Sunday, 21 August 2022

தோட்டாவில் பூக்கும் மலர்கள் [ஜனநேசன்]

 



     தோட்டாவில்  பூக்கும் மலர்கள்   [ஜனநேசன்] 
                           

  நேற்று மதியம் இரண்டு மணிக்குத்  திருச்சி இரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய மதுரை-- பிகானீர்  எக்ஸ்பிரஸ் இரயிலில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தோம் .. கையிலிருந்துத் தவறிவிழுந்த பழத்துண்டுகூட என் கண்களில் படவில்லை. அவ்வளவு  வேகம் ; ஆனால்  மனது சிந்திக்கும் வேகம் ஒளியின் வேகத்தைவிடவும் அதிகமல்லவா. கடந்தவாரம் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்ய வனத்தில் நூற்றிப்பதினேழு  போலிஸ் காவலர்கள் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மாண்டனர்* என்கிற செய்தியை படித்ததிலிருந்து மனம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இப்படிச் சாவது கொடூரம்; ஆனால் உலகம் முழுக்க இப்படிப்பட்ட கொடூரங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே, அது ஏன் என்கிற கேள்வி ஒரு வாரமாக என்னைக் குடைந்து கொண்டிருந்தது.

    இந்தக்  கொடூரம் நடந்த பகுதியை  ஒட்டிய  மகாராஷ்டிரா மாநிலம்  கஜ்ஜிரொலி மாவட்ட அல்லபள்ளி நகரில் எங்கள் மகன் துணை வனப் பாதுகாப்பு அதிகாரியாய்  பணியாற்றுகிறான்;  அவனுக்கும் இப்படி  ஆபத்து நேர்ந்திடுமோ  என்ற பெற்றமனத்தின் ஆவலாதி தான் இந்தப் பயணம்.! அல்லபள்ளியில் இரயில் நிலையம் இல்லை. பலார்சா சந்திப்பில்  இறங்க வேண்டும் , அங்கிருந்து  எங்கள் மகனோடு காரில் மூன்றுமணி நேர பயணத்தில் ஊர் சென்றுவிடலாம். என்றாலும் மனம் ஓர்மைப் படவில்லை.

   தண்டகாரண்ய வனப் பகுதி அல்லபள்ளியில் இருந்து சுமார் முந்நூறு கிலோ மீட்டர்கள் இருக்கும். அங்கு போலவே இங்கும் மாவோயிஸ்டுகள் இருக்கின்றார்கள். அவர்கள் சத்தீஸ்கர் மற்றும் மகாராஸ்ட்ராவில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களுக்காகப் போராடுகின்றார்கள். அங்கு அபரிதமாக இருக்கும் கனிம வளங்களைக் கார்ப்ரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு இந்திய அரசு துணைபோகின்றது என்பதும் அதற்குச் சத்தீஸ்கர் மாநில அரசும் உதவிசெய்து   தன் சொந்த மாநிலத்தில் பாராம்பரியமாக வாழும் ஆதிவாசிகளுக்குத் துரோகம் இழைக்கின்றனர் என்பதும் போராடுபவர்களது  குற்றச்சாட்டு. இவற்றை எல்லாம் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் கட்டுரைகளையும் படித்துத் தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட அரசின் மக்கள் விரோத நிலைப்பாடுகள் மாறாதவரை இந்தக் கொடூரங்கள் மேலும் நடக்காமல் தடுக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது ..

  ஒரு வழியாக இரயில்  பெல்லார்ஸா வந்து சேர்ந்தது . நான் என் மனைவியை துரிதப்படுத்திக் கிளப்பி  தயாராக வாயில்படி அருகில்   நின்றுகொண்டோம் .வண்டி ஐந்தே நிமிடம் நிற்பதால் அங்கு இறங்க வேண்டிய, ஏறவேண்டிய  பயணிகளும் முண்டியடித்துக் கொண்டனர். அவரவர் அவசரம்  அவரவருக்கு. வண்டி நின்றதும் கீழே இறங்கும்போதே என் மகன் ஓடி வந்து என்னிடம் இருந்த பெட்டியை வாங்கினான். நான் அவனிடம் பெட்டியைக் கொடுத்துவிட்டு என் மனைவியைக் கவனமாகக் கீழே இறங்கச்செய்தேன்.  மூவரும் வெளியே வந்தோம். வெளியே தாக்கிய உச்சிவெயிலின்  வெக்கையை காரின்  குளிர்வு தணித்தது .

