Sunday, 21 August 2022

மரணவிரும்பி [ஜனநேசன் ]

 

        மரணவிரும்பி              [ஜனநேசன் ]

கைப்பேசி  ஒலித்தது. இந்த  கொரோனா காலத்தில்  அழைப்பு ஒலித்தாலே  மனசு  பகீரென்கிறது . எம் எஸ் எம். அழைக்கிறாரே  என்று பணிவன்பு தொனிக்க   ,” தோழர் ,வணக்கம் .என்று  நான் முடிக்குமுன்னே  அவர் , “ வணக்கம் ,தோழர் .நான்  இன்னும் கொஞ்சநாள்  வாழ விரும்பிறேன் “ என்று மகிழ்ச்சி பொங்கும் குரலில்  சொல்லித்  துண்டித்து விட்டார்.  வாழ விரும்பிறது சந்தோசமானது  தானே. இதுக்கு  ஏன்  காலங் காத்தாலே ஒத்தை வார்த்தையிலே  பேசி விட்டு வைக்கிறார்.                                  “ மரணத்துக்கு மனுப் போட்டுட்டு காத்துகிட்டிருக்கிறேன் “ என்றவர் , இப்ப சாக விரும்பலை  என்று சொல்கிறார் என்றால்  அவரது மனசுக்குள் ஏற்பட்ட  மாற்றத்துக்கு என்ன காரணம்  என்று அறியும் ஆவல்  அலையாய் எழுகிறது. அவரைப் பார்த்து வந்தால்தான் மனசு ஒரு நிலைப்படும் . கொரோனா பொதுமுடக்கத்தில்  முடங்கி தானே கிடக்கிறோம் ,மெல்லப் போய் வரலாம் என்று முகக்கவசம் , உடல் கவசங்களை  அணிந்து கிளம்பினேன்.                              “ ஏங்க  ஊரே மரணபயத்தில்  நடுங்கிகிட்டிருக்கு , எங்கேயும் போயும்  தொத்திகிட்டு வந்திருதாதிங்க. இன்னும் கொஞ்ச நாளு பிள்ளைகளுக்கு நாம உதவியா இருக்கணும் “ மனைவி எச்சரிக்கை செய்தாள். 

“ மெடிகல்ஸாப் போயி  விக்ஸ் டப்பா ஒன்னு வாங்கிட்டு உடனே வந்திர்றேன் “  நடந்தேன்  தெரு  வெறிச்சோடிக்கிடந்தது. .                                         அவர் ஒரு அரியமனிதர் தான். நாங்களெல்லாம்  எம்எஸ்எம்  என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கும்  தோழர் எம்.எஸ்..மணி  எங்க  தொழிற்சங்கத் தலைவர். ஓய்வுபெற்று பதினைந்து  வருஷங்களுக்கு  மேலாகிறது. ஆனால்  இன்னும் வீட்டிலிருந்தபடி தொழிற்சங்கப்பணிகள் உட்பட பல சமூகப்பணிகள்  செய்து வருகிறார். அவர்  ஐம்பத்தைந்து  வயதிலே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர். தற்போது இதயநோயின்  தாக்கமும் உண்டு.  நாங்கள் அவரிடம் அடிக்கடி ஊழியர்களின் நலம், பணிபாதுகாப்பு ,ஊழியர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு  பதிலுரை போன்றவை குறித்து பேசுவோம். அவரது யோசனைகளின் படி எங்களையே பதிலுரை எழுதச் செய்வார். பிரச்சினைகள் குறித்து  பேச ஆரம்பித்தால் அரசாணைகளின் எண்களும் , துணைவிதிகளும் , சாராம்சங்களும்   அருவியாய்க்  கொட்டும். எந்த விதியும்  மக்களுக்கு உதவுதற்குத் தானே  தவிர மறுப்பதற்கு இல்லை என்பதே அவரது  நடைமுறைச் சித்தாந்தம். ஒருமுறை , ஒருவர்  தெரிந்தே  தப்பு செய்துவிட்டு , அந்த தப்புக்கான நடவடிக்கைகளிலிருந்து  தப்புவதற்காக  தோழரிடம் யோசனை  கேட்டுவந்தார். தெரிந்தே தப்பு செய்தவருக்கு  உதவ  எனக்கு அவகாசமில்லை. என்று  அந்நபருக்கு  உதவ மறுத்து அனுப்பிவிட்டார்.

 எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும்  இரண்டு நாளைக்கொரு முறையாவது  அவரைச்  சந்திபோம். அவரிடம் பேசுவதே தனி சுவாரஸ்யம். உலகத்தில்  அனைத்து நடப்புகள் குறித்தும் பேசுவார்.  சமீப காலங்களில்  அவரது பேச்சுகள்  மரணம் குறித்தே இருக்கும்.  “ மரணம் பாவத்தின்  சம்பளம்ன்னு  சொல்லுவாங்க. மரணம் ரம்மியமானது. சூரியனின் மறைவைப் பாருங்கள் . எவ்வளவு  அழகாக  இருக்கிறது. நல்ல நிலையில் இருக்கும்போதே  ஒரு பூ மலர்ர மாதிரி  சாவு அரவமில்லாமல்  அணைக்கணும் . மரணம்  சிலருக்கு  வரம் , விடுதலை , நிம்மதி.! சிலருக்கு  சாபம் , தண்டனை !

சிலர்  வாழணுமுன்னு  பேராசையோடு  பல குறுக்கு வழிகளில் பணத்தைச் சேர்த்து யாரையும் அண்டாமல்  பெரும்  பெரும் பங்களாக்கள்  கட்டியிருப்பார். எதிலும் வாழ முடியாமால் , உறவும் சொந்தமும் கொண்டாட முடியாமல் அற்பாயுளில்  அனாதைப் பிணமா செத்துக் கிடப்பார். அவர் செத்தபின் மக்கள்  மனசிலிருந்தும்  மறைந்தும்  விடுவார்.  சிலர்  வறுமைப்பட்டாலும்  மனுச மக்களோடு வாழ்ந்து , தன்னால் இயன்றதை பிறருக்கு செய்து விட்டு சாவார் .அவருக்கு  ஊரும் உறவும் சேர்ந்து மரியாதையோடு வழி அனுப்பி வைக்கும். அவர் செத்ததுக்கும் பின்னாலும் அவரது செய்கையால் மக்கள் மனசில் சாகாமல்  இருப்பார். “                                          இப்படியாக  மரணித்த இருவகை  மனிதர்களை  வரலாற்று காலத்திலிருந்து  தற்காலம்   வரை  உதாரணம் காட்டுவார்

 “ சாதாரணமா எஸ் எஸ் எல் சி படிச்சு சர்விஸ் கமிசன் எழுதி  ஒரு எழுத்தரா வேலையில் சேர்ந்த என்னை  சங்கம்  பல விசயங்களை படிக்கவைத்தது. ஊழியர்களுக்காக உழைக்கச் சொல்லித் தந்தது. நோயில் விழுந்தபோது காப்பாற்றியது. இந்தக்  காலத்தில் சாத்தியப்பட்ட பலவிசயங்களை நிறைவாக செய்து முடித்து இருக்கிறேன். இன்னும் இறுதி நிமிஷம் வரை செய்வேன் . மாற்று சிறுநீரகத்தோடு  பதினெட்டு வருசங்களைக் கடத்திவிட்டேன் .ஒவ்வொரு நிமிசமும் ,ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான்னு    எனக்கு வைத்தியம் பார்க்கும்  டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்ப  சிறுநீரக நோயோடு  புதியதாக இதயநோயும் கூட்டணி சேர்ந்து கொண்டது. சக்கரை  வாங்க வாங்கன்னு  புதுப்புது  நோய்களை எல்லாம் கூப்பிட்டுகிட்டே  இருக்கு. குடும்பத்துக்கு  என் சக்திக்கு  உட்பட்டவரை செஞ்சிட்டேன். பிள்ளைகளும்  அவரவருக்கான  வாழ்க்கையை அமைத்துக்  கொண்டார்கள்.நோய்க்கிடங்கில்  நான் உழன்றால் பரவாயில்லை. எந்த நேரத்தில்  எனக்கு என்ன  ஆகுமோன்னு , வீட்டில் உள்ளவங்களுக்கும்  என்னை நேசிப்பவர் களுக்கும் ஏன் பீதியும் தொந்தரவும்  கொடுக்கணும். உங்ககிட்ட இருந்து விடை பெறுவதே  எனக்கு சந்தோசம். நான்  செத்ததுக்குப் பின்னால  என் உடலில் சங்கக்கொடி போர்த்தி , தோழர்கள் எல்லாம் சேர்ந்து எளிமையாய்  வழி அனுப்பினால் போதும்.”

