்கள். குடும்பநிலையை
கருத்தில் கொண்டு பிள்ளைகள் நன்றாக படித்தார்கள். மகள் பட்டப்படிப்பு முடித்த சூட்டோடு அரசுவேலையில்
அமர்ந்தாள். முதல் மாத ஊதியத்தில்
அம்மா, அப்பா, தம்பிக்கு
துணிமணிகள் எடுக்கும் முன்னே அம்மா
சொன்னபடி திருப்பதிக்கு ஆயிரம் ரூபாய்
உண்டியலில் போட்டாள். அம்மா வீட்டில்
நடக்கும் ஒவ்வொரு நல்ல நகர்வுக்கும்
திருப்பதி உண்டியல் காணிக்கை போடும் வழக்கம் இருப்பத்திரண்டு வருசமா தொடருது. ஒவ்வொரு முறையும் உண்டியலில் காணிக்கைப்பணம் போடும்போதும் திருப்பதி வெங்கிடாசலபதியோடு நேரில் பேசுவதுபோல் அம்மா தணித்த குரலில் பேசி மெய்சிலிர்ப்பாள் . ஆனால் திருப்பதிக்கு
போகத்தான் நேரம் வாய்க்கவில்லை. மகளுக்கு
மூணுநாள் லீவு . மகனுக்கும் கல்லூரி விடுமுறை
சேர்ந்தும்தான். திருப்பதிக்கு கிளம்ப
முடிவானது.
சிறு மண்கலய உண்டியலில் தொடங்கியது
, ஒரு எவர்சில்வர்குட அளவுக்கு வளர்ந்தது.
மகள் “ எவ்வளவு ரூபாய் சேர்ந்திருக்கிறது என்று எண்ணி சில்லறையை எல்லாம் இரண்டாயிரம் ரூபாயாக மாற்றினால் பத்திரமா கொண்டு போகலாம் “ என்றாள். “ காய்ச்சல், தலைவலின்னோ ,, கஞ்சிக்கில்லைன்னோ
,படிப்புச் செலவுக்கு இல்லைன்னோ அந்தஉண்டியலைத் தொட்டதில்லை. எத்தனை ஆயிரமோ,
லட்சம் கூட இருந்துட்டுப் போகுது; உண்டியல்ல
போட்ட காணிக்கை போட்டபடி ஒரு பெரிய
மஞ்சள்பையில் கொட்டி அப்படியே எடுத்துட்டுப் போய் அந்த எழுமலையான் கிட்ட சேர்த்துருவோம்.
எடுத்து மாத்தவும் வேணாம்; எண்ணவும் வேணாம் .” உண்டியலை
பராமரித்து வந்த மனைவியின் வார்த்தைக்கு
யாரும் மறுப்பு சொல்ல இடமில்லை.
நம்ம தலைமுறையில் முதல் முதலா
திருப்பதிக்குப் போறோம் ; யார்யாரெல்லாம்
மொட்டை போடுவது என்ற கேள்வி வந்தது. நான் மொட்டை போடமாட்டேன்ம்மா என்று மகன் முந்திக் கொண்டான். அம்மாவே முடிவெடுத்தாள்; “நாங்க
பொம்பிள்ளக ரெண்டுபேரும் பூமுடி
கொடுத்துர்றோம்.; மூணு மொட்டை கணக்குக்கு
அப்பா மொட்டை போட்டுக்கட்டும்.” இவர்
சிரித்துக்கொண்டே தலையைத் தடவினார்.
“ என்ன
சிரிக்கிறீங்க. உசுரைக் காப்புத்துற சாமிக்கு மசுரைக் காணிக்கை குடுக்கிறதுக்கு
என்ன யோசனை..” இந்தக் கேள்விக்கு இவர் என்ன பதில் சொல்ல முடியும் ! இப்போது மலை
ஏறிக்கொண்டிருக்கிறார்கள். உயரப்போக போக இளங்காலை ஏறுவெயில் சுரீரென்று
உரைத்தது. குளிர் நடுக்கம் விலகவில்லை. குளிர்பாதி வெயில் பாதி கலந்த பயணம்
என்று தம்பி அக்காவிடம் பாடினான். அக்கா வாயைத் திறந்து
சிரிக்க முடியாமல் கண்ணில் சிரித்தாள். நடைபாதை
மண்டபத்தில் கழிப்பு ,குளிப்புகளை
முடித்துக் கொண்டனர் . குளித்ததும் வயிறின் குரலுக்கும் பதில் கொடுக்க வேண்டியதாயிற்று.
வயிறு கனத்ததும் நடை சிறுத்தது. ஒன்பதரைமணிக்கு
மலைத்தலதைத் தொட்டார்கள். மலையின் மீதொரு
நவீன நகரம் கண்டு கண்கள் விரிந்தன. நடந்த அலுப்பு
பறந்தது. சாலையோரக் கடையில் சூடாக டீ விழுங்கி உடலை வெதுப்பிக் கொண்டனர். அங்கேயே அடுத்தத் திட்டம் யோசித்தனர். முடிஇறக்கி குளிப்பதென்ற
முடிவை செயல் படுத்தினர்.