   இருபத்துமூன்று மணிநேரப் பயண அவதி முடிந்தது. என்றாலும் மன அவசம் தீரவில்லை. மகனைப் பார்த்ததும்  ஆறுதல்.! என் மனைவி வாஞ்சையுடன் தன் மகனின் கைகளைப் பற்றிக்கொண்டாள். நான் அவனின் தோளை அனிச்சையாகத் தட்டிக்கொடுத்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

   என் மகனை நேர்மையானவனாக வளர்த்திருக்கிறோம் . அவனும் நாங்கள்  நினைத்தபடியே வளர்ந்து படித்து ஆளாகி அரசின் உயர்ந்த பதவியில் அதிகாரியாக இருக்கின்றான். அந்தப் பதவியின் மூலம் மக்களுக்குச் சேவைகளைச் செய்யக்கூடிய அதிகாரியாக இருப்பது எங்களுக்கு  பெருமை. ஆனால், போராட்டக்காரர்களுக்கு இதுவெல்லாம் தெரியவா போகின்றது. அவர்களுக்கு என் மகன் ஓர் அதிகாரி மட்டுமே.  அவர்கள் போராடுவதில் நியாயம் இருந்தாலும்  பல அப்பாவிகள் அநியாயமாக  சாகின்றார்களே. அந்தக் காவலர்களில் பலர் தம்  குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த வேலையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்திருப்பார்கள் தானே ? கார்ப்ரேட்டுகளும் அவர்களுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகளும் பாதுகாப்பாக இருக்க, இங்கே இரு தரப்பினரும் அநியாயமாகச் சாகின்றார்களே என மனம் வருந்தியது.

   மகன் வந்திருந்த கார் அரசு வாகனமில்லை.  மகனிடம் "ஆபிஸ் வண்டி என்னாச்சு தம்பி" என்று கேட்டேன். அதற்கு அவன் "அது ஆபிஸ் வண்டிதாம்பா.ஆனா காண்ட்ராக்டல மாச வாடகைக்கு வாங்குனதுப்பா "                                                                                   "வாடகை சோபா ஐம்பது ரூவா; விலைக்கு வாங்கினா அறுபதே ரூபா" என்ற பாட்டு ஞாபகம் வந்தது ; சிரித்துக்கொண்டேன்.

    அடர்ந்த காடு சூழ பெரிய கிராமம் போலிருந்தது அல்லபள்ளி நகரம். மானாவாரி விவசாயிகளும் அவ்வூர் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பலதரப்பட்டவர்களும் தனியார் சுரங்க நிர்வாக அலுவலர்களும், பணியாளர்களும், பக்கத்திலுள்ள சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் சிறு வியாபரிகளுமே அந்தவூரின் மக்கள். இவ்வூர் ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லைகளை ஒட்டி இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது மற்றும் ஆதிவாசிகளின் மொழிகளைக் கலந்தே பேசுவதைக் கவனித்தேன்.

    புஞ்சைக் காடுகளை ஒட்டிய சிறு சிறு குடிசைகளும் ஓட்டுவீடுகளும் சாலையோரங்களில் அம்பேத்கர் சிலைகளும் நீலநிறத்தில் புத்தவிகாரத்தோடு சமூகக்கூடங்களும் இருந்தன .நிலங்களில் பருத்தியும் , சோளமும் ராகியும் துவண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. கார் ஒரு பழைய நவாப் கால வீட்டின் முன் போய் நின்றது.

    வீடு மிகவும் பெரியது ; ஆனால், வீட்டிற்குத் தேவையான தளவாடங்கள் இல்லை. வீட்டைச் சுற்றிப் பல்வேறு செடிகள் புதராக மண்டிக்  கிடந்தன. சிறு தோட்டமும் அதில் கத்தரி, தக்காளி, அவரை, வெண்டை போன்ற காய்கறிச் செடிகள் இருந்தன. எங்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்த  மகன் "இப்ப நான் ஒருத்தந்தானேப்பா, இந்த வீடு போதும். அடுத்தப் புரோமோசன்ல இன்னும் வசதியான வீடு கொடுப்பாங்க" என்று எங்கள்  மனதில் இருந்ததை அறிந்தவன்போலச் சொன்னான்.

 "எப்படியோப்பா, நீ சூதானமா பிழைக்கணும். முதல்ல இந்த வேலையை விட்டு நீ மாறுனாத்தான் எங்களுக்கு நிம்மதி" என்று என் மனைவி கண் கலங்கினாள்.

“
அம்மா, எனக்கு எந்த ஆபத்துமில்லம்மா. போராட்டக்காரங்களுக்கு எங்க காடுகதான் புகலிடம். அதனால எங்களை ஒன்னும் செய்ய மாட்டாங்க. மத்த துறை அதிகாரிகளைத் தான் எதிரியா நினைப்பாங்க. நீங்க குளிச்சு சாப்பிட்டுட்டு நிம்மதியாத் தூங்கி அலுப்பாறுங்கம்மா; நாளைக்குப் பேசலாம்”  என்று அவன் தன் அம்மாவை சமாதனப்படுத்தினான்.