அவர் சொல்லச்  சொல்ல நமக்கு அழுகை முட்டிக்கொண்டு  வரும். அவருக்குத் தெரியாமல் கண்ணீரைத்  துடைக்க முயல்வோம் .நீங்க  இன்னும்  பலவருசங்கள்  ஆரோக்கியத்தோடு  இருந்து  எங்களுக்            கெல்லாம் வழி  காட்டுவீங்க தோழரே , என்றால்  சிரிப்பார். இப்போ என் தலைமையிலா சங்கம் நடக்குது.? உங்களுடைய அனுபவத்தா லும்,  சிந்தனையலும்  உழைப்பாலும் தானே சங்கம்   நடக்குது.  இது தானே எனக்கு பெருமை.! வந்த வேலை  முடிஞ்சதுனா  உடனே  வெளியேறிற வேண்டியது தானே.“                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              சாவைப்பத்தியே  பேசுறாரு மனுஷன். என்று நினைத்தாலும்  அவரைப் பார்க்காமல் , பேசாமல்  இருக்க முடியவில்லை.  போனிலாவது பேசிவிடுவோம். நாங்கள் பார்க்கப் போகாவிட்டாலோ,  ,போனில்  பேசாவிட்டாலோ   அவர் எங்களிடம் பேசி அவரவர்  அலுவலகம் , குடும்பப் பிரச்சினைகள் பற்றிக் கேட்டு , அதற்கு  அவரது அபிபிராயத்தையும் சொல்லி விடுவார்.

அவரது  வீட்டுமுன்  ரெண்டு மூன்று வாகனங்கள்  நின்றுகொண்டே இருக்கும்.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் , போக்குவரத்து ஊழியர்கள் , நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ,  எனப் பல தரப்பினரும், பதவி உயர்வு சுணக்கம் , ஊதியஉயர்வு நிறுத்தம் , தொடர்பான விளக்கங்கள் ,ஒழுங்கு நடவடிக்கை  குற்றச்சாட்டுக்கு பதிலுரை பெற்றுச் செல்வர். பட்டா மாறுதல் ,குடும்பப் பிரச்சினை களில் எழும் சட்ட சிக்கல்கள்  முதலானவற்றுக்கு பொதுமக்கள்  வந்து   யோசனைகளைப்  பெறுவர் . எம் எஸ் எம்மின்  மனைவி வருவோருக்கு குடிநீரும் , டீயும் கொடுத்தே  ஓய்ந்து போவார். சள்ளையாக இருந்தாலும் யாரும்  சீந்துவார் இன்றிப்  போகாமல்  ஓய்வுபெற்ற பின்னும்  தன்  கணவரை பலர் தேடிவந்து  உதவி பெறுகிறார்களே  என்று பெருமைப்பட்டுக் கொள்வார்.

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண் ,” இப்படி பாதையில் வண்டிகளை நிறுத்தினா  எப்படிப் போறது வர்றது “ என்று சலிப்பாகச்  சொல்லி யிருக்கிறார். இது  எம்எஸ்எம்  காதில்  விழுந்துவிட்டது .அந்தப் பெண்ணை அழைத்து , “ தாயி  சிரமத்துக்கு  மன்னிக்கணும் . இனி யாரும் இங்கே வண்டியை நிறுத்த மாட்டாங்க. “ அந்தப்பெண் வெலவெலத்து கண்ணீர் சிந்தி , நான் தப்பா சொல்லியிருந்தா என்னை மன்னிச்சிருங்கப்பா “ என்று காலில்  விழப்போனதைத்  தடுத்து , “ தாய், நீ சொன்னது சரி.  ஆள் பேரு இல்லாத நேரத்தில்  சொல்லியிருக்கலாம். இருந்தாலும்  நானும் அக்கம்பக்கத்தார் சிரமங்களை  நினைச்சிருக்கணும்.. பரவாயில்லை .இனி  யாருக்கும் சிரமம் இருக்காது “ என்று அந்தப் பெண்ணைத் தேற்றி அனுப்பினார்.   எப்படியாப்பட்ட அதிகாரிகளையும் , அரசியல்வாதிகளையும் எதிர்த்து கர்ஜிப்பவர் , ஒரு பெண் கிட்ட தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்கிராறேன்னு  வீட்டுக்கு வந்திருந்தவர்கள் அன்னம்பாரித்து நின்றனர் .