பழைய துணிமணி சூட்கேசை சாமான்கள் வைக்கும்
அறையில் பத்திரப் படுத்தினர் அவரவர்
ஆதாரட்டைகள் ,உண்டியல்காணிக்கை பையுடன்
தர்மதரிசன வரிசையில் நின்றனர். வரிசை
விறுவிறுவென்று நகர்ந்தது.
உச்சிக்கால பூஜை அலங்காரத்தில்
வெங்கிடாசலபதி தரிசனம் கிட்டியது. நொடிப்பொழுது தரிசனம்தான்
இவருக்கும், மனைவிக்கும்
உடலெங்கும் புளகாங்கிதம். மணிக்கணக்கில் காத்திருக்காமல் கடவுளருள் கிடைத்ததில் நெக்குருகி கரைந்தனர். ஜருகண்டி
,ஜருகண்டி தள்ளலில் தண்ணீராய் வெளியேறி
பிரகாரம் சுற்றி, தங்கக்கோபுரம் அண்ணாந்து பார்த்த பரவசத்தில் மிதந்தனர்
இவரது
காணிக்கைபை ஆளுயர உண்டியலின் வாயில்
நுழையவில்லை. அம்மா பையை விரித்துப் பிடித்துக்கொள்ள அப்பாவும், பிள்ளைகளும் காணிக்கைப்
பையிலிருந்து இருகைகளால் பணத்தை அள்ளி
அள்ளிப் போட்டனர். கடைசியாக எஞ்சிய சில்லறைக் காசுகளை அம்மா பையை குப்புறக் ,
கொட்டிவிட்டு பையின் மூலை முடுக்குகளில் சிக்கியிருந்த ஒருரூபாய் எட்டணா நாணயங்களை எடுத்துப்
போட்டுவிட்டு பையை பதனமாக உதறினாள். அம்மாவுக்கு பெரும்சுமையை இறக்கிய நிறைவு . இதற்குள் இவர்களுக்குப்
பின்னால் உண்டியல் காணிக்கை
செலுத்துவோர் கூட்டம் நெருக்கியது.
தலைக்குமேல் கையுயர்த்திக் கும்பிட்டு நடந்தனர்
.அந்த மண்டபத்தின் வெளித் திண்ணை நுனியில்
சம்பிரதாயத்துக்காக சில நொடிகள்
உட்கார்ந்து எழுந்தனர். எதிரே
பிரசாதம் தரும் வரிசை நகர்ந்தது. அதில் இணைந்து நெய்யொழுகும் பிரசாதம்
வாங்கி தேரருகே கிடந்தநிழலில்
அமர்ந்து பிரசாதத்தை சுவைத்தனர். மகன்
அம்மாவிடம் முணுமுணுத்தான் . இவர்
என்னவென்று கேட்டார். அம்மா
தயங்கிய குரலில் சொன்னாள்; “ நாம் உண்டியலில் போட்ட நோட்டுகளில் நாலைந்து செல்லாத ஐநூறு ரூவா இருந்துச்சாம்.”
“ ஐயோ, சாமிக்கு செல்லாத நோட்டைப் போட்டுடோமா
..ஐயோ... நோட்டுகளை உத்து
உத்துப்பார்த்து வாங்கி சேர்த்த நோட்டிலா
கள்ள நோட்டு...” என்று நெஞ்சைப் பிடித்தபடி
மயங்கினார். இதைக்கண்ட திருக்கோயில் தொண்டர் இருவர் தண்ணீர்
தெளித்து மயக்கம் தெளிவிக்க முயன்றனர். இவர் கண்களைத் திறக்கவில்லை. உடனே தாமதிக்காமல் ஆம்புலன்ஸ்
வரவழைத்து இவர்களை அழைத்துச் சென்றனர். தேவஸ்தான மருத்துவ மனையில் மருத்துவர்களின் முதலுதவிச் சிகிச்சைக்குப்
பின் கொஞ்சம் கண்ணைத் திறந்தார். ரத்தஅழுத்தம் , ஈசிஜி , எக்ஸ்ரே ,ரத்த சோதனை எல்லாம் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ
அறிக்கைக்காக காத்திருந்தனர்.
மருத்துவரிடம் கேட்டு அவரது மேஜையில்
இருந்த ஆங்கில செய்தித் தாளை வாங்கி வெளியே
மரத்தடியில் நின்றவாறே அக்காவும்
தம்பியும் வாசித்தனர். “ திருப்பதி
கோவில் உண்டியல்வசூல் வங்கிக் கணக்கில் இருபதுகோடி ரூபாய்மதிப்புள்ள செல்லாத ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக தேவஸ்தான அறங்காவலர்குழு உறுப்பினர் கைது. “ என்று படத்துடன் செய்தி முதல்பக்கத்தில் வெளியாகி இருந்ததை அக்காவும் தம்பியும் வாசித்தனர். செய்திப்படத்தில் அந்தப் பிரமுகர் போலீசார் சூழ சிரித்தபடி
நின்றிருந்தார் .
[ உயிர் எழுத்து –மார்ச்- 2021]
No comments:
Post a Comment