   அக்டோபர் மாதமென்றாலும் இரவு எழுமணிவரை வெக்கை கனன்று வியர்வை ஊற்றெடுத்தது. அப்புறம் குளிர ஆரம்பித்தது. “இது காடு சூழ்ந்த தக்காண பீடபூமிப் பகுதிப்பா. வெக்கை, குளிர், மழை எல்லாமே அதிகமாகத்தான் இருக்கும்” என்றான் மகன்.
   மறுநாள் ஊர் சுற்றிப் பார்த்தோம். பக்கத்தில் சிமெண்ட் பாக்டரி இருந்ததால் மரம், மட்டை சுவரெல்லாம் புழுதி படிந்திருந்தது. மரங்கள் சூழ்ந்த பகுதி என்றாலும் சுத்தமான காற்று இல்லை. சிறு கோயில்களில் காவிக்கொடிகள் தொங்கின. சின்ன நகரென்றாலும் நாலைந்து அம்பேத்கர் சிலைகளும் புத்தவிகாரங்களும் தென்பட்டன.

   அல்லபள்ளிக்குச் சென்ற மூன்றாம்நாள் “காலேஸ்வரம் கோயிலுக்குப் போயிட்டு வாங்கப்பா. அங்க படகில்தான் போகணும். நம்ம ஊருல திருக்கடையூர் கோயில் மாதிரி எமனை சிவன் வென்ற கோயில். கோதாவரி நதியும் பிராணஹிதா நதியும் இணையும் இடத்துக்கரையில் அமைந்த சிவன் கோயில் ; நல்லா இருக்கும்பாங்கப்பா. போயிட்டு வாங்கப்பா. எனக்கு நாக்பூரில் முக்கியமான வேலை இருக்கு. நீங்க வசதியா போயிட்டுவர்ரதுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறேன். போயிட்டு வாங்கப்பா” என்றான்  மகன்..

   நான் மௌனமாக இருந்தேன்; என் மனைவி “வாங்க, நம்ம எல்லாருடைய ஆயுசு நீடிக்கச் சிவனைக் கும்பிட்டு வந்திருவோம்" என்றாள். இந்தப் போராட்டக்காரர்களால் தன் மகனுக்கக் கெடுதல் வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு  . அதனால்தான் எமனை வெற்றிகண்ட சிவனின் தலத்திற்குப் போய் வேண்டுவதற்குத் துடிக்கின்றாள். எனக்கு இதிலெல்லாம் அத்தனை பிடிப்பு இல்லை. இருந்தாலும் என் மனைவியின் விருப்பத்திற்குக் குறுக்ககாக நான் நிற்பதில்லை. மதிய உணவிற்குத் தக்காளி சாதத்தைச் செய்து எடுத்துக்கொண்டாள். குறித்த நேரத்திற்கு ஸ்கார்பியோ கார் வந்தது. என் மகனின் அலுவலக டிரைவர் அசோக்குமார் சுலே காரை ஓட்ட, வீட்டு சமையல்காரர் பாலாஜி முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டார். காலைச் சிற்றுண்டியை வீட்டிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டோம். ஒருவர் கட்டிப்பிடிக்கத்தக்கச் சுற்றளவில் நெடுநெடுவெனத் தேக்குமரங்கள் அடர்ந்த காட்டின் ஊடே கார் விரைந்தது.
   “ஒவ்வொரு மரமும் நூறு வயதிற்குமேல் வளர்ந்து வைரம் பாய்ந்தவை. நூற்றைம்பது வயதான மரங்களை மட்டும் அரசு வெட்டி பக்குவப் படுத்தி ஏலம் மூலம் விற்கும். ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு அவை ஏலம் போகும்" என்று அரைகுறை ஆங்கிலத்தில் அசோக்குமார் சொன்னார்.

  சாலை ஆளரவமில்லாது விரிந்து கிடந்தது. அங்கங்கே குருவிகள், செம்போத்துகள், காக்கைகள் போன்றவற்றின் ஓசைகள் மட்டுமே கேட்டன. ஊடே அங்குமிங்கும் முயல்களும், கீரிகளும் ஓடி சாலையைக் கடந்தன.

  "இந்தக் காட்டில் வேறு மிருகங்கள் ஏதுவுமில்லையா" என்று காரில் கவிந்திருந்த மௌனத்தை உடைத்தேன்.

 "மான்கள் அதிகமா இருக்கு சார். மான்கள் மட்டுமே அடிக்கடி கண்ணில் படும். புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் எப்போதோவது தென்படும். வனத்துறையினர் எச்சரிக்கையோடுதான் காட்டுக்குள் போவோம். போனவாரம்கூட ஒரு புலி மாட்டை அடித்து இழுத்துப் போனதை காமிரா பதிவில் பார்த்தோம்" என்றார் அசோக்குமார்.

  "இப்படி ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கிறதே. மரம் வெட்டிக் கடத்துவது எளிதல்லவா" என்று கேட்டேன்.

 “அரசுக்கு மரம் மூலம் பெருமளவு வருமானம் வருவதால் கள்ளத்தனமாக மரம் வெட்டுவதையும் கடத்துவதையும் தடுக்க, காட்டுக்குள்ளே கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கப்பட்டு எல்லா அலுவலகங்களுடன் இணைத்துக் கண்காணிக்கப்படுகின்றது. அதனால் மரக்கடத்தல் இல்லை. அவ்வப்போது மரக் குடோன்களில் திருடு போகும். அதற்கு உடனே நடவடிக்கை எடுத்துருவாங்க சார்".