 மறுநாளில் இருந்து  அவர் காலை மாலை  நடைப் போகும் கல்லூரி விளையாட்டு  மைதானத்தில்  தேடி வருபவருக்கு பதில் சொல்லலானார். ஒரு நாள்  மைதானத்தில் பொதுமக்கள்   பலர் கூட்டமாக நிற்பதைப் பார்த்து அந்தக்கல்லூரி முதல்வர் , காவலரிடம்  விசாரித்திருக்கிறார் .காவலர் இவரைப்பற்றிச்  சொல்லி இருக்கிறார். முதல்வர்  இவரைச் சந்திக்க விரும்பியதாகச் சொல்லி அனுப்பினார். இவரும் அவரும்  பல விசயங்களைப் பேசியதில் நட்பாகி விட்டனர். கல்லூரிமுதல்வர்  ,” தன்னை விட பணியில் இளையவர் ஒருவர்  கூடுதல் ஊதியம் பெறுகிறார்.இந்தக்  குறையை சரிசெய்ய கடந்த ஐந்தாண்டுகளாக மனுக் கொடுத்து கிட்டே இருக்கேன். தீர்வு கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள் “ என்று கேட்டிருக்கிறார்.                                 இவர், “ சார் , நான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இல்லை. உங்களுக்கு  யுஜிசி நடைமுறை. இதுக்கு மதுரையில் எனது வக்கீல் நண்பர் இருக்கிறார். எனது பேரைச் சொல்லுங்க. வழக்குப் போட்டு வாங்கித் தந்திருவார். குறைந்த கட்டணம் தான் வாங்குவார். “ என்று கூறியிருக்கிறார். கல்லூரிமுதல்வர்  வக்கீலைச் சந்தித்ததில்   நம்பிக்கை ஏற்பட்டது. வக்கீலும் எம் எஸ்எம் மைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். கல்லூரி முதல்வருக்கு இவரைப்பற்றி மரியாதை கூடிவிட்டது/

இதற்குப் பின் எம்எஸ்எம் சொன்னதற்கிணங்க அந்த மைதானத்தில் நடைபயிற்சி , விளையாட்டுப்பயிற்சி  செய்பவர்களுக்கு குடிக்கவும், கைகால் முகம் கழுவ தண்ணீர்குழாய்  இணைப்பும் , முன்னிரவு  இருட்டைத் தவிர்க்க ஒளிவசதியும் கல்லூரி முதல்வர்  செய்து கொடுத்திருக்கிறார் .கல்லூரி நிர்வாகத்தோடு  கொண்ட தொடர்பால் ஏழை எளிய குடும்பத்து பிள்ளைகளுக்கு  கல்லூரியில் சேர்த்து விடும் வாய்ப்பும் கிட்டியது.

இப்படி பட்ட மனிதர் சாவை விரும்பியது சரியல்ல. வாழ ஆசைப் படுவதை வரவேற்க வேண்டியது தானே.  சாலையில் போக்கு வரத்தோ ஜன நடமாட்டமோ இல்லை . தடைபடாத   எண்ண ஓட்டத்திலேயே பழகிய  கால்கள்  அவரது வீட்டின் முன் நின்றன.

அவரது வீட்டுக் கதவும் மூடப்பட்டிருந்தது. அழைப்புமணியை அழுத்தினேன். வரவேற்பறையில் அசைவின் சரசரப்புகள் கேட்டன. காத்திருந்தேன். முகக்கவசத்தை  அணிந்தபடியே தோழர் கதவைத் திறந்தார்.

“வாங்க தோழரே , எப்படி இருக்கீங்க , வீட்டிலே யாருக்கும்  கொரோனா பாதிப்பில்லையே ...”