   “இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமே இல்லையே அசோக்"

   "சார், அங்கங்கே வனவாசிகள் இருக்கிறாங்க. சிறு தானிய விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு, அகியவற்றைச் செய்கின்றார்கள். தெந்து என்னும் பீடி இலை பறித்து விற்பது, காட்டில் விளையும் முந்திரி, தெந்து, மா, சீத்தாப்பழங்கள் ஆகியவற்றைச் சேகரித்து விற்பது போன்றவற்றையும் செய்கிறார்கள். பீடி இலைக்கான விலை கட்டுபடியாகவில்லை என்ற பிரச்சினை ரொம்ப நாளா வனவாசிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தீராதிருந்தது. நம்ம சார் வந்துதான் தீர்த்து வைத்தார். வனவாசிகளுக்கு நம்ம சார்மேல ரொம்ப மரியாதை" சொல்லிக்கொண்டே காரை ஓட்டினார் அசோக்குமார் சுலே. இதைக் கேட்ட என் மனைவியின் முகம் பூரிப்பால் மலர்ந்தது.

   “இந்தப் பகுதியில் போராட்டக்காரர்கள் பிரச்சினை இல்லையா"

   “இந்தப் பகுதியில் இப்போ இல்லைங்க சார். இந்த மாவட்ட எல்லையை ஒட்டிய சத்திஸ்கரில்தான் சுரங்க மாபியாக்களுக்கும் தீவிரவாதிகள் என்று அரசாங்கத்தால் சொல்லப்படும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளச் சண்டைகள் நடக்கும். இதில் சுரங்க மாபியாக்களுக்கு அரசு ஆதரவு இருப்பதால் அதிகாரிகளும் காவல்துறையினரும் பாதிக்கப்படுகின்றனர். சத்தீஸ்கர் மாநில அரசு வளர்ச்சின்னு சொல்லி வனங்களை அழிக்கத் துணைபோகிறது.
தலைமுறை தலைமுறைகளாகக் காடண்டியே வாழ்ந்த பழங்குடி மக்களை வனத்திலிருந்து விரட்டுகிறது. இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் ஆயுதம்கொண்டு தாக்கி மிரட்டுகிறது. தற்காப்புக்கு அவர்கள் ஆயுதம் ஏந்தினால் அவர்களைத் தீவிரவாதிகளாக அரசு சித்திரிக்கிறது. இதற்குமுன் வனத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் வேலையில்லாமல் திங்கவும், தங்கவும் வகையில்லாமல் அல்லல்படுகிறார்கள். இதனால் தற்போது வனபூமியில் இருப்பவர்களும் துரத்தப்படுவதை எதிர்த்து வாழ்வா சாவா போரில் குதித்து விட்டார்கள் சார். இங்கே அல்லபள்ளிப் பகுதியில் அந்தமாதிரிப் பிரச்சினைகள் இப்போது எதுவும் இல்லை சார்”.

  எங்கள் முகங்களில் சாந்தம் மலர்ந்தது !.

    ஏறக்குறைய இரண்டுமணி நேரமாகப் பயணிக்கிறோம். ஒரே ஓர் அரசு பஸ்சும், இரண்டு கார்களை மட்டுமே பார்த்தோம். காடுகளைக் கடந்து புஞ்சை விவசாய நிலங்கள் ஊடே கார் சென்றது. பரவலாக மக்கள் தென்படும் சாலையோரச் சந்தைபோல ஓர் ஊர் வந்தது. மரங்களையே பார்த்த கண்களுக்கு மனுஷர்களைப் பார்ப்பது இதமாக இருந்தது.
மக்கள் ஏழ்மையையே உடுத்தி இருந்தனர். ஊருக்குள் சிறுகடைகளும், கட்டடங்களும் தென்பட்டன. புளியமரங்களுக்கு அருகே காவலாக நெட்டிலிங்க மரங்கள் வரிசையாக நிற்கும் ஒரு பச்சைநிற தகவல் பலகை மராத்தியில் தொங்கிய கட்டடத்தின் முன் கார் நின்றது. எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஓய்வறையில் சிறிது ஓய்வெடுக்கச் சொல்லி பழச்சாறும் பிஸ்கட்டுகளும் தந்தார்கள். இருவரும் படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து ஆசுவாசப்படுத்திப் பழச்சாறைப் பருகினோம்.

    அங்கே எங்களிடம் வந்த ஒருவர் தன்னைக் கிராம வருவாய் உதவியாளர் சிவாபாபு என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். “ஓய்வெடுத்தபின் சொல்லுங்கள் சார். நாம் காலேஸ்வரம் போகலாம்" என்று இந்தி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலக் கலவையில் பேசி புரிய வைத்தார். நாங்கள் உடனே போகலாம் என்று புறப்பட்டோம். சிவாபாபு முன்னிருக்கையில் உட்காரவும், பாலாஜி எங்களுக்குப் பின்னிருக்கையில் போய் உட்கார்ந்தார்.

   கார் மெல்ல நகர்ந்து ஊருக்கு வெளியே மேற்குப் பகுதியில் திரும்பியது. அகன்ற ஆறு தென்பட்டது. காரிலிருந்து இறங்கி கரையோரத்தில் இருந்த படித்துறையில் இருபது படிகள் வரை இறங்கினோம். ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் சலசலத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

 “இதுதான் பிராணஹிதா நதி. மகாராஷ்டிரத்தில் பிறந்து சத்தீஸ்கர் வழியாக ஊர்ந்து இங்கே, காலேஸ்வரத்தில் கோதாவரியோடு கலந்து வங்காளக் கடலில் கலக்கிறது. சுமார் 113 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் இந்த ஆற்றின் மறுகரையில் அதோ தெரிகிறதே அதுதான் காலேஸ்வரம் கோயில். அங்கு இந்த நாவாயில் தான் ஏறிப் போக வேண்டும்” என்று விளக்கினார் சிவாபாபு.

   "அடேயப்பா. திருச்சியில் ஓடற காவேரியைப் போல இங்கேயே இரண்டு பங்கு அகலம் இருக்கின்றது. சிறிது தூரத்தில் இது இணையுமிடத்தில் கோதாவரி எவ்வளவு அகலமா, ஆழமா இருக்கும். 'சான்றோர் கவியென விரிந்த கோதாவரி' ன்னு கம்பன் சொன்னது சரிதான். இவுங்க இந்தப் படகை நாவாய்ன்னு சொல்றாங்க. நம்ம தமிழ்வேர் இங்குமிருக்கே" எனப் பலப்பல எண்ணங்கள் எனக்குள் பொங்கின .
   படகில் எங்களோடு சமையல்காரர் பாலாஜியும் கிராம அலுவலர் சிவாபாபுவும் ஏறி அமர்ந்தனர். டிரைவர் அசோக்குமார் காருக்கு காவலாகக் கரையில் இருந்து கொண்டார். காசுள்ளோர் நாவாயிலும், இல்லாதவர்கள் ஆடைகளை உயர்த்திப்பிடித்து நடந்தபடியும் ஆற்றைக் கடந்தனர். ஆற்றில் சில இடங்களில் இடுப்பளவு ஆழமும், சில இடங்களில் முழங்கால் அளவு ஆழமும் இருந்தது. அதனால் அவரவர் வாழ்க்கையைப் போல் மக்கள் அவரவருக்கேற்ற வழியில் கரையேறினர்.

   மதியவெயில் நெருப்புவிரல்களால் தீண்டியது. ஆற்றின் நீர் ஆவியாகி எழுந்த அலைகளில் வானவில் சிதறியது. ஆற்றுநீரில் கைகளால் அளாவினேன். மேற்பரப்பு நீர் சூடாகவும் அடுத்த இழையடுக்கு குளிர்வாகவும் ஜாலம் உணர்த்தியது. பால்யத்துக்குள் நான் நுழையும் தருணம் என் மனைவி என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள். எனக்கு வெட்கமாக இருந்தது..

   “இக்கரையில் உள்ளவர்கள் பலர் அன்றாடம் ஆற்றைக் கடந்து ஆந்திரா பகுதியில்** வந்து விவசாயக் கூலிவேலை, கட்டட வேலை செய்தும், சிறு வியாபாரங்கள் செய்தும் ஊர் திரும்புவர். ஐதராபாத்துக்கு அவசரமா செல்லவிரும்பும் சிலர் இந்த ஆற்றைக் கடந்து காலேஸ்வரத்திலிருந்து கரிம்நகர் வழியாக ஆறு மணி நேரத்தில் பஸ்ஸில் ஐதராபாத்துக்குப் போய்விடுவர். இந்தப் பக்கமாகப் பலார்சா வழியாகப் போவதென்றால் பத்து மணி நேரத்திற்கும் மேலாகும். இந்த ஆற்றில் பாலம் கட்டினால் நேரமும், காசும் மிச்சமாகும். அரசு கண்டுகொள்வதில்லை” என்ற விவரங்களைச் சொன்னார் சிவாபாபு.

   அரைமணி நேரத்தில் மகாராஸ்ட்ரா எல்லையைக் கடந்து ஆந்திராவில் கரை ஏறினோம். நீரைவிட்டு வெளிவந்த மீன் உடல் துடிப்பதுபோல் கொடும் வெயில் பட்டு உடல் எரிந்தது. சில தரகர்கள் படியில் வழிமறித்தபடி கர்ம சடங்குகள் செய்யவும், கோயிலில் பூஜை செய்யவும் ஆள் வேண்டுமா என்று கேட்டனர். சிவாபாபுவை பார்த்ததும் ஒதுங்கி எங்களுக்கு வழிவிட்டனர்.