“எல்லாம் நல்லா இருக்காங்க தோழரே.உங்க வீட்டில் பேரன் பேத்திகள்  எல்லாரும் நல்லா இருக்காங்களா  தோழர் ?”
“ இந்த நிமிசம் வரை  எல்லாரும் நல்லா இருக்கோம். சரி , என்ன இந்த  நேரம் ?. என்னோட  போன் பேச்சு உங்களைக் கிளப்பி விட்டுருச்சா “ என்று சிரித்த படி “ அப்படி அந்தச் சேரில் உட்காருங்க. இந்தக் காலத்தில் குற்றவாளிகளைப் போல்  ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்காம பேசவேண்டிய  நிர்பந்தம். அம்மா , தோழர் வந்திருக்கார். கபசுரத் தண்ணீ ரெண்டுபேத்துக்கும் கொண்டு வா.”                                                                     அடுத்த ஐந்தாவது  நிமிசத்தில்  வாங்க தம்பி என்று முகக்கவசம் மூடிய புன்னகையோடு  கபசுரநீர்  கொண்டு வந்து வைத்து எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று கேட்டு , என் தலை யிசைவுக்குப் பின் உள்ளே  போனார். கபசுரநீரைக் குடித்தபடி பார்வையை  சுழலவிட்டேன். இவரது மேஜையில்  “சோபியான் – சுருக்கமான மனிதகுல வரலாறு “  புத்தகம் பாதி படித்து  அடையாளம்  வைத்தபடி இருந்தது. வீட்டுக்குள் கைப்பேசியில்  சுசிலாவின் பழைய பாடல் காதை கிறங்க வைத்தது.

“ என்ன தோழர் வீடு எப்படி இருக்கிறது  என்று நோட்டமா.? “ சிரித்தபடி தொடர்ந்தார். “ மனசில தோன்றினதை பகிர்ந்துக்கணு மில்ல !  நம் .முக்கிய தோழர்கள் எல்லாருக்கும் சொன்னேன். யாரும்  வீட்டுக்கு வந்து சிரமப் படாதீங்க  தேவைப்பட்டா போனிலே பேசிக்குவோம்னு  சொன்னேன். உங்களை மட்டும் வரவேண்டாமுன்னு சொல்லலை. நான் சொன்னாலும் உங்கனால  வராம இருக்கமுடியாது.                                                  இந்தக் கொரோனா கிருமி  இந்த உலகத்தையே  திருப்பிப் போட்டுருச்சே. வல்லரசுகளே  தடுமாறுதே. இந்தக் கொடுமையிலும் மக்களை அல்லல் படுத்துறதை நிறுத்தாதவர்களும் இருக்காங்க. அரசியல்  லாபம் பார்க்கிறவங்களும் இருக்காங்க . இந்த கொரோனா  வுக்கு  சிகிச்சை கொடுத்த டாக்டர்கள்  நோய் தொத்தி  செத்து போனார்கள். அவர்களது உடலை   நல்லடக்கம் பண்ண சுடுகாடு சுடுகாடா அலைஞ்சு கடைசியில் போலிஸ்  துப்பாக்கியைக் காட்டி சுயநலக் கலவரக்காரர்களை விரட்டிவிட்டு அந்த டாக்டர்களது  உடலை அடக்கம் பண்ணியிருக்கிறார்கள். வீரமரணம் அடைந்தவரது   குடும்பத்தாரைக்கூட அவரது முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை. எல்லையில் செத்தால்தான் வீரமரணமா, இந்தக்கொடும் நோயில்  இருந்து மக்களைக் காக்கப் போராடி சாகிறவர்களுக்கும் அது  வீரமரணம் தானே. அவர்களுக்கும் அரசு  தக்க மரியாதை செய்திருக்க வேண்டும்தானே ? இந்த நோய்க்கிருமி  சகல தரப்பினரது கையாலாகாத்தனதை  தோலுரிச்சிக் காட்டிருச்சு. இந்த நோயால் சாகிறவங்களை பெத்தபிள்ளைகள் , சொந்த பந்தங்கள் கூட பார்க்கமுடியாம புதைக்கிறார்களே. இந்தக் காலத்தில்  என் மரணமும் பத்தோடு பதினொன்னா,  முகம் பார்க்கவியலாத ஒண்ணா   இருக்க விரும்பலை. அதுனால இந்தக் கொரோனா கொடுமை தீரும்வரையாவது  நான் வாழ விரும்பறேன் . இயற்கை அதற்கு  ஒத்துழைக்கணும் . உங்களைப் போன்ற  தோழர்களின்  ஒத்துழைப்பும் வேண்டும்..”                                           “ நீங்க  ரெம்பநாள் வாழனுமுங்கிறது தான்  எங்க  ஆசை. கொரோனா  தொத்திராம ,கவனமா இருங்க தோழர். “           [செப்டம்பர்-2020 செம்மலர் ]

 

No comments:

Post a Comment