   ஆற்றுமேட்டில் சற்றுத் தள்ளி இடிந்த கோட்டைப் போன்ற பகுதிகளைக் கடந்து கொயில் பகுதிக்குச் சென்றோம். கோயில் அலுவலர் வந்து எங்களை அழைத்துப் போய்ப் பூஜை பொருள்களை எடுத்துக்கொண்டு கோயில் கருவறைக்கு அழைத்துப் போனார். கோயில் கருவறைக்கு முன்பு எங்களை அமரவைத்து எமனை வென்ற சிவனுக்கு அர்ச்சனை செய்தனர். எமன்களிடமிருந்து தன் மகனை மீடடுத்தர என் மனைவி வேண்டியிருப்பாள். மார்க்கண்டனை, அங்குள்ள பிற தெய்வங்களை வணங்கி, கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். கோயில் காற்றோட்டமாக அமைந்திருந்தது. வெளியே வேப்பமர நிழல் பார்த்து நாங்கள் அமர்ந்தோம். கொண்டுவந்திருந்த தக்காளி சாதத்தை எங்கள் மூவருக்கும் பரிமாறிய பிறகே சமையல்காரர் பாலாஜி சாப்பிட்டார். நான் எவ்வளவு சொல்லியும் அவர் எங்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு மறுத்து விட்டார். அங்கு வந்த நினைவாக என் மனைவி அங்கிருந்த கோயில் கடைகளில் தான் விரும்பியதை வாங்கிய பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
     ஆற்றின்கரையில் அனல்காற்று வீசியது. ஒரு படகை அமர்த்திக் கரையேறினோம். சிவாபாபு கைப்பேசியில் அசோக்குமாருக்கு தகவல் சொல்லி காரை கரைக்குக் கொண்டுவரச் செய்தார்.. படியேறுவது சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. காரில் உட்கார்ந்ததும்தான் ஆசுவாசம் உணர்ந்தோம். எங்களுக்கு டீ, காபி எதுவும் வேண்டாம் என்று சிவாபாபுவிடம் சொன்னதோடு அவருக்கு எங்களது நன்றியையும் தெரிவித்தோம்.. எங்கள் கார் அல்லபள்ளியை நோக்கி நகரத் தொடங்கியது.

    “போகும் வழியில் புகழ் பெற்ற பாலாஜி கோயில் உள்ளது. அந்தக் கோவில் ஊற்றில் சாமி பெயரைச் சொல்லி கைதட்டினால் ஊற்றில் தண்ணீர் பொங்கி வரும். அந்தக் கோயிலுக்குப் போய்விட்டு அப்படியே குறுக்குவழியில் அல்லபள்ளிக்குப் போய்விடலாம். போகலாமா சார்" என டிரைவர் அசோக்குமார் கேட்டார்.
  கோயில் என்றவுடன் என் மனைவி உடனே சம்மதித்தாள் அரைமணிநேர பயணத்துக்குப் பிறகு கார்  இடதுபுறம் ஒரு ஒற்றைப் பாதையில் திரும்பி காட்டுவழி தன் பயணத்தைத் தொடர்ந்தது. சமையல்காரரும் அந்தக் கோயில் பற்றித் தான் ஏற்கனவே நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் ஆனால் இதுவரைக்கும் அங்குப் போனதில்லை என்றும் இன்று எங்கள் தயவில் அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு வந்தார். எங்களுக்குப் பயணக் களைப்பு. அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டோம்.

   தார்ச்சாலையை விட்டு விலகி காட்டுப்பாதையில் போவதால் கார் குலுங்கியது. தூங்க முடியவில்லை.  “என்ன அசோக், ரோடு சரியில்லைன்னா ஏன் இந்தப் பக்கம் வந்தீங்க. அத்துவான காட்டுப் பாதையாக இருக்கிறது. கோயிலுக்கு இன்னொரு நாளைக்குப் போயிக்கலாம். வண்டியைத் திருப்பி வந்தவழியில் நல்ல தார் ரோட்டிலேயே போகலாம்” என்று டிரைவரிடம்  சொன்னேன்.

   “சார், இந்த ரோடு நல்லாத்தான் இருந்தது. கடந்த ஜூனில்  பெய்த புயல்மழையில் இந்த ரோடு அரிமானம் ஆயிருச்சு. மறந்துட்டு இந்தப் பக்கம் வந்துட்டேன். இன்னும் அரைமணியில் கோயிலுக்குப் போயிறலாம். அங்கிருந்து அரைமணி நேரம்தான் ஊருக்குப் போக" என்றார்  டிரைவர். என் மனைவியும் அதை ஆமோதிக்கவே நானும் பேசாமல் இருந்து கொண்டேன்.  பாலாஜியும் "இப்போ வந்த வழியே திரும்பினா, மெயின் ரோட்டைப் பிடிக்கவே இன்னும் ஒருமணி நேரமாகும்" என்றார் . அசோக்குமார்  காரை ஒரு சர்கஸ்காரன் ஓட்டுவதைப் போல சாகசமாக ஓட்டிக்கொண்டு சென்றார் . காரில் பயணம் செய்கின்றோமா இல்லை குதிரை வண்டியில் போகின்றோமா என்று தெரியவில்லை.

    “என்னாச்சு, ஏன் வண்டி இப்படிக் குலுங்குது. வண்டியை மெதுவா ஓட்டுங்க" என்று என் மனைவியும் உரக்கச் சொன்னாள். ஆனால், அசோக்குமார் முகத்தில் சாகசப் புன்னகை தவழ அந்தக் கரடு முரடான பாதையில் காரை ரசித்து  ஓட்டிக்கொண்டிருந்தார் .

நாங்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தோம். வலப்பக்கம் அடர்ந்த காடுகளும் இடப்பக்கம் வெகுதூரத்தில் வளைந்து செல்லும் நதிக்கரை நாணற்புதர்களும் தெரிந்தன. வழி தவறி சத்திஸ்கருக்குள்  வந்து விட்டோமோ என்கிற சந்தேகம் எனக்கு எழுந்தவுடன் மனதில் இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது. உடனே என் மகனுக்குக் கைப்பேசியில் அழைத்தேன். தெலுங்கிலும், இந்தியிலும், மராத்தியிலும் சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கப்பால் இருக்கிறார் என்ற தகவல் மட்டும்தான் கேட்டது.

   “ஏங்க, இந்தாளு பேச்சும் சிரிப்பும் அம்முக்குளித்தனமா இருக்கு. நம்மளை மாட்டிவிடப் போகிறான். பாருங்க. தம்பி கிட்ட பேசுங்க. கோயிலுக்குப் போகவேண்டாம். வீட்டுக்கு வண்டியை திருப்பச் சொல்லுங்க" என் மனைவி ரகசியமாக என்னிடம் முணுமுணுத்தாள் .

  “அசோக், கோயிலுக்கு வேண்டாம். வண்டியை வீட்டுக்கு விடுங்க" என்று  டிரைவரிடம் கடிந்தேன் .

  "சார், நல்லரோடு இப்ப வந்துரும். பத்து நிமிசத்தில கோயிலுக்குப் போயிறலாம். அப்புறம் அங்கிட்டு அரைமணியில் வீட்டுக்குப் போயிறலாம். கொஞ்சம் பொறுத்துக்குங்க. ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. இதெல்லாம் பார்க்காமப் போகலாமா" என்று அக்கறையோடு சிரித்த முகமாய்ச் சொன்னார். அவருடைய சிரிப்பு ஏனோ எரிச்சலூட்டியது. பார்த்தால் கஞ்சா குடியனைப்போல இளிக்கிறானே என்று நினைத்துக் கொண்டேன்.

  நாங்கள் பதறுவதைக் கவனித்த பாலாஜி "அசோக் பாபு, இப்போ நம்ம எங்கே இருக்கோமின்னே தெரியலை. கோயிலுக்குக்கூடப் போகவேணாம். நேரே அல்லபள்ளிக்கே வண்டிய திருப்பு. நம்மளை நம்பி வந்தவங்களைத் தவிக்கவிடக் கூடாது” என்று ஓட்டுநரிடம்  சொன்னார்.

  “அண்ணே, மழை வெள்ளத்தில் பாதை சிதைந்து போச்சு. நான் சரியாத்தான் போயிக்கிட்டுருக்கேன். சீக்கிரம் போயிறலாம்" என்று அதே புன்னகையோடு பதில் அளித்தார்..

   கார் ஒரு பள்ளத்திலிருந்து மேடு ஏறியது. எங்களுக்கு இடது புறம் மஞ்சள்வெயில் முகம் காட்டியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் மண்சாலை குண்டும் குழியுமாய்க் களிமண் பிண்டங்களுமாய்க் கிடந்தது.   வலதுபுறத்தில் காட்டு மரங்களற்ற மேட்டுவெளி தெரிந்தது. இது எந்தப் பகுதி என்று பாலஜியும் அசோக்குமாரும் மராத்தியில் பேசிக்கொண்டது எனக்குப் புரியவில்லை. அவர்களின் கிசுகிசுத்த பேச்சு எங்களுக்கு அச்சத்தை அதிகப்படுத்தியது.

  “பாலாஜி, நாம்ம பாதுகாப்பான வழியில்தான் போயிகிட்டு இருக்கோமா? சொல்லு என்ன ரகசியமா பேசிக்கிறீங்க"என்று என் மனைவி அவளுக்குத் தெரிந்த அரைகுறைத் தெலுங்கில் கடிந்தாள்.

   “நல்லவழியில் சீக்கிரமா வீட்டுக்குப் போகச் சொன்னேம்மா. காடு தாண்டிட்டோம். இனி பயமில்லை" என்று பாலாஜி பவ்வியமாகச் சமாளித்தான். கார் மற்றுமொரு பள்ளத்தில் இறங்கி முனகலோடு ஏறியது.

“
என்னங்க, தம்பிக்கிட்ட பேசுங்க. நடந்தெல்லாம் சொல்லி, பாதுகாப்புக்கு ஆள் அனுப்பச் சொல்லுங்க. நம்மளை கடத்திக்கிட்டுப் போறானோன்னு பயமா இருக்கு" என்று என் தோளைப்பற்றி உலுக்கினாள்.

  “நான் ட்ரை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். நெட் வொர்க் மோசமா இருக்கு. தொடர்பு கிடைக்கலை. கூகுளிலும் நாம இருக்குற இடத்தத் தேட முடியல. சிக்னல் இருந்தாதானே அது வேலை செய்யும்" என என் பதற்றத்தை மறைத்துக்கொண்டு என் மனைவியைச் சமாதானம் செய்தேன்.

    தூரத்தில் ஆள்நடமாட்டம் தெரிந்தது. இந்த அத்துவானப் பகுதியில் இளம்பச்சை நிறத்தில் பனியன் சட்டையும், அதேநிறத்தில் டிரவுசரும் அணிந்த இளைஞர்கள் திரிகிறார்களே. பாதுகாப்பு படையினரா? இல்லை. பாதுகாப்பு படையினருக்கு இங்கே என்ன வேலை.? இவர்கள் இந்தப் பகுதியில் ஆயுதப்பயிற்சி பெறுகிறவர்களாக இருக்குமோ என்ற சிந்தனை எனக்குள்ளே வதைத்தது.

    என் மனைவியும் “ஏங்க, அவுங்களைப் பார்த்தா ஆயுதப்பயிற்சி செய்யிறவங்க மாதிரி தெரியுது. தம்பிக்கு போன் பண்ணுங்க” என்று என்னைப் பார்த்து பதறினாள் .
  பாலாஜியும் அசோக்குமாரும் எதோ சன்னமான குரலில் பேசிக்கொண்டனர். எங்களுக்குத் திக்கு திக்கென்று மனது அடித்துக் கொண்டது. இறுக்கமான சூழல். ஜன்னலைத் திறக்கவும் பயமாக இருந்தது. கார் ஒரு மேட்டிலிருந்து பள்ளம் இறங்கி மறுபடியும் மேடேறி இறங்கி குலுங்கியது. அப்போது கார் களிமண் சகதிக்குள் சிக்கிக் கொண்டது. அசோக் கியர்களை மாற்றி மாற்றி வண்டியைக் கிளப்ப முயன்றார். முடியவில்லை. காரின் சக்கரங்கள் சகதியில் நன்றாகச் சிக்கிக் கொண்டன. எங்களுக்கு அச்சம் வியர்வையாக ஊற்றெடுத்தது.
   பாலாஜி ஜன்னலை இறக்கிப் பார்த்தார். சக்கரங்கள் இரண்டடி களிமண் சகதிக்குள் இறங்கி விட்டன. கீழே இறங்கினாலும் தாமும் சகதிக்குள் சிக்கிதான் ரோட்டு விளிம்பு ஏறவேண்டும். பாலாஜியும் அசோக்குமாரும் இதை உணர்ந்துகொண்டனர். அசோக்குமார் அபயக்குரல் எழுப்புவதுபோல் காரொலி எழுப்பினார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை ஒலி எழுப்பினார்.
  அங்கே  சற்றுத் தூரத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் திரும்பிப் பார்த்துவிட்டு அவர்கள் வித்தியாசமான முறையில் குரல் கொடுத்தனர். சிலநிமிடங்களில் நான்கு இளைஞர்கள் நீண்ட மூங்கில் கம்புகளோடு வந்தனர். அவர்கள் வனத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் போலிருந்தனர். ..அவர்கள்  தோள்களில் தொங்கிய துப்பாக்கிகளை ரோட்டின் விளிம்பில் வைத்து விட்டுச் சகதியில் இறங்கி பெரும் கற்களை அணைக்கொடுத்து மூங்கில் கம்புகளால் நெம்பி நெம்பி சக்கரங்களை நகர்த்தினர். கொஞ்சம் கொஞ்சமாகச் சகதிப் பகுதியைத் தாண்டி இறுக்கமான தரைக்கு வந்ததும் காரை அசோக்குமார் இயக்கினார்.
  நாங்கள் அவர்களை நோக்கி கைகள் கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். அச்சம் எங்களை விட்டு அகன்றிருந்தது. அசோக்குமார் காரை மேட்டில் ஏற்றி நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி அவர்களிடம் சென்று அவர்களைக் கும்பிட்டு வணங்கினான். அவர்கள் அவனை எதோ திட்டினர். மறுபடியும் நாங்கள் அவர்களைப் பார்த்து கூப்பிய கைகளுடன் வணக்கம் சொன்னோம். அவர்கள் எங்களைப் பார்த்து “பத்திரமாய்ப் போங்க" என்பதுபோல் சாடை காட்டினர். அசோக்குமார் வந்து காரை இயக்கினார். அவர்கள் கை அசைத்து விடை கொடுத்தனர் .                          * 2008. இல் அக்டோபரில் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்ய பகுதியில் 117 போலிஸ் காவலர்கள் கண்ணிவெடியில் சிக்கி மாண்டனர்
**
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமாக இருந்தபோது.

No comments:

Post a Comment